Friday, October 30, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 13

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11, பாகம் 12

“நான் அன்னிக்கே சொன்னேன்…தற்கொலை தான்னு…கேட்டீங்களா?” பரத்து தம்பி! நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே? நீங்க உண்மையிலையே புத்திசாலி தான்..அதை நான் ஒத்துக்கறேன்…ஆனா உங்க புத்திசாலித் தனத்தை ரொம்ப உபயோகிச்சீங்கன்னா இப்படி தான் எல்லாருக்கும் நேர விரயம் ஆகும்…”

யெஸ். ஐ யின் பேச்சிற்கு பதிலேதும் பேசாமல் அவரை விருட்டென திரும்பி முறைத்தார் பரத்.உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவர், கோபத்தையெல்லாம் தன் இருசக்கர வாகனத்தில் மேல் காட்ட, அது சீறிக் கொண்டு பாய்ந்தது. நேரே பில்டிங் சொல்யூஷன்ஸ் சென்றவர் ரமேஷை அழைத்தார், “நான் கேட்ட டேட்டா எடுத்து வச்சிடீங்களா?”

“அப்பவே ரெடி சார்…பிரின்ட் அவுட்டே எடுத்து வச்சுட்டேன்…”

“ஓ…குட் குட்…கொஞ்சம் வெளிய கொண்டு வந்துருங்க…ரிப்ஷன்ல வெயிட் பண்றேன்…”

ரமேஷ் வந்தவுடன் அவன் குடுத்த ப்ரிண்ட் அவுட்டை ஆராய்ந்தவர் முகத்தில் அன்றைய முதல் வெற்றிப் புன்னகை. ஏனென்றால் அவர் கையிலிருந்தது ஒன்பதாவது மாடி கதவு மற்றும் மது வீட்டு கதவின் தகவல்கள்!

நேரே தரகர் ராமன் வீட்டிற்கு சென்றார் பரத். எந்த கவலையும் இல்லாமல் தொலைகாட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார் ராமன். மஃடியில் பரத் திடீரென்று வீட்டிற்குள் பிரவேசிக்கவும், திடுக்கிட்ட ராமன், “யார் சார் நீங்க?” என்று அதட்டலாக வினவினார்.

தன் ஐ.டி கார்டை வெளியே எடுத்த பரத், “பரத்! இன்ஸ்பெக்ட்டர் ஆஃப் போலீஸ்! அதுக்குள்ள மறந்துட்டீங்க போல?” என்று மிடுக்காக கேட்க, ஒரு நொடி ஆடிப்போனார் ராமன்.

பரத்தின் முகம் சட்டென்று நினைவுக்கு வர, “சார்….சாரி சார்…அது வந்து…போலீஸ் ட்ரெஸ் போடலையா…அதான்…வாங்க…உக்காருங்க…” என்று குழைந்தார்.

“உக்காரதுக்கு வரலை…மதுவந்த்தி கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்கு…நடங்க ஸ்டேஷனுக்கு…” என்று அதிகாரத் தொனியில் பரத் சொல்லவும், வெலவெலத்துப் போன ராமன், “என்னது? என்ன சொல்றீங்க? என் மேல சந்தேகமா? என்ன சார் உளர்றீங்க? நானே அந்த பொண்ண ஃபோட்டோவில மட்டும் தான் பாத்திருக்கேன்…எந்த அடிப்படையில என் மேல சந்தேகப் படறீங்க?”

“ஓ? அடிப்படையெல்லாம் உங்ககிட்ட விளக்கனுமா? பொண்ணுக்கு சொந்தக்காரங்க உங்க மேல சந்தேகம் இருக்கறதா சொல்லியிருக்காங்க…அந்த அடிப்படையில தான்…”

“சொந்தக்காரங்களா? அந்த பொண்ணுக்கு தான் அம்மாவும் இல்லை, அப்பாவும் ஆஸ்பத்திரியில கிடக்கறாரே?”

“அவங்க சித்தி தான் கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்காங்க…உங்க மேல சந்தேகம் இருக்கறதா…”

அதிர்ச்சியில் ராமனின் முகம் இருண்டது, கோபம் தலைக்கேற, “என்னது? காமாட்சியா? அந்த பொம்பளையா? அவளுக்கு என்ன துணிச்சல்?” என்று கத்தத் துவங்கினார். உடனே பரத், “நீங்களா வர்றீங்களா? இல்லை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகவா?”

“சார்…நான் எந்த தப்பும் பண்ணல சார்…அந்த காமாட்சி தான் பணம் குடுத்து என்னை சாட்சி சொல்ல சொல்லுச்சு சார்…ஆனாலும் நான் சொன்னது பொயில்ல சார்…உண்மை தான்…எனக்கு அதுக்கு மேல எதுவுமே தெரியாது சார்… என் கொழந்தைங்க மேல சத்தியமா…”

அடுத்த வெற்றிப் புன்னகையோடு ராமனை அழைத்துக் கொண்டு காமாட்சி வீட்டை நோக்கி விரைந்தார் பரத்.

-------

15th Aug 12:00 A.M

மதுவின் அறையிலிருந்து “அம்மாஆஆ” என்று அலறல் சத்தம் கேட்டு மது இருந்த அறையில் எட்டிப் பார்த்த காமாட்சி, ஏதோ ஒரு பலகையை வைத்துக் கொண்டு மது திரும்பி அமர்ந்திருப்பதை பார்த்தார். மது பலகையை பார்த்து அம்மா, அம்மா என்று அழுவதை பார்த்த காமாட்சிக்கு ஒரு நிமிடத்திலேயே அவள் செய்து கொண்டிருப்பது புரிந்தது. மதுவை அன்று பார்த்ததுமே, சில மாதங்களாக அவர் மனதில் புகைந்து கொண்டிருந்த வன்மம் அதிகமாக, அது முதல் மதுவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனமாக கண்கானிக்கத் துவங்கினார் காமாட்சி.

15th Aug 11:30 P.M

மது ஓஜா பலகை, மெழுகு வர்த்தி சகிதம் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்ததும், சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்த காமாட்சியின் உள்ளத்தில் உடனே அந்த திட்டம் உருவானது. உடனே அறைக்குள் சென்று தன் அக்காவின் புடவையை எடுத்து தான் கட்டியிருந்த புடவை மேலே கட்டிக் கொண்டார். மாமாவிடம் நல்லவிதமாக பேசி, விசாலாட்சியின் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்றி எண்ணிக் கொண்டு, கன்னாடியில் தன் உருவத்தை பார்தார். அக்கா போன்றே பெரிதாக பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டதும், இரு புடவை கட்டியதால் சற்றே குண்டாக, தான் அக்காவை போலவே இருப்பதாக காமாட்சிக்கு தோன்றவே, அவருடைய முகத்தில் ஒரு குரூர புன்னகை அரும்பியது.

மது மொட்டை மாடிக்கு தான் போயிருப்பாள் என்று திட்டவட்டமாக தெரிந்ததால், காமாட்சி ஒன்பதாவது மாடி வழியே சென்று அங்கிருந்த கதவின் வழியாக, ஒன்பதாவது மாடிக்கருகில் இருந்த அந்த சிறு பால்கனியை சிரமப்பட்டு அடைந்தார்.ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிற்கு இருந்த அந்த இடத்தில் சிரமத்துடன் நின்றுகொண்டு, மது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவரால் பார்க்க முடியாவிட்டாலும், இருட்டின் நிசப்தத்தில் அவருக்கு மது அழும் குரல் லேசாக கேட்டது. உடனே இது தான் சமயம் என்று மது மது என்று உரக்கக் கத்தினார் காமாட்சி. தன் சத்தம் கேட்டு அலறியடித்து சத்தமிட்டு அழுது கொண்டே மது ஓடி வரும் சத்தம் கேட்கவும், “மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” என்று அவரும் கத்தினார். அவள் வந்து குனிந்து தன்னை பார்த்ததும், சிரிக்கும் போது தான் அக்கா மாதிரியே இருப்பதாக பல பேர் சொல்லிக் கேட்ட விஷயத்தை அப்போது சரியாக உபயோகித்துக் கொண்ட காமாட்சி பெரிதாய் புன்னகைத்து கைகளை நீட்டியவாறு, “வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” என்றார்!

அதே நேரத்தில் யாரோ தடுக்கி விழும் சத்தம் கேட்கவும், ஆபத்தை உணர்ந்த காமாட்சி மது திரும்பிப் பார்த்த கணத்தில் உடனே பக்கவாட்டில் ஓடி மறைந்தார். சற்றும் தாமதிக்காமல் ஒரே மூச்சில் தடதடவென விரைந்து ஓடி இரண்டாம் தளத்திலிருந்த தன் வீட்டை அடைந்தார் காமாட்சி. விட்டை அடைந்து ஒருசில நொடிகளிலேயே ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்த காமாட்சி, செக்யூரிட்டி தடதடவென ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார். மது கீழே குதித்தே விட்டாள் என்று காமாட்சிக்கு ஊர்ஜிதம் ஆனது. உடனே சென்று இரண்டாவது புடவையை கழட்டிவிட்டு, எதுவுமே தெரியாதது போல் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் துவங்கினார். மது யாரென்று செக்யூரிட்டிக்கு தெரியாததால், காலை ஐந்து மணிக்கு வேலைக்கார பெண் ராணி வந்து அடையாளம் காட்டி, காமாட்சியை எழுப்ப போலீஸ் வந்த போது மணி ஐந்து பத்து. அதற்குள்ளாக எப்படியெல்லாம் அழுது நடிப்பது, மது அப்பாவிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள்ளேயே திட்டம் தீட்டி முடித்திருந்தார் காமாட்சி என்ற அந்த பணப்பேய்!

***********************************************************************************

தற்கொலைக்கு தூண்டியதற்காக காமாட்சியையும், காசு பெற்று சாட்சி சொல்லி கேஸை திசை திருப்பியதற்காக ராமனையும் கைதி செய்வதற்காக ஆவங்கள் தயாரித்துக் கொண்டிருந்த பரத்திடம் வந்த யெஸ்.ஐ, “பரத் தம்பி! உண்மையிலையே பெரிய ஆள் தான் நீங்க…இப்ப சொல்றேன்....எக்ஸ்பீரியன்ஸ விட படிப்பும் புத்திசாலித் தனமும் தான் முக்கியம்”

சிரித்துக் கொண்டே பரத், “இல்லை சார்…அனுபவமும் சேந்தா தான் ஜெயிக்க முடியும்…இப்ப பாருங்க…தேவையில்லாம அந்த ரஞ்சித்த சந்தேகப்பட்டு எத்தனை பேருக்கு சிரமம்?”

“ச்சே…அதனால தான உண்மை என்னன்னு தெரிஞ்சுது? என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல பாத்தத வச்சு சொல்றேன்…உன்னை மாதிரி ஒருத்தன பாத்ததில்லை…நீ தான்யா போலீஸ்காரன்….”

பெரிதாய் சிரித்துக் கொண்டே பரத் தன் போலீஸ் தொப்பியை கழற்றி யெஸ்.ஐ யின் முன் நீட்டி, “தாங்க் யூ சார்!” என்றார்.

யெஸ்.ஐ, “ஆமாம்…அந்த காமாட்சி எதுக்காக சொந்த அக்கா பொண்ணுகிட்ட இப்படி பண்ணுச்சு?”

“எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான்…வேறென்ன? பொண்ண எதாவது பண்ணிட்டா, சொத்து பூரா அவ பையனுக்கு வரும்னு ஆசை…மது அப்பா கிட்ட தான் இந்தம்மா புருஷன் வேலை செய்யறாராம்…அங்க ஏதோ பிரச்சனை, இவ புருஷன வேலையை விட்டு நிறுத்திட்டாராம் மது அப்பா…அந்த கோவம் வேற…என்னவோ ப்ளான் பண்ண போய் கடைசியில இப்படி ஆகி போச்சு…”

***********************************************************************************

முகமெல்லாம் புன்னகையாக நின்று கொண்டிருந்த லீலாவதியிடம் சென்றார் சோமநாதன்,

“என்ன மேடம்? முகத்துல இப்படி ஒரு சந்தோஷம்?”

“ஆமா ஸார்! எனக்கு சந்தோஷம் தான்…ரொம்ப ரொம்ப சந்தோஷம்…இந்த பொண்ணு இப்படி கர்பினியா கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிட்டு இருந்தத பாத்து, எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு…அதிலும், அர்த்த ராத்திரியில காத்து வாங்கறதுக்கு ஒன்பது மாடி படி ஏறி போனேன்னு திரும்ப திரும்ப, சொல்ற பொறுப்பில்லாத ஒரு புருஷனுக்காக…ஏன் தான் ஆண்டவன் இந்த பெண் ஜென்மத்த படச்சானோன்னு வேதனையா இருந்துச்சு…எப்படியோ, போராடி ஜெயிச்சிட்டா…நான் கேஸ் ஜெயிச்சுருந்தா எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ, அத விட இப்ப ரெட்டிப்பு சந்தோஷம், ஏன்னா…ஜெயிச்சது எங்க இனமாச்சே…”

“உங்க இனமா? என்னமா சொல்றீங்க?”

“எங்க இனம் ஸார்…பெண் இனம்!!! அவன் அந்த நேரத்துல எதுக்கு போனானோ, என்னவோ தெரியல, ஆனா இனிமேலாவது இந்த பொண்ணுக்கு உண்மையா இருந்தா சரி தான்…” உண்மையான அக்கறையுடன் லீலாவதி சொல்லவும், சோமநாதன் முகத்தில் லேசான சோகம் பரவியது. இத்தனை நாட்களாக முகிலுடன் பழகியதில், அவளிடம் அவருக்கு ஏதோ ஒரு பாசம் ஏற்பட்டிருந்தது. கடைசியில் ரஞ்சித் என்ன தான் முரண்டு பிடித்தாலும், முகிலின் முகத்துக்காகவும், அவளின் நிலையை நினைத்தும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். அப்படிப்பட்ட பெண்ணிற்கு அவள் கணவன் துரோகம் செய்யக் கூடாது ஆண்டவனே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு தனது அறையை அடைந்தார்.

ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டு, ரஞ்சித்தும், முகிலும் சோமநாதனின் அறைக்கு வந்தனர். அவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சோமநாதன், “வாங்க…உக்காருங்க…” என்று வரவேற்றார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ஸார்… ரொம்ப ரொம்ப நன்றி…” குரல் தழு தழுக்க ரஞ்சித் சொல்லவும்,

“நன்றி எல்லாம் உங்க வைஃபுக்கு சொல்லுங்க…”

கண்கள் பனிக்க ரஞ்சித் அவன் மனைவியை பார்த்தான். இந்த பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும், நீயே எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று உணர்த்தியது அவன் பார்வை.

அங்கு நிலவிய அமைதியை கலைக்க விரும்பி, சோமநாதன், லேசாக தொண்டைய செறுமினார், ’என்ன’ என்பது போல் இருவரும் பார்க்க,

“ரஞ்சித்! இப்பவாவது சொல்லுங்க…அன்னிக்கு நைட்டு மாடிக்கு எதுக்கு போனீங்க?”

“ப்ளீஸ் ஸார், இப்பதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே, அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…ப்ளீஸ்…”

பொங்கி வந்த ஆத்திரத்தை அவர் கொட்டும் முன்பு, அவரது அலைபேசி அலறியது.

“எக்ஸ்யூஸ்மீ…” என்றபடி அலைபேசியோடு வெளியே சென்றார்.

சற்று நேரம் மெளனமாய் இருந்த முகில், “ரஞ்சி…என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி…ப்ளீஸ்…”

“முகில்…என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல? அப்புறம் அது எதுக்கு? விடும்மா…”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னா, என் மேலையே எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்…இருந்தாலும், காரணம் இல்லாம நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…சொல்லுங்க ரஞ்சி…என் விஷயமா தான ஏதோ…”

ரஞ்சித் எதுவும் பேசாமல் அமைதி காக்கவும், முகில் நடுங்கும் குரலில், “அந்த மஹேஷ் விஷயம் தான?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…” அவசர அவசரமாக ரஞ்சித் மறுத்த விதமே, முகிலுக்கு சந்தேகத்தை கிளப்ப,

“இல்லை…உங்க முகமே சொல்லுது…அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான்….சொல்லுங்க ரஞ்சி…எங்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க…ப்ளீஸ்…”

“ஆமா முகில்…அவனே தான்…நான் கைதாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அந்த மஹேஷ் எனக்கு ஃபோன் பண்ணி, இருபதாயிரம் பணம் வேணும், குடுக்கலன்னா, நீ அவனுக்கு எழுதின லெட்டர்ஸ், காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட ஃபோட்டோஸ், அப்புறம்…அப்புறம் அந்த ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட் இதெல்லாத்தையும் எங்க அம்மா, அப்பாவுக்கும், உன் அம்மா அப்பாவுக்கும் அனுப்சிடுவேன்னு மிரட்டினான்…உங்கிட்ட சொன்னா, நீ வருத்தபடுவேன்னு தான் உங்கிட்ட சொல்லாமலே, நானும் பணத்த குடுத்து தொலச்சிடேன்…ஆனா, உன் விஷயம் எல்லாமே எனக்கு தெரியும்ங்கறது அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு மட்டும் தான் எனக்கு புரியல...”

“மொதல்ல அவன் எனக்கு தாங்க ஃபோன் பண்ணான்…உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன்னு என்ன ப்ளாக் மெயில் பண்ணான்…”

ரஞ்சித் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள். “இத ஏன் முகில் நீ என்கிட்ட சொல்லல?”

“நீங்க கோவத்துல அவன ஏதாவது பண்ண போய் பிரச்சனை ஆய்டுமோன்னு பயந்துட்டு தான் நான் உங்ககிட்ட சொல்லல, நான் அவன்ட்ட, என் வீட்டுக்காரருக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரிஞ்சு தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவர் என்ன முழுசா நம்பறார்…அதனால, நீ என்னை மிரட்டி எந்த பிரியோஜனமும் இல்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்…அதுக்கு அப்புறம் அவனும் ஃபோன் பண்ணாததால, நானும் பேசாம இருந்துட்டேன்…அப்போ நீங்க அவன பாக்கத்தான் மாடிக்கு போனீங்களா?

“ஆமா முகில்…ஒன்பாதாம் தேதி ஃபோன் பண்ணி, அவன் துபாய்க்கு போறதாகவும், ரெண்டு லட்சம் குடுத்தா அவன்ட்ட இருக்கற எல்லாத்தையும் குடுத்துட்டு, இனி நம்ம வாழ்கைல குறிக்கிட மாட்டேன்னும் சொன்னான்… நானும் பணத்த எடுத்து ரெடியா வச்சிருந்தேன்…பதினஞ்சாம் தேதி நைட்டு, தீடீர்ன்னு ஃபோன் பண்ணி, அன்னிக்கே பணம் வேணும்ன்னு சொல்லவும், நான் தான் அவன அந்த பின்னாடி சந்து வழியா உள்ள வந்து மாடி ரூமுக்கு வர சொன்னேன்…அவன் போனப்புறம் ஏதோ சத்தம் கேட்குதேன்னு கதைவ திறந்துட்டு போய் பாத்தப்ப தான், அந்த பொண்ணு, மதில் மேல ஏறி நின்னுட்டு இருந்தா…ஆனா, நான் போறதுக்குள்ள அவ…”

“ரஞ்சி! நீங்க அவன பாக்கத் தான் போனீங்கன்னு போலிஸ் கேக்கும் போதே சொல்லி இருந்தா, இத்தன நாள் இவ்ளோ கஷ்டம் வந்திருக்குமா?”

“எப்படி முகில் சொல்லுவேன்? என் பொன்டாட்டியோட பழைய காதலன் மிரட்டினான், அவனுக்கு பணம் குடுக்கறதுக்காக தான் போனேன்னு சொல்ல சொல்றியா? உங்க வீட்ல உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க? உங்க வீட்டை விடு, எங்க விட்ல? என் பொண்ணு, என் பொண்ணுன்னு எப்படி கொண்டாடுறாங்க? நான் மட்டும் அத சொல்லி இருந்தா உன் நிலைமை என்ன? அந்த மஹேஷே வந்து சாட்சி சொல்லியிருந்தாலும், இத்தன நாளா அவன் ஏன் வரலை, அவன் யாரு, என்ன, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு போலீஸ்ல தோண்டி எடுத்துற மாட்டாங்க? அறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…”

“ரஞ்சி…” அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

ரஞ்சித் அதை துடைத்த வாறே, “இனிமே நீ அழவே கூடாது…அன்னிக்கு காலைல நான் நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்ல? அப்ப தான் பாத்தேன், அந்த மஹேஷ் அன்னிக்கு ராத்திரி ஏதோ பெரிய ஆக்ஸிடண்ட்ல மாட்டிகிட்டான்…ஜெயில்ல என்னை பாக்க வந்திருந்தான்….செத்து பொழச்சிருக்கான்…என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தமா பேசினான்…”

“நிஜமாவா?”

“ஆமா…அவனும் மனுஷன் தான? அவனுக்கு ஏதோ தேவை…நம்மள உபயோகிச்சுகிட்டான்…நம்ம போறாத நேரம், எனக்கு இப்படி ஆகவும், இதுக்கு நான் தான் காரணம்னு ரொம்ப வருத்தப் பட்டான்...அந்த பணத்தை கூட திருப்பி குடுத்தர்றேன்னு சொன்னான்னா பாத்துக்கோயேன்? நான் தான், அதை வச்சு நீ துபாய் போற வேலையை பாரு, இனிமே எங்க வாழ்க்கையில குறுக்கிடாதன்னு புத்தி சொல்லி அனுப்பிட்டேன்…அவனும் இன்னேரம் துபாய்ல இருப்பான்னு தான் நினைக்குறேன்…அதனால இனி வருத்தப்படறதுக்கு எதுவுமே இல்லை முகில்….எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு மறந்துடுவோம்…இன்னும் கொஞ்ச நாள் உன்ன மாதிரி அழகா ஒரு குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துடும்…”

விரக்தியுடன் சிரித்தாள் முகில், “ஹ்ம்ம்…ரெண்டு தடவை குழந்தை உண்டாகி… ஆனா ரெண்டு தடவையும் நிம்மதியே இல்லை… எல்லாம் என் ராசி! அந்த குழந்தையை யாருக்கும் தெரியாம கருவிலையே கொன்ன பாவம் தான் இப்படி வாட்டுது…ஆனா ஒரு பாவமும் அறியாத உங்கள போய்…” அதற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ வென்று அழுதாள்.

“முகில்! இந்த ராசி, பாவம், பரிகாரம்னு பேசுறத மொதல்ல நிறுத்து! நல்ல மனசிருந்தா எல்லாமே நல்லதா தான் நடக்கும்.”

எதுவுமே பேசாமல் அவள் சிறுது நேரம் அமைதி காக்கவும், “என்னம்மா?’ என்று மெதுவாக அவள் தலை வருடினான். அப்படியே அவனை பார்த்து புன்னகைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டவள், அவன் தோளில் இருந்து தலையை எடுக்க மனமின்றி அப்படியே கண்களை மூடினாள். இப்படி அவன் மார்பில் தலை சாய்ந்து கொண்டு, இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் பேச அவர்களுக்கு எவ்வளவோ காலம் இன்னும் மீதம் இருக்கிறதே!

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததில், வெளியே அலைபேசியோடு சென்ற சோமநாதனை மறந்து விட்டால் எப்படி? அவர்கள் பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு, கண்கள் பனித்து, வாயில் அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தார் அவர்!

அப்போது அந்த வழியாக சென்ற லீலாவதி, “என்ன ஸார்? இங்க நின்னுட்டு இருக்கீங்க? லஞ்சுக்கு போகலையா?” என்று கேட்கவும்,

கண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்!!!” என்றார்.

*********[முற்றும்]********

Tuesday, October 27, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 12

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11

15th Aug 12:00:35 A.M

நடுங்கும் கரங்களுடன் வேகவேகமாய் எண்களை கதவில் அழுத்திய ரஞ்சித்திற்கு கைகள் வேர்த்தது. கதவில் பச்சை விளக்கு எரிந்து அது திறப்பதற்குள் தீ மேல் நிற்பவனைப் போல் ஒரு நொடி கூட பொறுக்க முடியாதவனாய் நின்று கொண்டிருந்தான் ரஞ்சித். அங்கு என்ன நடந்தது, அந்த பெண் யார், எதற்காக குதித்தாள் இப்படி எதையுமே சிந்திக்கும் மனநிலையில் ரஞ்சித் அப்போது இல்லை. அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவன் அன்னேரத்தில் அங்கு என்ன செய்து கொண்டிருந்தான் என்று யாருக்கும் தெரியவே கூடாது. அவன் வீட்டை விட்டு நடுராத்திரி வெளியே வந்தது யாருக்கும் தெரிவதற்குள் தான் எப்படியாவது வீடு சென்றுவிட வேண்டும். இந்த ஒரு எண்ணம் மட்டுமே அவனை ஆக்ரமித்திருந்தது.

மூச்சிறைக்க படிகளில் ஓடத் துவங்கியவன், ஐந்தாவது மாடியை அடைந்ததும் தான் சிறிது யோசிக்க ஆரம்பித்தான். அந்த வாட்ச்மேன் எப்படியும் மாடியை நோக்கி ஓடி வந்துகொண்டிருப்பான். தான் எதிரே ஓடினால் வகையாக சென்று அவன் கையிலேயே மாட்டிக் கொள்ள நேரிடுமே. சரியாக ஐந்தாவது மாடிக்கருகே ஓடிவந்தவன், அப்படியே பக்கவாட்டில் சென்று படிகள் இருந்த இடத்திற்கு தூரமாக மறைந்து நின்று கொண்டான். பூட்ஸ் காலில் வாட்ச்மேன் ஓடி வரும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை போலவே ரஞ்சித்தின் இதயமும் டப் டப் என்று வேகமாய் அடித்துக் கொண்டது. அந்த சத்தம் அருகே வர வர, ரஞ்சித் இதயத்துடிப்பு இரண்டு மடங்காய் அதிகரித்தது. வாட்ச்மேன் பூட்ஸ் சத்தம் மெல்ல மெல்ல தேய ஆரம்பிக்கவும், தன் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு, அசுர வேகத்தில் ஓடி வீட்டை அடைந்தான் ரஞ்சித்.

வீட்டிற்கு சென்று அவனது அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சியாய் முகிலையும் படுக்கையில் காணவில்லை. அவள் எப்போது எழுந்தாள், தான் படுக்கையில் இல்லாததை கண்டுபிடித்திருப்பாளா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், உடனே பாத்ரூம் கதவை திறந்து பார்த்தான். அங்கும் அவளை காணவில்லை. பாத்ரூம் கதவை மூடியபடி வெளியே வந்தவன், தள்ளாடியபடி முகில் மீண்டும் அறைக்குள் நுழைவதை பார்த்தான். அவனை பார்த்ததும் திரு திருவென விழித்தவள், “தூங்கலையா? ஏன் எழுந்துட்டீங்க?” என்றாள்.

“ஒன்னுமில்லை…பாத்ரூம் போனேன்…நீ என்ன பண்ற?”

“தண்னி குடிக்க போனேன்…” என்று சொல்லிவிட்டு உடனே படுக்கையில் சரிந்தாள். தான் அத்தனை நேரமாக அருகே இல்லாததை ஒரு வேளை இவள் பார்த்திருப்பாளோ? பார்த்திருந்தால் எதுவுமே கேட்காமல் ஏன் இருக்க வேண்டும் என்று யோசித்தவன், பிறகு அந்த பெண்ணை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். இருட்டில் அவள் யார் என்று கூட தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. இன்னும் சிறிது நாட்களுக்கு அவனுடைய தூக்கம் சுத்தமாக தொலைந்தது என்று.

மாடிக்கு சென்ற அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி மாடியில் அவரால் இயன்றவரை அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். ஒருவரும் அங்கு இல்லை. அங்கு ஓடி வருவதற்கு பதிலாக கதவை திறக்க முடியாத படி கம்யூட்டரிலேயே லாக் செய்யும் வசதி அந்த கதவுகளுக்கு இருந்தது அவருக்கு தெரியவில்லை பாவம். யாரையும் காணாமல் தேடி சலித்து, உடனே அபார்ட்மெண்ட் செக்கரட்டரி ராமசாமியை தொடர்பு கொண்டார். அவரது கைபேசி சிவிட்சுடு ஆஃப் என்று சொல்லவே, நேரே அவர் வீட்டிற்கே சென்று கதவை தட்டினார். அதற்கும் எந்த பதிலும் இல்லை. ’என்ன இது? எங்கயும் வெளிய போறதா சொல்லவே இல்லையே…இன்னிக்கு ராத்திரி கூட கடையில இருந்து என்னவோ பெரிய பையில வாங்கிட்டு வந்தாரே!’ என்று எண்ணியவாறு வேறு வழியில்லாமல் காவல் துறையை தொடர்பு கொண்டார் அந்த செக்யூரிட்டி.

*****************************************************************************************

“ஆசை முகம் மறந்து போச்சே…”

மீண்டும் மீண்டும் அதே ஹலோ ட்யூன் பாடல் ஒலிக்க கோபத்தில் அழைப்பை துண்டித்தார் பரத்.

ஆவல் ததும்பும் முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த முகில், “என்ன சார் ஆச்சு?”

“அந்த பொண்ணு ஃபோன எடுக்க மாட்டேங்குது…சரி, அப்ப நானே நாளைக்கு நேரா அந்த ஆபிஸ் போய் பாத்துட்டு வரேன்…”

“நானும் உங்களோட வரலாமா?” ஆர்வமாய் முகில் கேட்க, பரத், “நீங்க எதுக்கு வீணா அலையனும்?”

“இல்லை…ப்ளீஸ்…நானும் வரேனே…இந்த வாட்டி அவர் எந்த தப்பும் செய்யலைன்னு கோர்ட்ல நிரூபிக்க முடியாட்டி, அப்புறம்…அப்புறம் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அவர் வெளியவே வர முடியாது…அதுக்குள்ள எங்க குழந்தை பிறந்திடும்…” அதற்கு மேல் பேச முடியாமல் முகிலுக்கு தொண்டையை அடைத்தது.

பரத், “கவலைப்படாதீங்க…உங்க ஹஸ்பென்டுக்கு இந்த கேஸுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நினைச்சப்போ எவ்ளோ முனைப்பா ஆதாரம் எல்லாம் திரட்டினேனோ, அத விட பல மடங்கு அதிகமா உண்மை என்னன்னு கண்டுபிடிக்க நானும் மூணு மாசமா ஆதாரங்கள திரட்டிட்டு தான் இருக்கேன்… நீங்க வரதுல எனக்கு எதுவும் ஆட்சேபனையும் இல்லை…ஆனா…எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்ன்னு…” பரத் முடிக்கும் முன்பு அவரது கைபேசியில் அழைப்பு வரவே, அழைத்த எண்ணை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.கைபேசியை காதில் வைத்து, “பரத் ஹியர்!” என்றார்.

எதிர்முனையில் ஒரு பெண் குரல், “ஹலோ…இந்த நம்பர்ல இருந்து கொஞ்ச நேரம் முன்னாடி கால் வந்துச்சு…மிஸ் பண்ணிட்டேன்…”

“நான் இன்ஸ்பெக்டர் பரத் பேசறேன்…”

திவ்யாவிடம் பேசி முடித்து, அவளிடம் பேசியவற்றை எல்லாம் முகிலுக்கு விளக்கிய பரத், “நாளைக்கு பில்டிங் சொல்யுஷன்ஸ் ஆபிஸ் போனா, டேட்டாவ எடுத்தர்லாம்…அதுக்கப்புறம் எல்லாமே தெளிவாயிடும்…தைரியமா இருங்க…” என்று சொல்லிவிட்டு அவரது வீட்டை நோக்கி புறப்பட்டார்.

-----

மறுநாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் பில்டிங் சொல்யூஷன்ஸ் அலுவலகத்தை அடைந்த பரத், அங்கு முன்னதாவே காத்துக் கொண்டிருந்த முகிலை பார்த்து ஆச்சர்யம் அடைந்தவராய், “என்ன இவ்ளோ சீக்கரம் வந்துட்டீங்க?”

முகில் ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுக்கவும், “சரி…நான் ஏற்கனவே எம்.டி. கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டேன்…வாங்க ரிஷப்ஷன்ல கேப்போம்…”

இன்ஸ்பெக்ட்டர் பரத் என்று சொன்னதும், சிறுது நேர காத்திருப்பு கூட இன்றி நேரே எம்.டியின் அறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர்.

கணினி திரையில் இருந்ததை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்த எம்.டி மாணிக்கவாசகம் இவர்களை பார்த்தது எழுந்து பரத்தின் கையை குலுக்கியபடி, “ஹலோ சார்! நைஸ் டூ மீட் யூ..சொல்லுங்க…நான் என்ன செய்யனும்?”

“சார்…ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்ல ஆறு மாசம் முன்னாடி ஒரு பொண்ணு இறந்தது உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன்…”

“ஆமா…ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சே…”

“இல்லை சார்…அது கேஸ் நடந்துகிட்டு இருக்கு…இன்னிக்கு கூட ஹியரிங் இருக்கு…அது விஷயமா தான் உங்ககிட்ட சில இன்ஃபர்மேஷன் வேணும்…”

“ஓ…எனக்கு சுத்தமா தெரியாதே? நான் ஆறுமாசமா ஊர்லையே இல்லை…ப்ராஜக்ட் விஷயமா நியூ ஜெர்ஸி போயிருந்தேன்…போன வாரம் தான் வந்தேன்…அப்பா கூட ஏதோ சொல்லிட்டு இருந்தாரு…நான் காதுல வாங்கிக்கல…சொல்லுங்க…நான் என்ன பண்ணனும்?”

“உங்க ஏக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டம் தானே ஷோபா அபார்ட்மென்ட்ஸ் கதவிலெல்லாம் போட்டிருக்கு?”

“ஆமா”

“ஒவ்வொரு கதவில இருக்கற யூனிட் உதவியால, அந்த கதவு எத்தனை மணிக்கு திறக்கப்பட்டிருக்குங்கற இன்ஃபர்மேஷன உங்க சர்வர்ல இருந்து எடுக்க முடியும்னு சொன்னாங்களே…அது சாத்தியம் தானா?”

“அஃகோர்ஸ் சார்…அப்சல்யூட்லி!”

“அந்த மாடி கதவு?”

“கண்டிப்பா எடுக்க முடியும்…ஒவ்வொருத்தரோட வீட்டுக் கதவு கூட எடுக்க முடியும்?”

“ஃபென்டாஸ்டிக்…அப்ப எனக்கு மாடிக் கதவோட டேட்டாவும், டோர் நம்பர் 1A வோட டேட்டாவும் வேணும்…”

“சார்…மாடிக் கதவு ஓகே…ஆனா வீட்டுக் கதவு…அந்த வீட்டுக்காரங்களோட கன்ஸென்ட் இல்லாம எங்களால குடுக்க முடியாது…அக்ரிமென்ட்ல அப்படி தான் எழுதியிருக்கோம்…”

“இவங்க தான் சார் அந்த வீட்டு ஓனர்…” என்று முகிலை பார்த்து பரத் சொல்லவும், அது வரை ஆர்வம் பொங்க அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாயிருந்த முகில். “ஆமா சார்…வீடு என் பேர்ல தான் இருக்கு…எங்களுக்கு கண்டிப்பா அந்த டேட்டா வேணும்…”

“அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை…எந்த வாரத்தோடது வேணும்? இந்த வாரமா, இல்ல போன வார டேட்டாவா?”

“என்னது வாரமா? எங்களுக்கு ஆறு மாசம் முன்னாடி, ஆகஸ்ட் பதினஞ்சாம் தேதியோட டேட்டா தான் வேணும்…”

“ஹய்யய்யோ சாரி சார்…எங்க பாலிஸி படி, ரெண்டு வாரத்துக்கு மட்டும் தான் பேக்கப் வச்சிருப்போம்…”

உடனே இருவர் முகமும் வாடிப் போனது, “வேற வழியே இல்லையா சார்?” பரத் இப்படி கேட்கவும் மாணிக்க வாசகம், “சாரி சார்…வேற எதுவும் வழியிருக்கற மாதிரி எனக்கு தோல” என்று கையை விரித்தார்.

சோர்வுடன் கதவை நோக்கி நடக்கத் துவங்கினர். நம்பிக்கையின் உச்சத்திற்கே சென்று அங்கிருந்து கீழே விழுந்ததை முகிலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரிப்ஷன் வரை மெதுவாக பரத்தை தொடர்ந்து வந்தவள் அதற்கு மேல் முடியாமல் அங்கேயே ஒரு இருக்கையில் சரிந்தாள்.

அவளை திரும்பிப் பார்த்த பரத், “என்னாச்சுங்க?” என்று பதட்டத்துடன் வினவ, முகில், “ஒன்னுமில்ல….கொஞ்சம் தண்ணி வேணும்…” என்று திக்கித் திணறி சொன்னாள். ஒரு நிமிஷம் என்றபடி அந்த ஓரத்தில் இருந்த அக்வாஃபீனாவில் தண்ணீர் பிடித்துக் கொண்டு அவர் முகிலருகில் வரவும், கதவை திறந்து கொண்டு திவ்யா நுழையவும் சரியாக இருந்தது. பரத்தை பார்த்ததும் அவரை பார்த்து புன்னகைத்தாள், “எம்.டி கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னாரு? ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்ல எங்க சிஸ்டம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லி தான் தெரியும்…இல்லன்னா மது கேஸுக்கு நான் முன்னமே எதாவது உதவி பண்ணியிருப்பேன்…” சொல்லும் போதே திவ்யாவின் முகம் வாடிப் போனது.

“நாங்க பேசினோம்மா…அவரு டேட்டா எல்லாம் ரெண்டு வாரத்தோடது மட்டும் தான் வச்சிருப்போம்…மத்ததெல்லாம் பாலிஸி படி டெலீட் பண்ணிடுவோம், ஒன்னும் பண்ண முடியாதுன்னுட்டாரு…”

“ஓ…” என்று சிந்தனையில் ஆழ்ந்த திவ்யா, “எனக்கென்னவோ அப்படி தோல…இந்த DBM க்ரூப்ல இருக்கற யாரும் ஒழுங்கா வேலை செஞ்சதா சரித்தரமே இல்ல…நீங்க அவங்ககிட்டையே நேரா போய் பேசி பாருங்களேன்…”

“ஓஹ்ஹ்…அவங்க எங்க இருப்பாங்க?”

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்…” என்று திவ்யா முன்னால் நடக்க, முகிலை பார்த்து பரத், “நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க…நான் போய் பாத்துட்டு…” என்று சொல்லி முடிப்பதற்குள் கஷ்டப்பட்டு உடனே எழுந்து இரண்டு அடிகள் எடுத்து வைத்து விட்டாள் முகில். பரத் புன்னகைத்தவாறு, “சரி..வாங்க…” என்று இரு பெண்களையும் தொடர்ந்தார்.

அந்த சிறிய அறைக்குள் இயந்திரங்கள் ஒலியுடன், விளக்குகள் பளிச்சிட, ஒரு கணினியில் மும்ரமாக மூழ்கியிருந்தவனை, திவ்யா, “ரமேஷ்” என்று அழைக்க, திரும்பியவன் “என்ன திவ்யா?” என்று கேட்டுவிட்டு புதுமனிதர்களை கேள்வியுடன் நோக்கினான்.

“இவங்களுக்கு ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் ஏக்ஸஸ் டேட்டா வேணுமாம்… இவரு இன்ஸ்பெக்ட்டர்…கொஞ்சம் பழைய டேட்டா கேக்குறாரு…ஆறு மாசம் முன்னாடியுள்ளது… நீ தான் என்னிக்குமே ப்ராஸஸ் எல்லாம் ஃபாலோ பண்ணினதில்லையே…அதான் இருந்தாலும் இருக்கும்னு இவங்கள கூட்டிட்டு வந்தேன்…”

“சார்…ஏ.ஸி.யெஸ் அந்த பில்டிங்குல போட்ட நாள்ல இருந்து எல்லா டேட்டாவும் அப்படியே இருக்குது…எதுவும் பண்ணல…இருக்கற வேலையில இத வேற ஞாபகம் வச்சுக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க? ஆனா டேட்டா ரெட்ரீவ் பண்ண ஒரு மணி நேரம் ஆகும்…பரவாயில்லையா?”

“சரி…எனக்கு நீங்க இப்போதைக்கு 1A வீட்டு டேட்டாவும், மாடி காமன் கதவு டேட்டாவும் மட்டும் இந்த லேப்டாப்ல போட்டு குடுங்க போதும்…அப்புறமா மறுபடியும் வரேன்…எதையும் டெலீட் பண்ணிடாதீங்க…” என்றபடி முகிலை பார்த்தார், முகிலும் உடனே அவள் வைத்திருந்த லேப்டாப்பை ரமேஷிடம் கொடுத்தாள்.

----

ஹியரிங் தொடங்கும் நேரம் ஆனபின்பும் பரத் வாரமல் இருக்கவே, லீலாவதி பதட்டத்தின் உச்சகட்டத்தை அடைந்தார். அவரது முகபாவனைக்கு நேர் எதிராக சோமநாதன் நிம்மதியுடன் காணப்பட்டார். அன்று அவரது ஜூனியரை கூட அழைத்து வந்திருக்கவில்லை. இன்றோடு இந்த கேஸ் முடியப்போகிறதென்ற திருப்தி அவர் முகத்திலேயே தெரிந்தது.

பரபரப்புடன் லேப்டாப்போடு உள்ளே நுழைந்த பரத், நேராக லீலாவதி அருகில் வந்து அமர்ந்து அவர் காதில் ஏதோ சொன்னார். உடனே அவர் எடுத்துக் கொண்டிருந்த குறிப்புகளை நிறுத்திவிட்டு ஆர்வத்துடன் பரத் சொல்வதை கேட்கத் துவங்கினார்.

நீதிபதி வந்ததும் தான் சேகரித்த ஆதாரங்களை அவரிடம் சமர்ப்பித்த பரத், “சார்…ரஞ்சித் வீட்டுக் கதவு பத்து மணிக்கு பூட்டப்பட்டிருக்கு…ரஞ்சித் அப்ப வீட்டுக்குள்ள நுழைஞ்சு கதவை பூட்டினத பாத்த சாட்சிகள் எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு நிறைய பேர் இருக்காங்க….அதுக்கு அப்புறம் மீண்டும் 11.53 க்கு அவர் வீட்டு கதவு திறக்கப்பட்டிருக்கு. ஒருத்தர் எவ்வளவு வேகமா ஏறினாலும் மாடிக்கு போய் சேர குறைஞ்சது மூணு நிமிஷங்களாவது ஆகும். அப்படி பாத்தா அவர் 11.56 ருக்கு முன்னாடி மாடியை அடைஞ்சிருக்க முடியாது. எண்கொண்டு திறந்த உடனே, திறந்து பிடிக்காட்டி பத்து வினாடியில தானே பூட்டிக்கற மாதிரி செஞ்சிருக்காங்க இந்த கதவுகள…மாடிக் கதவ சரியா 11.45 க்கு அபார்ட்மெண்ட்ஸ் உள்ளயிருந்து திறந்திருக்காங்க…மீண்டும் மாடிக் கதவு 11.59 க்கு உள்ளயிருந்து திறந்திருக்கப்பட்டிருக்கு….மறுபடியும் முப்பதே வினாடியில வெளிய இருந்து திறந்திருக்காங்க….”

“இதையெல்லாம் வச்சு பாத்தா, 11.45 க்கு மதுவந்தி தான் மாடிக் கதவை திறந்துட்டு போயிருக்கனும்…ஆனா அந்த சமயத்துல ரஞ்சித் அவர் வீட்ல தான் இருந்திருக்காரு…11.55 க்கு அப்புறம் மாடிக்கு வந்த ரஞ்சித் சரியா பன்னென்டு மணிக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டு மாடிக் கதவை திறந்து ஓடியிருக்காரு….மதுவந்தி கீழ குதிச்சது சரியா பனிரெண்டு மணி, அதை பாத்த உடனே பயத்துல ரஞ்சித் தலைதெறிக்க ஓடி வந்து மறுபடியும் கதவை திறந்து வெளிய வந்திருக்காரு….அவரு மாடியில இருந்த அந்த முப்பதே வினாடிகள்ள அவருக்கும் மதுவந்திக்கும் எந்த விதமான சச்சரவுகள் நடந்திருக்கறதுக்கோ, அவரு மதுவந்த்தியை கீழ தள்ள முயற்சி செய்யறதுக்கோ சாத்தியமே இல்லை. அது மட்டுமில்லாம அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி ரூம்ல இருக்கற டிஜிட்டல் க்ளாக் இந்த ஏக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டமோட சின்கரனைஸ் பண்ணியிருக்காங்க…அதனால மதுவந்த்தி குதிச்ச நேரத்தை பாத்ததா சொன்ன செக்யூரிட்டி சொல்றதும் இதோட ஒத்துப் போகுது…”

“ஸோ, டிஃபென்ஸ் லாயர் சொல்ற மாதிரி, suspect was at the wrong place at the wrong time” என்று சொல்லி முடித்தார் பரத்.

துறை நிபுணர்கள் கொண்டு உடனே உரிய முறையில் விசாரித்து, அனைத்து ஆவனங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரஞ்சிதிற்கு ஜாமீன் வழங்க கோரி சோமநாதன் சமர்பித்த மனுவை ஏற்றுகொண்டு, ரஞ்சித்தை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

“கவலை படாதீங்க…கூடிய சீக்கிரம் கேஸே க்ளியர் ஆயிடும்…” என்று முகத்தில் அரும்பிய புன்னகையுடன் சோமநாதன் சொல்ல, முகில் ரஞ்சித் இருவர் முகமும் பிரகாசமானது.

மகிழ்ச்சியில் ரஞ்சிதின் உள்ளங்கைக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு, கண்ணீரும் சிரிப்பும் கலந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த முகிலையும், நடந்தது கனவா இல்லை நிஜம் தானா என்று தெரியாமல் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த ரஞ்சித்தையும் பார்த்து, பரத்தின் உள்ளமும் நிறைந்தது. அவர்களிருவரின் பிணைப்பை பார்த்ததும், பரத்திற்குள்ளும் அந்த ஆசை துளிர்விட்டது. ’பாவம்…அம்மாவும் ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருக்காங்க…பொண்ணு பாக்க சொல்லிட வேண்டியது தான்…’ என்று நினைத்துக் கொண்டு அவரும் லேசாக தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டார்.

லீலாவதி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க போகிறது என்று நினைத்தபடி திரும்பிய சோமநாதனின் முகத்தில் இருந்த சிரிப்பெல்லாம் மாயமாய் மறைந்தது. அவர் நினைத்தற்கு எதிர்மறையாக, குதூகலத்துடன் வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தார் லீலாவதி! லீலாவதி முகத்தில் இருந்த சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்த்து, ’ஐய்யோ! இந்தம்மா என்ன திட்டம் வச்சிருக்கோ, தெரியலையே!’ என்று குழம்பி நின்றார் சோமநாதன்!

[அடுத்த பாகத்தில் முடியும்]

Wednesday, October 21, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 11

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10

15th Aug 06:15 P.M

“ச்சிங்குச்சா…ச்சிங்குச்சா...பச்சை கலர் ச்சிங்குச்சா…”

பிரபு நிறுத்தாமல் பாடிக் கொண்டிருக்க, காமாட்சி, “டேய்…போதும்டா…நல்லா தான இருக்கு ட்ரெஸ்…அக்காவ இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது தெரியுமா?”
அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி மாடியை அடையும் வரை இப்படி பாடிப் பாடி மதுவை கிண்டல் செய்து கொண்டிருந்தான் பிரபு. மது சிரித்தவாறு எதுவுமே சொல்லாமல் வந்து கொண்டிருந்தாள். சித்தி வீட்டில் தன் முயற்சி ஓரளவுக்கு பலனளித்ததாகவே தோண்றியது அவளுக்கு. யாரும் இல்லாத போது, மீண்டும் ஒருமுறை முயற்சித்தால் கண்டிபபாக அம்மாவுடன் பேசலாம் என்று முழுமையாக நம்பியதால் சற்று குதூகலமாகவே இருந்தாள்.

மாடிக்கு சென்றதும் பிரபு அவன் நண்பர்களோடு சென்றுவிட, சித்தி பேசிக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்திற்குள் அமர்ந்திருந்தவள், அவர்கள் பேச்சிலும் கலந்து கொள்ளாமல், நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியிலும் ஈடுபாடில்லாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த பெண்ணை கவனித்தாள். தாமரை வண்ண டஸர் புடவை அவளுக்கு மிக அழகாக பொருந்தியிருந்தது. ’அட! புடவை ரொம்ப நல்லா இருக்கே…” என்று அவளது புடவையையே சிறுது நேரம் ஆராய்ந்தவள், பிறகு தான் அந்த பெண்ணையும் பார்த்தாள், சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் அருகே ஒரு வயதான பெண்மணியும், சற்றே பின்னால் உயரமான ஓர் ஆணும் வந்து கொண்டிருந்தனர். அவனை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று எண்ணமிட்ட மதுவிற்கு, அவர்கள் அருகே நெருங்கி வரவும், ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது. அத்தனை நாட்களாக அவள் மறந்து விட்டதாக நினைத்த அந்த முகம், அவளது புறகண்களுக்கு முன் தோண்றவும், இது தான் அந்த முகம் என்று அவளது அகக்கண்களுக்கும் புலப்பட்டது. “ரஞ்சித்!” ஆச்சர்யத்தில் அவளையும் அறியாமல் சிறுது சத்தமாக அவன் பெயரை உச்சரித்து விட்டாள். அவள் பேசியது சரியாக கேட்காததால் காமாட்சி, “என்ன மது?” என்று கேட்க, “ஹாங்…ஒன்னுமில்ல…சித்தி…இங்கிருந்து சரியா தெரிய மாட்டேங்குது…நான் அந்த பக்கம் போய் பாத்துட்டு இருக்கேன்…
சரியாக அவர்களுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு, அவர்களையே பார்க்கத் துவங்கினாள். சிறுது நேரத்திற்கு மேல் அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை, காமாட்சியிடம் சென்று, “சித்தி! நான் போறேன்….எனக்கு போர் அடிக்குது…”

“இரும்மா…சாப்பாடு அரேஞ் பண்ணியிருக்காங்க…எல்லாம் பாத்துட்டு சாப்டிட்டு போலாம் …”
சிறுது நேரத்திற்குள்ளாக நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்து அவரவர் நின்றபடி பேசத் துவங்கியிருந்தனர். மதுவும் ஓர் ஓரமாக நின்று கொண்டு ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவன் மனைவி அவனை கூப்பிட, அவளருகே சென்றவனின் காதில் அவள் ஏதோ சொன்னாள். உடனே அவனும் கண்களை சிமிட்டி மிக அழகாய் சிரித்தான். இவற்றையெல்லாம் பார்த்து அவள் முகம் சுருங்கியது. ரஞ்சித் மனைவியின் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும், குடும்பத்தோடு ஒன்றாக அவர்கள் கூடிக் களிப்பதையும் பார்த்தவளுக்கு தன் மேல் பெருத்த பச்சாதாபம் எழுந்தது. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால், இதே போல் தான் தானும் சந்தோஷமாக இருந்திருப்போம் என்ற எண்ணம் அவளை வாட்டியது. “அம்மா மட்டும் இருந்திருந்தால்? இதை விட சந்தோஷமா நான் இருந்திருப்பேனே! இப்படி தனியா நின்னுட்டு இருந்திருக்க மாட்டேன்…” இவ்வாரெல்லாம் நினைக்க நினைக்க அவளுக்கு கண்களில் நீர் கட்டுப்படுத்த முடியாமல் வரத் தொடங்கியது. நேரே காமாட்சியிடம் சென்றவள், “சித்தி! எனக்கு ரொம்ப தலைவலிக்குது…சாப்பாடெல்லாம் வேண்டாம்….நான் போய் தூங்கறேன்…உள்ளிருந்து கதவை பூட்டாம தூங்கறேன்…நீங்க வந்தா தட்டாதீங்க…,” அவர் பதிலுக்கு எதிர்பார்க்காமல் விடுவிடுவென வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

வீட்டை அடைந்தவள் சிறுதி நேரம் சோர்வோடு அப்படியே அமர்ந்தாள். அம்மா என்று ஒரே ஒரு நபர் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனவுடன், தன் வாழ்வே இப்படி சூன்யமாய் போய் விட்டதே என்று மனம் வருந்தியவள், ஒரு முடிவோடு ஓஜா பலகையை மீண்டும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அம்மாவிடம் இந்த பலகையின் மூலம் பேச ஆரம்பித்தால், தான் இதுநாள் வரையில் இழந்த சந்தோஷங்களெல்லாம் மீண்டும் கிடைத்து விடும் என்று அவளுக்குள் பெருத்த நம்பிக்கை பிறந்தது.

அந்த பலகையை திறந்தவள், “அம்மா…ஒரு தடவை, ஒரே ஒரு தடவை உன்னோட பேசினா போதும்…அதுக்குப்புறம் செத்தா கூட சந்தோஷமா சாவேன்…ப்ளீஸ் ம்மா…என்னோட பேசும்மா” என்றபடி ப்ளேசட்டை நகர்த்தத் துவங்கினாள்.

மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தவளுக்கு தோல்வியே கிடைக்க, பூட்டிய அறைக்குள், தரையில் படுத்தபடி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாள். எவ்வளவு மணி நேரம் அப்படி படுத்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தன் அம்மாவின் சிரித்த முகமும், அதை போலவே மனதிலிருந்து உண்மையாய் வெளிப்பட்ட முகிலின் சிரிப்பும் அவள் கண்களுக்கு முன் தோன்றி மறைந்தது. சிரிப்பே மறந்து போயிருந்த அவளது முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். மெலிந்து உடைந்து விழுந்துவிடும் போன்ற தேகம், ஒட்டியிருந்த கண்ணங்கள், அதில் ஒடிங்கி கருத்துப் போயிருந்த கண்கள். அவள் முகத்தை பார்ப்பதற்கு அவளுக்கே பயமாக இருந்தது. பயம் என்று நினைக்கவும், ரதி அன்று பயமுறித்தயது நினைவுக்கு வந்தது. “எதாவது திறந்த வெளில முயற்சி பண்ணலாம்...ஆனா அதுல ஆபத்து அதிகம்...” இந்த வார்த்தைகள் அவள் மூலைக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. என்ன ஆனாலும் சரி, எதாவது திறந்த வெளியில் அன்றே முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
கதவை திறந்து கொண்டு கையில் ஓஜா பலகை, மெழுகுவர்த்தி தீப்பெட்டியோடு வெளியே போனவள், என்றுமில்லாத பழக்கமாய் சித்தி ஹாலில் சோஃபாவிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, சத்தமெழுப்பாமல், 53642 என்ற அவர்களது கதவு எண்ணை அழுத்தி வீட்டை விட்டு மெதுவாய் யாருக்கும் தெரியாமல் வெளியேறினாள். அவளை கடைசியாக வழியனுப்புவதைப் போல், ’டங்’ என்று பதினொன்றரை மணிக்காக ஒரே ஒரு முறை அடித்து ஓய்ந்தது அந்த அறை கடிகாரம்.

மெல்ல மெல்ல படிகளில் ஏறத் துவங்கினாள். தூக்கத்தில் மிதப்பவளை போல் மிக மிக மெதுவாய், ஒவ்வொரு படியாய் அடிமேல் அடி வைத்து ஒரு வழியாக மேல் மாடியை அடைந்தாள். மாடி கதவருகே சென்றவள், ஒன்பதாவது தளத்தின் அருகே வேறு ஏதோ ஓசை கேட்க துணுக்கற்றவளாய், கீழே குனிந்து படிகளில் அங்குமிங்கும் பார்த்தாள். அதன் பின்னர் ஒரு சத்தமும் வராததால், மாடி கதவருகே சென்றாள். அப்போது தான் அவளுக்கு அந்த கதவும் எண் கொண்டு தான் திறக்க வேண்டும் என்ற நினைவே வந்தது. ’என்ன இது…இந்த நம்பர் என்னன்னு கேக்கலையே…இப்ப என்ன பண்றது?’ சிந்தித்தபடி அங்கேயே சிறுது நேரம் நின்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் போன முறை வந்திருந்த போது கதவிற்கெல்லாம் எண் முறை வந்திருக்கவில்லை. இரண்டு வருடமாகியும் முழுமையாக கட்டி முடிக்காத கட்டிடத்தில், அப்போது தான் புதிதாக கதவுகளில் அத்தகைய பூட்டு பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று யோசித்தவள், முயற்சித்து தான் பார்ப்போமே என்று முதலில் 12345 என்ற எண்களை அழுத்தினாள். சிகப்பு விளக்கு எரிந்தது. மீண்டும் 00000 என்ற எண்களை அழுத்தவே, பச்சை விளக்கு எறியவும், கதவை திறந்து கொண்டு நடு மாடிக்கு சென்றாள்.

மெழுகை பற்ற வைத்துவிட்டு ஓஜா பலகையில் கவனத்தை செலுத்தத் துவங்கியவள், ஐந்தே நிமிடங்களில் தனக்குள் எதேதோ மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தாள். மிகவும் கவனமாய் மெழுகை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, மிக சன்னமான குரலில் யாரோ தன் பெயரை அழைப்பதைப் போன்ற பிரம்மை ஏற்பட்டது. சற்று நேரத்திலெல்லாம் சிறுது சத்தமாகவே ’மது! மது!” என்ற குரல் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தாள், யாருமே அங்கு இல்லை. தன் அம்மாவின் குரல் தான் அது என்று அடையாளம் கண்டுகொண்டு அந்த பலகையிலிருந்து கையை எடுத்தவளின் கை வேகவேகமாய் பலகையெங்கும் நகரத் துவங்கியது. குரல் கேட்பது தன் பிரம்மையா நிஜமா என்று தெரியாமல் குழம்பித் தவித்தவள், மீண்டும் சத்தமாக குரல் வரவும், குரல் வந்த திசையை பார்த்தாள். மாடி திண்டுக்கு வெளியே, வேறெங்கோ திறந்து வெளியிலிருந்து வந்து கொண்டுருந்தது. உடனே மெழுகை எடுத்துக் கொண்டு ’அம்மா…அம்மா…’ என்று உரக்கக் கத்திக் கொண்டே, கதறி அழுதபடி மாடித்திண்டை நோக்கி ஓடத் துவங்கினாள்.

“மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” கீழே பக்கவாட்டில் முழு உருவமாய் சாட்சாத் அவள் அம்மா விசாலாட்சியே நின்று கொண்டிருந்தார்!

“வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” சிகப்பு வண்ண சேலை அணிந்து கொண்டு கைகளை நீட்டி சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். “அம்மா…அம்மா” என்று கத்திக் கொண்டு, அதற்கு மேல் பேச வார்த்தகளின்றி மூச்சடைத்து நின்றிருந்தாள் மது. சற்றென்று வேறேதோ சத்தம் கேட்டு ஒரு நொடி திரும்பி பார்த்தவள், இருட்டில் யாரோ தடுக்கி கீழே விழுந்து, மீண்டும் எழுந்து அவளை நோக்கி மிக வேகமாய் ஒடிவந்துகொண்டிருப்பதை பார்த்தாள். ’அய்யோ அம்மா…’ என்று மீண்டும் கீழே பார்த்தவள் எங்கு தேடியும் அவள் அம்மாவை காணவில்லை. ஒரு நொடிக்கு முன்னர் யாரும் அங்கு இருந்தற்கான அடையாளமே எதுவுமில்லாமல் இருந்தது.

“அம்மா…அம்மா…” என்று அலறத்துவங்கியவளை, “என்ன பண்றீங்க…இறங்குங்க…” என்று சொல்லி அவள் கால்களை பிடித்தான் ரஞ்சித். அவளை பலவந்தமாக மாடித்திண்டிலிருந்து இறக்க அவன் முயற்சிக்க, நிலைதடுமாறி அவள் கைகளில் இருந்த மெழுகுவர்த்தி அவன் மேல் விழுந்தது. ’ம்மா…’ என்றபடி இவளை விடுத்து கைகளில் பட்ட மெழுவர்த்தியை தட்டி விட்டான். அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட மது, “அம்மா…நான் வந்துட்டேன்ம்மா…” என்று கத்திக் கொண்டே கண்களை இறுக மூடிக் கொண்டு யோசிக்காமல் கீழே குதித்தாள்.

ஒரு நொடிக்குள் நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தில் தலை கிறுகிறுத்துப் போன ரஞ்சித் மாடித்திண்டின் கீழே எட்டிப் பார்த்தான். அந்த பெண் நாலாவது மாடிக்கருகே ’அம்மா’ என்று அலறிக் கொண்டு கீழே போய் கொண்டே இருந்தாள். எதிரே தூரத்தில் செக்யூரிட்டி அறையிலிருந்து அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வருவது தெரிந்தது. தான் இருக்கும் அபாய நிலையை உணர்ந்தவன், உடனே திரும்பி அதிவேகமாய் கதவை நோக்கி ஓடத் துவங்கினான். அவன் உள்ளே ஓடி வரும் போது தட்டி விட்ட அதே மரப்பலகை மீண்டும் அவன் கால்களை தடுக்கவே, நிலை தடுமாறி குப்புற விழுந்தான். வந்த கோபத்தில் அந்த பலகையை எடுத்து தூர வீசினான். அவன் வீசிய வேகத்தில், அருகருகே அமைந்திருந்த கட்டிடங்களுக்கிடையில் எங்கோ ஒரு மூலையில் சென்று விழுந்தது அந்த ஓஜா பலகை. அதனோடே அவன் அணிந்திருந்த பிரேஸ்லட்டும் பறந்து, வெளியே விழுகாமல், அவன் விதி வசத்தால், அவர்கள் மாடியிலேயே ஒரு ஓரத்தில் விழுந்தது!

**********************************************************************************
திவ்யாவிடம் பேசியதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார் பரத். மதுவிற்கு ரஞ்சித்தை தெரியவே தெரியாது, அது மட்டிமில்லாமல் அவளுக்கு வேறு எந்த ஆணுடனும் பழக்கமில்லை என்று திவ்யா சொன்னது அவரை குழப்பியது. திவ்யா சொன்னதும், ரஞ்சித் சொன்னதும் அப்படியே ஒத்துக் போக, காமாட்சி, தனலட்சுமி, தரகர் ராமன் இவர்களெல்லாம் சொன்னது வேறு விதமாய் இருக்கிறதே, இவர்களில் யாரை நம்புவது என்று புரியாமல் குழம்பித் தவித்தார்.

வீட்டிற்கு செல்லாமல் நேரே ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் நோக்கி புறப்பட்டார். அங்கு யாரையும் பார்க்கும் எண்ணம் அவருக்கு இல்லை. தான் மட்டும் தனியாக ஒரு முறை அந்த மாடிக்கு மீண்டுமொரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து அபார்ட்மெண்ட்ஸ் உள்ளே அவர் நுழையும் போது மணி பத்தாகியிருந்தது. அவரை பார்த்தது செக்யூரிட்டி என்ன ஏதென்று விசாரித்து, ’மாடிக்கு தான சார்? போலாம் சார்…வாங்க…’ என்று உடன் வந்தார். ’வேணாம்…நான் பாத்துக்கறேன்…’ என்றபடி சென்றவரிடம், ’லிஃப்ட்ல போங்க சார்…’ என்று பின்னாலிருந்த சொன்னார் அந்த செக்யூரிட்டி. லிஃப்ட் அருகே சென்ற பரத் பின்பு ஏதோ யோசித்து படிகளில் ஏறத் துவங்கினார். சிறுது வேகமாய் படிகளில் ஏறி, கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவர் சரியாக மூன்று நிமிடங்களில் பத்து மாடியை கடந்து விட்டதை கவனித்துக் கொண்டார். கதவின் அருகே சென்று அதை திறக்க முயற்சித்த பரத்திற்கு, அப்போது தான் அது எண்களால் இயக்கப்படும் கதவு என்று அவருக்கு புலப்பட்டது. இத்தனை நாட்களாக தான் இதை கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று வியப்படைந்தார். மது இறந்து போது பலமுறை அவர் அங்கு வந்திருந்தும், செக்யூரிட்டியோ காண்ஸ்டபிள்களோ ஏற்கனவே கதவை திறந்து வைத்திருந்ததில், அந்த கதவை அவர் கவனிக்கவே இல்லை. இப்போது அந்த கதவில் பொருத்தியிருந்த இயந்திரத்தை பார்த்தவர், ’பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்று அதில் பொறித்திருந்த அந்த இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பார்த்தவவுடன், அவருக்குள் ஏதோ பொறி தட்டியது. அன்று தான் எங்கோ அதே பெயரை அவர் பார்த்திருந்தார். ’எங்கே? எங்கே?’ என்று யோசித்தபடி கீழே லிஃப்டில் இறங்கத் துவங்கினார்.

வரும் வழியில் முதல் தளத்தருகே லிஃப்ட் நின்றது. ’காத்தோட்டமா நடந்துட்டு வந்தா, உனக்கும் கொஞ்சம் வயிரு பிரட்டரதெல்லாம் மறந்து நல்லாயிருக்கும்’ என்று யாரோ சொல்வது கேட்டது. கதவு திறந்ததும் எதிரே தனலட்சுமியும், முகிலும் நின்று கொண்டிருந்தனர். பரத்தை பார்த்ததும் அவர்கள் தயங்கி நிற்கவே, “வாங்க…உள்ள வாங்க…” என்று உற்சாகமாய் அவர்களை பார்த்து சிரித்த பரத், அப்போது தான் முகிலை கவனித்தார். அவளை பார்த்ததும் அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, முகத்தில் இறுக்கம் பரவியது. ’ஒரு வேளை ரஞ்சித் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால்? தேவையில்லாமல் ஒரு கற்பினி பெண்ணை கோர்ட் கேஸ் என்று அலைக்கழிக்கிறோமோ…’ என்ற பரிதாப உணர்ச்சி அவருக்குள் பரவியது.

லிஃப்ட் நின்றதும் அவர்களிவரும் எதுவும் பேசாமல் இறங்கி செல்லவே, “ஒரு நிமிஷம்…” என்று அவர்களை நிறுத்தினார். “இந்த மாடிக் கதவோட கோட் என்ன?” என்று பரத் கேட்க, முகில், “78539” என்று பதிலளித்தாள்.

முகவாயை தடவியபடி சிறுது யோசித்தவர், “நீங்களும் என்கூட மாடி வரைக்கும் வர்றீங்களா? உங்ககிட்ட கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்…” என்று பரத் முகிலை பார்த்து இழுக்க, அவரை இடைமறித்த தனலட்சுமி, ’அங்கெல்லாம் எதுக்கு? எதுவா இருந்தாலும் இங்கையே கேளுங்க…” என்றார்.
பரத், “பயப்படாதீங்கம்மா…ஒரு பத்து நிமிஷம்…மாடிக்கு வரலைன்னா பரவாயில்லை…இங்கயே கூட பேசலாம்….நீங்க கொஞ்சம் அப்படி நின்னீங்கன்னா…” என்று சுற்றும் முற்றும் பார்த்தவர், தனலட்சிமி தள்ளிப் போய் நிற்பதற்கு எந்த சரியான இடமும் இல்லாததால் மீண்டும் முகிலை பார்த்தார். உடனே முகில், “நான் போய்ட்டு வரேன் அத்தை…நீங்க வீட்ல இருங்க…கேஸுக்கு உதவறதுக்கு தான இன்னேரத்தில இத்தன தூரம் வந்திருக்காரு…” என்றாள்.

“அதில்லம்மா…” என்று தனலட்சுமி இழுக்க, “அம்மா! போலீஸ் காரன்னா எல்லாருமே மோசமானவன்னு நினைக்காதீங்க…எவனையோ மாட்டி விட்டாச்சு, இதோட என் வேலை முடிஞ்சுதுன்னு நான் வீட்டுக்கு போயிருக்கலாம். உங்க மகன் தான் உண்மையான குற்றவாளியா இல்ல, தப்பான இடத்தில இருந்தததால அவரு மாட்டிகிட்டாரான்னு எனக்கே சந்தேகமா இருக்கறதால தான் இங்க நின்னு உங்களோட பேசிட்டு இருக்கேன்…பத்து நிமிஷத்தில நானே கொண்டு வந்து உங்க வீட்ல விட்டுடறேன்…என்னை நம்புங்க…”

அரை மனதோடு தனலட்சுமி தலையசைக்க மீண்டும் லிஃப்டிற்குள் ஏறியவர்கள் தனலட்சுமியிடம் முதல் தளத்தில் விடைபெற்று பத்தாவது தளத்தை அடைந்தனர்.

முகில் ஏதோ யோசனையில் ஒரு எண்ணை மாற்றி அழுத்த, கீ கீ என்ற சத்தத்துடன் சிகப்பு விளக்கு எரிந்தது. மீண்டும் அவள் சரியான எண்களை அழுத்த பச்சை விளக்கெரிந்து கதவு திறந்தது.

“மதுரையில இந்த மாதிரியெல்லாம் கதவு வச்சிருக்காங்களா?” என்று வியப்புற்று பரத் வினவ, ’அது ஒன்னுமில்லை. இந்த அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் மகன் தான் பில்டிங் சொல்யூஷன்ஸ்னு ஒரு கம்பெனி வச்சிருக்காரு…அதனால இதுல எல்லா கதவிலையும் இத தான் வைக்கனும்னு புதுசா வீடு வாங்கும் போதே இருபதாயிரம் சேத்து வாங்கிட்டாங்க…ஆனா ரெண்டு வருஷம் கழிச்சு இப்ப தான் வச்சிருக்காங்க…”

“ஓ…அந்த கம்பெனி எங்க இருக்குன்னு தெரியுமா?”

“அது…சரியா தெரியல…அண்ணா நகர்ல தான் எங்கயோ இருக்குன்னு நினைக்கறேன்…”

அண்ணா நகர் என்று முகில் சொல்லவும், அவருக்குள் அத்தனை நேரமாக ஓடிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. ’பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்று திவ்யா அணிந்திருந்த அடையாள அட்டையில் அன்று மாலை தான் அந்த பெயரை பார்த்திருந்தார் பரத்!

[தொடரும்]

Friday, October 16, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 10

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9

15th Aug 12:00 A.M

“டங்…டங்…டங்…”
ஓஜா பலகையில் தீவிரமாக கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த மது, திடீரென்று சத்தமாய் கடிகாரச் சத்தம் கேட்டு பயந்து போய், “அம்மாஆஅ” என்று அலறினாள். கடிகாரத்தை திரும்பி பார்த்தவள் மணி பனிரெண்டு என்று அது காட்டிக் கொண்டிருக்க, ’உஸ்’ என்ற நிம்மது பெருமூச்சு விட்டாள். கடிகாரத்தின் அருகே இருந்த காலண்டரில் இருந்த ஆகஸ்ட் பதினான்காம் தேதி தாள், விடிந்ததுமே கிழிபடப் போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் குதூகலமாய் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

பலமுறை ரதி செய்தது போலவே அவளும் அன்று வேலையை துவங்கினாள். அன்று அவளது முயற்சிக்கு சிறு பலனாய், “யாராவது இருக்கீங்களா? அம்மா…அம்மா” என்ற அவள் கேள்விக்கு ப்ளாசட் பலமாய் பலகை மேல் அங்கும் இங்கும் நகரத் துவங்கியது. கடைசியாக அவளது கைகள் தானாக “YES” என்ற எழுத்துக்கு தானாக சென்றது. உடனே வெற்றிக் களிப்பில் கூச்சலிட்டாள் மது, “அம்மா! வந்துட்டியா? அம்மா….அம்மா…” என்று அவள் உணர்ச்சிவசப் பட்டு கத்தவும், மீண்டும் பலகையில் அங்குமிங்கும் வேகவேகமாய் நகரத் துவங்கியது அவளது கைகள். அதன் பின் ஒரிடத்தில் நின்ற ப்ளேசட் சலனமே இல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. மீண்டும் மதுவின் முகத்தில் ஏமாற்றத்தின் குறிகள். ’என்ன இது’ என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே, “என்ன மது பண்ணிட்டு இருக்க?” என்ற அவளது சித்தியின் குரல் கதவுக்கருகில் சத்தமாக ஒலிக்க, அவசர அவசரமாக ஓஜா பலகையை மூடினாள்.

உக்கார்ந்த வண்ணமே திரும்பி, “ஹ்ம்ம்…ஒன்னுமில்ல…ஒன்னுமில்ல சித்தி…” என்றாள். தன் உடலால் ஓஜா பலகையை முழுவதுமாக மறைத்திருந்தாள்.
“என்ன மது இது மெழுகுவர்த்தி எல்லாம்? லைட் போட்டுக்க வேண்டியது தான?”

“அதுவா…சும்மா ஒரு…எக்ஸ்பிரிமெண்ட் பண்ணிட்டு இருந்தேன்…”

“சரி சரி…நேரம் ஆகுது…தூங்கு!” சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். மது தனக்குத் தானே சலித்துக் கொண்டாள். மீண்டும் அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தான் அழைத்ததும், அம்மா அந்த இடத்துக்கு வந்து, வேறு மனிதர் சத்தம் கேட்டதுமே சென்று விட்டார் என்று தான் அவள் முழுமையாக நம்பினாள். மீண்டும் மறுநாள் யாருமில்லாத சமயம் பார்த்து முயற்சிக்கலாம் என்று யோசித்தபடி உறங்கச் சென்றாள்.

---
“வாங்க மதுக்கா…மொட்டை மாடியில தான ஃபங்ஷன் நடக்குது…அதுக்கு போய் எனக்கு உடம்பு சரியில்லை அது இதுன்னு ரொம்ப தான் பிகு பண்ணிக்கறீங்க…”
அன்று மதியத்திலிருந்தே மதுவின் சித்தி மகன், அவளை அன்று மாலை நடக்கவிருந்த சுகந்திர தின விழாவிற்கு வரச் சொல்லி விடாமல் நச்சரித்துக் கொண்டிருந்தான். மது நாசூக்காக தனக்கு உடம்பு சரியில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்லி வந்தாள். சித்தியும் மகனும் அந்த விழாவிற்கு சென்ற பின்னர், வீட்டில் நிம்மதியாக மீண்டுமொரு முறை தன் வேலையை தொடரலாம் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அவன் புரிந்து கொள்ளாமல் மதுவை தொந்தரவு செய்ததுமில்லாமல், பிகு செய்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு சிறுது கோபம் வந்தது.

“என்ன பிரபு நீ? ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்ட? என்னால வர முடியாதுன்னு சொல்றேன்ல? போய் உன் வேலையை பாரு…இனிமே என்னை தொந்தரவு பண்ணாத…ச்சே…நிம்மதியே இல்லை” என்று கோபமான குரலில் அவள் திட்டவும், அந்த சிறுவனுடைய முகம் வாடிப் போனது.

அதுவரை சமையலறையிலிருந்த காமாட்சி அங்கு விரைந்து வந்தார். வந்தவர் மகனை முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து, “ஏன்டா? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை? அக்கா தான் வரலைன்னு சொல்றாங்களே…அப்புறம் எதுக்கு அவங்கள தொந்தரவு பண்ணிட்டு இருக்க? அவங்கெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததே பெரிய விஷயம்…அத தெரிஞ்சுக்கோ…”

சித்தி குரலில் இருந்த வித்யாசம் மதுவிற்கு உரைக்க, அவள், “என்ன சித்தி சொல்றீங்க? இப்ப எதுக்காக அவனை தேவையில்லாம அடிச்சீங்க?”

“நான் என்னடீம்மா சொல்றது? எங்கக்கா இருந்த வரைக்கும் எங்கள கண்ணுல வச்சு தாங்கினாங்க…ஆனா உனக்கோ உங்கப்பாவுக்கோ நான் ஒருத்தி இருக்கறதே தெரியாதே….அம்மா இறந்தப்புறம் ஒரே ஒரு தடவை உங்கப்பாவோட வந்த….அதுக்கு அப்புறம் எத்தனை தடவை கூப்பிட்டிருக்கேன்? ஒரு தடவையாவது வந்திருக்கியா?”

“அதில்லை சித்தி…எனக்கு காலேஜ்ல…” என்று எதோ சமாதானம் செய்ய முற்பட்டவளை இடைமறித்த காமாட்சி, “நீ ஒன்னும் சொல்ல வேணாம்மா…என்ன தான் சித்தி, சித்தப்பாவா இருந்தாலும், நாங்க உங்ககிட்ட வேலை செய்யறவங்க…என் வீட்டுக்காரர் உங்கப்பா கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கறவரு தான? நீயெல்லாம் எங்க வீட்டுக்கும், இந்த மாதிரி சாதாரண ஃபங்ஷனுக்கும் வருவியா?”

மதுவின் கண்கள் தனாக கலங்கின, “என்ன சித்தி இப்படியெல்லாம் பேசறீங்க? நாங்க போய் அப்படியெல்லாம் நினைப்போமா? எங்கம்மாவும் இப்ப இல்ல…எங்கம்மாவுக்கு அடுத்து நீங்க தான எனக்கு எல்லாம்? அம்மாவ பாக்கனும் போல இருக்குன்னு தான நான் இங்க வந்தேன்…”

உடனே காமாட்சி அவளை ஓடி வந்து கட்டிக் கொண்டார், “மண்ணிச்சிடுடா கண்ணு….நான் ஏதோ பேசிட்டேன்…சரி…அழாத மா….அம்மா நம்மளோடையே தான் இருக்காங்க….நீ அந்த ஃபங்ஷனுக்கெல்லாம் ஒன்னும் வர வேண்டாம்…எல்லாரும் வீட்லையே இருப்போம்…”

கண்களை துடைத்துக் கொண்டவள், “இல்ல…இல்ல…நானும் வரேன்…” என்று சிரித்தபடி பதிலளித்தாள். அதன் பிறகு, தம்பி பிரபு வேறு, “சாரி கா…சாரி கா” என்று அவள் காலையே சுத்தி வந்தது அவள் மனதை சங்கடப்படுத்தியது. இவ்வளவு நாட்களாக தான் சித்தியை காரணமில்லாமல் தவறாக நினைத்துவிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள்.

மாலை ஆறு மணியானதும், அந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக மூவரும் மொட்டை மாடிக்கு கிளம்பினர். மதுவும் ஓரளவு உற்சாகத்துடன் தான் கிளம்பினாள், அங்கு தான் பார்க்கப் போகும் காட்சி தான் தன் வாழ்வையே மாற்றி அமைக்கப் போகிறது என்பதை அறியாமல்.

*********************************************************************************************

பரத் அழைத்ததும், அங்கு நிற்கவே பிடிக்காதவர்கள் போல் நின்று என்னவென்று கேட்டனர் முகிலும் தனலட்சுமியும்.

பரத் தனலட்சுமியை பார்த்து, “நீங்க ரஞ்சித்தோட அம்மா தானே?”

“ஆமா…”

“உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும்ம்மா…”

முகத்தில் கேள்விக்குறியோடு தனலட்சுமியும், “சொல்லுங்க…”

“அந்த தரகர் அன்னிக்கு கோர்ட்ல சொன்னாரே…அதையெல்லாம் இவங்க உங்ககிட்ட சொன்னாங்களா?”

“ஆமா…அதுக்கென்ன?”

“இல்லை…அதெல்லாம் உண்மையான்னு கேக்கலாம்னு தான் உங்கள கூப்பிடடேன்…”
இதற்கு என்ன விடை சொல்வது என்று தெரியாமல் தனலட்சுமி குழம்பி தவிக்க, முகில், “இதெல்லாம் எதுக்கு சார் நீங்க தெரிஞ்சிக்கனும்?” என்று வேகமாய் கேட்டாள். இவனிடம் ஏதாவது சொல்லி ரஞ்சிதிற்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

“இத பாருங்கம்மா…என்னோட வேலை குற்றவாளியை கண்டுபிடிக்கறது…உங்க ஹஸ்பென்ட் எந்த தப்பும் செய்யலைன்னு நீங்க நினைச்சா, எந்த உண்மையையும் மறைக்காம சொல்லுங்க…அது உங்க ஹஸ்பெண்டுக்கே கூட உதவியா இருக்கலாமில்லையா?”

பரத் இப்படி கேட்கவும், முகில் தனலட்சுமியை பார்த்தார், “ஆமா சார்…அந்த தரகர் சொன்னது உண்மை தான்…ஆனா, என் மகனுக்கு இந்த ஜாதகம், ராசி இது மேல எல்லாம் ஒரு வெறுப்பு…எப்பயுமே எங்ககிட்ட அதெல்லாம் பாக்காதீங்கன்னு சண்டை பிடிப்பான்…அந்த பொண்ணு ராசி சரியில்லைன்னு நான் தான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்…அதனால தான் அவன் என்கிட்ட கோவிச்சுகிட்டு அப்படி சொன்னான்…அவன் சொன்னதால மட்டும் இல்லை, சாதாரணகாவே அவனுக்கு நேரம் சரியில்லைன்னு தான் நானும் ஒரு வருஷம் அவனுக்கு பெரிசா பொண்ணு எதுவும் பாக்கல…ஆனா அந்த தரகர் ரெண்டு, மூணு தடவை வீட்டுக்கு வந்திருக்காரு…ஒரு தடவை, அவர் இருக்கும் போதே, இவன் அதே பொண்ண பாருங்கன்னு என்கிட்ட சண்டை பிடிச்சான்…அத தான் அவரு அன்னிக்கு சொல்லியிருக்காரு…”

“ஓ ஹோ….ஆமா அந்த தரகர உங்களுக்கு நல்லா பழக்கமா?”

“அவரை எங்களுக்கு தெரியாது…மதுவந்த்தி ஜாகத்த அவரு தான் கொண்டு வந்து குடுத்தாரு…அப்ப புடிச்சு தான் எங்களுக்கு அவரை தெரியும்…”

“ஓ…சரிம்மா…இத தான் கேக்கனும் நினைச்சேன்…நன்றி” பேசாமல் அமைதியாய் நின்றிருந்த முகிலை பார்த்து நட்போடு சிரித்து விட்டு அங்கிருந்து அகன்றார் பரத்.

எதற்காக இதெல்லாம் கேட்கிறார் என்று எதுவுமே புரியாமல் குழப்பத்துடன் வீட்டிற்கு கிளம்பினர் தனலட்சுமியும் முகிலும்.

காவல்நிலையத்தை அடைந்த பரத், முருகேசனை அழைத்து ரஞ்சித் வழக்கின் சாட்சி விவரங்கள் அடங்கிய போப்பை எடுத்து வர சொன்னார். அதில் தீவிரமாக ஆழ்ந்தவர், முருகேசனை அழைத்து,

“இந்த ராமன் ங்கறது தான் அந்த தரகரா?”

“இந்தாள யாரு விசாரிச்சா?”

“நம்ம யெஸ்.ஐ தான் சார்…” யெஸ்.ஐ என்று காதில் விழுந்ததுமே, காது குடைந்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, “என்ன சார்?” என்று பரத்தை பார்த்து கேட்டார் அந்த யெஸ்.ஐ.

“இந்த ராமன் பத்தின தகவலை எப்படி புடிச்சீங்க? நீங்க தான் அவனை விசாரிச்சதா?”
“ஆமா சார்….ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க ஸ்டேஷனல இல்லாத நேரம் ஒருத்தன் வந்தான், இந்த கேஸ பத்தி என்கிட்ட தகவல் இருக்கு…நான் தான் ரஞ்சித்துக்கும் அந்த மதுவந்த்தி பொண்ணுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணே்ன்னான்…சரின்னு நான் தான் அவனை வக்கீல் மேடத்துகிட்ட அனுப்பி வச்சேன்…”

“அவனை அப்படியே விட்டுடீங்களா? அவனை என்ன ஏதுன்னு விசாரிக்கலை?”

“அவனே தான் அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டானே…அதுக்கு மேல அவனை விசாரிக்க என்ன கிடக்கு?”

பரத் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “சார்! கொஞ்சமாவது யோசிச்சிருந்தீங்கன்னா, அவனை விட்டிருக்க மாட்டீங்க! எவனாவது தானா முன்வந்து சாட்சி சொல்ல வருவானா? போலீஸ் விசாரிக்கரேன்னு போனாலே, அலறியடிச்சிட்டு ஓடுவாங்க…அவனா பேப்பர்ல பாத்துட்டு வந்து துப்பு குடுக்கறான்னா….அத அவனா பண்ணானா, இல்ல வேற யாரும் அவங்க மாட்டாம, ரஞ்சித் மாட்டினா நல்லதுன்னு அவனை அனுப்சாங்களான்னு எப்படி தெரியும்?”

“அவன் என்னத்த அப்படி பெரிய தகவல் குடுத்துட்டான்னு அவனை ஏன் விட்டேன்னு கேக்கறீங்க? ஏதோ அவங்க ரெண்டு பேரையும் தெரியும்ன்னா…அதுக்கு போய்…”

“இல்லை சார்…இதுல என்னவோ திட்டம் இருக்கு…அந்த தரகர் ராமன் அவனா முன்வந்து சாட்சி சொல்லியிருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை…வேற யாரோ தான் அவனை அனுப்சிருக்கனும்…அந்தாளுக்கு வேற யார் கூட எல்லாம் பழக்கம் இருக்க முடியும்? ஹ்ம்ம்…” முகவாயை நீவியபடி யோசித்தவர், “மது அம்மா இப்ப இல்லை…அவங்க அப்பாவுக்கு தெரிஞ்ச ஆளா இருக்கலாம்…ஆனா அவரையும் இப்ப கேக்க முடியாது, அந்தாளு ஆஸ்பத்திரியில ஸ்ட்ரோக் வந்து படுத்து கிடக்கறாரு…ஹ்ம்ம்ம்…அந்த பொண்ணோட சித்தி, அது பேரென்ன?”

“காமாட்சி சார்…”

“ஹான்…காமாட்சி…அந்தம்மா கிட்ட தான் கேக்கனும்…சரி…நான் இப்பயே கிளம்பறேன்…” பரத் சென்றதும் யெஸ்.ஐ மீண்டும், “நான் சொன்னேன்ல? இந்தாளுக்கு பைத்தியம் தான்யா புடிச்சிருக்கு…என்னவோ அந்த ரஞ்சித் பயலை வகையா மாட்டி விட்டுட்டான்…புத்திசாலி தான்னு நினைச்சா, இப்ப மறுபடியும் முறுங்கமரம் ஏறிட்டான்?” சத்தமாக சலித்துக் கொண்டார் அந்த வயதான யெஸ்.ஐ. முதலில் மதுவந்த்தி தற்கொலை தான் செய்து கொண்டாள் என்று யோசித்தவர், இப்போது ரஞ்சித் பிடிபடவும், அவன் தான் அந்த கொலையை செய்திருப்பான் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். ஆனால் பரத் விடாமல் வேறு ஏதோதே கோணங்களில் விசாரணையை தொடர்ந்தது அவருக்கு அவசியமில்லாத ஒன்றாகவே பட்டது.

காமாட்சியிடமும் ராமனிடமும் விசாரித்த பரத்திற்கு ஒரே பதில் தான் கிடைத்தது. ராமனுக்கும் ஒரு வருடம் முன்னதாகவே இறந்து போன மதுவந்த்தியின் அம்மாவுக்கும் தான் முன்னமே பழக்கம் என்று. இதற்கு மேல் என்ன செய்யலாம் என்று யோசித்த பரத் நேரே மது தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். மதுவின் அறையை பகிர்ந்தவர் யார் என்று விசாரித்தவருக்கு அங்கும் ஏமாற்றமே கிடைத்தது. அந்த பெண் வேறு ஒரு ஹாஸ்டலுக்கு சென்று விட்டதாகவும் அவர்களிடம் அவளது புதிய முகவரி இல்லை எனவும் பதிலளித்தனர். அந்த பெண்ணின் பெயர் திவ்யா என்றும், அவள் கல்லூரி முடித்து மதுரையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விட்டாள் என்பதையும் தவிர வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ஏதோ முட்டுக் கட்டை வருவதாகவே தோண்றியது அவருக்கு. எப்படியும் அடுத்த ஹியரிங்கிற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கவே, இப்போது விட்டு, சிறுது நாள் கழித்து மீண்டும் பிடிப்போம் என்று முடிவெடுத்தபடி அங்கிருந்து சென்றார்.

அசுர வேகத்தில் மூன்று மாத காலமும் நகர்ந்தது. ரஞ்சித்தின் அடுத்த ஹியரிங்கிற்கு இன்னும் ஓரிரவே எஞ்சியிருந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார் பரத். முந்தயை விசாரணைகளின் போதும், நீதிமன்றத்திலும் ரஞ்சித்தின் முகத்தில் சிறுதளவு கூட குற்ற உணர்ச்சி இருக்கவில்லை, மாறாக அவன் முகத்தில் ஒரு பரிதவிப்பும், பரிதாபமும் மட்டுமே நிறம்பியிருந்தது. யார் கேட்டாலும், எதற்காக அவன் மாடிக்கு போனான் என்று அவன் சொல்லாவிட்டாலும், அதை சொல்லாமல் மறைப்பதில் அவன் முகத்தில் ஒரு வித திருப்தி இருந்தது.

முகிலின் அழுது சிவந்த முகமும் அவர் மணக்கண் முன் தோண்றியது. பார்த்தால் புத்திசாலியாக தெரிகிற இந்த பெண், கண்மூடித்தனமாக கணவனை நம்புபவளாக தோண்றவில்லை. அவர்களுக்குள் வேறு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும், அது இந்த கேஸிற்கு சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம். ’ஒரு வேளை அவன் எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டானோ?’ என்ற எண்ணம் அவரை சஞ்சலப் படுத்தியது. இவ்வாறு பல கோணங்களில் யோசித்து அவருக்கு தலை வலிக்க தொடங்கவே, நேராக வீட்டிற்கு புறப்பட்டார். வீட்டுக்கு செல்லும் வழியில் அண்ணா நகரில் கஃபே காஃபி டேயை பார்த்தவர், அங்கேயே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தார்.

“இப்ப நீங்க கேட்டுக் கொண்டே இருப்பது சூர்யன் FM… 93.5… ஊர் சுற்றலாம் வாங்க! நான் உங்க கோமதி! இப்ப நாம அண்ணாநகர்ல இருக்கற கஃபே காஃபி டேயில இருக்கற நேயர்களை சந்திப்போமா?”

’என்னடா இது தலைவலின்னு வந்தா இப்படி உயிர வாங்கூறாங்க’ என்று சலித்துக் கொண்ட பரத் தன் காஃபியுடன் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“உங்க பேரு…”
“மஞ்சு!”
“உங்க பேரு…”
“அகி்லா…”
“நீங்க…”
“ஸ்மிரிதி….”
“ஸ்மிரிதி? நைஸ் நேம்….”
அந்த பெண்கள் கும்பலை கேள்வி கேட்டுக் கொண்டிருந்த ஆர்.ஜே கோமதி, அவர்களுக்கு நடுவே அமைதியாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் , “ஆமா…நீங்க மட்டும் என்ன அமைதியா இருக்கீங்க? உங்க பேர் சொல்லுங்க…”
“ஹ்ம்ம்…திவ்யா!”
“திவ்யா….உங்களுக்கு பிடிச்ச பாடல உங்களுக்கு பிடிச்ச நபருக்கு நீங்க டெடிகேட் பண்ணலாம்…சொல்லுங்க…என்ன பாட்டு, யாருக்கு?”
சிறிது நேரம் யோசித்த திவ்யா, “தேவதை வம்சம் நீயோ பாட்டு…”
“சூப்பர் சாங்…யாருக்கு டெடிகேட் பண்றீங்க?”
“என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு மதுவுக்கு…”
“உங்க தேவதை மது எங்க? இங்கில்லையா?” சிரித்துக் கொண்டே கோமதி கேட்க,
தட்டுதடுமாறிய படி திவ்யா, “ஷீ இஸ்…ஷீ இஸ்…நோ மோர்…” என்றாள்.

[தொடரும்]

Tuesday, October 13, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 9

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8

சித்தி வீட்டுக்கு போவதா வேண்டாமா என்று தனக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தாள் மது. “நான் உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன் சித்தின்னு சொன்னது தான் தாமதம்…உடனே சித்தி இப்படி ஓவரா சந்தோஷப்பட்ட மாதிரி ஏன் பேசறாங்க?”


இப்படி தேனொழுக பேசும் வழக்கம் காமாட்சிக்கு எப்பொழுதுமே உண்டு. ஆனால் ஏனோ மதுவிற்கு அது பிடிப்பதில்லை. தன் அம்மாவை போல் குதூகலமாய், சகஜமாய் பேசாமல், காமாட்சி செயற்கை தனமாக எதோ ஆதாயத்தை எதிர்பார்த்து பேசுவதை போன்றே தோண்றும் அவளுக்கு. அம்மா இறந்தவுடன் இது போல ஏதேதோ அவள் அப்பாவிடம் குழைந்து பேசி, அவள் அம்மாவின் சேலைகளையெல்லாம் காமாட்சி எடுத்துக் கொண்டு போனதை மதுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனாலோ, இல்லை வேறு காரணத்தினாலோ அவர் மீது வெறுப்பு தட்ட, ஒரே ஒரு முறை மட்டும் சித்தி வீட்டுக்குச் சென்றவள், அதன்பின் அவர் பல முறை அழைத்தும் செல்லாமல் தட்டிக் கழித்து வந்தாள்.

ஆனால் அன்று வேறு வழியில்லாமல் சித்தி வீட்டுக்கு கிளம்பியவள் திவ்யாவிடம் விடை பெற்ற பின், வழி நெடுகிலும் அங்கே சென்று தன் வேலையை எப்படி செய்வது, அந்த இடம் வசதியாய் இருக்குமா என்று பலவாறு யோசித்துக் கொண்டே சென்றாள். ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் வளாகத்தை அடைந்தவள், பலத்த யோசனையுடன் லிஃப்டுக்காக காத்திருக்காமல், இரண்டாவது மாடியில் இருந்த சித்தி வீட்டுக்கு படிகளில் ஏறத் துவங்கினாள். அருகில் ஏதோ நிழலாட யாரது என்று நிமிர்ந்து பார்த்தாள். எதிரே பற்கள் அனைத்தையும் காட்டியபடி அந்த பில்டிங் செக்கரட்டரி ராமசாமி. அவரை பார்க்காதைப் போல், மீண்டும் ஏறத் துவங்கினாள். ஆனால் அவர், “என்ன பாப்பா? என்னை ஞாபகம் இருக்கா?” என்று குழைந்தார்.

சுட்டெறிக்கும் பார்வையால் அவரை திரும்பி முறைத்தவள், மேலே தொடர்ந்து நடக்கவும், அவளுக்கெதிரில் மிக அருகே நின்று கொண்டு அவள் பாதையை மறைத்தார்.

“நீயா வழிவிடறியா? இல்ல…” என்று செறுப்பை பார்த்தாள் மது. அவளது பார்வையின் அர்த்தம் புரிய, அவருக்கு கோபம் தலைக்கேறியது, “இன்னும் உனக்கு திமிரு அடங்கலையா? உனக்காக தான்டீ ஒரு வருஷமா காத்துகிட்டு இருக்கேன்…என்ன அசிங்கப் படுத்திட்டு நீ அவ்வளவு சீக்கரம் தப்பிக்க முடியாது…நீ இங்கிருந்து போறதுக்குள்ள உன் பேர நாரடிக்கல…என் பேரு ராமசாமியில்ல!” “உன்னால ஆனத பாத்துக்க…!” என்று கத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள் மது.

மது கதவை தட்டவும், வழக்கமான பெரியதொரு புன்னகையுடன் அவளை வரவேற்றார் அவளது சித்தி காமாட்சி. சிரிக்கும் போது அவள் அம்மாவை போன்றே தெரிந்த சித்தியை பார்த்ததும், அங்கு வருவதற்கு முன் மனதில் அவரை பற்றி ஓடிய எண்ணங்களையெல்லாம் தூரப் போட்டுவிட்டு ’சித்தி’ என்றவாறு காமாட்சியை கட்டியணைத்தாள் மது.

*****************************************************************************
லேசாய் மேடிட்ட வயிறுடன், மெல்ல மெல்ல கவனமாக எட்டு வைத்து நடந்து கொண்டிருந்த அந்த பெண்ணை முகத்தில் ஆர்வம் பொங்க முகில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ரஞ்சித்,
“என்ன முகில் அப்படி பாக்குற?” என்று சிரித்துக் கொண்டே வினவினான்.
முகத்தில் அரும்பிய புன்னகையுடன் அவளும், “ஒன்னுமில்லீங்க…”
“என்ன ங், ஞ், சைங்க் ன்னு ஒரே ச்சைனீஸ் பாஷையா பேசிகிட்டு? எத்தனை தடவை
சொல்லியிருக்கேன்? ரஞ்சித் னு கூப்டுன்னு?” செல்லமாய் அவன் கோபித்துக் கொள்ள,
“எல்லாரும் உங்கள அப்படி தான் கூப்பிடறாங்க…நானும் அப்படியே கூப்பிட்டா என்ன நல்லா இருக்கும்? அதுக்கு ஏங்க, என்னங்க வே பரவாயில்லை…”

“ஓஹோ…அப்படியா விஷயம்? சரி, ரஞ்சித்துன்னு கூப்பிட வேண்டாம்…அதை சுருக்கி ஸ்டைலா ரேன்ஸ் னு கூப்பிடு…”

“அய்யே…இது நல்லாவே இல்லை…நான் வேணா ரஞ்சி ன்னு கூப்பிடவா?”

“இது மட்டும் என்ன? ரஞ்சி ட்ராஃபி மாதிரி தான இருக்கு? சரி…சரி…எப்படியோ ச்சைனீஸ் பாஷை பேசாம தமிழ்ல பேசினா அதுவே போதும்…சரி, மொதல்ல விஷயத்துக்கு வா…எதுக்கு அந்த பொண்ணையே வச்ச கண் வாங்காம பாத்துகிட்டு இருந்த?”

“அவங்க குழந்தை உண்டாகியிருக்காங்கல்ல? அதான் பாத்தேன்…எவ்ளோ அழகா இருக்காங்க பாத்தீங்களா?”

“ஹ்ம்ம்…இப்ப தான் கல்யாணம் ஆச்சு …அதுக்குள்ள என் பொன்டாட்டிக்கு குழந்தை ஆசை வந்துடுச்சு…”

ரஞ்சித் இப்படி சொல்லவும், முகில் முகம் வாடிப் போனது, அவளுடைய மனநிலையை புரிந்து கொண்டவனாக அவனும், “சரி சொல்லு….அம்மா வேற இன்னிக்கு காலையில பேரம்பேத்தின்னு ஏதோ சொல்லிட்டு இருந்தாங்களே? நீ என்ன நினைக்கற?”

திடீரென்று ரஞ்சித் இப்படி கேட்கவும், என்ன சொல்வதென்று தெரியாமல், முகில், “உங்க இஷ்டங்க…”

“ம்ம்…அப்ப சரி…என்னை பொறுத்த வரைக்கும், கல்யாணம் ஆனப்புறம் இந்த குழந்தை குட்டி இதெல்லாம் இல்லாம, ஒரு ரெண்டு இல்ல இல்ல…மூணு வருஷமாவது போகனும், ஒரு நாலு இடம் நல்லதா சுத்திப் பாக்கனும்…என்ன சொல்ற?”

“என்னது? மூணு வருஷமா???” ஆச்சர்யத்தில் முகிலின் கண்கள் விரிந்ததைப் பார்த்து, ரஞ்சித்திற்கு சிரிப்பு வரவே, “யேய்…என்னவோ பெருசா உங்க இஷ்டம்னு சொன்ன? இப்ப என்னடான்னா, இப்படி பேய் முழி முழிக்கற?”

“மூணு வருஷம் ரொம்ப ஜாஸ்தி ரஞ்சி….”

முதன் முறையாக ரஞ்சி என்று கொஞ்சும் குரலில் அவள் அழைத்ததில் கிறங்கிப் போன ரஞ்சித், “அப்ப நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிருவோம் மேடம்…சொல்லுங்க…”

“ஹ்ம்ம்…வேணும்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்…”

“என்னது ஆறுமாசமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்கேம்மா….” என்று ரஞ்சித் நக்கலடிக்கவும்,

“சரி…அப்ப வேணா ஒரு…ஒரு…எட்டு மாசம்?”

“அடேங்கப்பா….ஆறு மாசத்துக்கும், எட்டு மாசத்துக்கும் ரொம்ப வித்யாசம் ஜாஸ்தி தான் போ…”
“என்ன ரஞ்சி…”

“சரி, சரி….மேடம் சொன்னா அப்பீல் ஏது? நம்ம முதல் கல்யாண நாளப்போ, நீ நாலு இல்லைன்னா, மூணு மாசமா இருப்ப…போதுமா?

“நீங்க கன்ஸீவ் ஆயிருக்கீங்க…ட்லெல் வீக்ஸ்!!!” டாக்டர் சொன்னது மீண்டுமொருமுறை அவள் காதில் ஒலித்தது. தன் கணவனுக்காக அவள் உயிர் துடித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவனது உயிர் தனக்குள் துளிர்விட்டிருப்பதைக் கூட அறியாமல் இத்தனை நாட்களாய் இருந்ததை எண்ணும் போது, அவள் இதயத்தையே பிளக்கும் அளவிற்கு மனதில் வலி உண்டானது. அவள் கண்களில் பெருக்கெடுத்த அவளது அன்பின் ஊற்று, மெல்ல மெல்ல அவள் கைகளில் ஏந்தியிருந்த அந்த வெள்ளைச் சட்டையை நனைத்தது.

இவற்றையெல்லம் கதவருகில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி, கையிலிருந்த அந்த வெள்ளைச் சட்டையை நீவியபடி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மருமகளை அதற்கு மேல் பார்க்கும் சக்தியற்றவறாய் உடனே அங்கிருந்து அகன்றார்.

அன்று அளவுக்கதிகமாய் அவனது நினைவுகள் அவள் மனதை வாட்ட, அன்புக் கணவனின் அருகாமைக்கு, அவள் உடம்பின் ஒவ்வொரு செல்லும் துடியாத் துடிக்க, தனிமையின் பாரம் இதயத்தையே பிளக்க, அப்படியே மெத்தையில் சரிந்தாள். தன் இதயத்தை பிளவிலிருந்து காப்பாற்றுவதைப் போல், சட்டையை அணைத்தவாறு, கைகளையும் கால்களையும் குறுக்கிக் படுத்துக் கொண்டு, ரஞ்சித் கைதானதிலிருந்து முதன்முதலாய் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினாள் முகில்.

துகள் துகளாய் உடைந்துவிட்ட
ஒவ்வோர் இதயச்சில்லிலும்
உன் முழு முகம்!

மருநாள் காலை வேக வேகமாக எட்டு மணிக்கெல்லாம் வெளியே கிளம்ப தயாரான மனைவியையும், மருமகளையும் முகத்தில் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பிரமணியம்.
“தனம்! எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும் காலங்காத்தால?”
“கோவிலுக்கு…” தேங்காய், இன்ன பிற சாமான்களை பைக்குள் அடைத்தவாறே பதிலளித்தார் தனலட்சுமி, அப்போதும் முகத்தில் கேள்விக்குறி மாறாமல் நின்ற கணவனை கவனிக்காமல், “முகில்! ரெடியாம்மா?”
“என்ன விஷயம்? திடீர்ன்னு கோவிலுக்கு எதுக்கு போறீங்க?”
“ஹ்ம்ம்…எதுக்…கா?” என்று கோபமாக இழுத்தவர் முகில் தயாராகி வரவும், “நாங்க கிளம்பறோம்!!! ஊர்ல நடக்கற எல்லா விஷயமும் அத்துப்படி!! ஆனா, வீட்டு விஷயம் ஒரு மண்ணும் தெரியாது…இனிமே உங்களுக்கு எதாவது ஞாபகப் படுத்தறதுன்னா, நியூஸ் பேப்பல விளம்பரம் குடுக்கறோம்!! நீ வாம்மா..” என்றபடி முகிலை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார்.

சாமி தரிசனம் முடிந்த பின் கோவில் பிரகாரத்தில் வந்தமர்ந்தனர். கோவிலின் அமைதியை மிகவும் ரசிப்பவர் தனலட்சுமி. ஆனால் அன்று, முகிலின் அமைதியை அவரால் தாங்க இயலவில்லை.

“என்னம்மா? என்ன யோசிக்கற?”

வலுக்கட்டாயமாக தருவிக்கப் பட்ட ஒரு புன்னகையுடன் முகில், “ஒன்னும் இல்லை அத்தை…இங்க தான முதன்முதலா உங்க எல்லாரையும் பாத்தேன்? நாங்க ரெண்டு பேரும் இதே இடத்துல தான் உக்காந்து பேசினோம்”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தனலட்சுமி, “சரி…நேரம் ஆச்சு…இப்ப போனா தான் ஒன்பது மணிக்குள்ள அங்க இருக்க முடியும்…கிளம்பலாம்”. பிறகு வழிநெடுகிலும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மருமகளை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சிறைச்சாலையை அடைந்தவுடன், அலுவலக அறையில் சற்றே தயங்கி நின்றார் தனலட்சுமி.
“என்ன அத்தை? வாங்க போலாம்…”
“இல்லம்மா…நீ போ…நான் கொஞ்சம் இருந்து வரேன்…”

அவர்கள் வரவை சற்று முன்னரே அறிந்திருந்ததால், அவர்களை எதிர் நோக்கி அந்த சிறிய அறையில் காத்திருந்த ரஞ்சித்தின் முகம், முகிலை பார்த்ததும் உடனே மலர்ந்தது. எதுவும் பேசாமலே, அவனை பார்த்தவாறே அவனெதிரே அமர்ந்தாள் முகில். அவளையும் அறியாமல் அவள் கண்கள் பனிக்கத் துவங்கியது. ரஞ்சித் பார்க்கும் முன்னர், விழிமீறத் துடித்த நீர் துளிகளை, இமைத் திரையிட்டு அடக்க முற்பட்டாள்.

“என்ன முகில்? திடீர்ன்னு புதன் கிழமை அதுவுமா வந்திருக்க? இன்னிக்கு காலையில வார்டன் சொல்லித் தான் எனக்கே தெரிஞ்சுது…எதாவது முக்கியமான விஷயமா?”

அதற்கு மேல் அவளால் கண்ணீருக்கு வேலி போட இயலவில்லை. கரகரவென கண்ணீர் துளிகள் அவள் கன்னங்களில் சரியத் துவங்க, பதறிப்போனவனாய், “என்னாச்சு முகில்?” என்று அவள் கைகளைப் பற்றினான்.

பற்றியிருந்த அவனது கரங்களை எடுத்து, தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டு, அவன் கன்களை ஊடுருபவளை போல், உற்று நோக்கினாள். அக்கறையுடன் கலந்த கேள்விக்குறியோடு அவள் மீது நிலைத்து நின்ற அவனது கருவிழிகளும், அந்த கணமே அவன் விழிகளோடு கலந்திடத் துடித்து, ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைபாய்ந்த அவளது கருவி்ழிகளும் உரசிக் கொண்டதில், அந்த சிறிய அறையெங்கிலும் காதல் ஜுவாலை கொழுந்து விட்து எறிந்தது. ஆயிரம் ஆயிரம் கதைகள் பேசத் துடித்தும், அவளுக்கு நா எழவில்லை, தொண்டையை ஏதோ அடைத்துகொள்ள, மிகுந்த சிரமத்துடன், “இன்னிக்கு… இன்னிக்கு…நம்ம கல்யாண நாள் ரஞ்சி…”.

ஒரு வருடத்துக்கு முன்பு, சரியாக இதே நாளில், திருமணம் முடிந்து முதன் முதலாய், அவனை தனிமையில் சந்திக்கக் கிடைத்த அந்த ஒரு சில நிமிடங்களில், ஆயிரம் ஆயிரம் கதைகள் பேசத் தவித்தும், பேச வார்த்தைகளின்றி தத்தளித்த அந்த சுகமான பொழுது ஏனோ அப்போது அவள் நினைவுக்கு வர, வயிருக்குள்ளிருந்து பெரிதாய் ஏதோ ஒன்று வெளிக்கிளம்பி வந்து அவள் நெஞ்சை அடைத்தது.

தனலட்சுமி அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில், பெரிதாய் அழத் துவங்கினார். என்ன சொல்லியும் அவரை தேற்ற முடியவில்லை. அவர்கள் பேசட்டும் என்று முகில் சற்று நேரம் அமைதி காத்தாள். அவர்கள் கிளம்பும் நேரம் வந்ததும், அத்தையை முதலில் போக சொல்லிவிட்டு ரஞ்சித்திடம் திரும்பியவளின் கண்கள் குளமாகியிருந்தன.

“என்னம்மா?” என்று பதறியபடி அவன் வினவ, தளுதளுத்த குரலில் முகில், “ரஞ்சி! இது வரைக்கு நான் உங்கள கேட்டதில்லை...நீங்க எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு...ஆனா...ஆனா...இப்ப கேக்க வேண்டிய நிலைமையில இருக்கேன்...”

“சொல்லு முகில்...”

“இப்பெல்லாம் என்னவோ தெரியல...என்னால...என்னால தூங்கவே முடியல....” கண்களை துடைத்துக் கொண்டவள், அவனை உற்றுப் பார்த்தாள்.

“ஒவ்வொரு நிமிஷமும் நீங்க என் கூடயே இருக்கனும் போல தோணுது...கண்ண மூடி படுத்தாலே, நீங்க எங்கயோ என் பக்கத்துல தான் இருக்கீங்கன்னு தோணுது...கண்ண திறந்து பாத்தா நீங்க இல்ல...ஆனாலும் ராத்திரி ஒரு பத்து தடவையாவது எழுந்து பாக்கறேன்...இதெல்லாம் ஒரு கெட்ட கனவா இருக்கக் கூடாதா, நீங்க எப்பவும் போல என் பக்கத்துலையே படுத்து தூங்கிட்டு இருக்க கூடாதான்னு...என்னவோ தெரியல வேற எப்பயும் விட இப்ப தான் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்...வக்கீல் சொல்றாரு, நீங்க எதையும் மறைக்காம முழுசா சொல்லிட்டா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு...தயவு செஞ்சு என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி... அன்னிக்கு எதுக்கு மாடிக்கு போனீங்கன்னு சொல்லுங்க... நம்ம குழந்தைகாகவாவது சொல்லுங்க...”

அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் ரஞ்சித். அவன் மீது அவளுக்கு அனுவளவு அவநம்பிக்கை இருக்குமாயின் கூட, அவனது பிடியின் அழுத்த்திலேயே அது விலகியிருக்கும்.
“நம்ம நல்லதுக்காக தான் முகில் நான் அதை சொல்ல மாட்டேங்குறேன்...புரிஞ்சுக்கோ...நாம நல்ல படியா எந்த கெட்ட பேரும் இல்லாம இருக்க தான்ம்மா...நான் எந்த தப்பும் பண்ணல, கண்டிப்பா வெளிய வருவேன்...நம்ம குழந்தை பிறக்கும் போது நான் உன்னோடையே தான் இருப்பேன்...இது சத்தியம்!”

ஏதோ வேலை விஷயமாக சிறைச்சாலை வந்திருந்த இன்ஸ்பெக்ட்டர் பரத், முகிலை அங்கு பார்த்ததும் அவர் முகத்தில் மீண்டும் அதே சந்தேக ரேகைகள் முளைத்தன. ஏதையோ கண்டுபிடித்தவர் போல், அவரை கடந்து சென்று கொண்டிருந்த முகிலையும் தனலட்சுமியையும், “ஒரு நிமிஷம்!” என்று நிறுத்தினார்.
[தொடரும்]