Tuesday, April 21, 2009

மலரே மெளனமா? - 6

பாகம் – 6 (சென்னை -> கொடை, கொடை -> சென்னை)

“பாஸ்…கொடைக்காணலுக்கு இன்னிக்கு நைட்டுக்கு ஒரு டிக்கட்”

என்னிடம் சில குறிப்புகளை கேட்டுவிட்டு டிக்கட் பதிவு செய்பவர், “இன்னிக்கு நைட்டு, சென்னை டூ கொடைக்காணல், ஒரு ஜென்ட்ஸ் டிக்கட்., வால்வோ…சரியா?”

“ஆங்…சரி…பண்ணிடுங்க…”

“ரிட்டர்ன்?”

ஒரே ஒரு நொடி தயக்கதிற்கு பின், “ரிட்டர்னுக்கு ரெண்டு டிக்கட் வேணும்…ஒரு டிக்கட் லேடீஸ் சீட் போட்டுடுங்க” திட்டவட்டமாய் ஒலித்தது என் குரல்.

******
கொடைக்காணலில் அன்று மலர் கண்காட்சி. போதாகுறைக்கு நான் சென்ற வழியெங்கும் கொட்டிக் கிடந்தன வண்ணமயமான, வாசமிகு மலர்கள். அந்த மலர்கள் ஒவ்வொன்றிலும் அவள் முகமே தெரிந்தது. ஆனால், சிரித்த முகமாய் இல்லாமல் அழுது வடிந்த முகமாய் தெரிந்து என்னை வாட்டி வதைத்தது. எத்தனை முறை முயன்றும், கடைசியாய் அவளை சந்தித்த பொழுது, அவளது அழுது சிவந்திருந்த முகம் என் அகத்தை விட்டு அகல மறுத்தது. மழைநீரிலேயே நிமிடத்தில் முழுகி விடும் காகித ஓடத்தை கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டால், அதற்கு என்ன கதி நேரிடுமோ, அதே கதி தான் நேர்ந்திருந்தது, அவளது அழுகையையும் ஆற்றாமையையும் அருகிருந்து பார்த்திருந்த என் மனதிற்கு.

காகித ஓடமடி என் மனது!
உன் விழித்திரையில்,
மெலிதாய் பூக்கும் நீர்த்துளிகளிலேயே
தடுமாறி தத்தளித்து போகையில்,

பெருக்கெடுத்து ஓடும்
உன் கண்ணீர் அலைகளில்,
சிக்கிச் சிதைந்து,
கரைந்தழிந்து போகாதோ?

இப்படி பலவாறான யோசனைகள் மனதின் வெளியில் உலவிக் கொண்டிருந்தாலும், நான் புறப்பட்டதிலிருந்தே, மனதின் உட்புற சுவரை அரித்தபடி என்னுடனேயே பயணித்தன சில சங்கடமான கேள்விகளும்! ’அவளை வீட்டில் கொண்டு விட்ட பின்? பிறகென்ன? நன்றி என்று சொல்லி, அந்த மூன்றெழுத்தால், என் மனதிற்குள் வேர்விட்டிருக்கும் மூன்றெழுத்தை அடியோடு அழித்திடுவாளா? எதுவுமே நடக்காததைப் போல் விருந்து உபச்சாரம் செய்து மேலும் அந்நியப் படுத்துவாளா? இல்லை…இல்லை…ஒரு வேளை…நானும் உன்னை தான் நினைத்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி திக்கு முக்காட வைப்பாளா? சடுதியில் மூழ்கிப் போவதற்கு அதிக வாய்ப்புள்ளதென்று தெரிந்தும், நீரினில் காகித ஓடம் விட்டு விளையாடும் சிறுவனைப் போல், மூழ்கினாலும் பரவாயில்லை என்று என்னையே தேற்றத் துவங்கியது என் ஆழ்மனது.

******
இருவரும் தேனீர் கோப்பைகளுடன் அவள் தங்கியிருந்த அறைக்கு பின்புற தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். நான் சங்கீதாவை சென்று சந்தித்தது அவளுக்கு இன்னேரம் தெரிந்து தானிருக்க வேண்டும், நான் அங்கு சென்றது முதல், ’எதற்கு வந்தாய், ஏன் வந்தாய்’ என்று எந்த விதமான விசாரணைகளிலும் அவள் இறங்காமல் இருந்ததே அதற்கு அத்தாட்சி. எனக்கோ பேச்சை எப்படி ஆரம்பிப்பது, எதில் ஆரம்பிப்பது, எதுவுமே விளங்கவில்லை. அவளை ஒரு வருடமாக நன்கு அறிந்திருந்தாலும், அவள் பெற்றோர்களைப் பற்றியோ, அவளது குடும்ப சூழல் பற்றியோ நான் பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில்லை. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கிளம்பி வந்தாயிற்று. எதாவது பேச வேண்டியது தான். ஒரு முறை, ஒரே ஒரு முறை அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால், பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று என் மனது ஓயாமல் கூவிக் கொண்டேயிருந்தது.

நானாக பேச்சை ஆரம்பிப்பேன் என்று காத்திருந்து நொந்து விட்டாளோ என்னவோ அவளாக ஆரம்பித்தாள், “நீங்க எதுக்கு சிரமப்பட்டு இவ்ளோ தூரம்…”

“எனக்கு எந்த சிரமமும் இல்லை மலர். கொடைக்காணல் வர்றதுக்கு யாருக்காவது சிரமமா இருக்குமா? எனக்கு உண்மையான சிரமமே போன தடவை பாத்தப்போ அழுது வடிஞ்ச உங்க முகத்த மனசிலிருந்து அழிக்கறது தான்…”

அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். சற்றே பொறுத்து, “சாரி…அன்னிக்கு நான் அப்படி அழுதிருக்க கூடாது தான்…உண்மைய சொல்லனும்னா நான் ஏன் அப்படி அழுதேன்னு எனக்கே தெரியல…நான் ஏன் இங்க வந்து இருக்கேன், ஏன் ஊருக்கு போக மாட்டிங்கறேன்…இப்படி நீங்க எதாவது கேள்வி கேக்கறதா இருந்தா, இப்பயே சொல்லிடறேன்…எனக்கே தெரியல…”

“ஹ்ம்ம்…சரி…இந்த கேள்வியெல்லாம் நான் கேக்க மாட்டேன்…இங்க நீங்க சந்தோஷமா இருக்கற மாதிரி தான் தெரியுது…நான் பாத்தப்ப எல்லாம் நீங்க எப்பயும் போல சாதரணமா தான் இருந்தீங்க…ஆனா, ஏதோ ஒன்னு குறையுது…உங்ககிட்ட ஏதோ ஒரு வெறுமைய உணர்றேன்…”

அவளிடமிருந்து ஒரு பெருமூச்சுடன் கூடிய பதில் வந்தது, “ம்ம்…அதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும்…”

“அதான் எப்போ? அந்த கொஞ்ச நாள் இப்ப முடிஞ்சிருச்சுன்னு நினைக்கறேன்…உங்க வீட்டுக்கு போய் மறுபடியும், நீங்க பழைய மாதிரி எந்த விதமான வெறுமையும் இல்லாம, உண்மையான சந்தோஷத்தோட இருக்க வேண்டிய நாள் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்…”

“எனக்கு தெரியும்…ஆனா…” அதற்கு மேல் தொடர முடியாமல் எழுந்து அருகில் இருந்த செடியின் அருகில் சென்று, அதன் இலைகளை ஒவ்வொன்றாய் செடியிலிருந்து கிள்ளி எறியத் தொடங்கினாள். நானும் எழுந்து அவளெதிரே சென்று நின்றேன். அப்போதும் என்னை பார்ப்பதை விடுத்து அந்த இலைகளிலேயே பார்வையை பதித்திருந்தாள்.

“சரி மலர்… காலம் கடந்து சில விஷயங்கள தெரிஞ்சுகிட்டீங்க…ஓகே…அதுக்காக இப்படி யார்கிட்டையும் அதை பத்தி பேசாம இருக்கறதால என்ன பயன், சொல்லுங்க?”

“நான் தான் சொன்னனே…கொஞ்ச நாள் தான்…நானா சரியாயிடுவேன்…”

“நான் இப்படி கேக்கறனேன்னு தப்பா நினைக்காதீங்க…”
என்ன என்பது போல் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“உங்க அம்மா மேல எதாவது கோபமா?”

“அம்மா மேலையா? எதுக்கு?”

“இல்ல…வந்து…இப்படி உடனே உங்க அம்மா மறுமணம் செஞ்சுகிட்டாங்களேன்னு எதாவது…”

“ச்சே…ச்சே…” அவள் மறுப்பு வந்த வேகமே, இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று சொல்லாமல் சொல்லியதில் எனக்கு நிரம்ப சந்தோஷமே.

“ம்ம்…அப்ப இவ்ளோ நாளா உங்கள்ட்ட இந்த விஷயத்த சொல்லாம மறச்சுட்டாங்களேன்னு உங்க parents மேல வருத்தமா?”

“ஆமா…முதல்ல கொஞ்சம் கோவம் வந்தது உண்மை தான்…ஆனா…எல்லா கோணத்திலையும் யோசிச்சு தான் என்கிட்ட சொல்ல வேண்டாம்னு இருந்திருப்பாங்கன்னு இப்ப தோணுது…”

“கரெக்ட்டு…சரி, ஒரு வேளை…உங்க…உங்கப்பா…அதாவது உங்க biological father அம்மாவையும் உங்களயும் விட்டுட்டு போய்ட்டாரேன்னு நினைச்சு ஃபீல் பண்றீங்களா?”

விரக்தியான குரலில், “ஹூஹூம்…அதப்பத்தி இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்?” என்றாள்.

“அப்புறம் என்ன தான் மலர் பிரச்சனை?

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு…எனக்கு…அம்மாவ விட அப்பாவ தான் ரொம்ப பிடிக்கும்…சின்ன வயசில இருந்தே, நான் அப்பா செல்லம்…” இப்படி சொல்லும் போதே, அவள் கன்னத்தில் உருண்டோட ஆயத்தமாகிக் கொண்டிருந்தன அவள் விழியோரத்தில் திரண்டு நின்ற நீர் பந்துக்கள்.

செய்வதறியாது நானும், “ஆமா…” என்றேன்.

“அவரு என்கிட்ட எப்பயுமே அப்பா மாதிரி நடந்துகிட்டதில்லை…ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் இருப்பாரு…ஆனா…இப்ப…இப்ப…” அன்று செய்த அதே கொடிய செயலை மீண்டும் செய்தாள். முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் துவங்கினாள்.

அவள் அழுகை ஒலியை என் குரலால் அடக்க நினைத்தேனோ என்னவோ, ஓங்கிய குரலில், “ஆனா இப்ப என்ன மலர்? இப்ப என்ன? உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னே மறந்துடுங்க…எப்பயும் போல இருங்க...”
என் ஓங்கிய குரலுக்கு கட்டுப்பட்டோ என்னவோ, அவளும் உடனே இமை மீறிய விழிநீரை கைகளால் தடுத்து நிறுத்த முயன்றாள்.
“இத பாருங்க மலர்…இது வரைக்கும் அவரு ரொம்ப நல்ல அப்பான்னு மட்டும் உங்களுக்கு தெரியும்…ஆனா, அவரு எவ்ளோ நல்ல மனிதர்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க இது ஒரு வாய்ப்புனு நினைச்சுக்கோங்க…”

“அத நினைச்சா தான் என்னால தாங்கிக்கவே முடியல சுரேன்…உங்களுக்கே தெரியும்…நம்ம ஊர்ல அப்பா இல்லாம ஒரு பொண்ணு இருந்தா, எவ்வளவு கஷ்டம்னு…நானும், அந்த மாதிரி…அப்படி தான் கஷ்டப்பட்டிருக்கனும்…ஆனா…அந்த மாதிரி எந்த கஷ்டமும் இல்லாம, என்னை ராணி மாதிரி வளத்தாங்க…ஒன்னு தெரியுமா? அப்பா என்னை செல்லமா princess னு தான் கூப்பிடுவாரு…ஒரே பொண்ணு, அதனால அதிமான செல்லம்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் என் மேல ஒரு செல்ல பொறாமை கூட உண்டு…எங்க அப்பா மேல எனக்கு பாசத்த விட பெருமை தான் ரொம்ப அதிகம்…மத்த எல்லார் அப்பாவ விட என் அப்பா தான் பெஸ்ட்!!! அப்டீங்கற மாதிரி…ஆனா இப்ப? அந்த பெருமை எல்லாம் தலைகீழா போய்டுச்சே? அவரு என்னோட நிஜ அப்பா இல்ல…நான் வேற யாரோ பெத்த பொண்ணு…”

“மலர்! ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க?”

“இல்ல சுரேன்…’என்னை பெத்தவர் என்னை விட்டுட்டு போய்ட்டாரு, இப்ப எங்க இருக்காரு, இருக்காரா இல்லையா…இல்லை…எனக்கு இத்தன நாளா இவ்ளோ பெரிய விஷயம் தெரியாமையே இருந்திருக்கு…ஏன் மறச்சாங்க? இல்லை, இப்ப மட்டும் ஏன் இது தெரிஞ்சுது?’ இந்த மாதிரி கேள்வியெல்லாம் கூட எனக்கு ஒரே ஒரு நாள் தான் வருத்தத்த குடுத்துச்சு… ஆனா, நான் உலகம்னு நினைச்சுகிட்டு இருக்க எங்க அப்பா, என்னோட நிஜ அப்பா இல்லை…இப்படிப்பட்ட ஒருத்தருக்கு நான் மகளா பிறக்கலைன்னு நினைச்சா தான்…என்னால தாங்கிக்கவே முடியல…என்னால முடியல…”

“புரியுது மலர்…ஆனா, அதுக்காக இப்ப உங்கப்பாவ நீங்களே இப்படி கஷ்டப்படுத்தறீங்களே! அது சரியா? நீங்களே சொல்லுங்க!”

“எனக்கு பயமா இருக்கு…அவங்கள பாக்கவே பயமா இருக்கு…எங்க அவர பாத்தா, கட்டுபடுத்த முடியாம ’ஓ’ன்னு அழுதுடுவனோன்னு பயமா இருக்கு….”

அந்த நிலையில் அவளை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியாமல், “மலர்…இந்த விஷயம் இவ்ளோ நாள் கழிச்சு இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாம் தான்…ஆனா இது கூட நீங்க உங்க அப்பாவ பத்தி புரிஞ்சிக்கறதுக்கு கிடைச்ச சந்தர்ப்பமா நினைச்சுக்கோங்க….வேற யாரையும் விட உங்க அப்பா எவ்ளோ பெஸ்ட்ன்னு நினைச்சு பெருமை படுங்க…”

“அதையெல்லாம் நினைச்சா தான் எனக்கு இன்னும் வேதனை அதிகமாகுது சுரேன்…அவர பத்தி நினைக்கற ஒவ்வொரு நிமிஷமும், அவரு என் நிஜ அப்பா இல்லை, நிஜ அப்பா இல்லன்னு கூடவே ஒரு நினைப்பும் சேந்து வந்து என்னை வாட்டி எடுக்குது…எனக்கு எதுவுமே பிடிக்கல…எங்கயாவது எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே ஓடிப் போய்டலாம் போல இருக்கு…”

“போதும் மலர்!!! எத்தன தடவை தான் நிஜ அப்பா இல்லை, நிஜ அப்பா இல்லைன்னு சொல்லுவீங்க? உங்கள பெத்த அப்பா இல்லைங்கறனால அவரு உங்க நிஜ அப்பா இல்லைன்னு ஆயிடுமா?”

“ஹ்ம்ம்…இப்படியெல்லாம் சொல்லி மனச தேத்திக்க முயற்சி வேணா பண்ணலாம்…ஆனா, உண்மைன்னு ஒன்னு இருக்கே?”

“எத உண்மையில்லைங்கறீங்க? நான் சொல்றது வெறும் தேறுதல் வார்த்தை இல்லை மலர்…உண்மை!!! நூத்துக்கு நூறு சதம் உண்மை…அப்பான்னா யாருங்க? ஒரு குழந்தை உருவாகறதுக்கு காரணமா இருந்தா மட்டும் ஒருத்தர் அப்பா ஆயிட முடியாது… தன் மனைவியையும், அவ வயித்துல இருக்கற குழந்தையையும் கண்ணுக்கு கண்ணா கவனிச்சு, குழந்தை எப்படா பிறக்கும்னு ஆசையோடும், கனவோடும் காத்திருந்து, அதுக்கு நல்லது கெட்டது எல்லாம் பாத்து, கடைசி வரைக்கும் அவங்க பெத்த பிள்ளைகளுக்காகவே வாழ்றவங்க தான் உண்மையான அப்பா…இதுல ஒன்னாவது உங்க அப்பா செய்யாம இருந்தாரா? அப்புறம் எப்படி அவரை உங்க நிஜ அப்பா இல்லைன்னு சொல்றீங்க?”

“இதெல்லாம் எனக்கு புரியுது சுரேன்…ஆனா…”

“என்ன ஆனா? ஒரு குழந்தை பிறக்கும் போது தான் அப்பா, அம்மாவும் பிறக்கறாங்க….அதுவரைக்கும் சாதாரணா ஆண், பெண்ணா இருக்கறவங்க குழந்தைன்னு ஒன்னு அவங்க வாழ்க்கைல வந்த பிறகு தான் அப்பா, அம்மாவா மார்றாங்க…அப்பாங்கறது வெறும் ரத்த சம்பந்த்துல வர உறவு மட்டும் இல்ல….அது ஒரு உணர்வு…பிறந்து கண்ணு கூட முழிக்காத பச்சை குழந்தைய ஒரு ஆண் முதன் முதலா அவன் கையில வாங்கும் போது, அந்த குழந்தையோட முதல் ஸ்பரசத்துல அவனுக்குள்ள வருதே, ஒரு வித சிலிர்ப்பு, உலகமே கைக்குள்ள வந்துட்டா மாதிரி ஒரு ஆனந்தம், திடீர்ன்னு வந்து ஒட்டிக்கற பொறுப்பு, இந்த மாதிரி பலவித உணர்வுகளும் சேரும் போது தான் ஒரு ஆணுக்குள்ள ஒரு அப்பா பிறக்கிறான்…அப்படி பாத்தா, உங்க அப்பா உங்க பாஷையில சொல்லனும்னா, உங்களோட நிஜ அப்பா தான்…நீங்க வருத்தப் படறதுல எந்த அர்த்தமும் இல்லை மலர்…”

அவள் எதுவும் பேசாமல் அர்த்தத்துடன் என்னை உற்றுப் பார்த்தாள்.
“சந்தோஷப் படறதுக்கு தான் பல விஷயங்கள் இருக்கு மலர்...அன்பான குடும்பம், ஒரே செல்ல பொண்ணு, நல்ல படிப்பு, வேலை, எல்லாத்துக்கும் மேல நீங்க சொன்ன மாதிரி உலகத்திலேயே பெஸ்ட் அப்பா… ஆனா, இதெயெல்லாம் விட்டுட்டு இப்படி தனியா…ஏன்? ஏன் மலர்?”
“உங்க வீட்ல ஒரு ஃபோட்டோ இருக்கே…உங்க அப்பா நீங்க சின்ன குழந்தையா இருக்கும் போது உங்கள கையில வச்சுகிட்டு இருக்கற மாதிரி…”

“ஹ்ம்ம்…ஆமா…” முதன்முறையாக சற்றே புன்னகைத்தாள்.

“அது எவ்ளோ அழகா…க்யூட்டா இருக்கு? அதுக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க? உங்க அப்பா முகத்துல இருக்கற சந்தோஷமும், பெருமிதமும் தான்…தயவு செய்து இனி ஒரு தடவை அவர உங்க நிஜ அப்பா இல்லைன்னு சொல்லாதீங்க…சொல்றது என்ன? மனசுல கூட நினைக்காதீங்க…”

கண்கள் பனிக்க, “இல்லை…இனி அப்படி நினைக்க கூட மாட்டேன்…இனிமே அப்படி சொல்ல மாட்டேன்…கண்டிப்பா மாட்டேன்…” கண்களை மூடிக் கொண்டு, “சாரி பா…I m sorry” என்றாள்.
அதன் பின் சிறிது நேரம் மெளன நிலையிலேயே கழிந்தது. ஒரு திடமான முடிவுக்கு வந்தவளாய், இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, “எனக்கு…எனக்கு இப்பயே எங்கப்பாவ பாக்கனும் போல இருக்கு சுரேன்…”

“ஹ்ம்ம்…அப்படி வாங்க வழிக்கு…இது தான் நல்ல பொண்ணுக்கு அழகு!!! தனியா இருக்கறத விட, அதோட செடியிலையே இருந்தா தான், மலருக்கு அழகு…அப்படி இருக்கற மலர பாத்தா தான் யாருக்குமே சந்தோஷமா இருக்கும்…” என்று சொல்லி நான் சிரிக்க, என்னுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.

******
அன்றிரவே இருவரும் சென்னைக்கு பயணமானோம். முதல் நாளிரவு போலின்றி, எந்த வித குழப்பமும் கேள்விகளும் இல்லாமல் ஒரு வித நிறைவோடு இருந்த மனது, என்னை இம்சை பண்ணாமல் நிம்மதியாக தூங்க அனுமதித்திருந்ததில், மறுநாள் அதிக புத்தணர்ச்சியோடு சென்னையை அடைவதற்கு சற்று முன்பே விழித்தும் விட்டேன். நான் வலது வரிசை இருக்கையில் அமர்ந்திருக்க, எனது இருக்கைக்கு பக்கவாட்டில் இருந்த இடது வரிசை இருக்கையிலேயே மலரும் அமர்ந்திருந்தாள். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவளை என்னையும் அறியாமல் நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று திடுக்கிட்டு எழுந்தாள். திரு திருவென விழித்தபடி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, என்னை பார்த்ததும் அவள் முகத்தில் இருந்த குழப்பம் அதிகமானது.

“என்ன ஆச்சு மலர்?”

“ஹாங்….ஒன்னுமில்லை…” தட்டுதடுமாறி பதிலளித்துவிட்டு, மெலிதாக புன்னகைத்தபடியே கண்களை மூடிக் கொண்டு மீண்டும் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் தொடங்கினாள், ஆனால் முகத்தில் இருந்த அந்த மெல்லிய சிரிப்பு மட்டும் மறையவே இல்லை.

“ஹப்பா…இந்த பெண்கள்…” இதற்கு மேல் எனக்கு எதுவும் தோன்றவில்லை. என்ன தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர்களை படைத்த பிரம்மனே வந்தாலும் கண்டுபிடிப்பானா என்று சந்தேகம் தான்!

பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் மலர் வீட்டுக்கு செல்லும் வழியில் கூவம் ஆற்றை கடந்து சென்ற போது, அன்று ஏனோ வழக்கம் போல் முகத்தை சுளித்தேன்.

மலர் சொன்னதை போல், உலகத்திலேயே சிறந்த அப்பா என்று மீண்டுமொருமுறை நீரூபித்தார் அந்த அன்புத் தந்தை. என்னையும் மலரையும் அன்று சற்றும் எதிர்பார்க்காததால், முதலில் அதிர்ச்சியாகி, பின்பு நீண்ட நாள் கழித்து மகள் திடீரென்று வீட்டுக்கு வந்ததில் ஆனந்தத்தில் திக்குமுக்காடி, அதன் பிறகு அவளிடம் ’என்ன பிரச்சனை, ஏன் இது நாள் வரை இப்படி இருந்தாய்’ என்று கவலையோடு வினவ ஆரம்பித்து, இப்படி பல்வேறு உணர்ச்சிகளின் முகங்களை ஒரு சில நிமிடங்களிலேயே கொட்டி விட்டார் அவள் அம்மா. ஆனால், மலர் அப்பா மட்டும், மலரை பார்த்தவுடன் அவர் கண்கள் பனித்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவளது தோளை ஆதரவாய் பற்றி உள்ளே நடத்தி அமரச் செய்து, வாஞ்சையுடன் அவள் தலைகோதி, அவளிடன் எந்த ஒரு கேள்வியும் கேட்கும் எண்ணம் கூட இல்லாமல், அன்பான பார்வை ஒன்றை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய அம்மா அவளை கேள்விகளால் துழைத்தெடுக்கவும் இடம் கொடுக்காமல், “ராஜி! அவளே இப்ப தான் வந்திருக்கா…இப்பயே அத்தனையும் கேக்கனுமா? அவளா சொல்லும் போது சொல்லுவா…கொஞ்ச நேரம் சும்மா விட அவள…” என்று மனைவியையும் அடக்கினார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை அப்போது தான் கவனித்தவர், “சுரேன்!” என்றபடி என் கைகளை குலுக்கினார்.
“சாரி…மலர பாத்த சந்தோஷத்துல உங்கள மறந்துட்டோம்….”

“அதனால என்ன அங்கிள்…” என்று லேசாய் முறுவலித்தேன். பற்றியிருந்த என் கைகளை மேலும் இறுக்கி, “உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தைல சொல்ல முடியாது சுரேன்!” அவர் குரலில் இருந்த நெகிழ்வு, என்னை ஏதோ செய்தது. அது வரை என்னை விட வயதில் பெரியவர் யாரும் என்னிடம் இப்படி நன்றி சொல்லிய அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை. உடலெங்கும் ஒரு வித சிலிர்ப்பு பரவியதை உணர்ந்தேன், ஏதோ பதில் சொல்ல யத்தனித்தும், வார்த்தைகள் என்னுள்ளே அடங்கிப் போயின…அவரை பார்த்து லேசாக புன்னகைத்தேன்.

இத்தனை நேரத்திற்கு பின்னும் மலர் அம்மா, இயல்பு நிலைக்கு திரும்புவதாய் இல்லை. அவளருகிலேயே அவளை பாதி அணைத்த வண்ணம் அமர்ந்திருந்தார். மலரும் எதுவும் பேசத் தோன்றாமல், அம்மாவின் பிடியிலிருந்து விலக விருப்பமில்லாதவளை போல் அமர்ந்திருந்தாள்.
“பேசாம நீ அந்த வேலையை விட்டுட்டு சென்னைலையே எதாவது வேலை வாங்கிட்டு வந்துருமா…என் தங்கமில்லை…” அவள் கன்னத்தை வருடியபடி அவள் அன்னை இப்படி சொல்லவும், மலர் பதிலேதும் பேசவில்லை.
உடனே அவள் அப்பாவும், “அம்மா சொல்றது தான் சரி…இனி கொடைக்காணல் எல்லாம் வேண்டாம்…நீ இங்கயே வந்துடு…”

ஒரு கணம் தயங்கியவள் பேசுவதற்கு முன், என்னை பார்த்தது போலத் தான் தோன்றியது.
“இல்லம்மா…நான்…நான்…பெங்களூர்லையே வேலை தேடிக்கறேன்” என்றபடி ஒரு நொடி, ஒரே ஒரு நொடி…நேருக்கு நேராக என் கண்களை பார்த்தாள். எங்கள் கண்கள் நான்கும் சங்கமித்த அந்த ஒரு வினாடியில், அன்று தூரத்தில் தெரிந்த தொடுவானம், உண்மையில் இன்று தொடுதூரத்தில் இருப்பதை போல உணர்ந்தேன்.

மனதிலும், கண்களிலும் பொங்கி வழிந்த ஆனந்தம் குரலில் தெறிக்க, “இல்ல…நானே சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று குறும்பு நகையோடு நான் சொல்ல, அவள் என்னை பார்த்து பூத்த வெட்க மொழி பேசும் புன்னகையில், இம்முறையும் அவளது பற்களுக்கும் உதடுகளுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் வென்றது அவள் உதடுகள் தான். ஆனால், அன்று போல் அந்த யுத்தத்தில் சரணாகதி அடையாமல், அக்கணமே அவளை முழுவதுமாய் வெல்லத் துடித்த என் பார்வையை சந்திக்க இயலாமல், மெல்ல மெல்ல ஆரம்பமானது அவளது கருவிழிச் சந்திரனின் தேய்பிறை. இமைப்போர்வைக்குள் சிறைப்பட்டது அவளது கண்மணிகள் மட்டுமல்ல, என் இதயமும் தான்! எங்கள் தொடுவானத்தை அந்திவானமாய் மாற்றியது எங்கிருந்தோ அவள் கன்னங்களில் வந்து ஒட்டிக் கொண்ட வெட்க சாயம்.

[சுபம்]

ச்சும்மா…இன்னும் கொஞ்சம், கடைசியா சேத்தது:

“ஏய்…அன்னிக்கு பஸ்ல ஏன் திடீர்ன்னு தூக்கத்தில இருந்து எந்திருச்சு திரு திருன்னு முழிச்ச?”

“என்னிக்கு?”

“தெரியாத மாதிரி கேக்காத…சுத்தி, முத்தி பாத்துட்டு, என்னை பாத்ததும் சிரிச்சிகிட்டே மறுபடியும் தூங்கற மாதிரி நடிச்சியே?”

“ஓ…நீ அத பாத்துட்டியா?”

“பின்ன? நீங்கெல்லாம் எவ்ளோ பெரிய டக்காய்ல்டியா இருந்தாலும், எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா? சொல்லு…சொல்லு…என்ன நினைச்ச? என்னை தான நினைச்ச?”

“ஹ்ம்ம்…” மீண்டும் வழக்கம் போல் நான் தலை குப்புற கவிழும் அதே சிரிப்பை உதிர்த்தாள்.

“சிரிச்சு மழுப்பாத, என்ன நினைச்சன்னு சொல்லு….”

கனவுகளில் தொலைந்து விட்ட
உன் ஒற்றை முத்தத்தை
தேடியபடி தான் விடிகிறது
என் ஒவ்வோர் இரவும்!
மீண்டும் விழிமூடி காத்திருக்கிறேன்,
நீ இதழ் தொட்டு எழுப்புவதற்காக….

என் கண்களை உற்று நோக்கி, “இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட காத்திருக்க முடியாது…” என்றாள்!

[இன்னும் முடியல, பின்குறிப்ப படிங்க]

பின்குறிப்பு:
1. எதுக்கு முதல் பகுதியில இருந்து கதாநாயகன் போற ஊரையெல்லாம் போட்டேன்னு பாத்தீங்களா? இதனால இந்த பதினெட்டு பட்டிக்கும் சொல்றது என்னன்னா, “இப்படி வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு ஊரூரா சுத்தறவங்களுக்கு தான் காதல் சக்ஸஸ் ஆகும்!!! இதுக்கெல்லாம் அஞ்சறவங்களா இருந்தா அந்த பக்கமே தலை வச்சு படுக்காதீங்க…உங்களுக்கெல்லாம் நம்ம குணால், மோனல் நடிச்ச படம் தான்…’பார்வை ஒன்றே போதுமே!’ ”


2. மறக்காமல் முதல் இரண்டு பின்னூட்டங்களை படிக்கவும். இல்லையென்றால், வினோத் @ பாப்பா மிகவும் கோபித்துக் கொள்வார் :)

[சரி, இப்ப கமெண்ட்டுக்கு போங்க]

Thursday, April 16, 2009

மலரே மெளனமா? - 5

பாகம் – 5 (பெங்களூர் --> சென்னை)
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

செவ்வாய் கிழமை மாலை என்னுடைய தொய்ந்த முகத்தை பார்த்தும் வினோத் எதுவுமே கேட்காமல் இருந்தது ஆச்சர்யமாகத் தான் இருந்தது. படுக்கைக்கு செல்லும் போது, வினோத்தும் மற்றொரு அறை நண்பன் யாசரும் என்னை பற்றி ஏதோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டு, அறையின் கதவருகே சற்றே தயங்கி நின்றேன்.

யாசர், “நீ என்ன ஆச்சுன்னு கேக்க வேண்டியது தான?”

வினோத், “அதில்லடா…இவ்ளோ சோகமா மூஞ்சிய வச்சிட்டு இருக்கான்…என்னால பாக்க முடியல…அவனா சொல்லட்டுமேன்னு தான்…”

நான் உள்ளே நுழையும் சத்தம் கேட்டதும் இருவருமே அமைதியானார்கள்.

“மண்டி! ஊருக்கு போனியே…அம்மா, அப்பா தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?” யாசரை செல்லமாய் பழமண்டி, அல்லது அதன் சுருக்கம் மண்டி என்று தான் அழைப்போம். அவன் எங்களோடு கொடைக்காணல் வந்திருக்கவில்லை.

“அதெல்லாம் இருக்கட்டும்…நீ நேத்திக்கு மலரை பாத்தியே…அது என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லு…”

“ம்ம்…என்னத்தடா சொல்றது?” என்றபடி மூச்சுவிடாமல் முழுவதுமாய் சொல்லி முடித்தேன்.

வினோத், “என்னடா? ஒரே குழப்பங்கள்ஸ் ஆஃஃப் இந்தியாவா இருக்கு?”

“எனக்கும் ஒன்னுமே புரியல…கடைசியில, நான் என்ன கேட்டுட்டேன்னு அப்படி அழுதான்னு கூட புரியல…”

யாசர், “நீ சொல்றத பாத்தா, அவங்க வீட்ல தான் ஏதோ பிரச்சனை இருக்கற மாதிரி தோணுது…”

வினோத், “பேசாம அவங்க வீட்டுக்கே போய், நேரா அவ அப்பா அம்மாகிட்டயே எதாவது பிரச்சனையான்னு கேட்டுட வேண்டியது தான?”

“அவங்க அப்பா அம்மாகிட்டதான் கேக்கனும், வேற வழியில்லை…ஆனா…நான் போய்…எப்படிடா?”

“ஏன்? நீ தான் அவங்க வீட்டுக்கு ஏற்கனவே போயிருக்கியே…”

யாசர், “என்னடா முட்டாள் மாதிரி பேசுற? இவன் போய் மலர பத்தி அவங்க வீட்ல விசாரிச்சா, இவன் எதுக்கு வேலை மெனக்கெட்டு இவ்ளோ தூரம் வந்து விசாரிக்கனும், இவனுக்கு என்ன வந்துச்சுன்னு நினைக்க மாட்டாங்க? மலர பத்தியும் தப்பா நினைக்க மாட்டாங்க?”

வினோத், “இதுல என்னடா இருக்கு? ஒரு நண்பன் அக்கறையில வந்து கேக்குறான்னு தான் நினைப்பாங்க…”

“ஆமா…கிழிப்பாங்க…இத பாரு சுரேன்…அவங்க அப்பா அம்மாகிட்ட கேக்கறதெல்லாம் சரி பட்டு வராதுடா…வீணால மலருக்கும் தான் பிரச்சனை…அவங்களோட நெருங்கின தோழி யாரையாவது தெரிஞ்சா அவங்கள கேக்குறது தான் நல்லது…”

யாசர் இப்படி சொல்லவும், நான் யோசித்தவாறே, “எனக்கு யாரையும் தெரியாதேடா…”

வினோத், “இப்படி பண்ணா என்ன?”

உடனே யாசர், “வேணாம்டா சாமி…நீ எக்குத்தப்பா ஒரு ஐடியாவும் குடுக்கவேணாம்…”

“சொல்றத கேளுங்க டா…சுரேன்…இந்த வீக்கெண்டு லாங் வீக்கெண்டு தான? பேசாம இந்த வியாழக் கிழமையே நீ சென்னைக்கு கிளம்பி போ…அவங்க வீட்டுக்கும் போ…சென்னைக்கு என்ன விஷயமா வந்திருக்கேன்னு கேப்பாங்கல்ல? அங்க தான் நீ ராஜதந்திரமா பதில் சொல்லனும்!”

அவன் எதிர்பார்த்த முகமாற்றத்தை நாங்கள் இருவருமே குடுக்காமல் அமைதியாகவே இருக்கவும், வழக்கம் போல் அதை சட்டை செய்யாமல் வினோத்தே தொடர்ந்தான், “நான் சென்னைக்கு அப்பா அம்மாவோட பொண்ணு பாக்க வந்தேன்…பொண்ணு வீடு இங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு…அன்னிக்கு வந்ததுல உங்க வீடு எங்கயோ இங்க இருக்கறதா தான் ஞாபகம்… மலர்கிட்ட பேசியும் ரொம்ப நாளாச்சு… லாங் வீக்கெண்ட், ஒரு வேளை மலர் ஊருக்கு வந்திருக்கலாம்…அதான் அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு, எங்க அப்பா அம்மாவ ஹோட்டலுக்கும் அனுப்பி வச்சிட்டு வந்தேன்…”
“இப்படி மட்டும் சொல்லிப் பாரு…எப்படி என் ஐடியா?”

யாசர், “ஏன்டா? எதுக்கு பொண்ணு பாக்க வந்தேன்னு சொல்லனும்? நண்பன் கல்யாணத்துக்கு வந்தேன்..இல்லை ஆஃபிஸ் விஷயமா வந்தேன்…இப்படி எதாவது சொல்லலாமே?”

“அங்க தான்டா நீ என்னோட ராஜ தந்திரத்த புரிஞ்சுக்கல…என்ன தான் முற்போக்கு சிந்தனையுள்ளவங்களா இருந்தாலும், என்னடா ஒருத்தன் திடீர்ன்னு இவ்ளோ தூரம் வந்து, நம்ம பொண்ண பத்தி இவ்வளவு விசாரிக்கரானேன்னு பெத்தவங்க மனசுல ஒரு துணுக்கம் இருக்கும்னு தான நீங்க ரெண்டு பேரும் யோசிக்கறீங்க? அதுவே நீ வேற ஒரு பொண்ண பாக்க, அப்பா அம்மாவோட வந்தேன்னு சொன்னீன்னு வச்சுக்கோ, அப்பாடா! இவனோட இலக்கு நம்ம பொண்ணு இல்லைன்னு செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க…இவங்கிட்ட தைரியமா பேசலாம்னு அவங்களும் நினைப்பாங்க…”

யாசர், “பாப்பாஆஆ…எப்படி டா? எப்படி, உன்னால மட்டும், இப்படியெல்லாம்? முடியல…” என்றபடி என்னைப் பார்த்து சிரித்தான்.

உடனே நான், “டே பாப்பா…இங்க வாயேன்…”

“வேணாம்…அப்புறம் நீ என்னை திட்டுவ…”

“யேய்! வாடா…” அவனை இழுத்து, அவன் தோளில் என் கையை போட்டபடி, “உனக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் ஐடியா தோனுது? ஆனாலும் செம ஐடியாடா மாப்ள…”

“ஹீ ஹீ…” என்றபடி சட்டை காலைரை தூக்கிவிட்டுக் கொண்டான்.

நானும் சிரித்தபடி, “சரியான ஆள்டா…நீ, நீ தான்…உனக்கு நிகர் நீயே தான்…” யாசரும், “பாப்பான்னா பாப்பா தான்டா…மூளைக்காரன்!!!”

“ஹே…போதும் டா புகழ்ந்தது…ஓவரா புகழாதீங்க…வெக்கமா இருக்கு” என்று வழிந்தான்.

“சரியான கிரிமினல்டா நீ…”

“போதும்ன்னேன்…”

அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொல்லாமல் தொடர்ந்தேன், “மச்சான்…*$*$*(*&*($*$@”

“யேய்!!!”

“*(&#@‍%#@‍$!”

“*(&#@%‌@#%@‍$!”

எங்கள் மூவரின் சிரிப்பு சத்தம் அறையெங்கிலும் நிரம்பி வழிந்தோடியது.மிகவும் குஷியான நேரங்களில், இப்படி காதிலே கேட்க முடியாத இனிய சொற்களால் கொஞ்சிக் கொள்வது எங்கள் வழக்கம்.

சிறுது நேரம் சிரித்து ஓய்ந்தபின், வினோத், “டேய் தடியா!! போதும் சிரிச்சது…கொஞ்சம் சீரியஸா யோசி…இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சப்புறம் மறுபடியும் மலர்கிட்ட உன் காதலை பத்தி பேசுற…”

அது வரை என் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போக, “என்னன்னு டா மறுபடியும் கேக்குறது?”

“இந்த தடவை நேரடியா எல்லாம் கேக்காத…பேசாம ஒரு லெட்டர் எழுதி குடுத்துடு…”

“லெட்டரா?” ஒரு சேர ஆச்சர்யம் கலந்த தொனியில் ஒலித்தது யாசரின் குரலும் என் குரலும்.

“ஆமா…அது தான் நீ இப்பெல்லாம் ஒரே கவிதையா படிச்சு தள்றியே…பேசாம அந்த மாதிரி ஒன்ன எழுதி அவங்ககிட்ட குடுத்துடு…”

“நான் எப்படா கவிதை எல்லாம் எழுதினேன்? அதெல்லாம் எனக்கு வராது…” இது வரை மனதில் தோன்றிய எண்னற்ற கவிதைகளுள் ஒன்றை கூட எழுதி வைக்கத் தோன்றியதில்லை. “நீ வேணா ஒன்னு எழுதிக்குடேன்…”

வினோத்தை மதித்து எதாவது கேட்டால், பயல் உடனே அதீத குஷியாகி விடுவான். “ஹ்ம்ம்…சரி…சூப்பர் கவிதை ஒன்னு சொல்றேன் கேளு.”

யாசர், “மொதல்ல சொல்லுடா…சூப்பரா இல்லையான்னு நாங்க சொல்றோம்…”

உன்னிடம் தொலைந்தது என் மதி
அதற்கு காரணம் என் விதியா?
இல்லை, நீ செய்த சதியா?

உன்னிடம் காதல் பாடம் ஓதி,
ஆகிவிட்டேன் காதல் கைதி,
இனி என்னவாகுமோ என் கதி?


யாசர், “டே…போதும்டா…ப்ளீஸ்…எங்க கதிய நினைச்சா பாவமா இல்லை?”
வினோத், “முழுசா கேளுடா…ஃபோலவ நடுவுல டிஸ்டர்ப் பண்ணாத…”

உன் பிரிவால் அடங்கமறுக்கிறது என் மனதின் கொதி,
அதை நீ வந்து அடக்க வேண்டும் என் தலை கோதி,
உன்னை விட்டால் எனக்கு இல்லை வேறு நாதி.

விரைவில் உன் பதியாகி,
தினமும் உன் காதல் நதியில்
நீந்த துடிக்கிறேனடி ரதி!

நானறிந்த பெண்களிலே நீ உயர்ந்த சாதி,
உன் நினைவால் நான் ஆகிவிட்டேன் பாதி,
நேரில் வந்து சொல்கிறேன் மீதி.

“எப்படிடா?” கண்களை சிமிட்டியபடி அவன் கேட்க, நான், “உன்னை இப்ப மிதிக்கப் போறேன்டா, மிதி!!!”

யாசர், “அப்புறம் தெரியுன்டா சேதி! உனக்கு ஆகப் போகுது பேதி!”

வினோத், “போடா கபோதி!”

மீண்டும் அறையெங்கிலும் வழிந்தோடியது எங்களின் சிரிப்புச் சத்தம். ’ச்சே…இப்படியே சந்தோஷமா இருந்திருக்கலாம்…சுரேன்! நல்லாத்தானடா இருந்த?’ என்ற எண்ணம் என்னுள் தலைதூக்காமல் இல்லை.

காதல்…சொன்னாலும், சொல்லாவிட்டாலும், ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும்,தோற்றாலும், ஜெயித்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒரு பேரவஸ்த்தை தான்…ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய பேரவஸ்த்தை!!!

******
சென்னையில் சில நிறுவனங்களுக்கு அன்று விடுமுறை இல்லை போலும். மலர் நடந்து கொண்ட விதம், அன்று காலை மலர் அப்பா, அம்மாவை சந்தித்தது, அவர்கள் சொன்னது, இப்படி பலவற்றை அசை போட்ட படி, அந்த பெரிய கணினி நிறுவன வளாகத்தில் சங்கீதாவுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

சங்கீதா…மலரின் மிக நெருங்கிய தோழி, மலர் அம்மா சொல்லும் போதே எனக்கு இந்த பேரை மலர் சொல்லிக் கேட்டிருந்தது போல் ஞாபகம்.

வினோத் கொடுத்த ஐடியா, மலர் பெற்றோரிடத்தில் மிக நன்றாகவே வேலை செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களிருவருமே எந்த வித தயக்கமுமில்லாமல், மனதில் இருந்ததையெல்லாம் என்னிடம் சொன்னார்கள். மலர் கடைசியாக சென்னைக்கு வந்தது அன்று நாங்கள் எல்லோரும் சென்னை வந்த அன்று தான். அதன் பிறகு, திடீரென்று காரணம் எதுவும் சொல்லாமலே வேலை மாற்றிக் கொண்டு சென்று விட்டதாகவும், மூன்று மாதங்களாகியும் வீட்டிற்கே வரவில்லை என்றும் அவள் அம்மா சொன்னதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் ஏற்படவில்லை. ஏதோ பிரச்சனை என்று அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது…உயிராக நினைக்கும் பெற்றோரிடம் கூட சொல்ல முடியாத அளவிற்கு, மலருக்கு பிரச்சனைகள் ஏதேனும் இருக்கக் கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னவென்று சொன்னால் தானே எதாவது செய்ய முடியும்? எல்லாவற்றையும் விட இவளின் இந்த மெளனமே என்னை அதிகம் வாட்டிக் கொண்டிருந்தது.

என்னை தேடி நீ வரும் வரையில் நான் காத்திருப்பேனா?
இல்லை, காற்றிலே கறைந்து மறைந்திருப்பேனா?

என் உயிரின் ஓசை உனக்கு கேட்கவில்லையா?
அது, உன் உயிரிலே கலந்து எதிரொலிக்கவில்லையா?

உன் பிரிவு கொடுக்கும் வலியையும் மிஞ்சுகிறதடி உன் மெளனம்…
உன் மெளனம் கலையும் நாள் தான் எப்போது?

அது வரையில் நான் காத்திருப்பேனா?
இல்லை, காற்றிலே கறைந்து மறைந்திருப்பேனா?

நாங்கள் ஒரு முறை கொடைக்காணல் சென்றபோது கூட அவள் எங்களுடன் சரியாகவே பேசவில்லை என்று சொல்லும் போது அவள் அம்மா உடைந்து அழுதுவிட்டாள். பெண்களாவது பரவாயில்லை, மனதை அழுத்தும் பாரத்தை கண்ணீரால் கரைத்துக் கொள்ளலாம். ஆனால் அவள் அப்பா? அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை என்னால். மரியாதைக்குறிய அவர் தோற்றமும், அன்பு ததும்பும் முகமும் முதல் சந்திப்பிலேயே எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்படிப் பட்ட மனிதர், மனதின் பாரம் உள்ளே அழுத்தினாலும், அதை மறைத்து, போலியாய் புன்னகைத்து என்னை வரவேற்று உபசரித்ததை என்னால் மறக்கவே இயலவில்லை. அவருக்காகவாவது எதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்ததன் பயணாய் தான், மாலை வரை கூட காத்திருக்காமல், உடனடியாக சங்கீதாவை சந்திக்க, நேரே அவள் அலுவத்திற்கே வந்து விட்டேன்.
******
“ஹாய்…நான் சுரேன்…சுரேந்தர்…மலரோட…”

“பழைய டீம்லீட்!” பட்டென்று அவளிடமிருந்து பதில் வந்தது. ’இவளுக்கு என்னை தெரிந்திருக்கிறது…மலர் ஒரு வேளை எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ? அப்படி சொல்லியிருந்தால், மலரை பற்றி விசாரிக்க இவளை விட சிறப்பானதொரு ஆளை கண்டுபிடிக்க முடியாது.’

“ஓகே…சந்தோஷம்…அறிமுகம் தேவையில்லை…நேரடியா விஷயத்துக்கே வரேன்…மலருக்கு அப்படி என்ன பிரச்சனை? எதுக்காக வேற ஏதோ ஒரு ஊர்ல, அதுவும் ஒரு ஸ்கூல்ல வேலை செய்யனும்?”

“ஏதோ ஒரு ஊரில்லை…சின்ன வயசுல அவ படிச்ச ஸ்கூல் தான்…திடீர்ன்னு வாழ்க்கை இயந்தரத்தனமா மாறின மாதிரி ஒரு எண்ணம் அவளுக்குள்ள…அதனால தான், ஒரு மாற்றத்துக்காக அங்க வேலையில இருக்கா…”

அவளுடைய பதில் தான் இயந்திரத்தனமாக இருந்தது! குரலில் அழையாமலே வந்து ஒட்டிக் கொண்ட கடுமையுடன், “போதும் சங்கீதா…இந்த பதிலை கேக்கறதுக்காக நான் வேலை மெனக்கெட்டு சென்னை வரல…”

அவளும் சூடாகியிருக்க வேண்டும், “நானும் ஒன்னும் வேலை வெட்டியில்லாம இங்க உக்காந்துட்டு இருக்கல…”

சற்றே தணிந்த குரலில், “சாரி….சாரி சங்கீதா! தயவு செஞ்சு சொல்லுங்க…மூனு மாசமா அவங்க வீட்டுக்கும் வரலை…ஃபோன்ல பேசினாலும் சரியா பேசறதில்லைன்னு அவங்க அம்மா…”

என்னை இடைமறித்தவள், “தெரியும்…இதெல்லாம் எனக்கும் தெரியும்! சரி, அவளுக்கு பிரச்சனை இருக்குன்னே வச்சுக்குவோம்…ஆனா அதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்? நீங்க யாரு?”

என்ன பதில் சொல்வது இதற்கு? ’அவளுக்கு நான் யாரும் இல்லை தான்…ஆனால் அவள் தான் எல்லாமும் எனக்கு…’ என்றா சொல்லமுடியும்?

நான் வாயடைத்து அமைதியாய் இருப்பதைப் பார்த்து, எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவதைப் போல், “You are neither her friend right now, nor her lover…” என்றாள்.

எனக்குள் கொழுந்து விட்டெரிந்த நெருப்பின் ஜுவாலை கண்களில் தகதகக்க, “ஆமா! உண்மை…நான் அவங்களோட காதலன் இல்ல…அவங்கள ஒரு தலையா காதலிச்சு நிராகரிக்கப் பட்ட ஒரு தலை காதலன் தான்! ஒத்துக்கறேன்…ஆனா, உங்களுக்கு ஒன்னு தெரியுமா சங்கீதா? ஒரு காதலன், பின்னாடி அன்புக் கணவனா மாறி, காலப்போக்குல ஒரு சராசரி கணவனா கூட மாறிடுவான்….ஆனா, ஒரு நிராகரிக்கப்பட்ட காதலன், என்னிக்குமே அதே அன்போட தான் இருப்பான்…”

என்னுடைய இந்த நீண்ட உறையை விரும்பாமல், ’உஸ்ஸ்’ என்று மிகச்சன்னமாக ஒரு ஒலியெழுப்பியபடி வேறு பக்கம் பார்க்கத் துவங்கினாள் அந்த காதல் எதிரி…முக்கால் வாசி தமிழ் பெண்கள் காதலை கொலை குற்றம் போல் பாவிக்கும் விந்தை மட்டும் எனக்கு இன்று வரை விளங்கியதில்லை!!!

இருந்தும் விடாமல் தொடர்ந்தேன், “பரஸ்பர அன்பை விட, ஒரு தலை அன்பு ஆழமானது தெரியுமா? ரெண்டு பேருக்குள்ளையும் இருக்க வேண்டிய அன்பு, ஒரு பக்கமே தேங்கி கிடக்கறது தான் அதுக்குக் காரணம்…அவ தன்னோட இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருப்பாளோ, வேற எங்க இருந்தாலும், அவ அதை விட பல மடங்கு சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கறது தான் உண்மையான காதல்…and நான்…மலரை உண்மையா நேசிக்கிறேன்!!!”
சொதப்பலாக ஆரம்பித்தாலும், அசத்தலாகத் தான் பேசி முடித்து விட்டேன் போலும், சங்கீதா முகத்தில் இருந்த ஆயாசம் மாறி, ஒரு சிறு பரிதாபம் தெரிந்தது.

“சரி சங்கீதா…அவங்க பிரச்சனைய பத்தி நீங்க எங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்…நான் வேற ஒரு கேள்வி கேக்குறேன்…அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”

“என்ன?”

“மலர் இப்ப சந்தோஷமா இருக்காங்களா? இல்லையா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”

ஒரு கணம் தயங்கியவள், “இல்லை…” என்றபடி தலையை குணிந்து கொண்டாள்.

“ஹ்ம்ம்…சரி…அப்ப சொல்லுங்க…என்ன பண்ணலாம்?”

“நான் அவ கிட்ட எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன்…உண்மையில சொல்லப் போனா, அவங்க வீட்ல எந்த பிரச்சனையுமே இல்ல…அவ தான் அவளோட பிரச்சனையே…அவளுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு எனக்கு சத்தியமா தெரியல…”

“நீங்க அவங்களோட பேசினீங்களா? நேர்ல போயா?”

“இல்ல…நான் ஆஸ்ட்ரேலியாவில இருந்து போன வாரம் தான் வந்தேன்…அது வரைக்கும் ஃபோன்லயும், ச்சேட்லையும் தான்…”

யாரிடமும் மனம் விட்டு பேசாமல் மனதிற்குள்ளே மலர் மறுகித் தவிப்பது தான் இதற்கு முழு முதல் காரணம் என்று தெள்ளத் தெளிவாக விளங்கியது, ஆனால் இத்தனை பிரச்சனைகளின் மூலம் என்னவென்று இவள் வாயிலிருந்து வருவதாய் தெரியவில்லை.
“சரி…ரொம்ப நன்றி சங்கீதா! உங்கள வேலை நேரத்துல தொந்தரவு பண்ணதுக்கு மன்னிச்சிடுங்க…நான் கிளம்பறேன்…”

திடீரென்று பாதியில் நான் விடைபெற்றதை சற்றும் எதிர்பார்க்காதவள், “சுரேந்தர்….நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கனும்…ப்ளீஸ் உக்காருங்க…எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…இந்த விஷயத்துல மலர்கிட்ட நேரா போய் பேச முடியலையேன்னு எனக்கே ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு…அவள ஊருக்கு வர சொன்னாலும் வர மாட்டிங்குறா…எனக்கு இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்…என்னை கொடைக்காணலுக்கெல்லாம் வீட்ல விட மாட்டாங்க…”

“ஓஹ்ஹ்…வாழ்த்துக்கள்…” என்றபடி மீண்டும் அவளெதிரில் அமர்ந்து, அவள் கண்களை பார்த்து, “சரி…என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் என்ன விஷயம்னு எங்கிட்ட சொல்லுங்க…நான் மலர் கிட்ட போய் பேசுறேன்…”

“அவங்க குடும்ப பிரச்சனை…நாம என்ன பண்ண முடியும்?”

“நீங்க மலரோட நெருங்கிய தோழி…நான் மலரோட நலம் விரும்பி…அப்ப நாம ரெண்டு பேரும் பண்ணாம வேற யார் என்ன பண்ண முடியும்?”

“சரி…சொல்றேன்…எப்படி சொல்றதுன்னு தெரியல…உங்கள எனக்கு தெரியாது…ஆனா, மலர் உங்கள பத்தி ரொம்ப உயர்வா என்கிட்ட சொல்லியிருக்கா…அந்த நம்பிக்கையில தான் சொல்றேன்…”

“அந்த நம்பிக்கைய நான் கட்டாயம் காப்பாத்துவேன்…சொல்லுங்க…”

“மலரோட அப்பா இருக்காரில்லை? ஆக்சுவலா, அவரு அவ அப்பா இல்லையாம்…நிஜத்துல அவரு அவளோட சித்தப்பாவாம்!”

“என்ன???” அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை.

“அவங்க அம்மா மூனு மாசமா இருக்கும் போதே, அவ அப்பா அவங்கள விட்டுட்டு எங்கயோ… வேற யாரோடையோ போய்டாராம்... அதனால மலர் பிறக்கற சமயத்துல, அவங்க தாத்தா பாட்டியே அவங்க ரெண்டாவது பையன அவங்க அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க…இந்த விஷயம் போன முறை ஊருக்கு வந்தப்போ தான் எப்படியோ மலருக்கு தெரிஞ்சுருக்கு…அதனால தான் அவ ரொம்பவே அப்ஸெட்டா இருக்கா…”

அன்பு ததும்பும் மலர் அப்பாவின் முகம் என் மனக்கண் முன் நிழலாடியது!

[தொடரும்]

Saturday, April 11, 2009

மலரே மெளனமா? - 4

பாகம் – 4 (கொடைக்காணல்)
பாகம் 1, பாகம் 2, பாகம் 3

வினோத், கேலி கிண்டல் எதுவும் இல்லாமல், அர்த்ததுடன் பேசுவது ஒரு சில தருணங்களில் தான். அதை கூட நான் சட்டை செய்யாமல், கிளம்பலாம் என்று சொல்லவும், அவனுக்கு கோபம் தலைக்கேறியது…

“என்னது? போய் பேச மாட்டியா? போடா ஆ….வாய்ல நல்லா வருது…”

“இல்லடா…அதான் அன்னிக்கே தெளிவா சொல்லிட்டாளே…மறுபடியும் மறுபடியும் போய் அவள தொந்தரவு பண்றது அநாகரீகம்…”

“பெரிய இவன்!!! தினமும் தூக்கத்துல மலர் மலர் னு உளர்றது மட்டும் ரொம்ப நாகரிகமாக்கும்?”

’என்னது? நான் அப்படியா உளர்னேன்? கண்டிப்பா இந்த பாவிப்பயல் எப்பயும் போல பொய் தான் சொல்றான்.’ என்று நினைத்துக் கொண்டாலும் இன்னொரு முறை கேட்டு அதை உண்மையென்று ஊர்ஜிதம் செய்ய விரும்பாமல், திடமான குரலில், “முடியாது டா…என்னால இன்னொரு தடவை எல்லாம் போய் பேச முடியாது! இது நானா சொல்லல, எங்கப்பா அன்னிக்கு சொன்னத தான் சொல்றேன்…”

“உங்கப்பாவா? என்ன டா புதுக் கதை?”

“அந்த பொண்ணுக்கு இஷ்டமில்லைன்னா, நீ அதுக்கு மேல அவள எந்த விதத்திலையும் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அப்பா சொன்னாரு…எனக்கும் கூட அது தான் சரின்னு படுது…”

“உங்கப்பா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை…ஒத்துக்கறேன்…இஷ்டமில்லாத பொண்ண தொந்தரவு பண்ணக் கூடாது தான்…ஆனா, அவ உன்னை விரும்பறா டா, வெளிய சொல்லாம மறைக்குறா…”

“பாப்பா! எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற?”

“எத்தன தடவை சொல்றது? என்னை நம்ப மாட்டியா? அவ எதுக்கு உன்னை பாத்ததும், இப்படி எல்லாத்தையும் பறிகுடுத்த மாதிரி அழுகனும்? சொல்லு…”

“ஆமால்ல…எதுக்கு அழுகனும்?”

“போடா மடையா! இது கூட புரியலையா? அன்னிக்கு ஏதோ சூழ்நிலை, இல்ல ஈகோ…நீ கேட்ட உடனே வேண்டாம்னு பிகு பண்ணிட்டு, அதுக்கப்புறம் அத நினைச்சு நினைச்சு ஃபீல் பண்றா…இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக…லேசுல ஒத்துக்கமாட்டாங்க…அப்புறமா நினைச்சு உருகுவாங்க…சும்மாவா சொன்னாங்க பெண் புத்தி பின் புத்தின்னு?”

“நீ வேற என்னை போட்டு குழப்பாத…அவ அழுதத நீ நிஜமாவே பாத்தியா?” மூன்றாம் முறையாய் அதே விஷயத்தை சொல்ல விருப்பமில்லாமல், வினோத் அமைதியாக நின்று கொண்திருந்தான்.
அப்பா சொன்னதை எல்லாம் மழுங்கடிக்க செய்து விட்டது, எனக்குள் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கிய காதல் சாத்தான். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு, “இப்ப என்னடா பண்றது?” என்றேன்.

“அப்படி வா வழிக்கு…ஒரு பொண்ணு நம்மள உயிருக்கு உயிரா காதலிக்குறா…ஆனா, அத வெளிய சொல்லாம மறைக்குறான்னா என்ன தெரியுமா பண்ணனும்?”

“என்ன பண்ணனும்?”

“சொல்லுவேன்…ஆனா, சொன்னா திட்டுவ…” என்று அவன் இழுக்க,

“நான் எப்படா உன்னை திட்டியிருக்கேன்?” மனசாட்சியை தூரப் போட்டு விட்டு புளுகினேன்.

“சரி…கேளு! அவ எதிர்பாக்காதப்ப சடார்ன்னு அவள இழுத்து, அப்படியே நச்சுன்னு ஒரு …”

“டேய்ய்ய்ய்!” இவனை பாவிப்பயல் என்று சொல்வது மிக மிகத் தவறு. படுபாவிப்பயல்!!!
“அடச்சே…எங்கிருந்துடா உனக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கிடைக்குது?”

“ஹீ…ஹீ…இந்த ரமணி சந்திரன்* புத்தகத்தில எல்லாம் இப்படி தான்டா வரும்” தலையை சொறிந்த படி, சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ரமணி சந்திரனா? இந்த பொண்ணுங்கெல்லாம் படிப்பாங்களே? அதைப் போய் நீ எங்கடா படிச்ச?”

“எங்கம்மா படிப்பாங்க…அப்படியே நானும் கொஞ்சம் கொஞ்சம்…”

“டேய்…நடக்கற மாதிரி எதாவது யோசனை சொல்லுடான்னா…”

“வேற எதுவும் வழி இல்ல, நீயா நேர்ல போய் பேச வேண்டியது தான்…”

“ம்ம்…ஆமா…நீ சொல்றதும் சரி தான்…அவகிட்ட போய் பேசத் தான் போறேன்…ஆனா, இதப் பத்தி இல்ல…அதுக்கு முன்னாடி வேற ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…”

அப்போதே மணி எட்டாகியிருந்ததால், அன்றிரவு அங்கேயே தங்கி, நாளையே அவளை சந்தித்து பேசி விடுவது என்ற ஒரு முடிவோடு கடையின் வாசலை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினேன். என் பின்னாலேயே வந்த வினோத்,

கையில் வைத்திருந்த கவிதை புத்தகத்துடனே நான் கடையின் வாசலை நோக்கி நடக்க முற்படவும், வினோத், “டேய்…அந்த புக்க வச்சுட்டு வாடா…”

“இத வாங்கப் போறேன்…”

“ரொம்ம்ம்ப முக்கியம் இப்ப!!!”

வினோத்தும் மற்ற நண்பர்களும் உடனே பேருந்தை பிடிக்க கிளம்ப வேண்டும் என்பதால், வேகமாய் வண்டியை கிளப்பினேன். நான் ஓட்டிக் கொண்டிருக்க, வினோத் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த புத்தகத்தில் இருந்த கவிதைகளை கிண்டலடித்துக் கொண்டே வந்தான்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ’நானும் காதல் வர வரைக்கும் இப்படி தான்டா இருந்தேன்!!! ம்ம்ம்…என்ன பண்றது? அவ ஒரு சதிகாரி!!!’ சோகத்துடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது…

“மச்சான்ன்!!! இங்க பாருடா…சிச்சுவேஷன் கவிதை!!!”

“என்னது?”

“படிக்கறேன்…கேளு…”

உன்னைப் பார்த்ததும்,
உள்ளத்தில் ஊற்றெடுத்த
உணர்ச்சிகளை ஊமையாக்கி,
நடிக்கத் தான் நினைத்திருந்தேன்…
என்றாலும்,
கன்னத்துப் பரப்பில்,
உண்மை ஊற்றாய் வெளிப்பட்டது
கண்ணீர் கவிதைகளாய்!

அதற்குள் நாங்கள் தங்கியிருந்த அறை வந்துவிட, "யாரோ, யாரையோ நினைச்சு எழுதினது கூட நமக்கே நமக்காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கே...ஹ்ம்ம்...அது தான்டா காதல்!!!"

"முடியலடா பாப்பா...கொஞ்சம் மொக்கைய போடாம சீக்கரம் கிளம்பு!"

******
சோகமே வடிவாய் அமைதியாய் வரப் போகிறாள் என்று நினைத்த எனக்கு பெருத்த ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. நான்கைந்து பள்ளிக் குழந்தைகளுடன் குதூகலமாய் பேசிச் சிரித்த படி பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மலர். பேருந்தின் அருகே நான் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள். இந்த வினோத் சொன்னது தப்பே இல்லை, ஒரு நொடிக்குள் எத்தனை வித முகபாவங்கள், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தன் மனதை வேறொருவர் அறியவே முடியாதபடி? சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்!

“என்ன சுரேன், இந்த பக்கம்? தெரிஞ்சவங்க யாராச்சும் படிக்கறாங்களா?” அப்பாவியைப் போல் அவள் கேட்கவும்,

‘ஹூம்…நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தைக்கு அட்மிஷன் வாங்க வந்தேன்!!!’ எரிச்சலில் வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கினேன்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மலர்…”

“அச்சோ! பஸ் இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல எடுத்துருவாங்களே…”

“அப்ப உங்க வீட்டு விலாசம் குடுங்க…அங்க வரேன்…”

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காததால், என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அமைதி காக்கவும், “மலர்! நான் என்னை பத்தியோ, என்னோட உணர்வுகள பத்தியோ பேச வரலை…உங்கள பத்தி தான் பேச வந்திருக்கேன்…உங்கள இவ்வளவு நாள் தெரிஞ்ச ஒரு நண்பன்ங்கற முறையில…தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எங்கயாவது உக்காந்து பேசலாம்…அந்த அளவுக்கு கூட என்னை நீங்க மதிக்கலைன்னா சொல்லிடுங்க, இப்பயே போய்டுறேன்…”

“இங்க பக்கத்துல பார்க் இருக்கு…அங்க போலாம்…”

பூங்காவை நோக்கி மெல்ல நடை பயின்ற அந்த ஐந்து நிமிடங்களில், வழி நெடுகிலும் கொட்டிக் கிடந்த காய்ந்து சருகுகளை எங்கள் பாதங்கள் கலைத்ததால் ஏற்பட்ட சத்தத்தை தவிர, வேறு சத்தமே அங்கு எழவில்லை. என் இதயம் ’தடக், தடக்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் வெளியே கேட்டிருக்கக் கூடும். ஆனால் அவள் தான் என் உணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பாத அழுத்தக்காரியாயிற்றே? அதனால், அவள் என் இதயம் துடிக்கும் சத்தம் கேட்டும், கேளாததை போல் நடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

ஜோடியாய் வந்தும் முகத்தில் இருக்கத்துடன், எதுவும் பேசாமலேயே பூங்காவிற்குள் நுழைந்த எங்களை பார்த்து, அங்கிருந்த காதல் பறவைகள் “கீ…கீ…” என கூச்சலிட்டு எங்களை பரிகாசம் செய்தன.

“சொல்லுங்க சுரேன்… திங்கட்கிழமை அதுவுமா இங்க என்ன பண்றீங்க? ஆஃபிஸ் போகல? அப்படி என்ன முக்கியமான வேலை?”

“ஆமா…முக்கியமான வேலை தான்…நான் ஒருத்தங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்…அவங்க ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன்…என்னை மதிக்கறாங்கன்னும் நினைச்சேன்…”

“சுரேன்! Stop it! சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க…”

“சரி…நல்லது…இப்ப சொல்லுங்க…எதுக்காக திடீர்ன்னு ஒரு ஸ்கூல்ல வந்து வேலை பாத்துட்டு இருக்கீங்க? நான் என்னவோ நீங்க சென்னையிலேயே வீட்ல இருந்த படி எதாவது ஒரு நல்ல கம்பனில வேலை பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்…அன்னிக்கு அனூப் கிட்ட மீட்டிங்குல கூட அப்படி தான சொன்னீங்க?”

“ஏன் ஸ்கூல்ல வேலை பாக்குறதுல என்ன கேவலம்?”

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல…இவ்ளோ நாள் வேலை செஞ்ச பெங்களூரையும் விட்டுட்டு, அப்பா அம்மா இருக்குற சென்னையையும் விட்டுட்டு, எதுக்காக இந்த ஊர்ல வந்து, உங்க படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லா…”

“சுரேன்! போதும்…”

“முடியாது மலர்…என்ன காரணம்னு நீங்க சொல்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன்…எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? என்னால தான் நீங்க வேலையை விட்டுட்டு போனீங்கன்னு எனக்கு தெரியும்…ஆனா, நீங்க….இங்க வந்து…இப்படி தனியா? என்னால முடியல மலர்…முடியல…ஊருக்கு கூட போகாம உங்ககிட்ட பேசனும்னு தான் இங்கயே இருக்கேன்….எனக்கு நேத்திக்கெல்லாம் தூக்கமே வரலை… என் மேல இருக்கற கோவத்துல நீங்க இப்படி அதிரடியான முடிவு எடுப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை…”

“நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க…உண்மையை சொல்லனும்னா, எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்ல…இந்த முடிவு நான் யோசிச்சு எடுத்தது தான், எந்த கோபத்திலையும் எடுக்கல…” ஆனால் இப்படி சொல்லும் போது கூட அவள் கண்களில், கோபமும், சோகமும் ஒரு சேர மிண்ணியதைப் போல உணர்ந்தேன்.

“மலர் ப்ளீஸ்…என்னை நீங்க ஒரு பர்சென்டாவது உங்க நண்பனா…இல்ல…மனுஷனா மதிச்சீங்கன்னா சொல்லுங்க…”

அவள் இதழ்களோடு சேர்த்து இம்முறை அவள் கலங்கிய விழிகளும் பேசின,
“எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க சுரேன்…ப்ளீஸ்…போய்டுங்க…”

அவள் கண்கலங்குவதை பார்க்க சக்தியற்று அந்த இடத்தை விட்டு எழுந்தபடி, “போறேன் மலர்…போறேன்…இங்கயே இருந்து உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்…ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்…நீங்க எவ்ளோ துன்பப் படறீங்களோ அதை விட பல மடங்கு அதிகமா, உங்களோட இந்த நிலைக்கு நான் தான் காரணமோன்னு நினைச்சு நினைச்சு துன்பப் படுவேன்னு மட்டும் மறந்துடாதீங்க…” வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள். அந்த முதல் தீண்டலை ரசித்து இன்புறும் மனநிலையில் கூட அப்போது நான் இல்லை.

“சுரேன்! ப்ளீஸ்…புரிஞ்சிக்கோங்க…எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு உங்க மேல இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே எந்த கோவமும் இருந்ததில்லை. உங்கள நான் ஒரு நல்ல நண்பரா தான் இப்பயும் நினைக்கறேன்…நீங்களா என்னோட பேசாம இருந்தப்ப கூட, உங்க விருப்பம் அது தான்னு நினைச்சு தான் நானும் விலகிக் போனேன்…இப்ப நான் இங்க வந்து இருக்கறதுக்கும் உங்களுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை…”
இன்னும் என்னை பற்றிக்கொன்டிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினேன், “சரி…நான் காரணமில்லை, சந்தோஷம்…ஆனா, என்ன காரணம்னு சொல்லுங்க மலர்!”

“பர்சனல்” என்றாள் எங்கோ வெறித்தபடி.

அப்போது அவளின் முகவாட்டத்தை பார்த்ததும், அன்று அவள் இதே போல் இருந்த போது, அவளுடைய தந்தை அதை அரை நொடியில் கண்டு கொண்டு, அவள் தலை வருடியது சட்டென்று நினைவுக்கு வந்தது. “சரி…எங்கிட்ட சொல்ல வேண்டாம்…அட்லீஸ்ட் உங்க அம்மா அப்பாகிட்டயாது சொன்னீங்களா, இல்லையா?”

அருவி போல் மாறிவிடும் அபாயம் அவள் கண்களில் தெரியவே, சின்னக் குழந்தையிடம் சொல்வது போல், “மலர் தான் அப்பா கிட்ட ரொம்ப க்ளோஸ் ஆச்சே? அப்பாகிட்டையாவது பேசலாமே…” என்றேன்.

உடனே கைகளால் முகத்தை மூடிக் கொண்டு பெருங்குரலெடுத்து கதறி அழத் துவங்கினாள்.

அவளை அப்படியே வாரி, என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,
’உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி! அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’
என்று சொல்லத் தோன்றியும், அதை செயலில் காட்ட முடியாத நாகரீகக் கோழையாய், அவள் அவ்வாறு அழுவதை அதற்கு மேலும் சகித்துக் கொள்ளும் சக்தியற்று, அக்கணமே கனத்த இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

[தொடரும்]

ரமணி சந்திரன் fans கோவிச்சுக்காதீங்க…இது சும்மா காமடி தான் :)

Tuesday, April 7, 2009

மலரே மெளனமா? - 3

பாகம் – 3 (சென்னை -> பெங்களூர், பெங்களூர் -> கொடைக்காணல்)

பாகம் 1, பாகம் 2

பெங்களூர் கொடைக்காணல் செல்லும் சாலையில், நான் பயணித்த பேருந்து, சாலையில் வழுக்கிக் கொண்டு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்க, என் மனம் வலித்துக் கொண்டே பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

மலரிடம் காதலைச் சொன்ன அன்றைய தினம் இரவு, ’அவள் சோர்வாக, குதூகலமில்லாது இருந்த போது காதலை சொன்னது தவறோ? அவளிடம், இனி இதைப் பற்றி பேச மாட்டேன், எப்போதும் போல் நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாமோ?’ இப்படி பலதும் நினைத்துக் கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம், ஆறு மணி மூகூர்த்ததிற்கு, மண்டபத்திற்கே நேரடியாக வந்துவிடுகிறேன் என்று சொன்ன மலர் அன்று வரவில்லை. இரவு பேருந்து நிலையத்திலும் அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பயணக்களைப்பு, முதல் நாளிரவு தூக்கமின்மை, மன உளைச்சல், இப்படி எல்லாமும் ஒரே சமயத்தில் என்னை ஆட்கொள்ள, திங்கட்கிழமை காலை வீட்றிக்கு வந்தவுடன் வெகு நேரம் என்னை அறியாமல் உறங்கிப் போனேன். அலுவலகம் சென்றடைந்த போது மணி 11.30.

முதல் மின்னஞ்சல், என் மேனஜரிடமிருந்து. அதைத் திறந்தால், என்னிடத்திலும் என் மேனஜரிடத்திலும் ஒரு அரை மணி நேர சந்திப்பு கோரி மலர் அனுப்பியிருந்த மடலுக்கு பன்னிரெண்டு மணிக்கு சந்திக்கலாம் என்று அவர் பதில் அனுப்பியிருந்தார். மீண்டும் மின்னஞ்சல் பெட்டியில் இரு மடல்களுக்கு முன்னதாக வந்திருந்த மலரின் மடலை திறந்தேன். முந்தைய மடலில் ஏற்கனவே பார்த்த செய்தியாயிருந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். ’என்னவாக இருக்கும்?’ என் சிந்தனையை கலைத்தது நண்பனின் குரல். “சுரேன்…காஃபிக்கு போலாமா?”

“இல்ல அவினாஷ்…நான் இப்ப தான் வந்தேன்…நீங்கெல்லாம் போங்க…”

“என்ன இது? நீங்களும் வரலைங்கறீங்க…மலரும் வரலைன்னுட்டாங்க…சரி விடுங்க…நாங்க எல்லாம் போறோம்…”

சாட் பெட்டியை திறந்தேன். மலர் அவள் இருக்கையில் இருப்பதாகத் தான் காண்பித்தது.
“சாரி மலர், நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க…” இப்படி அனுப்பலாமா என்று ஒரு நொடி தலைதூக்கிய எண்ணத்தை கிடப்பில் போட்டேன். ’நான் என்ன தப்பு பண்ணேன், சாரி கேட்க?’ என்று என்னை நானே கடிந்து கொண்டேன். ’சரி, ஆனது ஆகட்டும்…இனிமே எப்பயும் போல இல்லாட்டியும், பேச்சளவிலாவது நல்ல நண்பர்களா இருப்போம், என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது’ ன்னு நேர்லையே சொல்லிடலாம் என்று என் இருக்கையை விட்டு எழுந்தேன்.

“சுரேன்! Shall we go in for the meeting now?” என் மேனேஜர் தான். கடிகாரத்தைப் பார்தேன். 11.45 தான் ஆகியிருந்தது.

“I’ve another meeting at 12…malar!!!” உடனே அவளையும் அழைத்து விட்டார். எதுக்காக அழைத்திருக்கிறாள் என்று யோசிக்க கூட இல்லை. இவர் வேற…ச்சே…ஒரு வேளை வேற ப்ராஜக்ட் கேக்கப் போறாளோ? யோசித்துக் கொண்டே அருகிலிருந்த கான்ஃபரண்ஸ் அறையினுள் நுழைந்தேன். என் பின்னோடு மேனஜரும், மலரும் நுழைந்தனர்.

அந்த அறையில் ஒட்டியிருந்த எங்கள் கம்பனி குறிக்கோள்கள் கொண்ட வாசகப் பலகையை அன்று தான் முதன்முறையாக பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். அப்படி இல்லாவிட்டால், அறையின் கதைவை பார்த்தபடி அமர்ந்திருந்த என்னை தவிர்த்திருக்க முடியாது. “ச்சே, இந்த பொண்ணுங்களே இப்படி தான்டா…” பல நண்பர்கள் சொல்லிக் கேட்ட இந்த வாசகத்தை வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கும் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது! “ச்சே…இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!!”

“Yeah malar! Go ahead…”

“Anoop…actually… I m planning to submit my resignation…today…”
அந்த நொடியிலிருந்தே அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்து, இன்று முதல் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறேன், ஒவ்வொரு முறையும்!

அதன்பிறகு அனூப் அவளை ஏதேதோ கேள்விகள் கேட்டதும், அதற்கு அவள் “இந்த பொண்ணுங்களே இப்படி தான்” என்கிற பதத்தை மீண்டும் மீண்டும் நிரூப்பிப்பதை போல பதில்கள் சொன்னதும், எதுவுமே என் காதில் விழவில்லை. ’என்னை கேடு கெட்டவன் என்று நினைத்து விட்டாளா? என்னை பார்ப்பதற்கே அவளுக்கு பிடிக்கவில்லையா? இல்லை, என்னை பார்த்து பயந்து ஓடிகிறாளா?’ சளைக்காமல் இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்ட மூளையிடம் பதில் சொல்ல முடியாமல் தோற்றுப் தான் போனேன்.

இங்கு ஒருத்தன் உயிருள்ள சவமாய் கிடப்பதை பார்த்தும், அதை கண்டுகொள்ளாமலே, அல்லது கண்டுகொண்டும் அலட்டிக் கொள்ளாமலே, தன் பன்னிரெண்டு மணி மீட்டிங்கிற்கு ஓடினார் என் மேனஜர். தரை விரிப்பை புதிதாய் பார்த்து ரசித்த படி மலரும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

ஒரு வருடத்திற்கு முன்னால் இதே அறையில், அவளை எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்க்க நானும் அனூப்பும் அவளை சந்தித்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

அதன் பிறகு தேனீர், உணவு இடைவேளை என்று எதற்கும் அவளோடு நான் செல்லவில்லை. அலுவலைத் தவிர்த்து அவளை பார்ப்பதை கூட தவிர்த்திருந்தேன். ’ஏன்’ என்று அவளும் கேட்கவில்லை. அவள் கேட்க வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கடைசி நாளன்று என்னை அவள் கேட்டதாக நண்பனொருவன் சொன்னது கூட என்னை பாதிக்கவில்லை. உலகத்தவர் அனேகரைப் போல, நானும் முட்டாள் தான் என்று அவள் சென்ற ஒரு வாரத்திலேயே கண்டுகொண்டேன். கண்னெதிரே அவள் இருந்த போது தெரியாத பிரிவின் பாரம், மெல்ல மெல்ல என்னை அழுத்தத் துவங்கியது. அதன் பிறகு தேனீர், உணவு இடைவேளை இப்படி எல்லாமே அவள் நினைவகளினூடே கழிந்தது.

உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?

அவளை முதன் முதலாய் பார்த்தது முதல், அவளது கடைசி அலுவல் நாளை, வீட்டிலிருந்தபடி பாட்டிலுடன் கழித்தது வரை, கடந்து போன ஒரு வருட கதை முழுவதும், ஈரேழு வயலின்களின் பின்னனி இசையுடன் கருப்பு வெள்ளைத் திரைப்படமாக என்னுள் ஓடியதில், முடிவே இல்லாத கவிதை போல நீண்டு கொண்டே சென்றது என் இரவு.

******
கொடைக்காணல் குளிருக்கு இதமாய் கம்பளியை சுற்றிக் கொண்டு, கையில் இருந்த தேனீர் கோப்பையில் இருந்து மேலெழுந்து காற்றோட கலந்த ஆவியை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

அவள் நினைவுகள் வீசும் தணல்களிலே,
என் மனமும் இங்கு கொதிநிலையில்…

அவள் அருகாமை என்னும் காற்றில் கலந்திடவே,
ஒவ்வொரு நொடியும் துடிக்கிறதே!

“சுரேன்! என்னடா பண்ணிட்டு இருக்க? இன்னும் டீயே குடிச்சு முடிக்கலையா? சீக்கரமா கெளம்புடா…ஏற்கனவே கேப் காரன் வந்துட்டான்…” எங்கோ தூரத்திலிருந்து ஒலிப்பதைப் போல ஒலித்தது, என்னருகிலேயே நின்று கத்திக் கொண்டிருந்த வினோத்தின் குரல்.

பார்வையை தேனீர் கோப்பையை விட்டு அகற்றாமலே, “பாப்பா! நீங்கெல்லாம் போங்களேன்…நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்…”
வினோத் தான் பாப்பா. பாவிப்பயலின் சுருக்கம். நான் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொன்னதும், பாப்பா, சைத்தானாக மாறி என்னை பார்த்து முறைத்தான்.

“என்னது ரெஸ்ட் எடுக்கறையா? அதுக்காடா எல்லாரும் பேங்களூர்ல இருந்தும், சென்னையில இருந்தும் வேலை மெனக்கெட்டு இங்க கெளம்பி வந்திருக்கோம்?”

’ச்சே…என்ன உலகமிது? விடுமுறையை கழிக்க கொடை, ஊட்டி என்று செல்ல வேண்டியது, அங்கேயும் காலில் ரெக்கையை கட்டிக் கொண்டு ஒரு டீ கடை விடாமல் எல்லா இடத்தையும் சுற்ற வேண்டியது. இதற்கு வீட்டிலேயே படுத்து தூங்கலாம்.’ இதை வாய்விட்டா சொல்ல முடியும்? மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்.

“என்னடா யோசனை? டீய இப்ப குடிக்கறியா? இல்ல அந்த நாய்க்கு எடுத்து ஊத்தட்டுமா?”

’சுத்தம்…இதுல இந்த பாவிப்பயல் கிட்ட இப்ப தோனின கவிதையை வேற சொல்லலாம்னு நினைச்சனே…’

அதிக அலைச்சலோடும் களைப்போடும் முடிந்தது எங்கள் உல்லாசப் பயணம்! நிறைய நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு கும்மாளமடித்தது, மலரையும் அவள் நினைவுகளையும் மனதின் ஒரு கிடப்பில் தான் போட்டு விட்டது! கடைசி நாளன்று எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்க, நானும் வினோத்தும் மட்டும் தெரிந்தவர் ஒருவரின் பைக்கை எடுத்துக் கொண்டு கொடை டவுனை வந்தடைந்தோம், பிரசித்தி பெற்ற கொடை மிட்டாய்களை வாங்குவதற்காக. பலவித பொருற்கள் விற்கும் அந்த கடைக்குள் நுழைந்ததுமே, காதல் தோல்வி அடைந்ததின் ஒரே பயனாய் என்னுள் வந்து ஒட்டிக் கொண்ட திடீர் கவிதை ஆர்வம், என்னை அந்த கடையில் அடுக்கி இருந்த புத்தகங்களின் புறம் இழுத்துச் சென்றது.

வினோத் எதேதோ மிட்டாய்களை கேட்டு வாங்கிக் கொண்டுருக்க, என் மனம் ஏதோ ஒரு தலைப்பில்லாத கவிதையில் லயித்திருக்க, என் நாசி மட்டும் என்னிடம் சொல்லாமல் கொல்லாமல் வேறு ஏதோ ஒரு இன்பத்தில் திளைத்திருந்தது. ’எனக்கே தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று திடீரென்று விழித்த எஜமானைப் போல் மூளை நாசியை அதட்டவும், ’மிகவும் பரிச்சையமான, மிகவும் பிடித்த லேவண்டர் டியோடரண்ட் வாசனை’ என்று நாசி பதிலளிக்கும் முன்பே, கண்களுக்கும் கழுத்துக்கும் மூளையிடமிருந்து கட்டளை பறக்க, நான் திரும்பிப் பார்த்த அந்த நொடி, என் உடம்பில் என்றைக்கோ செத்து போயிருந்த செல்கள் கூட உயிர்தெழுந்தது! மலர்…ஒரு புத்தகத்தை கையில் ஏந்தியபடி நடந்து கொண்டிருந்தாள்!

மூன்று மாதங்களாய் என் மனதிற்குள்ளேயே இருந்த உருவம், இப்போது வெளிக்கிளம்பி என் எதிரே தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒரு நொடி தலை தூக்காமல் இல்லை. எனது கண் இமைகளின் அசைவுகளை கூட இதயம் கடனாய் வாங்கிக் கொண்டு அளவுக்கதிமாய் துடிக்க, செய்வதறியாது பார்த்தது பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அவளது உள்ளுணர்வும் உணர்த்தியது போலும், என்னைக் கடக்கையில் தற்செயலாய் என் பக்கம் திரும்பி, என்னைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
இது போன்ற சமயங்களில், ஆண்களை விட பெண்களே முதலில் சுதாரிப்பார்கள் என்று மலரும் நிரூபித்தாள், ஒன்றுமே நடக்காதது போல என்னைப் பார்த்து புன்னைத்து, “சுரேன்!!! எப்படி இருக்கீங்க?”

’இது வரைக்கும் நல்லாத்தாண்டீ இருந்தேன்’ மனதின் கொதிநிலை வெடிநிலையை அடையும் முன்பு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் தோன்றியது.

“மலர்…நீங்க எங்க இங்க? உங்கள எதிர்பாக்கவே இல்லை…”

“நான் இங்க தான் st.joseph ஸ்ன்னு ஒரு ஸ்கூல்ல வேலை பாக்குறேன்…” அந்த பதில் என்னுள் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை அறிந்திருந்தும், புன்னகைத்தபடி மிகச் சாதாரணமாய் பதிலளித்தாள்!

“ஸ்கூல்லையா?” ஆச்சர்யத்தில் அதற்கு மேல் வார்த்தைகள் சிக்கவில்லை.

அதன் பிறகு சம்பிரதாயதிற்காக ஏதோ பேசி விட்டு, கையிலிருந்த புத்தகத்தை கூட வாங்காமல் வேகமாக வெளியேறிவிட்டாள். பாதி படித்த முடித்த கவிதையுடன் எதுவுமே செய்யத் தோன்றாமல் நானும் நின்று கொண்டிருந்தேன்.

“மாப்ள…டேய்…உன்னைத் தான்டா…ஒரு ரெண்டு நிமிஷம் இங்கயே இரு…பக்கத்துல போய்ட்டு வந்தர்றேன்…” வினோதின் குரல் மீண்டும் என்னை இந்த உலகத்திற்குள் மீட்டு வந்தது.

“யேய்…எங்க போற? நில்லுடா…டேய்…” அதற்குள் போயேவிட்டான்.

அரை மணி நேரம் கழித்து பெரிய புன்னகையோடு வந்தவனைப் பார்த்து கோபம் பொங்கியது, “டேய்! ரெண்டு நிமிஷம்னு சொல்லிட்டு, எங்கடா போய்ட்டு வர? கால் பண்ணாலும் எடுக்கல?”

“நான் சொல்றத முதல்ல கேளு மச்சான்…அப்புறமா என்னைத் திட்டு…சரியா?”

“என்னடா சொல்ற?”

“நான் இப்ப மலர் பின்னாடி தான் போய்ட்டு வரேன்…” குறும்பு புன்னகையோடு சொல்லிவிட்டு வழக்கம் போல கண்களை சிமிட்டினான்.

“என்னது மலரா? என்னடா உளர்ற?”

“நான் ஒன்னும் உளர்ல…நீ அவள பாத்தது. பாஸ் அமுத்தின மாதிரி ரெண்டு பேரும் அப்படியே ஒரு நிமிஷம் நின்னது…அப்புறம் உன்னை சுத்தி தேவதை கூட்டமா ஓடினது…இது எல்லாத்தையும் நானும் பாத்துட்டு தான்டா இருந்தேன்…”

“டேய்!!! என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு?”

“ரொம்ப பாவமாத் தான்டா இருக்கு…சரியான அட்டுடா மச்சான்….”
“அய்யோ!!! என்ன இப்படி மொறைக்குற? மலர சொல்லல, உன்னை சுத்தி சுத்தி ஓடுச்சுகளே, தேவதைக…அதுகள சொன்னேன்…”

“மொக்கையை போடாம விஷயத்த சொல்லுடா…ப்ளீஸ்…”

“சரி, சரி, விஷயத்துக்கு வரேன்…நான் எல்லாத்தையும் பாத்துட்டே கவுண்டர் பக்கமா நின்னுட்டு இருந்தனா…மலர் கதவு பக்கத்துல போகும் போது பாக்குறேன்…அப்படியே அவங்க கண்னெல்லாம் கலங்கி போய் இருந்துச்சு…சரி, எனக்கு தான் அப்படி தெரியுதோ? இருந்தாலும் டெஸ்ட் பண்ணிறலாம்னு சொல்லி தான் உங்கிட்ட சொல்லிட்டு உடனே வெளிய ஓடினேன்…அவங்க ஒரு ஆட்டோகுள்ள ஏறவும், உடனே வண்டிய எடுத்துட்டு பின்னாடியே அந்த ஆட்டோவை ச்சேஸ் பண்ணேன்… சிக்னல்ல வண்டிய ஆட்டோ பக்கத்துல நிறுத்தி பாத்தா…”

“பாத்தா…? என்னடா?”

“அதை ஏன்டா கேக்குற…ஒரே அழுகை… தலையை சாச்சுகிட்டு வழியுற கண்ணீர கூட துடைக்காம, அப்படியே உக்காந்திருந்தாங்க…சரி நண்பனுக்கு உதவியா இருக்குமேன்னு நானும் மலர் இறங்குற இடம் வரைக்கும் போய் பாத்து வச்சிட்டு திரும்பி வந்துட்டேன்.”

எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. அவனே மேலும் தொடர்ந்தான்.
“நான் அடிச்சு சொல்றேன்…அவ உன்னை லவ் பண்றா…வெளிய சொல்லாம மறைக்குறா…”

அந்த சொற்களை கேட்டதும், ஒரு நொடி மனம் ஜிவ்வென்று வானத்தில் பறந்தாலும், என்னால் அவனுக்கு ஒரு பெருமூச்சை மட்டுமே பதிலாக தர முடிந்தது.

“போய் பேசிப் பாருடா…பேசுறதுல தப்பே இல்ல…இப்பயே போய் ரெண்டுல ஒன்னு கேட்டுடு, ஆமா…”

இம்முறை திட்டவட்டமாக ஒலித்தது என் குரல், “இல்லடா…மறுபடியும் நான் போய் பேச மாட்டேன்…வா போலாம்!”

[தொடரும்]

Wednesday, April 1, 2009

மலரே மெளனமா? - 2

பகுதி – 2 (பெங்களூர் -> பழனி, பழனி -> பெங்களூர், பெங்களூர் -> சென்னை)

பூ, பழம், மற்றும் உற்ற நண்பர்கள் புடை சூழ மலர் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்தேன். மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்றும் கூட எனக்கு வேர்த்துக் கொட்டியது.

இளநீலவண்ணப் புடவையில் தேவதையை போல மலர் என்னருகிலேயே அமர்ந்திருக்க, காஃபி கோப்பைகளுடன் எங்களை உபசரித்தார் மலரின் அம்மா.

“எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்? நாங்க கல்யாணத்துக்கு தானே போறோம்?” என்னுடைய அலுவலகத் தோழன் அவினாஷ் இப்படி கேட்கவும், அவர், “அதனால என்னப்பா? முதல் முறையா வந்திருக்கீங்க…ஒரு காஃபி கூட சாப்பிடாம போனா எப்படி?”

ஆனால் மலர் மட்டும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். என்னவோ அன்றைய தினம் எனக்கு அது வியப்பாய் இல்லை தான், பின்னே சிலைகள் வாயைத் திறந்து பேசுவதை எங்காவது பார்க்க முடியுமா என்ன? ஆனால் ஒன்றே ஒன்று தான் என்னை உறுத்தியது, சிலை உயிரோட்டம் அற்று காணப்பட்டது.

உள்ளறையில் இருந்து தொலை பேசி விட்டு வந்த மலரின் தந்தை அவள் முக வாட்டத்தை அரை நொடிக்குள்ளாகவே கண்டுபிடித்து விட்டார் போலும், “என்னடா? டல்லா இருக்க? பஸ்ல வந்தது ரொம்ப களைப்பா இருக்கா?” என்று அவள் தலையை வருடினார். அவள் தாய் கூட கவனிக்காததை இவர் அரை நொடியில் கவனித்துவிட்டாரே? மலருக்கும் என்னைப் போலவே தந்தையுடன் அதிக நெருக்கம் போல. எங்கள் குணங்கள் ஒத்துப் போனதில் மிகப் பெருமையாக தான் இருந்தது! இந்த அன்பு தந்தையால் என் தந்தையின் நினைவும் அழையாமலே என்னுள் வந்து ஒட்டிக் கொண்டது.

சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போல, எனக்கும் அப்பா தான் ஹீரோ, உற்ற தோழன் எல்லாமே! மலர் கண்டிப்பாக அவருக்கு பிடித்தமான ஒரு குணம் கொண்ட பெண்ணாக இருப்பாள் என்ற நம்பிக்கை தான், என்னை அவளிடத்தில் அதீதமாய் கவர்ந்தது என்று கூட சொல்லலாம்.

ஊருக்கு செல்லும் போதெல்லாம், தவறாமல் பழனி முருகனை தரிசித்து வருவது என் வழக்கம். அம்மாவும் தங்கையையும் வீட்டில் விட்டு, நானும் அப்பாவும் மட்டும் ஏதேதோ கதைகள் பேசியபடி மலை ஏறி இறங்குவோம்…முருகன் தரிசனத்தை விட, எங்கள் இருவருக்குமே பிடித்தமான பொழுதுகள் அவை.
இந்த முறை அப்பாவிடம் சொல்லி விடுவது என்ற முடிவு மட்டும் செய்திருந்தேன். ஆனால் எங்கு தொடங்குவது, என்ன சொல்வது என்று யோசிக்கத் தோன்றவில்லை. இது போன்ற யோசனைகளின் ஊடே தரிசனமும் முடிந்து மலையடிவாரத்திற்கே திரும்பி விட்டோம்.

“அப்பா…திருநீரு பாக்கட் வாங்கனும்…வாங்க…” பழனி சித்தனாதன் திருநீரு, நினைத்தாலே மணக்கும்! என் நண்பர்கள் எல்லோருக்கும் நான் தான் சப்ளையர். சித்தனாதன் திருநீரு கடையிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் எங்கள் வீடு வந்து விடும். திருநீரு பொட்டலத்தை வாங்கியபடி நடக்க ஆரம்பித்த நான், ஒரு கணம் தயங்கி நின்றேன். அப்பா என் தோள் மேல் கை வைத்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தார்!

“என்னப்பா? வேற எதாவது வாங்கனுமா?”

“அதெல்லாம் இல்ல…”

வேற என்ன என்பது போல நான் பார்க்க, “என்னவோ சொல்லனும்னு நினைக்கற….ஆனா சொல்ல மாட்டிங்குற…அப்பாகிட்ட என்னப்பா தயக்கம்? எதா இருந்தாலும் தைரியமா சொல்லுப்பா…”

என் மடையை திறந்து விடுவது போல் இருந்தது அவர் அன்பான பார்வை. சில சமயங்களில், அன்பான ஒரு பார்வையே மனதில் எதாவது சிறிதளவு குற்றவுணர்வு மறைந்திருந்தால் கூட, அதை துழைத்து தோண்டி எடுத்து விடும் தான். அந்த பார்வையைத் தவிர்த்து, “அப்பா….அது வந்து…”

“என்னை நிமிந்து பாத்து பேசு சுரேன்!” திட்டவட்டமாய் ஒலித்தது அவர் குரல்.

“அதில்லப்பா…எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு…வந்து....என் டீம்ல மலர்ன்னு ஒரு பொண்ணு இருக்கா…அவள…அவள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா…அவள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்…”

அப்பா எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும், மேலும் தொடர்ந்தேன், “ரொம்ப நல்ல பொண்ணு பா…உங்களுக்கும் அம்மாவுக்கும் கண்டிப்பா பிடிக்கும்…”

“ஓஹ்”

’இதென்ன ஒற்றை பதில்?’ மனதிற்குள் குழம்பியபடி, “உங்கள மதிக்காம நானே முடிவெடுத்துட்டேன்னு மட்டும் நினைக்காதீங்கப்பா…முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டு…அப்புறம் அம்மா கிட்ட சம்மதம் வாங்கிட்டு….அப்புறமா தான் மலர்கிட்டயே சொல்லலாம்னு இருக்கேன்…” ஒரு மாதிரியாக மென்று முழுங்கி சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடித்தேன்.

என் தோள் மேல் கைகளை போட்டபடி நடக்கத் துவங்கினார், “இதப் பாரு சுரேன்…உன்னை நம்பி ஒரு டீமையே குடுத்திருக்காங்க உங்க ஆபிஸ்ல…உனக்கு முடிவெடுக்கறதுக்கு எல்லா தகுதியும் இருக்கு…அத நான் ஒத்துக்கறேன்…ஆனா, கல்யாணம் ரெண்டு பேர் சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்லப்பா…ரெண்டு குடும்பம், ரெண்டு சமூகம் சம்மந்த பட்டது.”

“அப்பா…”

“இரு…நான் சொல்லி முடிசர்றேன்…எங்களுக்கு உன் மேல எந்த பயமும் இல்ல…நீ ஒரு விஷயம் செஞ்சா சரியாத் தான் இருக்குனு நான் நம்பறேன்…அதே மாதிரி, அந்த பொண்ணு வீட்லையும் எந்த பிரச்சனையும் பண்ணாம ஒத்துகிட்டாங்கன்னா, எனக்கும் சரி தான் ப்பா…”

ஒரே சமயத்தில் பலவித பரவசங்கள் தாக்க “அப்பா…தாங்க்ஸ் பா…ரொம்ப தாங்க்ஸ்…” அவருடைய கையை பிடித்து வேகமாக குலுக்கினேன். குழந்தையைப் போல் நான் குதூகலிப்பதைப் பார்த்து, ஒரு நொடி சிரித்தவர், “சொல்றத முழுசா கேளு…நீ அந்த பொண்ணு கிட்ட உடனே உன் மனசுல இப்படி ஒரு எண்ணமிருக்குன்னு சொல்லிடனும், அந்த பொண்ணுக்கும் சரின்னா உடனடியா அவங்க வீட்ல பேசி, அவங்களுக்கும் முழு சம்மதம்னா மட்டும் தான் நான் ஒத்துக்குவேன்…”

“சரிப்பா…கண்டிப்பா…”

“அப்புறம் இன்னொன்னு, உனக்கு சொல்லத் தேவையில்லை…இருந்தாலும் சொல்றேன்….அந்த பொண்ணு ஒரு வேளை இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா, நீ அதுக்கப்புறம் அவள எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணக் கூடாது…ஏன் சொல்றேன்னா…நம்ம வீட்லையும் ஒரு பொண்ணு இருக்கு…”

“ச்சே…ச்சே..என்னப்பா? எனக்குத் தெரியாதா?”சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தோம். அம்மாவிடம் சொல்லும் பயம் எனக்கில்லை. வழக்கம் போல அப்பாவே பார்த்துக் கொண்டார்.

******
சென்ற வாரயிறுதியில் பழனியின் இனிமையான சுகந்தம் கலந்த மலையடிவாரக் காற்றை சுவாசித்திருந்தேன்…சென்ற வாரம் முழுக்க பெங்களூரின் மிதமான குளிர் காற்றை ரசித்த படி… இன்று சென்னையில்… எனக்கு சென்னை என்றுமே பிடித்தமான ஊராக இருந்ததில்லை. ஆனால் இம்முறை சென்னையின் கூவத்தை கடக்கும் போது கூட, வழக்கம் போல் முகம் சுளிக்கத் தோன்றவில்லை. 'என்ன தான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊரு…இனிமே பழகிக்க வேண்டியது தான்…' என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் தலைதூக்கியது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அது வரை சென்னையில் எனக்கு பிடித்த ஒரே இடம் பெசண்ட் நகர் பீச். இப்போது இன்னொரு இடமும் பிடித்து விட்டது. மலருடைய வீடு தான் அது. அலுவலகத் தோழி திருமணத்திற்கு எல்லோரும் சென்னை செல்லப் போவது என்றோ முடிவாகியிருந்ததால், காதல் பூத்த அந்த கணமே, பெஸண்ட் நகர் பீச்சை தேர்வு செய்துவிட்டேன், என் காதலை கடற்கரையின் ஈரக்காற்றோடு கலந்து அவளிடம் சேர்ப்பிப்பதற்காக.

இதோ, இன்று சென்னையில், திருமண வரவேற்புக்கு செல்லும் முன் அவள் வீட்டு வரவேற்பரையில், அலுவலக நண்பர்கள் சூழ, திருமணத்திற்கு வாங்கிய பூங்கொத்துகளோடும், மலர் வீட்டுக்கு வாங்கிய பழங்களோடும் அமர்ந்திருக்கிறேன். என்ன தான் மாமனார் ஊரென்றாலும், சென்னையல்லவா? மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருந்தாலும், வேர்த்துக் கொட்டிக் கொண்டு தான் இருந்தது.

******

திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் பெஸன்ட் பீச்சை வந்தடைந்தோம். மணி ஒன்பது என்பதால், பம்பர் பரிசாக நிலவுடன் கூடிய கடற்கரை என் முதல் காதலுக்கு அரங்கேற்ற திடலாக கிட்டியிருந்தது. ஏற்கனவே திட்டமிட்டு பெஸண்ட் நகர் பீச்சை பற்றி ஆஹா, ஓஹோ என்று மற்ற மாநிலத்து நண்பர்களிடம் தான் கதை அளந்திருந்ததால், வரவேற்பு முடிந்த கையோடு எல்லாரும் இங்கு கொட்டமடிக்க வந்துவிட்டார்கள்.

வரவே முடியாது, வீட்டிற்கு இப்போதே போகிறேன் என்று அடம்பிடித்த மலரை, தனியாக செல்லக்கூடாது, அரை மணி நேரம் தான், நாங்களே வீட்டில் கொண்டு விடுகிறோம் என்று வற்புறித்தி, அவளையும் பீச்சிற்கு அழைத்து வந்து விட்டேன். எனக்குத் தெரிந்து மேனேஜர் என்ற முறையில் அவளிடம் நான் அவ்வளவு அதிகாரமாய் பேசியது அன்றைக்குத் தான்! அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, எனக்கு தான் மனதின் உற்காகம் கடலின் அலைகளை மிஞ்சும் அளவிற்கு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அவள் வீட்டிற்கு போகிறேன் என்று காரணமே இல்லாமல் அடம் பிடித்த போது கூட எனக்குள் தோன்றியது இது தான்.

மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?


எல்லோரும் கடல் அலைகளில் விளையாடிக் குதூகலித்துக் கொண்டிருக்க, மலர் மட்டும் எங்கோ பார்த்த படி கரையிலேயே அமர்ந்துவிட்டாள். அன்று காலை பேருந்து நிலையத்தில் தன் அப்பாவைப் பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றிய உற்சாகம், பின்பு வீட்டில் பார்த்த போதும், திருமண வரவேற்பிலும் கடுகளவு கூட காணப்படவில்லை. ’ஒரு வேளை உடம்பு எதாவது சரியில்லாமல் இருக்குமோ? ச்சே, ச்சே பஸ்ல வந்த கலைப்பா இருக்கலாம்…ரயிலிலேயே சென்று பழக்கப்பட்டிருந்ததால், நேற்றிரவு தூங்கவே இல்லை என்று இன்று காலையில் கூட சொன்னாளே!’

சற்று இடைவெளி விட்டு மலர் அருகே அமர்ந்தேன், என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு சில நொடிகளைக் கொன்று, “ஆனாலும், கல்யாணத்துல சாப்பாடு செம சூப்பர் இல்ல?” என்றேன்.

“ஆமா…” என்றபடி மென்மையாக முறுவலித்தாள். வெளிய தெரியப்போகிறேன் என்றும், உன்னை வெளியே காட்டவே மாட்டேன் என்றும் அவள் பற்களுக்கும், உதடுகளுக்கு நிகழ்ந்த யுத்ததில் வென்றது அவளது உதடுகள். ஆனால் அந்த துவந்த யுத்ததிற்கு சம்பந்தமேயில்லாத வெறும் பார்வையாளனாகிய நான் அதில் சரணடைந்தேன்!

கடலின் பேரிரைச்சலை ரசித்தபடி அவளும், அவளின் அமைதியை ரசித்தபடி நானும்….எங்களை கடந்து சென்றது கடற்கரை காற்றும், நொடியில் மடிய சாபம் வாங்கி வந்திருந்த அந்த சில பல மணித்துளிகளும்.

அவளது கண்கள் எங்கோ தூரத்தில் இருந்த தொடுவானத்தை பார்த்துக் கொண்டிருந்தது. இங்கு நிஜமாய் அவளருகினிலே அமர்ந்திருக்கும் என் கண்களுக்குள் சங்கமிக்காமல், பொய்யாய் சங்கமித்திருந்த கடலும் வானமும் அவள் பார்வையை கவர்ந்திருந்தது எனக்குள் பொறாமையை கிளப்பியது. பலபேர் அனுபவித்தெழுதியதைப் போல காதல் ஒரு விந்தை தான்! இப்படி கடலின் மேலும், வானத்தின் மேலும் கூட நான் பொறாமை கொள்ளக் கூடும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை! மணலில் கைகளை ஊன்றி அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். அதுகூட என்னைப் பார்த்து எக்காளமிட்டு சிரிப்பதை போல் இருந்தது. கைகளில் ஏதோ தட்டுப்பட, கீழே பார்த்த அந்த ஒரு கணம், அந்த வானமும், கடலுமே மணலில் கொட்டிக் கிடப்பதை போல் தோன்றியது, “ச்சை…என்ன இது கற்பனை…” என்றபடி உற்றுப் பார்த்தேன். அவள் அணிந்திருந்தும் கூட அவள் மேனியை தழுவிச் செல்ல முடியாமல் பாவம் செய்திருந்த அவள் புடவை முந்தானை, இளநீல வண்ணத்தில்!

“மலர்! மண்ணுல படுது பாருங்க…”

“ஓ…thanks…” மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். ’அட….பாருடா….அதற்குள் பாவவிமோச்சனம் பெற்று விட்டதே!!! கொடுத்து வைத்த முந்தானை தான்!!!’

இதை ஏன் சொன்னேன் என்று புரியவில்லை, இருந்தாலும் அவளிடம் சொன்னேன், “ரொம்ப soft ஆ…மெல்லிசா இருக்கே….”
வழிந்துவிட்டேனோ? போகட்டும்…அவளை பார்த்ததும் ஆர்பரித்து, அலை அலையாய் வழிந்து, அவள் பாதம் நனைத்து அட்டகாசம் செய்த இந்த கடலை விடவா?

என் அறிவுப்பூர்வமான கேள்விக்கு பதிலாய், “ஹூம்…” என்று மட்டும் சொன்னாள். கடவுளே!!! இந்த ’ஹூம்..’ ’ஹூங்ஹூம்…’ இதெல்லாம் ஆண்குலத்தை ஹிம்சிக்கும் வார்த்தைகள் என்று இந்த பெண்களுக்கு என்றைக்கு தான் விளங்கப் போகிறதோ?

சரி, கவிபாடிக் கொண்டிருக்க இது சமயமில்லை, திடீரென்று கவிபாட எனக்கு வரப்போவதும் இல்லை. ஆண் வர்கத்தில் பிறந்தமைக்கும், என் அப்பாவின் நெறி மாறாத வளர்ப்பினாலும், எனக்கு கிடைத்த அன்பு பரிசு, என் தைரியமும், துணிச்சலும் தான். அவைகளை துணைக்கழைத்து, என் கண்களில் குடியேற்றி, என் உள்ளத்தில் குடியேறியவளின் கண்களை உற்று நோக்கினேன். எது நிகழ்ந்தாலும், என் பார்வையை மட்டும் அவள் கண்களை விட்டு தாழ்த்தப் போவதில்லை என்று சபதமெடுத்து விட்டு, “மலர்…” என்று ’காதல் ததும்புகிறது’ என்று நான் நம்பிய ஒரு குரலில் அவளை அழைத்தேன்.

திரும்பி என்னைப் பார்த்தாள். திடமான குரலில், “மலர்!!! கொஞ்ச நாளாவே…எனக்குள்ள இப்படி ஒரு எண்ணம்… அது வந்து…நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல…நான்…நான்…உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படறேன்…” வெகு நாட்களாய் பொக்கிஷமாய் பாதுகாத்து வந்த குழந்தையை, சுகப் பிரசவத்தில் ஈன்றெடுத்தை போல உணர்ந்தேன்.

அவள் முகத்தில் இருந்தது ஆச்சர்ய ரேகைகளா, கோப ரேகைகளா? என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை…அந்த முகத்தில் எனக்கு தெரிந்தது சலனமில்லாத ஒரு மெளனம் மட்டுமே. அந்த மெளனத்தின் அடர்த்தி என்னை அச்சுறுத்தியதால், “உங்க மனசுல என்ன இருக்குன்னு வெளிப்….”

என்னை இடைமறித்தாள். “எனக்கு புரியல சுரேன்…திடீர்னு ஏன் இப்படி?”

“திடீர்னு எல்லாம் இல்லை மலர்…கொஞ்ச நாளாவே எனக்குள்ள இப்படி ஒரு…”

“உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வர அளவுக்கு நான் என்னிக்காவது நடந்திருக்கேனா? அப்புறம் ஏன்? சொல்லுங்க சுரேன்!”

“இல்ல மலர்…அது வந்து…”

பாரதி பாடிய பெண்ணைப் போல நிமிர்ந்த பார்வையால் என்னை உற்று நோக்கி, என் மனம் பற்றுப் போகும் அந்த அனல் வார்த்தைகளை உமிழ்ந்தாள், “சாரி சுரேன்…எனக்கு விருப்பமில்லை…உங்க மனசுல இந்த மாதிரி ஒரு எண்ணம் வர அளவுக்கு நான் நடந்துகிட்டதில்லை. அப்படி என்னையும் மீறி எதாவது நடந்திருந்தா, என்னை மன்னிச்சிடுங்க…” சொல்லிவிட்டு சட்டென்று எழுந்தாள்.

வார்த்தை ஏவுகணை தாக்கிய மனதால் நிலைகுலைந்திருந்த நானும் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றேன். என் அகத்தை விட்டு அகலாமல், அந்த இடத்தை விட்டு அகல யத்தனித்தவளை நிறுத்தி, “மலர்…ஒரு நிமிஷம்…”

முகத்தில் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தாள்.

“என்னை வேண்டாம்னு…" நான் பேசியது எனக்கே கேட்காததால், தொண்டையை செறுமியபடி மீண்டும், "நீங்க இதை மறுக்கறதுக்கான காரணம்…நான் தெரிஞ்சிக்கலாமா?” இம்முறை முன்பு என் குரலில் இருந்த திடம், தடம் தெரியாமல் போயிருந்தது.

“எனக்கு விருப்பமில்லை சுரேந்தர்!!! அவ்ளோ தான்!!!”

அவ்ளோ தான் என்று அவள் சொல்லியிருக்கத் தேவையில்லை…சுரேன், சுரேந்தர் ஆனதிலிருந்து எனக்கே புரிந்துவிட்டது.

******

சென்னையில் மலர் காரணம் எதுவும் சொல்லாமலே என்னை நிராகரித்தது கூட எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. ஆனால், திங்களன்று அலுவலகம் திரும்பியவுடன் அவள் செய்த காரியம்…

[தொடரும்]