Showing posts with label சிக்கன் பாக்ஸ். Show all posts
Showing posts with label சிக்கன் பாக்ஸ். Show all posts

Saturday, September 13, 2008

சிக்கன் பாக்ஸ் - 4

பகுதி – 4
பகுதி 1

பகுதி 2

பகுதி 3

“டெல்லி…எத்தனையோ போராட்டங்கள பாத்த ஒரு நகரம், என் மனப் போராட்டங்களும் மறுபடியும் ஆரம்பிச்ச நகரம்”

“வேலை விஷயமா நான் டெல்லி போய் இருந்தேன்…என் காதல் எனக்கு தெரிஞ்சு, அவளுக்கும் தெரிஞ்சு, அதுக்கு அப்புறம் அந்த கலவையான உணர்ச்சி பிரபாவங்கள்ள இருந்து ஓரளவுக்கு ரெண்டு பேருமே மீண்டு வந்திருந்த நேரம்”

“டெல்லியில இருந்து அவளுக்கு ஃபோன் செஞ்சேன்…அவளுக்கு டெல்லில இருந்து என்ன வேணும்ன்னு கேட்டேன்…அவளும், விளையாட்டா, எனக்கு ஒரு தாஜ்மஹால் ஷோ பீஸ் வேணும்ன்னு சொன்னா…”

“ஹ்ம்ம், அப்புறம்?”

“தாஜ்மஹால் தான? நாளைக்கு ஆக்ரா போறேன், அங்கயே போய், கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன்னு சொன்னேன்…ஆனா அவ சிரிச்சுகிட்டே, ’இல்ல, இல்ல, எனக்கு வெள்ள கலர் தாஜ்மஹால் வேண்டாம், மஞ்சளும், மெஜெந்தா கலரும் கலந்த மாதிரி இருக்குற தாஜ் மஹால் வேணும்’ ன்னு கேட்டா…அவளுக்கு எதுவும் வேண்டாம்ங்கறத தான் அவ அப்படி என்கிட்ட சொன்னான்னு எனக்கு புரிஞ்சுது…”

“என்ன செஞ்ச? ஒரு வெள்ள தாஜ்மஹால் வாங்கி, பெயிண்ட் பண்ணி குடுத்திட்டியா?”

“ச்சே, இல்லடா…அவளுக்காக ஆசை ஆசையா தேடி, ஒரு அழகான வெள்ளை தாஜ்மஹால வாங்கினேன்…ஏனோ, உலகத்தையே வாங்கிட்டதா ஒரு இருமாப்பு, ஒரு சந்தோஷம். வாங்கிட்டு ரூம்முக்கு வந்தப்ப தான் படீர்ன்னு யாரோ அடிச்ச மாதிரி இருந்துச்சு. நட்புங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுகிட்டு அவளோட பழகிட்டு, மனசெல்லாம் நிறைஞ்ச காதலோட வாங்கின அந்த தாஜ்மஹால எப்படி அவ கிட்ட குடுக்கறது? நான் பண்றதெல்லாம் நியாயமான்னு எனக்கே தோணுச்சு”

“என்ன பண்ண அத?”

“அந்த தாஜ்மஹால அவ கிட்ட குடுக்கவே இல்ல, நானே வச்சிகிடேன்…இப்படியே மனசுக்குள்ள போராட்டங்களோட இதுக்கு மேல தொடர முடியாதுன்னு ஒரு கட்டத்துல தோனுச்சு, சரின்னு ஒரு முடிவெடுத்து, சூழல் மாறினா, எல்லாத்தையும் மறக்கலாம்ன்னு இங்க யு.யெஸ் வந்து படிப்ப கண்டின்யு பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன்…”

“ஹ்ம்ம்…”

“அன்னிக்கு தான் ஆபிஸ்ல கடைசி நாள், ஷிவானி, எனக்கு முன்னாடியே படிக்கறதுக்காக, வேலைய விட்டுட்டு மும்பை போய்ட்டா…ஸோ, நாங்க ரெண்டு பேரு தான்…கடைசி நாள், பேசாம அந்த தாஜ்மஹால அவ கிட்டயே குடுத்தர்லாம்ன்னு முடிவு பண்ணேன்…அந்த தாஜ்மஹால எடுத்து அவ ட்ரா உள்ள வச்சிடேன், எப்பயும் போல ரெண்டு பேரும் காஃபிக்கு போனோம். அன்னிக்கு அந்த காஃபி ப்ரேக் முடியவே கூடாதுன்னு நான் ஆசைபட்டேன்…அவளும் அப்படி தான் நினைக்கனும்ன்னு கூட குழந்தை தனமா ஆசைப்பட்டேன்…”

“திரும்பி வந்து, அவ ட்ரா திறந்திருக்கறத பாத்தா, உள்ள இருந்த பார்சலையும் பாத்தா…”

“ஹ்ம்ம்ம்”

“என்ன பாத்து, ’என்னதிது’, அப்டீன்னு கேட்டா…நான், ’எனக்கென்ன தெரியும்? உன்னோட ட்ரா, என்ன இருக்குன்னு உனக்கு தான தெரியும’ ன்னு சொன்னேன்…”


“என்ன பாத்து செல்லமா முறைச்சிகிட்டே அந்த கவர திறந்தா, உள்ள இருந்தத பாத்து அவளுக்கு ஒரே ஆச்சர்யம்…இத எப்ப வாங்கினேன்னு கேட்டா…”

நான், “அன்னிக்கே வாங்கிட்டேன்…நீ கேட்ட மாதிரி மஞ்சள் அன்டு மெஜெந்தா கலர்ல இல்லாட்டியும், still…It’s a Tajmahal.” ன்னு சொன்னேன். ’நீ விரும்புற மாதிரியான துணை…நான் இல்ல, But still, என் மனசுல இருக்கறதும் உண்மையான காதல் தான்…’ ன்னு சொல்லத் துடிச்சேன். ஆனா சொல்லல.

“ச்சே…போடா, பேசாம மறுபடியும் சொல்லி பாத்திருந்துருக்கலாம்…”

“இல்ல ப்ரவீன், மனசும், கண்ணும் பேசாத பாஷையா உதடு பேசிட போகுது? முதல்ல இருந்தே, அவ என் காதல ஒத்துக்கணும், அவளும் என்ன காதலிக்கனும்ன்னு எனக்கு தோனினது இல்லடா, ஏன்னா…”

“உனக்கு அவள பத்தி தெரியும், அதான?”

“அதே தான்…இப்ப கூட நான் அவ கூட தினமும் பேசுறேன்…என்னோட பெஸ்டு ஃப்ரெண்டுஸ்ன்னா அதுல நிரு எப்பயுமே இருப்பா… என் அன்றாட வாழ்கைல அவளும் ஒரு அங்கமா இருக்கா…இருந்தாலும், என் முதல் காதல்ன்னா அது நிரு தான்! ஆனா, அதுக்காக தினமும், அவள நினச்சு உருகறதெல்லாம் இல்ல, இருந்தாலும், ஏதோ ஒரு தருனத்துல, ஒரு சின்ன வலி, ஒரு இதம், ஒரு துக்கம், ஒரு சந்தோஷம், ஒரு வேதனை, ஒரு பரவசம்ன்னு பல வித உணர்வுகள் வரத தவிர்க்க முடியல…”

“சரி, நீ இப்டின்னா, அவளுக்கு உன் மேல இருந்த ஒப்பீனியன் மாறவே இல்லயா?”

“இல்ல டா, இப்ப கூட ஒரு மாசம் முன்னாடி, இந்த ஷிவானி கிட்ட பேசும் போது, ஷிவானி சொன்னா, அவளும் நிருவும், ஏதோ பேசிட்டு இருந்திருக்காங்க…அப்ப என்னோட பேச்சு அடி பட்டுருக்கு, அப்ப நிரு சொன்னாலாம், ’என்ன தான் இருந்தாலும், shiva is a gem of a person’ ன்னு… அது தான் என் நிரு”

“ஹ்ம்ம்…இந்த காதல் குடுத்த தளும்புகள் இன்னும் மறையல, இன்னொரு காதல் வரதுக்கான அறிகுறியும் இப்போதைக்கு இல்ல…அதான், நான் சொல்றேன், Love is a chicken pox…”

“ஓஹ்…அப்ப கல்யாணம்ன்னு பண்ணிகிட்டா அரேஞ்சுடு மேரேஜ் தான்னு சொல்லு…”

“இல்லயே, கண்டிப்பா இல்ல, உனக்கே நல்லா தெரியும்…எனக்கு அரேஜ்சுடு மேரேஜ்ல நம்பிக்கை இல்லை, ஸோ, கண்டிப்பா லவ் மேரேஜ் தான்…”

“எப்டி டா? Chicken pox – அனாலஜி என்ன ஆச்சு?”

“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”

[முற்றும்]

Thursday, September 11, 2008

சிக்கன் பாக்ஸ்-3

பகுதி 1

பகுதி 2


“சில நேரங்கள்ள நாம பேச முடியாத பல வார்த்தைகள நம்ம மெளனம் பேசிடும். அன்னிக்கு முழுக்க அவ என்கிட்ட பேசவே இல்ல…”

“ஹ்ம்ம், அப்புறம் எப்ப பேசினா?”

“அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது”

“எப்படிடா?”

“ஏன்னா, எனக்கு நிருவ பத்தி தெரியும்…அதனால, அன்னிக்கு வேலை முடிஞ்சதுமே, அவள ஆஃபிஸ் பக்கத்துல இருக்க ஒரு அழகான, அமைதியான, தெருவுக்கு ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…”

“ஹ்ம்ம்…”

“கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் நடந்தோம். நான் பேச ஆரம்பிக்கனும்ன்னு அவளும், அவ ஏதாவது பேச ஆரம்பிக்க மாட்டாளான்னு நானும்…இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கரைஞ்சுது.”

“ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.”

“அதனால, நான் பேச ஆரம்பிக்கறப்பயே, ஒரு ’ப்ரோபோஸல்’ மாதிரி இல்லாம, ஒரு ’கன்ஃபஷன்’ மாதிரி தான் ஆரம்பிச்சேன்…”

“நிரு, உனக்கு நிஜமாவே என்கேஜ்மெண்ட் ஆகி இருந்தா, என்னோட வாழ்த்துக்கள்…அப்படி இல்லன்னாலும், ஒரு அழகான உணர்வ…ஒரு சுகமான வலிய….எனக்கு தந்ததுக்காக, தேங்ஸ்…என் கிட்ட என்ன சொல்றதுன்னு நீ ஸ்பெஷலா எதுவும் யோசிக்க வேண்டாம், எனக்கு உன்ன பத்தி தெரியும், உன் விருப்பு, வெறுப்புகள், தெரியும்…I m not your cup of tea ன்னு எனக்கு நல்லா தெரியும்…அதனால, என் உணர்வுகள புரிஞ்சுக்கோ, என்ன ஏத்துக்கோன்னு நான் உன்ன கேக்க போறதில்லை.”

அதுக்கு நிரு, “ஷிவா…எனக்கு தெரியும்…நீ புரிஞ்சுக்குவன்னு எனக்கு தெரியும்...ஆனாலும் உன் ஃபீலிங்ஸோட விளையாடிட்டனோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு” ன்னு சொன்னா.

இல்லமா, அப்படி எல்லாம் இல்ல, ன்னு சொல்ல முடியல, ஆனா, ’அதுக்கு நீ பொறுப்பில்ல நிரு’ ன்னு மட்டும் சொன்னேன்.

“என்னடா, ரொம்ப நேரமா அமைதியா இருக்க? தூங்கிட்டியா?” ரொம்ப நேரமா ப்ரவீன் அமைதியாவே இருந்தான்.

“ஒன்னும் இல்ல டா, சும்மா நினைச்சு பாத்தேன்…அந்த அழகான தெரு, அதுல நீங்க ரெண்டு பேர் மட்டும்…ஹ்ம்ம்”



“ஆமா, ரொம்ப அழகா இருக்கும்…அதே தெருவில இன்னொரு விஷயம் கூட நடந்துச்சு…ஆனா, இதெல்லாம் நடக்கறதுக்கு கொஞ்சம் முன்னாடி”

“என்னது?”

“அன்னிக்கு நிருவோட பிறந்த நாள்…காலைல இருந்து ஒரு கிஃட்டு கூட கொடுக்காம, சாய்ந்தரம் அந்த தெருவுக்கு அவள ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…என்னோட ஃபோட்டோஸ்லயே அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்ட ஒன்ன அவளுக்கு கிஃப்டு பண்னேன்”

“என்னது? உன்னோட போட்டோவா? நீ எடுத்த ஃபோட்டோவா?”

“இல்ல, இல்ல, என்னோட ஒரு சோலோ ஸ்னாப்”

“ஓஹ்ஹ்”

“அத அவ கிட்ட குடுத்தேன், ’ஹே இத வச்சுகிட்டு நான் என்ன பண்றது’ன்னு கேட்டா…”

ப்ரவீன், “அதேயே தான் நானும் கேக்கனும்ன்னு நினச்சேன்”

“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.

“ஓஹ்…அவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் கூட அவ ஃப்ரெண்டா இருப்பேன்னு சொல்லாம சொல்லிட்ட, சரி தான?”

“ஆமா…”

“இப்படி எல்லாம் நல்ல ஃப்ரெண்டா இருந்துட்டு, மனசுல காதலோட இருக்கமேன்னு உனக்கு ஒரு நாள் கூட உறுத்தலா இல்லயா?”

“ஆமா, ஒரு நாள் அப்டி தோனுச்சு, அவளுக்காக, ஆசை ஆசையா வாங்கி வச்சிருந்த ஒரு கிஃப்ட அந்த உறுத்தல் காரணமா அவ கிட்ட ரொம்ப நாள் குடுக்காமலே வச்சிருந்தேன்…”

“அப்படியா? என்ன கிஃப்டு அது?”

[தொடரும்]

Monday, September 8, 2008

சிக்கன் பாக்ஸ் - 2

பகுதி 1

“ஷிவா…ஷிவா…நில்லு, நில்லு நானும் வரேன்…”

அன்னிக்கு தான் ஆபிஸ்ல முதல் நாள், ஷிவா ஷிவான்னு கத்திகிட்டே, ஒரு கருப்பு கலர் சுடிதார்ல தேவதை மாதிரி ஒடி வந்தா நிரு.

ப்ரவீன், “நிறுத்து…நிறுத்து…தேவதைகளோட யுனிஃபார்ம் வெள்ள ட்ரெஸ் தான? கருப்பு சுடிதார்ங்கற?”

“டேய்…டிஸ்டர்ப் பண்ணாம கதைய ஒழுங்கா கேளு டா…”

“சரி, சரி, நீ கண்டின்யு பண்ணு…”

“ஒரு அழகான பொண்ணு, நமக்கு யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு, நம்ம பேர கத்திகிட்டே இப்படி வேகமா ஓடி வருதே…யாரா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே ஒரு நிமிஷம் நின்னு அவளயே பாத்தேன்…ஆனா, அவ என்ன தாண்டி இன்னொரு பொண்ணு கிட்ட போய் பேச ஆரம்பிச்சிட்டா…அப்புறம் ட்ரைய்னிங் க்ளாஸ்ல தான் தெரிஞ்சுது, அந்த இன்னொரு பொண்ணு பேரு ஷிவானி ன்னு”

“ஓ…ஷிவானி, உன் ஃப்ரெண்டு…அந்த நார்த் இன்டியன் பொண்ணு…”

“ஹ்ம்ம்…அவளே தான்…”

“நகரத்திலயே பிறந்த வளந்திருந்தாலும், எனக்கு சாதாரணமா பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேசி பழக்கமில்லை…கூச்ச சுபாவம்ன்னு சொல்ல முடியாது, ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… ஒரு அழகான பொண்ண பாத்த உடனே, அவ அழகா இருக்கா, அவள மாதிரி ஒரு கேர்ள் ஃப்ரெண்டு வேணும், இப்படி எல்லாம் பல தடவ தோனி இருக்கு…ஆனா, ட்ரைய்னிங் க்ளாஸ்ல நிருவ பாத்த அப்புறம், அவ பேச்சு, அவ குணம், அழகான அந்த சிரிப்பு, அமைதியான அந்த முகம், தெளிவான அவ சிந்தனை, இதெல்லாம் பாத்து, இவள மாதிரி ஒரு ஃப்ரெண்டு வேணும்ன்னு முதல் முறையா தோனுச்சு…”

“ஹ்ம்ம்…அப்புறம் எப்டி ஃப்ரெண்டு ஆன?”

“ட்ரெய்னிங் முடிஞ்சு நான், நிரு, ஷிவானி, மூணு பேரும் ஒரே ப்ராஜக்ட்…வழக்கமா நடக்குற மாதிரி, காஃபி, லஞ்சு, கான்டீன் ன்னு எங்க சந்திப்புகள் அதிகமாச்சு, இப்படியே ஒரு வருஷத்துல எங்க மூணு பேர் நட்பும் அதிகமாச்சு…அந்த ஒரு வருஷத்துல நான் என்னையே இன்னும் நல்லா புரிஞ்சுகிட்டேன், நிரு மூலமா…பொண்ணுங்க உலகம், அவங்க நட்பு, இதெல்லாம் ரொம்பவே புதுசா, வித்யாசமா இருந்துச்சு, இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிடோம்ன்னு கூட எனக்கு சில தடவ தோணும்… நிருவ விட ஷிவானி கிட்ட தான் அதிக நேரம் பேசி இருக்கேன்…ஆனா, ஷிவானி கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு நிரு மேல இருக்குன்னு எனக்கு ஆரம்பத்தில இருந்தே தெரியும்…அத நான் வெளிய அதிகமா காட்டிக்கவும் இல்ல, அதே சமயம், மறைக்கவும் முயற்சி பண்ணல…”

“அவங்க ரெண்டு பேருக்கும் அது தெரியுமா?”

“ஹ்ம்ம்…அவங்களுக்கும் தெரியும்…ஒரு நாள் நிரு என்கிட்ட, உனக்கு எந்த மாதிரி பொண்ண பிடிக்கும்ன்னு கேட்டா…நான் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, “என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.

“அதுக்கு அவ என்ன சொன்னா?”

“அவ எதுவும் சொல்லல, நான் தான் அதுக்கு மேலையும் என்னென்னவோ சொல்ல துடிச்சேன்…”
’நிரு, you are so much adorable when you are kiddish and so much admirable when you get practical’

“நாங்க எவ்வளவோ விஷயங்கள பத்தி மணிக்கனக்கா பேசி இருக்கோம்…அதுக்காக எங்க ரெண்டு பேர் சிந்தைனைகளும், எண்ணங்களும் ஒத்துப் போகும்ன்னு சொல்ல வரல…நிறைய தடவை, எங்க உரையாடல்கள் கருத்து வேறுபாடுல தான் முடிஞ்சிருக்கு…ஆனா எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்திருந்தாலும், ஒரு விதமான புரிதல் மட்டும் எங்களுக்குள்ள என்னைக்குமே அறுபட்டதில்லை….அவ இப்படி தான்னு எனக்கு தெரியும், அதே மாதிரி நான் இப்படி தான்னு அவளுக்கும் தெரியும்.”

“இந்த மாதிரி மனசுக்குள்ள பன்னீர் தெளிச்ச பல அழகான உணர்வுகளுக்கு, காதல்ங்குற பேர குடுக்காம, ’என் முதல் க்ரஷ்” என்ற ஒரு சமாதான உடன்படிக்கைய நானே ஏற்படுத்திகிட்டேன்…ஆனா, எனக்குள்ள பூத்த அந்த உணர்வுகளுக்கு எப்ப ஒரு பேர தேடினேனோ, அந்த நிமிஷமே எனக்குள்ள காதல் மலர்ந்திருச்சுன்னு எனக்கே பின்னாடி தான் தெரிஞ்சுது…”

“எப்போ?”

“ஒரு நாள் மதியம் லஞ்சு போது, நான் எனக்கே தெரியாம அவளயே உத்துப் பாத்துட்டு இருந்தேன்…திடீர்ன்னு அந்த விளையாட்ட, ஷிவானி தான் முதல்ல ஆரம்பிச்சா…அவங்களுக்குள்ள முதல்லயே பேசி வச்சுகிட்டாங்களோ என்னவோ, அது எனக்கு தெரியாது…அந்த சனி, ஞாயிறு, நிருவோட அப்பா, அம்மா வரப் போறாங்கன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சா…”

“ஹ்ம்ம்…”

“ஆனா, அதுக்கு முன்னாடி நிரு அத பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லயே, ஏன்ன்னு அவள கேட்டேன்…
நிரு எதுவுமே பேசாம அமைதியா உக்காந்திருந்தா…
ஷிவானி, ’நிருவுக்கு என்கேஜ்மெண்ட் ஆக போகுது, அது விஷயமா தான் அவ அப்பா, அம்மா வராங்க’ ன்னு சொன்னா…”

“எனக்குள்ள திடீன்னு எரிமலையா வெடிச்ச அந்த உணர்ச்சிய என்னால, என்னைக்குமே மறக்க முடியாது…அந்த ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம், வாழ்கையே அஸ்தமனம் ஆனது மாதிரி இருந்துச்சு…”

“இத்தனையும் நடக்கும் போது நிரு மட்டும், எதுவுமே பேசாம, என் கண்களையே பாத்துட்டு உக்காந்திருந்தா. கலங்கி போன என் கண்கள்ள இருந்த காதல, நான் சொல்லாமையே அவ உணர்ந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும், ரொம்ப அமைதியா தான் இருந்துச்சு என் மனசு, என்மேல அவ கோவபடுவாளேன்னு பயமோ, என்ன பதில் சொல்ல போறாங்கற பதட்டமோ எனக்கு கொஞ்சம் கூட வரல, ஏன்னா எனக்கு என் நிருவ பத்தி நல்லா தெரியும்…”

“அப்புறம் அவ என்ன சொன்னா?”

“அப்ப உடனே அவ எதுவும் சொல்லல, வழக்கம் போல சாப்ட்டுட்டு எல்லாரும் அவங்கவங்க க்யூப்புக்கு போனோம், ஆனா, வழக்கத்துக்கு மாறான அமைதியோட… ரொம்ப நாளா வெறும் ஈப்புங்கற வேலிய போட்டு அடக்கி வச்சிருந்த என்னோட மனசு, நான் சொன்ன படி கேட்காம, அவள நேசிக்க தொடங்கிட்டது, எனக்கே அப்ப தான் புரிஞ்சுது. அதுக்கு மேல என்னால தாங்க முடியல…நேரா ஒரு காலி கான்ஃபரன்ஸ் ரூமுக்குள்ள போனேன்”

“அப்பறம்”

“ரொம்ப நாளைக்கு அப்புறம், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முறையா, மனச விட்டு ’ஓ’ ன்னு அழுதேன்…”
“என்னது? அழுதியா? என்ன டா இது? சின்ன புள்ள மாதிரி?”

“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”

[தொடரும்]

Thursday, September 4, 2008

சிக்கன் பாக்ஸ் - 1

பகுதி 1

நிரு…என்னை விட என்னை அதிகமாகவே புரிந்து கொண்ட என் தேவதை! என் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து தனியாட்சி புரியும் சர்வாதிகாரி. என் ஆழ்மனதில் பொதிந்து கிடக்கும் பற்பல அழகிய நினைவுகளில் நிறைந்து பூத்திருக்கும் இளவரசி.


அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது!


அன்று ஹோலி, வண்ணம் பூச வந்து என் எண்ணத்தோடு அவள் விளையாடிய திருநாள்.


“ஹோலி ஹை…”


“ஹே…நோ, நோ, நிரு…வேணாம், வெள்ள சட்டை, வீணா போய்டும்” நான் சொல்ல சொல்ல கேட்காமல், என் முதுகு, என் கன்னம், என்று எல்லா இடத்திலும் தன் கைவரிசையை காட்டினாள்.


ஹய்யோ என்று சலித்துக் கொண்டு சட்டையை பார்த்தால், அதே பளீர் நிறத்தில்…


“நல்லா ஏமாந்தியா?” வண்ணங்கள் ஏதுமற்ற தன் கைகளை இரு புறமும் ஆட்டி,ஆட்டி, முகத்தை கோனித்து பழிப்பு காட்டி, சிரித்த படியே ஓடினாள், என் தேவதை! ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. உற்றுப் பார்த்தேன், வெள்ளை துகிலென, இரு புறமும், விறிந்து பறந்த அவள் வெள்ளை துப்பட்டா!


அன்று அவள் என் மேல் வண்ணம் பூசா விட்டாலும் கூட, என் வாழ்வில் பல வண்ணங்கள் பூசி சென்றவள்! என் மனதை சிறகடித்து பறக்கச் செய்தவள். என் உணர்ச்சிகளை உயிர்ப்பித்து, உடல், உயிர் இரண்டும் ஒரே தருணத்தில் சிலிர்க்க செய்தவள், காதல் என்ற பரவசத்தை, அந்த அழகான அனுபவத்தை நான் உணரச் செய்தவள், என் நிரு…


“ப்ரவீன், என்னடா பண்ணிட்டு இருக்க?”


நான் கேக்கவும், “சாரி டா…ஏதோ கண்ணுல பட்டுதேன்னு எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்…உன் டைரி…சாரி டா…” என்றான் என் அறை நண்பன் ப்ரவீன், பள்ளியில் என்னோடு படித்து, பின் மீண்டும் அமெரிக்காவில் பார்த்து, எங்கள் நட்பை புதுப்பித்தவன்.


“ஹ்ம்ம்…படிச்சுட்ட, அப்புறம் எதுக்கு சாரி?”


“ஆமா, நிரு, நிரு ன்னு எழுதி இருக்கியே…யாரு இது?”


“நிரு… நிரஞ்சனா...”


“உன் ஃப்ரெண்டு நிரஞ்சனாவா!!!?


“ஹ்ம்ம்…ஆமா…”


“என்னது?? ஆமாவா? என்னால நம்பவே முடியல…இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது, சாட் பண்ணிகிறது இதெல்லாம் பாத்தா, உங்களுக்குள்ள ஒரு பெர்ஸண்ட் கூட லவ் இருக்கற மாதிரி தெரியலயேடா…”


“ஆமா…உண்மை தான்”


“அப்புறம் எப்டி இது…இதெல்லாம் அவளுக்கு தெரியாதோ?”


“இல்ல, இல்ல, அவளுக்கும் தெரியும்…”


“என்னது தெரியுமா? அப்புறம் எப்டிடா? இவ்ளோ கேஷுவலா? ஓ!! இப்ப நீ இதெல்லாத்தையும் மறந்துட்டியா?”


“இல்ல, எதயும் மறக்கல…இப்பயும் அவள லவ் பண்றேன்…ஆனா, அவ ஒத்துக்கனும்ங்கற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம லவ் பண்றேன்…”


“சத்தியமா புரியல…”


“I am not her cup of tea –ன்னு எனக்கு தெரியும், எதுவும் நடக்க போறதில்லைன்னும் எனக்கு தெரியும்…திடீர்ன்னு அவ மாற மாட்டாளாங்கற நப்பாசை எல்லாம் எனக்கு துளி கூட இல்ல…ஆனா, அதுக்காக என் மனச மாத்திக்க மாட்டேன்…”


“மனச மாத்திக்காம? தமிழ் ஹீரோ முரளி மாதிரி இருக்க போறியா?”


“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தளும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”


“உனக்கு இப்பவும் அவள பிடிக்கும்ன்னு அவளுக்கு தெரியுமா?


“ஹ்ம்ம்…தெரியுமே…”


“எப்டி இவ்ளோ நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கு முடியுது உங்களால? உனக்கு ஒரு சின்ன உறுத்தலோ, இல்ல அவளுக்கு உன் மேல ஒரு சின்ன பயமோ, சந்தேகமோ…துளி கூட இல்லையா?”


“ஹூம்…ஹூம்...இல்ல, அது தான் என் நிரு… ”

ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்! அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ? காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…

டிஸ்கி:
“எப்ப, ஏன் அவனுக்கு காதல் வந்துச்சு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? “ இப்படி பல கேள்விகளுக்கு விடை எதுவும் சொல்லாமலே, ஒரு கோர்வையும் இல்லாமல், ஒரு நண்பனின் ஒரு பக்க கதையை (his one side of the story), அவன் உணர்வுகளை, அவனுக்குள் இருக்கும் அழகான நினைவுகளை, அவன் வாயால் கேட்கும் ஒரு ஃபீல் ஏற்படுத்தும் ஒரு சின்ன முயற்சி தான் இந்த கதை.
[தொடரும்]