Saturday, January 31, 2009

சூர்யகாந்தி - 2


பேண்ட், சட்டைன்னு எப்ப பாரும் வெளிநாட்ல பொறந்தவ கணக்கா சுத்திகிட்டு இருந்த ஐஷ்வர்யாவா இது?
அன்னிக்கு வெகு அமக்களமா புடவை கட்டிட்டு வந்திருந்தா. புடவையே ஒரு சருகு மாதிரி தாமரப் பூ கலர்ல இருந்துச்சு. அத பாத்துட்டு சூர்யாவுக்கு, ரட்டு துணி மாதிரி இருந்த அவ தாவணிய தொட்டு பாக்கவே புடிக்கல.

புடவை கலர் பிரதிபலிச்சதாலையோ, இல்ல பிறப்பிலேயே வந்த நிறத்தினாலையோ, இல்ல ஊர் முழுக்க கிடைக்குதே, கண்ட க்ரீமும், எதனாலையோ சும்மா தக தக ன்னு ஜொலிச்சுகிட்டு இருந்த ஐஷ்வர்யாவ, சூர்யா வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே நின்னுகிட்டு இருந்தா.

’இவ எப்படி திடீர்ன்னு இவ்ளோ ஒசரமானா? போன தடவ பாத்தப்போ குட்டையாத் தான இருந்தா?’ சூர்யா இப்படி நினைக்கும் போதே, ஸ்டூல் மாதிரி இருந்த செப்பல கலட்டி விட்டா ஐஷ்யர்யா.

அவ செருப்ப பாத்து, சூர்யா தேன்மொழி ரெண்டு பேருமே வாய திறந்துட்டாங்க. திறந்த வாய் திறந்தபடியே சூர்யா நிக்க, தேன்மொழி மட்டும், “ஐசு!!! இவ்ளோஓஓ பெரிய ஹீல்ஸா? கால் வலிக்காது?” ன்னு கேட்டே போட்டா.

“ஜாஸ்தி நடந்தா தான தேன் வலிக்கும், நான் எங்க நடக்கறேன்…ஹேய் சூர்யா! இப்ப தான் பாக்கறேன், என்ன இவ்ளோ அமைதியா நின்னுட்டு இருக்க? ஹவ் ஆர் யூ?”

“நான் நல்லா இருக்கேங்கே! நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஹேய்!என்னை வாங்க போங்கன்னு கூப்ட்டு அக்கா ஆக்கிடாத” ஐஷ்வர்யா இத சொல்லிட்டு, ஏதோ உலகத்துலையே பெரிய ஜோக் சொல்லிட்ட மாதிரி, அவளே சத்தமா சிரிச்சுகிட்டா. அப்ப தான் வெளிய வந்த கதிர்வேல பாத்து, அந்த சிரிப்பெல்லாம் கானாம போய், ஒரு வசீகர புன்னகையா மறுபடியும் தல காட்டுச்சு, “ஹேய் கதிர்!!!”

“வா ஐஷ்வர்யா…வாங்க மாமா...”

“என்னப்பா கதிர்! எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் மாமா…மத்யானமே வர்றதா சொன்னீங்களே!”

“எங்கப்பா? ஒரே வேலை!!! கடைசி நேரத்துல ஒரு மீட்டிங் வேற…”

அவர மேல பேச விடாம ஐஷ்வர்யா, “டாடி! உங்க ஃபேட்டரி புராணத்த இங்கயும் ஆரம்பிச்சுடாதீங்க ப்ளீஸ்ஸ்” ன்னு சொல்லவும், அவரும் சிரிச்சுகிட்டே, “ஓகே! ஓகே…ஆல்ரைட்! என்ன கதிர்! M.Sc., அக்ரி முடிச்சு ரெண்டு வருஷம் ஆயிடுச்சு, மேல என்ன பண்ணப் போறதா உத்தேசம்?”

“வேறென்ன மாமா? விவசாயம் தான்” பளிச்சுன்னு வந்தது கதிர்வேலோட பதில்.

“வெரி குட்!!!”

ஐஷ்வர்யா, “என்னப்பா வெரி குட்? கதிர்! நீ பேசாம ரிசர்ச் பண்ணிட்டு, அப்ராட் போலாமே? எதுக்கு இந்த பட்டிகாட்ல உக்காந்து வேஸ்ட் பண்ற?”

கதிர் எதுவும் பேசாம ஒரு அர்த்தப் புன்னகையோட இருக்கவும், அவனோட மாமாவே, “என்னமா இப்படி சொல்லிட்ட? எல்லாரும் அப்ராட் போய்ட்டா இங்க விவசாயம் பண்ண யாரு இருக்கா? அதுவும், விவசாயத்த பத்தி அனுபவ அறிவு, படிப்பறிவு ரெண்டுமே இருக்கற கதிர் மாதிரி ஆட்கள, விரல் விட்டு எண்ணிடலாம் நம்ம நாட்ல…கதிர் எங்கயோ போக போறான் பாரு”

“கதிர் போறது இருக்கட்டும், மொதல்ல நீங்க உள்ளார வாங்க மச்சான்!” ராமசாமி ஐயா அப்ப தான் தோட்டத்துல இருந்து வந்தாரு.

ராமசாமி ஐயா! ஊரே அவ இப்படி தான் மரியாதையா கூப்பிடும். பாக்கறதுக்கு ரொம்பவே கரடு முரடா இருந்தாலும், பழகறதுக்கு ரொம்பவே தங்கமான மனுஷன். எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனா என்ன ஒன்னு! அவரோட நிலம் நீச்சுக்கு எதாவது வந்துட்டா சும்மா விட மாட்டாரு மனுசன்! அவங்க ஆத்தா, அப்பன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துங்கறதுனால, அப்படி ஒரு வெறியே என்னமோ! அவரு தோட்டம் காடு சம்பந்தமா எதாவது பிரச்சனைன்னா, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு தான். சொந்த பந்தம்ன்னு கூட பாக்க மாட்டாரு! உசுருக்கு உசுரான செவந்திய வாரி குடுத்ததே, இந்த நிலத்தகராறுல தான?

எல்லாரும் கலகலப்பா பேசி சிரிச்சுகிட்டு இருந்தாலும், சூர்யாவால மட்டும் ஐஷ்யர்யாவ ’பே’ன்னு பாக்காம இருக்க முடியல.
’எவ்ளோ அழகா புடவ கட்டி இருக்கா! புடவ தலப்ப மடிக்காம அப்படியே ஒத்தையா போட்டு, அத ஒரு விதமா ஸ்டைலா வேற புடிச்சுகிட்டு இருக்கா? கை வலிக்கவே வலிக்காதோ? நிமுசத்துக்கு ஒருக்கா தல முடிய கோதி, கோதி விட்டுக்கறாளே! ஒரு வேளை இதுக்குன்னே தலமுடிய விரிச்சு போட்டுருப்பாளோ? ச்சே, நாமளும் தான் இருக்கமே, இன்னும் ஸ்கூல் புள்ளையாட்டம் ரெட்டை ஜடை போட்டுகிட்டு…என்னாமா இங்கிளீஸு பேசுறா? மாமா நம்மள பாத்து சிரிச்சதுல தப்பே இல்ல…ஹ்ம்ம்’ சூர்யாவால பெருமூச்சு மட்டும் தான் விட முடிஞ்சுது.

சித்த நேரத்துக்கெல்லாம், உள்ளூர்ல இருக்க சொந்த பந்தமும் வந்து சேந்துட்டாங்க. எல்லாரும் கிளம்பறதுக்கு ரெடி தான், இத்தன சனம் வந்தும், ராமசாமி ஐயாவோட ஒரே தங்கச்சி, அவ வீட்ல இருந்து சூர்யாவ தவிர வேற யாரையும் கானோம்!

ராமசாமி ஐயா, “சூர்யா கண்ணு! உங்கப்பன் எங்க? வரேன்னு சொன்னானா, இல்ல எப்பயும் போல முறுங்க மரத்துல ஏறி உக்காந்துட்டானா?”

“இல்லீங்க மாமா, அப்பா நேரா கோயிலுக்கே வந்தர்ரேன்னு சொல்லிட்டாருங்க…”

“சரி சரி! எப்படியோ! வந்தா சரி தான்! அப்ப எல்லாரும் கிளம்புவமா? இப்ப புறப்பட்டா தான், கோழி கூப்படறதுக்குள்ள கோயிலு போய்ச்சேர முடியும், எல்லாரும் வந்து வண்டில ஏறுங்க…”

அப்ப தான் ஐஷ்யர்யா அந்த லாரியவே பாத்தா.
“என்ன கதிர் இது? இதுலயா போக போறோம்?”

“ஆமா…”

“You mean…that lorry??? How ridiculous!!! I can’t come in that…No way!!!”

“அப்புறம் இத்தன பேரு எப்படி போறது? வா, வந்து சீக்கரம் ஏறு, லேட் ஆய்டிச்சு”

“hey! Wait wait…I am not coming in that, நான் கார்லையே வரேன்…”

“அங்க பாரு, காரும் ஃபுல் தான், லாரில ஏற முடியாதவங்க எல்லாம் கார்ல தான்…” கதிர் சிரிச்சுகிட்டே சொல்லவும்,

“Oh man!!!”

“ஹ்ம்ம்…வா…வா…”

“ஹே கதிர், இரு, இரு, உன் பைக் எடு…அதுல போலாம்…”

“என்னது பைக்கா? மூணு மணி நேரத்துக்கு மேல ஆகும், 3 hours எப்படி பைல போறது?”

“ஓஹ்…come on கதிர்!!! இந்த லாரிக்கு பைக்கே better…Lets go….”

பைக் புறப்படற சத்தம் கேக்கவும், காருக்குள்ள இருந்த செல்லாத்தா, “பாத்து, பதனமா ஓட்டு தம்பி…” ன்னு கத்தினாங்க.

எல்லாத்துக்கும் முன்னாடி மொத ஆளா ஓடிப் போய், லாரிகுள்ள இருந்த ஸ்டெப்புனி டயர் மேல உக்கார இடம் பிடிச்ச சூர்யா, செல்லாத்தா சத்தத்த கேட்டு தான், அவங்க ரெண்டு பேரையும் பாத்தா. அவங்க ரெண்டு பேரும் சேந்து பைக்ல போறத பாத்த அவ மனசுல, என்னன்னு சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி, ஆக மொத்தத்துல அவ வயித்துல நல்லா புளிய கரைச்சுது.
கற்பனைச் சுமைகள் – 2
***
உன் தோள் பற்றி என் உள்ளங்கை கனிந்திருக்க,
உன் முதுகோடு என் கன்னம் கதை பேச,
என் ஈரக் கூந்தல் காற்றில அலைபாய,
அதற்கு போட்டியாய் என் மனமும் அலைபாய,
உன்னை விட்டு விலக எச்சரித்த வெட்கம் அகல,
நம்மிடையே புக முடியாத காற்றைப் பார்த்து சிரித்தபடி,
உன்னோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்க,
அனுதினமும் நான் ஏங்கும் ஏக்கம்,
உன் வண்டிக்கு கூட தெரிந்திருக்கிறது
அதில் தினமும் பயணிக்கும் உனக்கு இன்னுமா புரியவில்லை?
***

லாரி பயணத்துக்கு நடுவுல, அப்ப அப்ப அவங்கள கடந்த போன, கதிரையும் ஐஷ்யர்யாவையும் பாத்து பாத்து சூர்யா பொறுமி முடிக்கறதுக்குள்ள, கோவிலே வந்து சேந்துடுச்சு!

நாலு மணிக்கெல்லாம் கோவில் போய் சேந்துட்டாலும், அங்க பூசாரியை காணோம்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்த ராமசாமி, “டேய் முருகா!!! அந்த பூசாரிய எங்கடா கானோம்? போய் ஒரு நட பாத்துப் போட்டு வந்து போடு…இன்னும் ஊட்டுக்குள்ளாற படுத்து தூங்கிட்டிருக்கறானாட்ட இருக்குது!!!”

அதுக்குள்ள பூசாரியே அங்க வரவும் பூஜைய ஆரம்பிச்சிட்டாங்க. செல்லாத்தா பொங்க வைக்கறதுக்குள்ள நல்லா பளபளன்னு விடிஞ்சும் ஆச்சு.

பூசாரி, “ஐயா! பொங்க நல்ல படியா பொங்கிடுச்சு! இனி கானிக்கைய குடுத்தர்லாங்களா?”

ராமசாமி, “ஆகட்டும் சாமி! உத்தரவு கேட்ருங்க!!!”

உடனே பூசாரி, “ஆத்தா! உத்தரவு கொடு ஆத்தா” ன்னு சத்தமா கத்தினாரு. தமிழ் நாட்லயே பிறந்து வளந்திருந்தாலும், தமிழ் தெரியாத அந்த ஆடு பூசாரி சொன்னதோட அர்த்தம் புரியாம, ’மே’ ன்னு கூட கத்தாம ’தேமே’ன்னு நின்னிட்டு இருந்துச்சு!

பூசாரி திடீர்னு ஒரு சொம்புல தண்ணிய எடுத்து, ஆட்டு மேல தெளிச்சாரு…
ஏற்கனவே விடியக்காலை குளிரு, அதுல பச்சை தண்ணி வேற மேல பட்டதால ஆடு வேகமா தலைய ஒரு சிலுப்பு சிலுப்புச்சு. உடனே பூசாரி, பயபக்தியோட அரிவாள ஓங்கி “ச்சக்க்க்க்…” ன்னு ஒரே வெட்டு! அவ்ளோ தான்!!!

ஆனா, ஆட்டோட்ட ’மே’ ங்கற ஒரு குரலோட, கூடவே ’அம்மாஆஆ’ ன்னு இன்னொரு குரலும் கேட்டுச்சு!

பாதி கண்ண மூடிட்டு, பாதி கண்ணால மட்டும் அங்க நடக்கறத கவனிச்சுகிட்டு இருந்த ஐஷ்யர்யா, எதிர் பாரா விதமா ஆட்டோட தலை பறந்து வந்து அவ கால் கிட்ட விழுந்ததும், கொஞ்சம் ஆடித் தான் போய்ட்டா. அப்படியே தடுமாறி பக்கத்துல நின்னுகிட்டு இருந்த கதிர் மேல சாஞ்சுகிட்டா!

சின்ன புள்ளைல இருந்து பாத்து பழகினதாலையோ என்னமோ, இதெல்லாம் சூர்யாவுக்கும், தேனுக்கும் கொஞ்சம் கூட பயமில்லை. ஆனா ஐஷ்வர்யா இப்படி கத்தினதும் அவள வித்யாசமா பாத்துட்டு நின்னாங்க. இதுல, மயக்கமே வந்துட்ட மாதிரி அவ ஆக்ட் குடுத்ததும், போதாக்குறைக்கு கதிர் மேல வேற சாஞ்சிகிட்டதும், சூர்யாவுக்கு மட்டும் இல்ல, தேனுக்கும் கூட பிடிக்கல.

கெடா வெட்டி முடிச்சு, அங்கயே அடுப்பு கூட்டி, சமையலும் முடிச்சு பந்திய ஆரம்பிச்சாங்க. மொத பந்தில ஐஷ்யர்யாவ தவிர, பொம்பளைங்க யாரும் உக்காரல. கடைசி பந்தில செல்லாத்தா, சூர்யா, தேன்மொழி இவங்கெல்லாம் உக்காந்து சாப்பிடற வரைக்கும், ரொம்ப கலகலப்பா இருந்த சூழல், ஒரே நிமிசத்துல இறுக்கமா மாறி போச்சு. அதுக்கு காரணம், ஆர்ப்பாட்டமா அங்க வந்து சேந்த பூபதி , சூர்யாவோட அப்பா!

[தொடரும்]

Wednesday, January 28, 2009

சூர்யகாந்தி - 1

மிக நீண்ட ஒரு முன்குறிப்பு!


இந்த கதைய எழுத ஆரம்பிச்சது , April 2007 !!! அப்ப இந்த வலைப்பூ கூட ஆரம்பிக்கல. இந்த கதைய போடறதுக்காகத் தான் இந்த வலைப்பூவையே ஆரம்பிச்சேன். நடுவுல எனக்கே போர் அடிக்க, அதுக்கு நடுவுல வேற பல கதைகள் எழுத, இப்படி பல தடைகள தாண்டி (?!?!) ஒரு வழியா சூர்யகாந்திய இப்ப சில பேர் படிக்கப் போறத நினைச்சா எனக்கு உண்மையிலையே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு :)) ஆனா இன்னும் சூர்யகாந்திய முழுசா டைப் அடிச்ச பாடில்லை :( அதனால கதைய பாதியா வெட்டி, படிக்கறவங்கள இம்சிக்காம ஒரு 7 பார்ட்டுக்குள்ள முடிக்கலாம்னு இருக்கேன். 7 பார்ட்டையும் படிச்சுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...


பாகம் 1


கற்பனைச் சுமைகள் – 1
***
சில்லென்ற ஓர் மழைநாளில்,
உன் கையோடு கை கோர்த்து நடந்த
அந்த மாலை பொழுதின் நினைவுகள்…

உன் சட்டையில் முகம் புதைத்து,
ஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட
அந்த ஈரமான நிமிடங்கள்…

காதலோடு கலந்திட்ட உன் மூச்சுக்காற்று என் மேல் மோத,
என்னையே நான் மறந்த
அந்த ரம்யமான நொடிகள்…

நான் விலகி ஓட,
நீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த,
என் கண்ணாடி வளைத் துண்டுகள்…

இப்படி ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும்,
உன்னோடு சேர்த்து சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்…
உன்னை நினைவில் சுமந்த நாள் முதலாய்…
***


"கதிரு! தம்பி கதிரு…"

"ஏனாத்தா?" ன்னு கேட்டுக்கிட்டே நடவைக்கு வந்தான் கதிர்வேல். துடிப்பான கண்களும், கருத்த முகத்துல முருக்கி விட்ட அடர்ந்த மீசையும், திமுரும் தோள்களும், மடிச்சு விட்ட சட்டையுமாய், சட்டென முதல் பார்வைக்கு கிராமத்து இளவட்டம் போல தான் இருந்தான், ஆனாலும் ஏதோ ஒன்னு அவனை வித்யாசமாக தான் காட்டிச்சு. அவன் அறிவின் ஆழம், ஆற்றல், செயல் திறன், முடிவு எடுக்கறதுல அவனுக்கு இருக்கற வேகம், தெளிவு, எடுத்த முடிவுல நிலைச்சு நிக்குற உறுதி, அந்த வயசுக்கே உரிய வேகம், துணிவு, ஆண்மை…ஏன், அந்த வயசுல பொதுவா பல பேத்துக்கு வாய்க்காத பொறுமை, அடக்கம், கனிவு…இது மட்டும் இல்லாம, இன்னும் பல பல கதைகள கூர்மையான அந்த ரெண்டு கண்களே பேசுச்சு.

"அந்த ஆட்டுக்கு புள்ளு வச்சாச்சா? தண்ணி காட்டியாச்சா? அந்த முருகன் பையன் எங்க போனான்?" இப்படி அவன அதிகாரம் பண்ணிட்டு இருந்தது வேற யாரும் இல்ல, கதிரோட அப்பா வழி பாட்டி தான்.

"நாளைக்கு சாக போற ஆடு மேல உனக்கு எதுக்கு இவ்ளோ விசனம்?" நமட்டு சிரிப்போடு கேட்டான் கதிர்.

"ஆருடா இவன்? சுத்த வெவெரம் கெட்ட பயலா இருக்கான்! சாமிக்கு நேந்து விட்ட ஆட்ட சாக்கரதையா பாத்துக்கோனும் டா…இல்லன்னா, சாமி குத்தம் வந்து சேரும்"

"ஹூம்…அதெல்லாம் வச்சாச்சு…"

"சரி, சரி, ஆமா…ஊர்ல இருந்து உன் மாமன், அவன் கூட்டமெல்லாம் வருதா இல்லியா? இன்னிக்கு ஜாமமே கிளம்ப போறோம், பொழுதாச்சு…இன்னும் காணோம்?"

"எல்லாம் வருவாங்க ஆத்தா…நீ கொஞ்சம் கம்முன்னு இரு, தலைக்கு மேல வேல கிடக்கு…"
வேக வேகமாய் வீட்டுக்குள்ள போனான் கதிர், அவனோட சேந்து நாமளும் அவங்க வீட்டுக்குள்ளார போவோமா?
அந்த காலத்து வீடா இருந்தாலும் கொஞ்சம் பெரிய வீடு தான், பசுஞ்சானத்தால் அழகா மெழுகி இருந்ச்சு.

"டேய் முருகா! தோப்புல இருந்து வாழ எல கொண்டார சொல்றா…அப்டியே கொஞ்சம் மஞ்ச கொத்தும் வேனும்"

கரண்டியும் கைய்யுமாக செல்லாத்தா, அடித்தொண்டையில் இருந்து கத்திகிட்டு இருந்தாங்க. பாவம் அவங்களும் என்ன தான் செய்வாங்க? ஒத்த மகன் பெரிய படிப்ப முடிச்சுட்டு வந்ததும், கெடாய் வெட்டி, பொங்கல் வெக்கறதா வேண்டினாலும் வேண்டினாங்க, இதோ அதோன்னு ரெண்டு வருஷம் ஒடி போச்சு….இப்ப தான் எல்லாம் கூடி வந்துருக்கு, ரெண்டு புள்ளை இருந்தும், ஒத்தாசைக்கு ஆளில்லாம தனியா கிடந்து அல்லாட வேண்டியதா இருக்கு, பையன் என்னடான்னா, அவங்க அப்பா மாதிரியே தோட்டம் தொரவுன்னு என்னேரமும் பம்பரமா சுத்திட்டு இருக்கான். பொண்ணு...ஹூம், அத சொல்லி குத்தமில்ல, அவங்க அப்பா செல்லம் கொஞ்சி இன்னும் சின்ன புள்ளையாட்டம் திரிஞ்சுட்டு கிடக்கு.

“முருகாஆஆ!!! முருகாஆஆ!!! நான் ஒருத்தி இங்க கிடந்து கத்திகிட்டு இருக்கேன், ஏன்னு கேக்க நாதி இல்ல…”

அவசர அவசரமா தோள்ள இருந்த துண்டை கையில இறக்கி பிடிச்சபடி ஓடி வந்தான் முருகன், அந்த வீட்டில பல வருசமா வேலையாள், தோட்டத்தில கூட அவன் தான் எல்லாம். “அம்மா! சொல்லுங்கம்மா…ஆத்தா கூப்டிச்சு, அதான்…” ன்னு இழுத்தான் முருகன்.

“சரி, சரி…வாழ எல வேணும், அப்படியே…”

“மஞ்ச கொத்து தான? இதோ, பத்து நிமிஷத்துல கொண்டாறேன்…”

“அப்படியே அய்யாவையும் கையோட கூட்டிபோட்டு வா…”

முருகன் அந்த பக்கம் நகந்ததும், தேன்மொழி பக்கம் திரும்பியது செல்லாத்தாவோட கவனம்.
“தேனு! ஏய் தேனு…இன்னும் குளிக்காம என்னடி பண்ணிட்டு இருக்க? எல்லாரும் வரும் போது குளிக்காம கொள்ளாம அப்படியே நில்லு…பாத்துக்கறேன் உன்ன!!!”

“கத்தாத மா! தோ போறேன்…” சலித்துக் கொண்டே அலமாரியை நோக்கி அன்ன நடை நடக்க ஆரம்பிச்சா தேனு, தேன்மொழி! பேருக்கு ஏத்த மாதிரியே தேன் குரலுக்கு சொந்தகாரி, கதிர்வேலோட ஒரே தங்கச்சி, ராமசாமி ஐயாவின் ஒரே செல்ல மகள்…டவுன் காலேஜில படிச்சிட்டு இருக்கா. அவளுக்கும் மத்த புள்ளைங்க மாதிரி தினுசு, தினுசா துணி மணி போட்டுக்கனும்ன்னு ஆசை தான். ஆனா அவங்கண்ணன் கதிருக்கு அதெல்லாம் கட்டோட பிடிக்காது. அதனால எப்பவும், சுடிதாரும், பாவட தாவணியும் தான்.

“தேனு! அந்த பட்டுப் பாவாடைய எடுத்து போட்டுக்கோ கண்ணு!”

“சரி! சரி! போட்டுத் தொலையறேன்…”

தேன்மொழி அந்த பக்கம் நகந்தது தான் தாமதம், “தேனு! தேனு!” ன்னு கத்திகிட்டே, ஓடியாந்தா, இல்ல இல்ல, துள்ளி குதிச்சு புள்ளி மான் போல ஓடியாந்தா சூர்யா…
செக்கச் செவேல்னு, மூக்கும் முழியுமா, செதுக்கி வெச்ச அம்மன் சிலை ஒன்னு தேர்வலம் வர மாதிரி, அவ வீட்டுக்கும் ராமசாமி அய்யா வீட்டுக்கும் நடையா நடையா நடக்கறத தவிர, பெருசா வேலைன்னு சொல்லிக்க ஒன்னும் இல்ல…கண்ணக்குழி சிரிப்பால ஊர்ல இருக்க பாதி பசங்க தூக்கத்த கெடுக்கறத தவிர.

துடுக்குத் தனம் - அதுக்கு வேற பேர் வைக்கனும்னா, சூர்யான்னு வைச்சா பொருத்தமா இருக்கும்…அவ இருக்குற இடத்துல சிரிப்பு சத்ததுக்கோ, கலகலப்புக்கோ கொஞ்சம் கூட பஞ்சம் இருந்ததில்ல. இப்படி சொல்லிட்டதால, அவ எப்ப பாரும் சிரிச்சிகிட்டே இருப்பான்னு நினச்சுக்காதீங்க, அழுமூஞ்சினாலும் அது சூர்யா தான். ஒரு வார்த்தை கேக்கறதுக்குள்ள முணுக்குன்னு கண்ணுல தண்ணி விட்டுடுவா, ஆனா சரியான அழுத்தக்காரி. ஆக மொத்ததுல, பாசமோ, பகையோ…சிரிப்போ, அழுகையோ…சந்தோஷமோ, துக்கமோ எல்லாமே கொஞ்சம் அதிகப்படியா சேந்த கலவை தான் சூர்யா…சூர்யகாந்தி. அவள பத்தி, இவ்ளோ பெரிய விளக்கம் குடுத்ததுல, புள்ளி மான் கணக்கா ஓடி வந்தவ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாக்க மறந்துட்டமே! ஹய்யய்யோ!! என்னதிது?

“அம்மாஆஆஆ…” யாரோ அலர்ற சத்தம் கேட்டு, தல தெறிக்க ஒடி வந்தாங்க செல்லாத்தா. பரப்பி வச்சிருந்த நெல்லுக்கு நடுவால நெட்டுக்க விழுந்து கிடந்தா சூர்யா!!!
அவளோட கோலத்த பாத்து, பொங்கி வந்த சிரிப்ப கஷ்டப் பட்டு அடக்கிட்டு, “ஏண்டி! நெல்லு காய போட்டுருக்கறது கூட தெரியாம, இப்படியா கண்ணு, மண்ணு தெரியாம ஓடி வருவ?”

“ஏங்கத்த! நடு வீட்லயா நெல்லு காயப் போடுவீங்க?”

“உங்கண்ணு என்ன பொடனீலையா இருக்கு?”

அப்போது தான் அங்கே வந்த கதிர், “விடும்மா! மகாராணி எப்பவுமே தரைல நடக்க மாட்டாங்க, வானத்துல தான் மிதந்துகிட்டு இருப்பாங்க…”

அவனை பாத்ததும், அவசர அவசரமா சுதாரிச்சு, தரையில ஊனி எழுந்து நின்னு, “ஹூக்கூம்…நான் ஒன்னும் மிதக்கல…” ன்னு அவ பதில் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த இடத்தை விட்டே போய்ட்டான் கதிர்.
அவன் போன திக்கையே எப்பவும் போல வெறிச்சு பாக்க ஆரம்பிச்சவள, இந்த உலகத்துக்கு இழுத்துட்டு வந்துச்சு, “என்னடி ரோசன?” ன்ன அவ அத்தையோட குரல்.
சட்டென்று சுதாரிச்சவளா, “ஆமா…தேன எங்கைங்த்த கானோம்?”

“நாள் மூச்சூடு சும்மா இருந்துட்டு, இப்ப தான் குளிக்க போயிருக்கா…”

“ஓ…..ஆமா….ஊர்ல இருந்து உங்கண்ணெல்லாம் வராங்களா?”

“வராம பின்ன? வந்துகிட்டே இருக்காங்க…இன்னும் சித்த நேரத்தில இங்க வந்துருவாங்க…”

“அந்த பொண்ணு ஐசுவரியா! அதுவும் வருதா?” குரல்ல தெரிஞ்ச ஆர்வத்த அடக்க அவ செஞ்ச முயற்சி அப்பட்டமா தெரிஞ்சுது.

ஆனா ஏதேதோ யோசனையில இருந்த செல்லாத்தா, அதெயெல்லாம் கவனிக்கவே இல்ல, “அவ இந்த வருசத்தோட படிப்ப முடிச்சிட்டா இல்ல? அவளும் தான் வர்றா…பாத்து எத்தன நாளாச்சு…ஹ்ம்ம்…சரி சரி…நீ வா! அடுப்புல கொஞ்சம் வேலை இருக்கு”

“நீங்க போங்கத்த…நான் வரேன்…”

“சரி, சரி, வெசையா வா…”

இந்த வரவு செலவு கணக்கு வழக்கெல்லா தினமும் சரியா எழுதி வச்சு, பைசல் பண்ணலைன்னா கதிருக்கு அந்த நாள் முடிஞ்ச மாதிரி இருக்காது. அன்னைக்கு கோயிலுக்கு கிளம்பறதால, அப்பவே எழுத ஆரம்பிச்சுட்டான். பின்னால ஆள் வந்து நின்னது கூட தெரியாம மும்பரமா எழுதிட்டு இருந்தானோ, இல்ல வேணும்ட்டே கண்டுக்காம இருந்தானோ, அது அவனுக்கு தான் தெரியும்.
சூர்யாவும் அவனுக்கு பின்னாடி கொஞ்ச நேரம் அமைதியா நின்னு பாத்தா, அப்புறம் ’ஹ்க்…ஹ்ம்ம்’ ன்னு லேசா தொண்டைய செறுமி பாத்தா…வளையல ஆட்டி ஆட்டி சத்தம் குடுத்து பாத்தா…ஹூம்ஹூம் ஒன்னத்துக்கும் மசியற மாதிரி இல்ல. அதுக்கு மேல பொறுக்க மாட்டாம, “என்ன மாமா எழுதிட்டு இருக்கீங்க?”

அவள ஒரு தடவ திரும்பி பாத்துட்டு மறுபடியும் எழுத ஆரம்பிச்சுட்டான் கதிர்.

“மாமா!”

“ஏய்! எத்தன தடவடீ சொல்றது? என்ன மாமான்னு கூப்டாதன்னு…”

“நானும் எத்தன தடவ சொல்லி இருக்கேன், என்ன வாடி போடின்னு கூப்படாதீங்கன்னு?”

“ஆமா! இவ பெரிய எலிசபத் மகாராணி! மரியாத குடுத்து கூப்படறதுக்கு…இப்ப எதுக்கு இங்க வந்த?”

“எங்க மாமா வீடு…நான் வந்தேன்…”
“சும்மா மொறைக்காதீங்க, உங்கள ஒன்னும் சொல்லல, என்னோட தாய் மாமா, உங்க அப்பாவ சொன்னேன்…”

“வீட்டுக்கு ஏன் வந்தேன்னு கேக்கல…என் ரூமுக்குள்ள ஏன் வந்தேன்னு தான் கேட்டேன்…”

“ஏதோ முக்கியமா எழுதிட்டு இருந்தீங்களே…உதவி பண்ணலாமேன்னு தான் வந்தேன்…”

“யாரு? நீ…யா? இங்கிலீஷ் எழுத்துக் கூட்டி படிக்கவாவது தெரியுமா உனக்கு?”

“எல்லாம் எனக்கு தெரியும், நானும் B.A இங்கலீஸு தான் படிக்கறேன்…”

“ஆமா…கரஸ்பாண்டன்ஸ்ல எட்டாங்களாஸ் பெயிலானவன் கூட தான் படிக்கறான்…”

“நான் ப்ளஸ் டூல உங்கள விட மார்க்கு ஜாஸ்தி…தெரியுமா?”

“இருந்துடு போ! யாரு இல்லன்னா…”

“அந்த ஐசுவரியா மட்டும் என்ன? அவளும் B.A இங்கலீஸு தான படிக்கறா?”

எதோ பெரிய தமாச கேட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான் கதிர்.
“யேய்! அவ சென்னை லயோலா காலேஜுல படிக்கறா…உன்ன மாதிரி காமராஜர் திறந்த வெளி பல்கலைகழகம் இல்ல…நீ அவ கால் தூசிக்கு பெற மாட்ட…”

முணுக்குன்னு சூர்யா கண்ணுல தண்ணித்துளி ஒன்னு வரவும், தேன்மொழி அங்க வரவும் சரியா இருந்துச்சு.

“ஏன்ணா! சூர்யாவ கிண்டல் பண்றத தவிர உனக்கு வேற வேலபொழப்பே கிடையாதா? நீ வாடி!”
கண்ணுல எட்டி பாத்த தண்ணிய அவ கஷ்டப்பட்டு அடக்க நினச்சாலும், கன்னத்துல கோடு போட்டுச்சு அந்த பாழாப்போன கண்ணீர் துளி.

உடனே தேன்மொழி, “ஏய் லூசு! எதுக்குடீ நல்ல நாளும் அதுவுமா, இப்படி கண்ண கசக்கிட்டு நிக்குற?”“அதில்ல தேனு! உங்கண்ணனுக்கு என்னய கண்டாலே சுத்தமா பிடிக்கல…”

“ஐயோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…அண்ணன் சும்மானாச்சிக்கு உங்கூட வெளையாடுது…”

வாசல்ல கார் சத்தம் கேக்கவும், அந்த பேச்ச அத்தோட விட்டுட்டு, நடவ பக்கம் போனாங்க ரெண்டு பேரும். பேண்டு, சட்டை, பூட்ஸுமா முதல்ல இறங்கினது, செல்லாத்தாவோட அண்ணன் ஆறுமுகம். அவருக்கப்புறம் காருக்குள்ள இருந்து ஒயிலாட்டம் இறங்கின ஐஷ்வர்யாவ பாத்து மயக்கமே வந்துடுச்சு சூர்யாவுக்கு![தொடரும்]


Friday, January 23, 2009

அழுகாச்சி காவியம்!


நெஞ்சத்துள் தேக்கி வைத்திருந்த
கோபமெல்லாம்,
கடற்கரை மணல் வீடாய்,
கரைந்தோடிப் போனது,
உன் கண்ணீர் அலைகளால்!
***


கவிதையே கவிதைமேல்
கவிதையெழுதி செல்கிறதே!
புரியவில்லையா?
உன் கண்களிரண்டும்,
கன்னத்தில் வரைந்த
நீர்க்கோலங்களைத் தான் சொல்கிறேன்!

***

தொலைந்த வார்த்தைகளை கோர்த்து
சத்தமில்லாமல் சந்ததி பாடியது
உன் விழியோர நீர்த்துளி!

***
உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!

***


அற்பாயுளில் மடிந்தாலும்,
மோட்சைத்தை தான் அடைந்தது,
உன் அதரங்கள்
சுவைத்து நிறுத்திய
என் கண்ணீர்!
***Tuesday, January 20, 2009

சும்மா கொஞ்சம் மொக்கை

அதோ அந்த ஏணி மீது ஏற வேண்டும்…!!!

ஒரு நாள் நான் கோவையில இருந்து பெங்களூர் வரதுக்காக, ரயில்ல ஏறினேன். வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான். நிறைய மக்கள் இங்கிட்டும், அங்கிட்டும் அலஞ்சிகிட்டு இருந்ததால, சரி, எல்லாரும் அவங்க அவங்க இடத்துல போய் உக்காரட்டும், அப்புறமா நம்ம மேல ஏறிக்கலாம்னு நானும் நின்னுட்டு இருந்தேன்.

அப்ப தான் அதே பர்த்துல உக்காந்திருந்த நம்ம தலைவரு என்கிட்ட, “எச்சூஸ்மீ…” ன்னாரு.

நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…

எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.

நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)

உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”

அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க, “yeah…” ன்னு மட்டும் சொல்லிட்டு அமைதியாட்டேன் :( (ஆனா மனசுக்குள்ள: அவனா நீ? எத்தன வருஷமா ட்ரெயின்ல வந்து போய்ட்டு இருக்கோம்? என்னை பாத்தா எப்படி தெரியுது? இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)

******
ஆர்யபட்டா!!!

வழக்கம் போல தூங்கி வழிந்து கொண்டிருந்த மற்றுமொரு மதிய வேளையில், என்னோட டீம்மேட் என்கிட்ட, “திவ்யா! இந்த ஆர்யபட்டா எங்க இருக்கு?” ன்னு கேட்டா.

நானும் ஒரு நிமிஷம், இவ எதுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு யோசிச்சாலும், நம்ம அறிவுக்கு வந்த சவால சந்திச்சே தீருவோம்ன்னு ஒரு சபதத்தோட, “ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.

உடனே என் டீம்மேட், “திவ்யாஆஆஅ!!!! நான் conference room ஆர்யபட்டாவ கேட்டேன்.”

நான், "அவ்வ்வ்வ்வ்" :((

Sunday, January 11, 2009

அப்பாவும்/சைக்கிளும் நானும்...

அபியும் நானும் படத்துல சைக்கிள் சீன் பாக்கும் போது, எனக்குள்ளும் பல சைக்கிள் சீன் சைக்கிள் சக்கரம் சுத்தற மாதிரி ரீவைண்ட் ஆகி எல்.கே.ஜி வரைக்கும் போய் அடுத்த மொக்கைக்கும் ஒரு வழி வகுத்துருச்சு…

இனி அப்பாவும்/சைக்கிளும் நானும்…

என்னையும், அக்காவையும் சைக்கிள்ள கூட்டிட்டு போவாரு அப்பா. எனக்கு அதுல போகவே பிடிக்காது, ஏன்னா எங்கக்கா மட்டும் பின்னாடி ஜாலியா உக்காந்துட்டு வர, நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( இந்த சோகம் நிகழ்ந்தது எல்.கே.ஜி யில. என்னோட இந்த வருத்தத்த பரிசீலனை செஞ்சு எங்க அப்பா, அழகா குட்டியா ஒரு சீட் வாங்கி அந்த கம்பியில பொருத்தி வச்சுட்டாரு…அதுக்கப்புறம் சைக்கிள் பயணம் எல்லாம் ஒரே ஜாலி தான்…

கொஞ்சம் கால் நீளமானதுக்கப்புறம், ஆனா மூளை அவ்வளவா வளராத வயசுல சைக்கிள் முன் கம்பியில மட்டும் குழந்தைங்கள ஏத்திட்டு போகக் கூடாது! இல்லன்னா, சைக்கிள் சக்கரத்துக்குள்ள கால விட்டுகிட்டு, பின்னாளில் கனுக்கால்ல ஒரு பெரிய தளும்போட தான் அந்த குழந்தைங்க சுத்த வேண்டியது வரும்! என்ன பண்றது? இப்படி ஒரு அறிவுரைய எங்கப்பாவுக்கு அப்ப யாரும் குடுக்கல!!! இது நடந்தது ஒன்னாப்புலையா, ரெண்டாப்புலையான்னு எனக்கு சரியா ஞாபகம் இல்ல…

சரி, மூளை கொஞ்சம் வளர்ந்திருந்தாலும், அத சுத்தமா உபயோகிக்க தெரியாத குழந்தைங்களை சைக்கிள்ள பின்னாடி சீட்ல கூட ஏத்திட்டு போகக் கூடாதுன்னு எங்கப்பாவுக்கு நான் தான் சொல்லிக் குடுத்தேன் :) ஒரு நாள் சைக்கிள் பயணத்தின் போது எனக்குள்ள ஒரு விபரீத ஆசை…ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! எங்கப்பா கிட்ட, “அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை வாங்கினப்பா நான் நாலாங்கிளாஸ்…

“எம்புருஷனும் கச்சேரிக்கி போனாங்கற கதையா இருக்கு…” இப்படி ஒரு பழமொழி உண்டு எங்க ஊர்ல. இந்த மாதிரி, “திவ்யாவும் சைக்கிள் கத்துக்க போனா” ங்க கதையா, ஐஞ்சாவதுல ஆரம்பிச்சு ஏழாவது வரைக்கும் ஒவ்வொரு லீவும் சைக்கிள் கத்துக்கறேன்னு ஊர சுத்துவேன்…ஆனாலும், சைக்கிள ஒழுங்கா கத்துகிட்ட பாடில்லை, போதாக் குறைக்கு வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் :( அப்படி இருக்கும் போது ஒரு நாள்….ஸ்கூல் முடுஞ்சு நடந்து வந்துகிட்டு இருந்தேன்…அப்ப எதிர்ல எங்கப்பா மாதிரி ஒருத்தர், கஷ்டப்பட்டு ஒரு குட்டி சைக்கிள ஓட்டிட்டு வந்துட்டு இருந்தார். பாக்கவே செம காமடியா இருந்துச்சு. யாருடா இதுன்னு பாத்தா, அப்பாவே தான்! என்னதிதுன்னு நான் திரு திருன்னு முழிக்கவும், அப்பா, “உனக்கு தான் புது சைக்கிள்!!!” ன்னு சொன்னாரு. Pink color lady bird, my first ever possession! இது நடந்தது ஏழாவதுல…

(அப்புறம் அந்த சைக்கிள வச்சிகிட்டு அடிச்ச கூத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறனால, அதெல்லாம் இதுல வேண்டாம்;) )

எல்லாத்தையும் சொல்லிட்டு எங்கப்பாவோட சைக்கிள பத்தி சொல்லன்னா எப்படி? எங்க வீட்ல ரொம்ப வருஷமா ஒரு தொன்று தொட்ட சைக்கிள் இருந்துச்சு. (நான் கீழ குதிச்சு சாகசம் பண்ண அதே சைக்கிள் தான்). நாங்கெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பாத்தும், எங்கப்பா அத விக்காம வச்சிருந்தார். “இது நான் வேலைக்கு போய் முதன் முதல்ல வாங்கின சைக்கிள்” ஒரு சென்டிமென்ட்ட வேற போட்டார்.அதுவும் வீட்டுக் கொள்ளையில, ரொம்ப வருஷமா தேமேன்னு தேஞ்சு போய் நின்னுட்டு இருந்துச்சு. (அதாவது இந்த படத்துல இருக்கற சைக்கிள் மாதிரி ஆய்டுச்சுன்னு வச்சுக்கோங்களேன் :) )கடைசியா மனசு வந்து ஒரு நாள், “சரி…காயிலாங் கடையில போடற அளவுக்கு ஆயிடுச்சு. பேசாம இத வித்தர்லாம்ன்னு இருக்கேன்” எங்கப்பா இழுக்கவும், நாங்கெல்லாம் கோரஸா, “அத செய்ங்க முதல்ல” ன்னு சொல்லி, அவர விரட்டினோம். சைக்கிள் கடைல இருந்து ஒரு ஆள கூட்டிட்டு வந்து பேசி அனுப்ச்சுட்டு சோகமே உருவாகி வந்த அப்பா கிட்ட, “என்னப்பா, எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டானா?” கேட்டதுக்கு, “எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ :’(