Thursday, March 26, 2009

மலரே மெளனமா? - 1

பகுதி - 1 (Bangalore)

ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு


வைரமுத்துவின் வைர வரிகள், ரஹ்மானின் மெல்லிய இசையுடன் கலந்து, பெங்களூர் போக்குவரத்து இரைச்சலையும் மீறி, ஐ பாடின் உதவியால் என் காதுக்குள் தேனாய் கசிந்து கொண்டிருந்தது.

தமிழுக்கு ழா அழகு…இந்த வரிகளை கேட்டதும், என் உதடுகளில் மெலிதான ஒரு புன்னகை…மலருக்கு என்றுமே ழ கரம் சரியாக வந்ததில்லை. அதை வைத்து இன்று உணவு இடைவேளையின் போது, எல்லோருமா சேர்ந்து அவளை அளவுக்கதிகமாக ஓட்டி எடுத்துவிட்டோம். ஆனால், மலர் மட்டும் அவ்வளவு கேலி, கிண்டலையும் சட்டை செய்யாமல், வழக்கம் போல் பெரிதான ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும் போது, அவள் கன்னப் பதுக்கங்களில் வெகு அழகாய் தோன்றும், இரு சிறு குழிகள்.

ஒரு பெரும் அதிர்வோடு வண்டி மேலே செல்லாமல் திடுமென நிற்கவும் தான் கவனித்தேன், மலரின் கன்னக்குழியைப் பற்றி நினைத்துக் கொண்டு வந்ததில், வீட்டின் அருகே சில நாட்களாகவே இருக்கும் அந்த குழியை கவனிக்கத் தவிறி விட்டதை. ஆக்ஸிலரேட்டர் உதவியால், குழியில் சிக்கிய வண்டியை மேலெழுப்ப யத்தனிக்கையில், என் வண்டியின் உறுமல் சத்தத்தையும் மீறிக் கொண்டு ஒலித்தது என் அறை நண்பன் வினோத்தின் குரல்.

“டேய்!!! பாத்துடா…”

வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு, கதவருகே எனக்காக காத்து நின்ற வினோத்திடம், “என்னடா அதிசயம்? ஏழரை மணி பஸ்லையே வந்துட்டியா இன்னிக்கு?”

“ஹ்ம்ம்…ஆமா…இன்னிக்கு அவ்வளவா வேலை இல்ல…” காலை ஏழரை மணிக்கு அலுவலகம் சென்று, ஏழரை மணிக்கு திரும்புதல், அவ்வளவாக வேலை இல்லாத நாட்களின் நிலை!

“ஹே…இன்னிக்கு மலர் என்ன பண்ணாங்க தெரியுமா? ” வழக்கமான உற்சாகத்துடன் வினோத்திடம் பேச ஆரம்பித்தேன்.

“நிறுத்து! நானும் பாத்துட்டே இருக்கேன்…ரொம்ப தான் மலர் புராணம் பாடிட்டு இருக்க, வர…வர…”

“அடச்சே…போடா…”

உணவு முடிந்து எல்லோரும் படுக்கைக்கு வந்தோம். வழக்கம் போல் அன்றும் வினோத் ஆரம்பித்தான்.
“என்னடா பண்ணாங்க?”

“யாரு?”

“அவங்க தான்…இந்த ராசாவோட ரோசா…” ஒரு விஷமப் புன்னகையோடு, கண்களை சிமிட்டியபடி அவன் இப்படி கேட்கவும், எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“போடா…” திரும்பிப் படுத்துக் கொண்டேன்.


தேவையில்லாம இந்த பசங்க ஓட்றாங்க. ஆஃபிஸ்ல பேசறதோட சரி, அதத்தவிர வீட்ல வந்து என்னிக்காவது ஒரு ஃபோனாவது பண்ணியிருக்கேனா? ஒரு வருஷமா எனக்கு மலரை தெரியும். என்னுடைய டீமில் இருக்கும் ஒரே தமிழ் பெண். அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழி.


ஆனால், இந்த தோழி என்பதெல்லாம் அலுவலத்தோடு சரி, அதற்கு மேல் பழக மலர் இடம் கொடுத்ததில்லை. எப்போதும் யாரும் சுலபத்தில் நெருங்க முடியாத படி, ஒரு அளவோடு தான் இருக்கும் அவளுடைய பேச்சு, செய்கை எல்லாம். இருந்தாலும், அவள் எனக்கு அதிக நெருக்கமில்லை என்று சொல்லிவிடவும் முடியாது தான். எப்போதாவது முகம் வருடி செல்லும் சுகந்தம் கலந்த தென்றலோ, விடுமுறை நாளின் மாலை வேளையில், சில்லென்று இதயம் நனையச் செய்யும் சுகமான சாரல் மழையோ, அடிக்கடி அனுபவிக்காவிட்டாலும், மனதிற்கு நெருக்கமானதில்லை என்று கொள்ள முடியுமா என்ன?


எனக்கென்னவோ மலருடைய உண்மை நிறம் இதுவல்ல என்ற சந்தேகம் எப்போதுமே உண்டு, உண்மையில் குறும்புத்தனமும் குதூகலமும் நிறைந்த ஒரு பெண், அலுவலகத்தில் மட்டும் அடக்கி வாசிப்பதை போலவே தோன்றும். இப்படி பலதும் நினைத்தபடியே உறங்கிப் போனேன்.

மறுநாள் காலை விழித்ததற்கும், படுக்கையை விட்டு எழுந்ததற்குமான இடைவெளியில், வழக்கம் போல இன்று அலுவலகம் போகத் தான் வேண்டுமா என்று தலைதூக்கிய எண்ணத்தை, ஒருவாறு கிடப்பில் போட்டு விட்டு அலுவலகத்தை வந்தடைந்தேன்.

பத்து மணி. மலர் இன்னும் வரக்காணோம். என்னையும் மீறி, அவள் இருக்கையை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நோட்டம் விட்டபடி ஒரு மணிநேரத்தை கழித்தேன். வழக்கமாக எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவாங்களே!

“அவினாஷ், மலர் எங்க?”

“தெரியலையே சுரேன்! என்ன விஷயம்?”

“இல்ல… ஒரு மீட்டிங் இருக்கு…”


“ஃபோன் பண்ணிப் பாருங்க…”

“இல்ல இல்ல, ஒன்னும் அவசரமில்ல…”

பதினோரு மணி, ‘ரிங் போய்ட்டே இருக்கு, எடுக்க மாட்டேங்கராங்க.’
அப்போது திடீரென்று மலரிடமிருந்து அழைப்பு, “சொல்லுங்க மலர்…”

“சுரேன்! இன்னிக்கு நான் ஆபிஸ் வர முடியாது…”

“ஓ…என்ன ஆச்சு?”

“ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்…”

“என்னது ஆக்ஸிடன்டா? என்ன சொல்றீங்க? ஆர் யூ ஓகே…எங்க இருக்கீங்க?”
பதட்டத்தில் தட்டச்சுவதை போல ஒலித்தது என் குரல்.

“இல்ல…பெருசா ஒன்னும் இல்ல…படியிறங்கும் போது தடுக்கிடுச்சு…கால்ல கொஞ்சம் அடி, இப்ப தான் டாக்டர்கிட்ட போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்…சுளுக்கு இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கார்…சுத்தமா நடக்கவே முடியல…”

“ஓஹ்ஹ்” என் குரலில் இருந்த சோர்வை உணர்ந்து, வேலை கெடுமென்று தான் நான் கவலைபடுகிறேன் என்று நினைத்து விட்டாள் போலும்…
“நான் வேணா…work from home…”

அவளை முடிக்க விடாமல் இடைமறித்தேன் “ச்சே…ச்சே… work from home எல்லாம் எதுக்கு? நீங்க ஓய்வெடுங்க மலர்…”

மலர் இல்லாத அந்த பத்து நாட்களும் பத்து யுகங்களாக கழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கும், அவளுடைய வேலையையும் சேர்த்து நான் செய்து கொண்டிருந்தேன். வேறு யாராக இருந்தாலும், இப்படி செய்திருப்பேனா என்று சந்தேகம் தான்…சந்தேகம் என்ன? கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன். இந்த பத்து நாட்களில் எத்தனை முறை அவளை பற்றி நினைத்தேன்? கணக்கிட்டிருந்தால் எண்ணிகை தீர்ந்திருக்கும்!
இதை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த போது தான், வாலிப வயதில் அனேகருக்கும் நிகழக்கூடிய அந்த இனிய பரிமாணம் எனக்குள்ளும் நிகழ்ந்தது, என் பிறந்தநாளன்று…

துயில் கலையும் வேளையில், மலரிடமிருந்து ஃபோன். நாளை தானே விடுப்பு முடிந்து வேலையில் சேர போவதாக சொல்லியிருந்தாள், இன்று என்னவாக இருக்கும்? அனேகமாக என்னை வீட்டில் இருக்கும் போது அவள் அழைப்பது அதுவே முதல் முறை.

“சொல்லுங்க மலர்…”

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேன்!!!”

“---“

“சுரேன்!!!”

“ஓஹ்ஹ்…நன்றி மலர்…ரொம்ப நன்றி…கால் எப்படி இருக்கு? இப்ப பரவாயில்லையா?” ஆனால் என் மனம் சரியாக இல்லை!

அதன்பிறகு அவள் பேசியதெல்லாம் சரியாக காதில் விழவில்லை. என் பிறந்தநாளன்று அவள் வாழ்த்தியதை விட, அவள் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதே போதுமானதாய் இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன், மீண்டும் பிறந்ததைப் போல். அந்த வைகறை வேளையில் அழகாய் நிகழ்ந்தேறியது அந்த இனிய பரிமாணம், அது வரை என் அம்மாவுக்கு மகனாக மட்டும் இருந்த நான் ஒரு பெண்ணுக்கு காதலனாக புதுப் பிறப்பெடுத்தேன். அவளுக்கு கால் இடறிய பின் தான், என் மனம் அவளிடத்தில் என்றோ சரிந்திருந்தது எனக்கே தெரிகிறது! ஆனால் இயற்பியல் விதிக்கு மாறாக, சரிந்த மனம் உச்சத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.

காற்றில் மிதந்தபடியே அன்றைய தினம் கழிந்தது. வீட்டிற்கு விரைந்தோடி வந்தேன். காதலியிடம் சொல்வதை விட, அதற்கு முன் நண்பனிடம் காதலைச் சொல்வது அழகான தருணம் தான்! இந்த பாவிப்பயல், என் நீண்ட நாள் நண்பன், வினோத் இன்னும் வரக்காணோம்.

இரவு அவன் வீட்டிற்கு வந்து, உண்டு முடித்து, படுக்கைக்கு வரும் வரை காத்திருந்தேன்.

“வினோத்!!!”

என் முகத்தில் இருந்த ஆயிரம் வாட்ஸ் ஆர்வத்தை பார்த்து அவனே, “என்னடா? மலர் இன்னிக்கு ஆபிஸ் வந்துட்டாங்களா?”

“அது இல்லடா மச்சான்…”

“அப்புறம் என்ன உன் முகம் இத்தன பிரகாசமா இருக்கு? என்ன விஷயம்?”

“சொல்லுவேன்…ஆனா ஓட்டக் கூடாது…”

“நான் எப்படா உன்னை ஓட்டியிருக்கேன்?” மனசாட்சியே இல்லாமல் பொய் சொன்னான்.

“நான்…நான்…லவ் பண்றேன்னு நினைக்கறன்டா…”

“அப்படி போடு அரிவாள!!! இத தான்டா ரொம்ப நாளா நானும் நினைச்சேன்…இப்பவாவது உண்மைய ஒத்துகிட்டையே…பொண்ணு யாரு? அந்த சொர்ணா தான?” சொல்லிவிட்டு கண்களை வேறு சிமிட்டினான். உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சிகளை போட்டு உடைப்பதற்கு இவனுக்கு நிகர் இவன் தான். சொர்ணா எங்கள் வீட்டை பெருக்கித் துடைக்கும் பெண்!

“டேய்!!! சீரியஸா பேசிட்டிருக்கும் போது காமெடி பண்ண…அப்புறம் நீ சீரியஸ் ஆயிடுவ…சொல்லிட்டேன்…”

“ஓகே…ஓகே…எப்ப சொல்ல போற...அதான் உன் மலர் கிட்ட?”

நான் எதுவும் சொல்லாமல் இருக்கவும், “ஏய்…இதே மாதிரி டன் கணக்குல அவங்க கிட்டயும் போய் வழிஞ்சிடாதடா…ஹ்ம்ம்…எப்படியோ…உன் பிறந்தநாளன்னிக்கே காதல் ஆனிவர்சரியும் வந்துடுச்சு…கலக்குற போ…”

“இன்னிக்கு ஆனிவர்சரின்னு எப்படிடா சொல்றது? இன்னிக்கு நான் என் காதலை உணர்ந்த நாள்…அவ்ளோ தான்…ஆனா, மலர் என்னிக்கு எனக்குள்ள நுழைஞ்சான்னே தெரியலையே!!!”

“ஒரு மார்கமாத் தாண்டா இருக்க…”

பதிலேதும் சொல்லத் தோன்றாமல், கைகளை தலையனையாக்கி படுத்தபடி எங்கள் அறையில் மேல் கூரையைப் பார்த்து புன்னகைத்தேன். அன்றைய இரவு படிகம் போன்றதொரு ஒளிநுழை (transparent) இரவாக தான் மாறியிருந்தது! அறையின் மேல் கூரையையும் தாண்டி, அந்த வானமும், அதில் மின்னும் நட்சத்திரங்களும், அவ்வப்போது தலை காட்டும் கோள்களும், வின்மீண்களும், எங்கள் அறைக்கு அழையா விருந்தாளியாய் வந்து என் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த விருந்தாளிக் கூட்டத்தில் நிலவதனை மட்டும் காணவில்லை! சொன்னேனே, அன்றிரவு ஒரு ஒளிநுழை இரவென்று? மாசு மருவற்ற வெண்மை நிலவென ஒளிரும் மலரின் முகம், என் மனதிற்குள்ளிருந்ததைப் பார்த்து நிலா வெட்கித் திரும்பி விட்டது போலும்!

என்னுடைய இந்த அதீத கற்பனையின் பயனாய் பெரிதாய் மலர்ந்த புன்னகையை அருகிலிருந்த நண்பன் பார்க்காத வண்ணம் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன். உடனே சடாரென போர்வையை விலக்கி என் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான் வினோத். ’ச்சை! சிரிச்சத பாத்திருப்பானோ?’ உள் எழுந்த ஏதோ ஒரு உணர்ச்சி, அதற்கு பேர் தான் வெட்கமோ? அதை மறைத்து, முகத்தை நேராக வைத்துக் கொண்டு, “என்னடா?” என்றேன்.

“சுரேன்!!! நீ ஒரு ஃபோட்டோ கூட காட்டினதில்லையே! எப்படிடா இருப்பாங்க மலர்?” ஆர்வமிகுதியில் கேட்டவனை பார்த்து சிரித்தபடி படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தேன்.

“எப்படி இருப்பான்னா…ம்ம்…என்ன சொல்றது? அழகா இருப்பா…” என் மனக்கண் முன் ஒரே ஒரு வினாடி எப்போதாவது பூக்கும் அவள் புன்னகை தோன்றி மறைந்தது. அழகு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே நினைவில் வரும்…அவ்வளவு அழகு அவள் சிந்தும் புன்னகை!

“அது தான் நீ ஊத்தறத பாத்தாலே தெரியுதே…வேற எதாவது குறிப்பா சொல்லுடா…”

அவளைப் எப்படி வர்ணிக்கலாம் என்று நினைத்ததுமே, எனக்கு தெரிந்த அந்த ஒரே ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி


*குறிஞ்ச மலர் புத்தகத்தில் நா. பார்த்தசாரதி எழுதியது.

எனக்கு மிகவும் பிடித்ததால், என்றுமே நினைவில் தங்கிய அந்த வரிகளுடன், என் கற்பனையும் கலந்து கொள்ள,
“குறிப்பான்னா என்ன சொல்றது? ம்ம்ம்…சரி, சொல்றேன்…கேளு! அந்த நிலாவ எடுத்து அதில படிஞ்சு இருக்கற கருப்பு கறைகளை எல்லாம் துடைச்சு, தாமரைப் பூவை அரைச்சி, அதோட கலவையை கொஞ்சம் கலந்து, அப்புறம்…அப்புறம்…கொஞ்சம் வெண்னையை சேத்து, பிரம்மன் ஓவர் டைம் போட்டு செஞ்ச சிலை மாதிரி இருப்பா…” எனக்கு கூட இவ்ளோ கவித்துவமா பேச வருமா? அன்று வரை நானே இதை அறிந்திருக்கவில்லை.
ஆனால் வினோத் முகத்தில் தான் ஈயாடவில்லை. ’ஒரு வேளை நாம வர்ணிச்சத கேட்டு பயந்துட்டானோ?’
“என்னடா? எதுவும் சொல்ல மாட்டிங்கற?”

“நல்லாத் தானடா இருந்த?”

“ஏன்டா? இப்ப என்ன?”

“போடா வெண்ட்ரு!!! என்னவோ நிலாவாம், அதுக்கு ஃபேஷியல் பண்ணுவாராம், அப்புறம் தாமரை கூழாம்….அதெல்லாம் கூட பரவாயில்ல…கடைசியில எதுக்குடா வெண்னைய போட்டு பிசைஞ்ச? முறுக்கு சுடவா?”

“டேய்ய்ய்ய்…” என் அடியிலிருந்து லாவகாமாய் தப்பிக் கொண்டான் பாவிப்பயல். “அதில்லடா…ரொம்ப ஸாஃப்ட்டுன்னு சொல்ல வந்தேன்…”

“வேணாம்…எதாவது சொல்லிடப் போறேன்….நீ கனவ கண்டின்யூ பண்ணு, நான் தூங்கறேன்…” சொல்லிவிட்டு விளக்கை அணைத்தான். ஆனால் என் மனதிற்குள் ஒளிப்பிழம்புகளின் உருவாய் உலவிக் கொண்டிருந்த ஒருத்தி, அன்றிரவு என்னை தூங்க விடவில்லை. அப்போது நான் அறிந்திருக்கவில்லை, உண்மையில் அவை ஒளிப்பிழம்புகள் அல்ல, தீப்பிழம்புகள் என்று!

******

மறுநாள் விழித்ததும் வினோத் என்னிடத்தில் கேட்ட முதல் கேள்வி, “என்னடா? மலர் இன்னிக்கு ஆபிஸ் வந்துடுவாங்கல்ல?”

“ஆமா..ஏன் கேக்கற?”

“எப்ப சொல்லப் போற? அதுக்கு தான் கேட்டேன்…”

“இப்ப இல்ல வினோத்….ஊருக்கு போய்ட்டு வந்தப்புறம் தான்…”

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“என்னடா இப்படி சொல்ற? எங்கப்பாவ கேக்க வேண்டாமா?”

“என்னது???”

[தொடரும்]

Wednesday, March 4, 2009

அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!

பெங்களூர்ல ஆட்டோகாரர்கள் சில பேர் பண்ற அலட்டல பத்தி நிறைய பேர் கேள்விப்பட்டுருப்பீங்க…எந்த இடம் சொன்னாலும், வர மாட்டேன்னு சொல்றது; அதுவும் பி.டி.எம், கோரமங்களா ன்னு சொன்னா, கேவலமான ஒரு லுக்கு விட்டுட்டு, அங்கெல்லாம் வர முடியாதுன்னு சொல்றது; ரெண்டு கிலோமீட்டர் தூரம் கூட இல்லாத இடங்களுக்கு மனசாட்சியே இல்லாம, நாப்பது, ஐம்பது ரூபா கேக்கறது, இப்படி எண்ணில் அடங்கா அலட்டல் பண்றது இந்த ஊர் ஆட்டோகாரர்களின் வழக்கம். அப்பேர்பட்ட ஆட்டோகாரர்களே ஒரு சில சமயம் நம்மகிட்ட மாட்டிகிட்டு முழிச்ச சில சம்பவங்கள் தான் இந்த பதிவுல. எல்லாரும் டார்டாய்ஸ கொழுத்தி வச்சிட்டு ரெடியா இருங்க…பதிவுக்கு போவோம்.

சில மாதங்களுக்கு முன்…ஒரு நாள்….

நான் ஆபிஸ்ல இருந்து ஆட்டோவில வந்துட்டு இருந்தேன். வழக்கம் போல எங்க வீட்டு பக்கத்துல இருக்க சிக்னல்ல வெய்டிங். பெங்களூரின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட சிவப்பு சிக்னல் பச்சையாகி, ஆட்டோ சிக்னல் பக்கத்துல போறதுக்குள்ள, மீண்டும் சிகப்பு! அந்த சிக்னல்ல இருந்து ஒரு u turn அடிச்சு, ஒரு நிமிஷம் நடந்தா எங்க வீடே வந்துடும்…சரி, மூனு நிமிஷம் இந்த சிக்னல்ல இருக்கறதுக்கு பதிலா, நடந்தே போய்டுலாம்னு நானும் ஆட்டோவ விட்டு இறங்கிட்டேன். மீட்டர்ல 21 ரூபாய். முப்பது ரூபாய எடுத்துக் கொடுத்துட்டேன். ஆனா, ஆட்டோகாரர் பாக்கி சில்லறைய திருப்பிக் குடுக்கல.

நான்: Change?

ஆட்டோகாரர்: அதெல்லாம் கிடையாது…பாதியிலேயே இறங்கிட்டீங்க…

நான்: என்னது? வீடு பக்கத்துல இறங்காம, இங்க மெயின் ரோட்லையே இறங்கிட்டேன்…உங்களுக்கு தான் அது நல்லது.

ஆ.கா: அதெல்லாம் எனக்கு தெரியாது மா…

நான்: வீடு வரைக்கும் போனாலும், இன்னும் ஒரு ரூபா தான் அதிகமாகும். change அ குடுங்க!

ஆ.கா: என்கிட்ட change இல்ல…

உடனே நான் மறுபடியும் ஆட்டோக்குள்ள ஏறி உக்காந்துட்டேன்.

ஆ.கா: என்ன?

நான்: சரி, சரி, நான் இங்க இறங்கல…நீங்க போங்க….

ஆ.கா: எங்க?

நான்: நான் ரூட் சொல்றேன்…போங்க…

ஆ.கா: எங்க இறங்கப் போறீங்கன்னு கேட்டேன்?

நான்: மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!

ஆ.கா: ?!?!?

நான்: -----

ஆ.கா: இறங்குமா…இந்தா change...

****
இது நேத்திக்கு நடந்தது.

நாங்கெல்லாம் கடைக்கு போய்ட்டு ஆட்டோ பிடிக்க நின்னுட்டு இருந்தோம். வழக்கம் போல எல்லாரும் நாப்பது, ஐம்பதுன்னு ஜோக் அடிச்சனால, நாங்களும் கொஞ்ச நேரம் நின்னு, ஒரு வழியா ஒரு ஆட்டோவுக்குள்ள ஏறினோம். கொஞ்ச தூரம் போனப்புறம்,

ஆ.கா: 1 and half குடுத்துடுங்க…

நாங்க: என்னது? மணி 9.30 தான ஆச்சு?

ஆ.கா: அதெல்லாம் இல்ல, மணி பத்தாச்சு!

நாங்க: மூனு பேரும் வாட்ச் கட்டியிருக்கோங்க! மணி 9.30 தான் ஆச்சு…

ஆ.கா: உங்க வாட்செல்லாம் தப்பா காட்டுது…

நாங்க (மனசுக்குள்ள) : இவன் ரொம்ப பேசுறான்!!!

மறுபடியும் அதே சிக்னல், அதே u turn. ஆட்டோ சிக்னல்ல வெய்ட்டிங்.

நான்: இங்க u turn பண்ணுங்க...

ஆ.கா: என்னது u turn ஆ?

நான்: ஆமா…

ஆ.கா சலித்துக் கொள்வதை பார்த்து, என் ஃப்ரெண்ட், “பேசாம இங்கயே இறங்கிடலாம்…தேவையில்லாம ஆ.கா ஒரு ’பா’ அடிச்சு சுத்தினா தான் மறுபடியும் மெயின் ரோடு போக முடியும்”

நான்: பரவால்லை…ரொம்ப பேசுறவங்களும், இது நல்லா வேணும்! மீட்டர்ல கரெக்ட்டா ரெண்டு கிலோமீட்டர் காட்டட்டும், அப்ப இறங்கிக்கலாம்.

ஆ.கா: இங்கயே இறங்கி நடந்துபோய்டுங்க!

நான்: மணி பத்தாச்சு! எப்படி நடந்துபோறது? பஸ் ஸ்டாப்ல இருந்து நடக்கற மாதிரி இருந்துருந்தா நாங்க பஸ்லையே போயிருப்போமே? எதுக்கு ஆட்டோவுல வரணும்? மணி வேற பத்தாச்சு!

ஆ.கா அமைதியா u turn அடிச்சு, எங்க மெயினுக்குள்ள நுழைஞ்சாரு. மீட்டர்ல ரெண்டு கிலோமீட்டர் ஆனதுமே,

நாங்க: stop மாடி, stop மாடி!!!

ஆ.கா வுக்கு சரியா 14+7 ரூபாய் குடுத்துட்டு, நாங்க நாலு தெரு தள்ளியிருக்கற எங்க வீட்டுக்கு ஜாலியா நடக்க ஆரம்பிச்சுட்டோம்.

ஃப்ரெண்ட்: பேசாம இந்த தெருவுக்குள்ளையே நுழைஞ்சிடலாம். ஆ.கா வேற ஆட்டோவ எடுக்காம நின்னு, நாம எங்க போறோம்னே பாத்துகிட்டே இருக்கான்.

நாங்க: நல்லா பாக்கட்டும்!!! அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!

***
இதுவும் ஒரு சில மாதங்களுக்கு முன்…

ஊர்ல இருந்து திரும்பி வந்து, கண்டோன்மெண்ட்ல இறங்கி prepaid ஆட்டோவில வரும் போது நடந்தது. ஆனா, நான் எதுவும் செய்யாமலே ஆட்டோகாரர் தன்னால அசிங்கபட்டுகிட்டார் பாவம் :)

ஆ.கா: 120 ரூபா குடுத்துடுங்க…

நான்: என்னது? 85 ரூபா தான போட்டுருக்கு?

ஆ.கா: prepaid ல எல்லாம் எப்பயுமே கம்மியா தான் போடுங்க…

நான்: நானும் நிறைய வருஷமா வந்துட்டு தாங்க இருக்கேன். இப்ப வெள்ளிகிழமை வரும் போது கூட 75 ரூபா தான் ஆச்சு…

ஆ.கா: சரி, அப்ப 110 ரூபாயாவது குடுங்க…

நான்: அதெல்லாம் முடியாது, இப்படி 110, 120 குடிக்கற மாதிரி இருந்தா, எதுக்காக இத்தன நேரம் prepaid queue ல நின்னு ஆட்டோ பிடிக்கனும்? நேராவே வந்துருப்பேனே?

ஆ.கா: 110 குடுக்கலாம்…குடுங்க…

நான்: எதுவும் பேசாதீங்க…பேசாம ஓட்டுங்க (ஏன்னா இப்ப மேல சொன்ன உரையாடல் நடந்தது கன்னடத்துல, அதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல!)

நான் ஃபோன எடுத்து, என் ரூம்மேட்டுக்கு கால் பண்ணி, மெலிதான குரல்ல, “prepaid queue ல நிறைய நேரம் நின்னு இந்த auto ல வந்தா…இவரு 120 கேக்கறாரு, என் கிட்ட கரெக்ட்டா 85 change இல்ல…100 ரூபா குடுத்தா, திருப்பி குடுக்க மாட்டாரு, அதனால நான் வீட்டு பக்கத்துல வந்ததும் கால் பண்றேன், நீ change எடுத்துட்டு கீழ வா…”

எங்க வீடும் வந்திடுச்சு. நான் இறங்கும்போது,

ஆ.கா: ரயில்வே போலிஸுக்கு கால் பண்ணிட்டீங்களா?

நான்: என்னது?!?!?! இல்லையே!

அப்புறம் என்ன? என் கிட்ட இருந்த 100 ரூபாயவே நான் குடுக்க, ஒன்னுமே சொல்லாம, மீதி பதினஞ்சு ரூபாய அவரு குடுத்துட்டு திரும்பி பாக்காம ஓடிட்டாரு :D