Tuesday, September 29, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 6

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5
கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை பார்த்தபடி, தனக்குத் தானே மெலிதான ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்துக் கொண்டாள் மது.

’ரஞ்சித் நேர்ல எப்படி இருப்பாரு? அட்லீஸ்ட் ஒரு தடவையாவது நேர்ல பாத்து பேசியிருக்கலாம்…ச்சே…இன்னிக்கு இத்தனை கூட்டத்துக்கு முன்னாடி எப்படி தான் பாக்கறது?’

“மதூ!!!” அம்மாவின் பலத்த குரல் ஈட்டியாய் அவள் காதுகளை மட்டுமல்லாது, அவளது அழகிய சிந்தனைகளையும் துழைக்க, சற்றே எரிச்சலுற்றவளாய், “என்னம்மா?” என்று பதிலுக்கு இரைந்தாள்.

“தூங்கி எழுந்து அரை மணி நேரம் ஆச்சு…இன்னும் கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கரம்…அவங்க வர்றதுக்கு இன்னும் மூனு மணி நேரம் தான் இருக்கு!!!”

“இன்னும் மூனு மணி நேரம் இருக்கு!!!” என்றபடி சாவதானமாக படிகளில் இறங்கத் துவங்கினாள். கடிகாரம் அப்போது தான் ஆறு முப்பது என்று காட்டிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது, ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துவிடுகிறோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லியிருந்ததால் அன்று மது அம்மாவிற்கு காலை எழுந்ததுமே பரபரப்பு ஒற்றிக் கொண்டது.

சமையலறைக்குள் நுழைந்தவள் அப்போதே அம்மா குளித்து முடித்து, தலையில் ஈரத்துண்டுடன் இருந்ததைக் கண்டதும் சிரிக்கத் துவங்கினாள், “அம்மா!!! என்னை தான் பொண்ணு பாக்க வராங்க…என்னமோ உன்னைப் பாக்க வர மாதிரி, இப்படி முதல்ல கிளம்பி நின்னுட்டு இருக்க?”

“அடி வாங்கப் போற…போடி…போய் முதல்ல பல்ல விளக்கிட்டு வா!!!”

“ஏம்மா…என்னை பொண்ணு பாக்க வரதுக்கே நீ இத்தன பரபரப்பா இருக்கியே…அப்பா உன்னைப் பாக்க வந்தப்ப, தரையிலையே நின்னிருக்க மாட்ட போலயிருக்கு?” நமட்டுச் சிரிப்புடன் கேட்ட மகளை முறைத்தவாறு, அவள் முதுகை பிடித்து தள்ளிக் கொண்டு அந்த அறையை விட்டு அவளை வெளியேற்றி, “முதல்ல குளிச்சிட்டு வா…அப்புறமா உங்கப்பா வந்தப்ப, நான் என்ன பண்ணேன்னு சொல்றேன்…”

ஆனால் குளிக்கப் போகாமல், கைபேசியை எடுத்துக் கொண்டு நேரே தன் அறையை அடைந்தாள் மது.மறுபக்கம் வெகு நேரமாகியும் எந்த பதிலும் இல்லாமல் போகவே, சலித்தவாறே மீண்டும் ஒரு முறை முயற்சித்தாள்.

“பன்னி!!! காலங்காத்தால எதுக்கு ஃபோன் பண்ற?” தூக்கத்தில் குளறியபடி ஒலித்தது திவ்யாவின் குரல்.

“ஒரு முக்கியமான விஷயம் திவ்ஸ்…அதான்…”

“ம்ம்ம்…”

“கேக்கிறியா? ஹலோ…”

“ம்ம்…ம்ம்…சொல்லு…”

“அது வந்து…எனக்கு ஒரு சந்தேகம்…இப்ப பொண்ணு பாக்க வராங்களே, நான் என்ன பண்ணனும்னே எனக்குத் தெரியல…”

“அதான், உங்கம்மா, சித்தி, அப்புறம் ஏகப்பட்ட சொந்தகாரங்க எல்லாம் இருக்க போறாங்களே…அப்புறம் நீ என்னத்த பண்ணப் போற? அவங்க பண்றதையெல்லாம் நல்லா உக்காந்து தின்னு!”

“அடச்சே! எப்ப பாரும் திங்கறதுலையே இரு!!! நான் அத கேக்கல…ஹ்ம்ம்…நான் பழைய காலத்துல இருக்கற மாதிரி, ரொம்ப அடக்க ஒடக்கமா நடந்துக்கனுமா? இல்லை எப்பயும் போல கேஷுவலா இருந்தா போதுமா?”

“நீ எப்பயும் போல ப்ளேடு போட்டா அவங்க தாங்குவாங்கன்னு நினைக்கற? விட்டா போதும்னு ஓடிப் போயிட மாட்டாங்க?”

“அது என்னவோ உண்மை தான்…எதாவது சொல்லு திவ்யா…நீ நல்லா ஐடியா குடுப்பன்னு உங்கிட்ட கேட்டா….”

“சரி விளக்கமா சொல்றேன்…நல்லா கவனமா கேளு! அந்த காலத்து பொண்ணுக மாதிரி வெட்கப் படனும்னு நினைச்சாலும் கண்டிப்பா உன்னால முடியாது…ஆனா அதுக்காக, நீ எப்பயும் இருக்கற மாதிரி, கால் மேல கால போட்டுகிட்டு, கெக்க பெக்கென்னு சிரிச்சீன்னு வை…அப்புறம் உங்கம்மா உன்னை செறுப்பாலையே அடிப்பாங்க…”

“அதான உன்னை கேக்கறேன்?”

“நீ ரொம்ப தலையை குனிஞ்சுகிட்டும் இருக்க வேணாம், அதுக்காக யாரையும் நிமிந்தும் பாக்க வேணாம்…நடுல பாரு…”

“என்னது?”

“இந்த டேபிள், சேர் எதையாவது பாரு, அந்த ஆங்கிள்ல பாத்தா போதும்…”

“ஆமா…நீ சொல்ற மாதிரி பாத்தா அப்புறம் மாப்ளை வயிரு தான் தெரியும்”

“கரெக்ட்! உன்னை அந்த மாதிரி தான் பாக்க சொல்றேன்…அப்படியே மாப்ளைக்கு தொப்பை இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கலாம்…”

“நீயும் உன் ஐடியாவும்…மூஞ்சிய எப்ப தான் பாக்கறது?”

“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு…உங்க சித்தப்பு, பெரியப்பு இவங்கெல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க…எப்படியும் அவரை ரெண்டு, மூனு கேள்வி எல்லாம் கேப்பாங்க…அப்ப நீ என்ன பண்ற…யாராவது பேசும் போது மட்டும் அவங்க முகத்தையே பாக்கற…அப்படியே மாப்ளை பேசும் போதும் அதை கவனிக்கற மாதிரி அவரு முகத்தை பாத்துக்கோ…”

“ஹை! இது நல்ல ஐடியாவா இருக்கே…தாங்க்ஸ்மா…திவ்யான்னா திவ்யா தான்!!”

“ஹே…இரு இரு…இந்த ஐடியாவ கொஞ்சம் சிக்கல் இருக்கு…கொஞ்சம் பாத்து தான் அப்ளை பண்ணனும்”

“சிக்கலா? என்னதது?”

“நீ ரொம்ப நேரமா டேபிளையே உத்து பாத்துட்டு இருந்தேன்னு வை…அங்க வச்சிருக்கு ஸ்வீட்ட பாத்து நீ ஜொள்ளு விட்டுட்டு இருக்கன்னு நினைச்சுக்குவாங்க….அதனால, பாத்து நடந்துக்கோ…”

“அடச்சே…உனக்கு இத விட்டா வேற நினைப்பே கிடையாது…சரி, எங்கம்மா வந்து கழுத்த பிடிச்சு பாத்ரூம்ல தள்றதுக்கு முன்னாடி நானே குளிக்கப் போறேன்…பை பை…”குளித்து முடித்து, உடை மாற்றி வந்த மகளை பார்த்த விசாலாட்சியின் கண்களில் ஒரு வித திருப்தி ஒலிர்ந்தது.
“ஹ்ம்ம்…ஒரு நாளைக்காவது உருப்படியா ட்ரெஸ் பண்ணியிருக்கியே…ஆமா….போன தடவை அப்பா வாங்கிட்டு வந்தாரே, அந்த புது நெக்லஸ் போட்டுக்கல?”

“போம்மா….அது பெருசா இருக்கு…எனக்கு வேண்டாம்…”

“என்னம்மா? ஒரு நாள் தானே…அத போட்டுக்கோ…”

“போம்மா…வேற வேலையில்லை…சும்மாயிரு…”

“நீ இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்ட, நானே போய் எடுத்துட்டு வரேன்” என்றபடி மாடியிலிருந்த மதுவின் அறைக்கு விரைந்தார் விசாலாட்சி.

ஒரு சில நிமிடங்களில் கையில் நகைப்பெட்டியுடன் அவர் படிகளில் இறங்கத் துவங்கும் முன்னரே, தொலைபேசி அழைக்க, மது காலர் ஐடியை பார்த்தபடி, “அப்பாம்மா…” என்றபடி ரீஸீவரை எடுக்கப்போனாள்.

“அப்பாவா? இத்தன நேரம் கழிச்சு இப்ப தான் ஃபோன் பண்றாரா?” வேகமாக படிகளின் அருகில் வந்தவர், முதல் படியை கவனிக்காமல் காலை வைக்க, “மதூஊஊஊஊஊ” என்ற அவரின் அலறலில், கையிலிடுத்த தொலைபேசியை அப்படியே எறிந்து விட்டு அம்மாவை நோக்கி ஓடினாள் மது.

நிலைதடுமாறி படிகளில் தலைகுப்புற உருண்டு கீழே வந்துகொண்டிருந்தார் விசாலாட்சி. ’அம்மாஆஆஅ…” என்று அலறியபடி அவள் முதல் படியை அடைவதற்கும், படியின் அருகிலேயே வைத்திருந்த அந்த அழகிய வெங்கல சிலையில் விசாலாட்சின் தலை மோதுவதற்கும் சரியாக இருந்தது.

ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து விட்ட விபரீதத்தில் தலை கிறுகிறுக்க, கண்களில் நீர் பெருக, நடுங்கும் கரங்களுடன், குனிந்து தாயின் தலையை கைகளில் ஏந்தினாள் மது. ரத்தக் கோடுகள் படிந்த முகத்துடன், கண்களில் கண்ணீர் தேம்பியிருக்க, கண்களை படபடக்க மதுவை நோக்கி, “மது….ம்மா…உன் கல்…யா…” அதற்கு மேல் பேச முடியாமல், அவரின் குரல் கமற, கண்களின் படபடப்பு அடங்க, மெல்ல மெல்ல அவரது மூச்சும் அடங்கியது. அந்த அறையில் சுடர் விட்டுக் கொண்டிருந்த விளக்கின் ஒளி, உயிரற்ற அவரது கண்களில் பிரதிபலிப்பதை திக்பிரம்மை பிடித்ததை போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.

அவளுக்கு அன்று ஏற்பட்ட அதிர்ச்சியில், உடனே அவளது அப்பா ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து பக்கத்து வீட்டிற்கு தவகல் சொல்லி, அவர்கள் வந்ததும், பின்பு சொந்த பந்தம், அறிந்தர் தெரிந்தவர் என்று அந்த வீடு அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே நிரம்பி வழிந்ததும் எதுவுமே நினைவில் இல்லை. எத்தனை மணி நேரம், இல்லை எத்தனை நாட்கள் என்று கூட தெரியாமல், அம்மாவின் உடலை வெறித்துப் பார்த்தபடி, தன் அம்மாவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் மது.

அவள் அப்பா வந்தவுடன் அவளை கட்டிக் கொண்டு அழுத போது கூட அவளுக்கு அழத் தோன்றவில்லை, ’மதும்மா....அம்மா எங்கடா? அம்மாக்கு என்னடா ஆச்சு? மதும்மா…பேசுடா…பேசுடா…” என்று அவள் நினைவறிந்து அழுதே பார்த்திறாத அவளது அப்பா குழந்தை போல தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்தும் மரக்கட்டையை போன்றே நின்று கொண்டிருந்தாள் மது!

************************************************************************

ரஞ்சித்தின் வீட்டில் அமர்ந்து அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்துக் கொண்டிருந்தார் வக்கீல் சுமன்,
“கேஸ் நம்ம மேல ஸ்டராங்கா இருக்கு ரஞ்சித்! நீங்க தான் கோ-ஆப்ரேட் பண்ணனும்…தயவு செஞ்சு சொல்லுங்க” மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்கவும், கொதிப்படைந்தான் ரஞ்சித்.

“நான் தான் எந்த தப்பும் செய்யலன்னு சொல்றேன்ல? நீங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேக்காதீங்க சார்…காத்து வாங்கத் தான் போனேன்…”

“டேய்!!! திரும்ப திரும்ப ஒரு பொய்ய சொல்றதால அது உண்மையாயிடுமா? நீ காத்து வாங்க போனேன்னு சொல்றது பச்சைப் பொய்யின்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்! ஒரு மாடிக்கே லிஃப்ட்ல போன ராஸ்கல்! யாரு காதுல பூ சுத்தற? இப்ப சொல்லப் போறியா இல்லையா? ஒழுங்கான காரணத்த சொல்லன்னா, நீ எனக்கு மகனே இல்லடா…” ஆவேசமாய் கத்தினார் சுப்பிரமணியம்.

ஆனால் முகில் மட்டும் எதுவும் பேசாமல் கெஞ்சும் பார்வையில் ரஞ்சித்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையை சந்திக்க முடியாதவன், “சுமன்! எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் சொல்லிட்டேன்…இத வச்சு முடிஞ்சா ஜாமீன் வாங்குங்க…இதுக்கு மேல என்கிட்ட ஒரு கேள்வியும் கேக்காதீங்க…” என்றபடி எழுந்து உள்ளறைக்குள் நுழைந்தான்.

“என்ன சார் இவரு? புரியாம பேசிகிட்டு இருக்காரு…” சுப்பிரமணியத்திடம் சுமன் முறையிட, அவர் கோபமாய், “எனக்கு இப்படியாப்பட்ட ஒரு பையனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன்!!!” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவரும் விடுவிடுவென மற்றொரு அறைக்குள் சென்று விட்டார்.

செய்வதறியாது தானும் எழுந்த வண்ணம் சுமன், பேய் அறைந்ததைப் போல் நின்று கொண்டிருந்த முகிலையும் தனலட்சுமியையும் பார்த்து, “அப்ப சரிங்க மேடம்…நான் மட்டும் உக்காந்து பேசி என்ன பிரயோஜம்? நானும் கிளம்பறேன்….ஜாமினுக்கு ஆக வேண்டியத பாக்கறேன்….ஆனா என்னால எதுவும் உறுதியா சொல்ல முடியாது…லெட்ஸ் ஸீ!”

மறுநாள் சுமன் எதிர்பார்த்தது போலவே ரஞ்சித்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மது குதித்த இடத்தில் இருந்த மாடி திண்டு, மற்றும் அங்கு கிடந்த மெழுகுவர்த்தி, மதுவின் கால்கள், உடை என்று எல்லா இடத்திலும் ரஞ்சித்தின் கைரேகை இருந்ததை ஆதாரத்துடன் அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அன்றே ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கும் உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி.

கண்ணீர் மல்க ரஞ்சித்திடம் பேசுவதற்கு அவனருகே சென்ற முகிலை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், "இவனோட என்ன பேச்சு? நீ வாம்மா.." என்று தரதரவென இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம்.

மனதில் இடியிறங்கியது போல் அடுத்த என்ன செய்வதென்றே தெரியாமால் வீட்டில் அமர்ந்திருந்த அவளை பேரிடியென தாக்கியது வக்கீல் சுமனின் தொலைபேசி அழைப்பு.

"சாரி மேடம்! என்னால இதுக்கு மேல உங்க ஹஸ்பன்டை ரெப்ரஸண்ட் பண்ண முடியாது. கண்டிப்பா தோக்கத் தான் போறோம்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட கோ-ஆப்ரேட் பண்ணாத ஒரு க்ளைண்டுக்காக செலவலிக்கற அளவுக்கு என்கிட்ட டைமில்லை...ஐம் ரியலி சாரி...நீங்க வேற வக்கீல் பாத்துக்கோங்க..."

அவள் பதிலை எதிர்ப்பார்க்காமலே மறுமுனை துண்டிக்கப்பட்டது. அதோடு முகில் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் துண்டிக்கப்பட்டது!

[தொடரும்]

Wednesday, September 23, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 5

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4

“என்ன மது குழப்பம்?”
திவ்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அதி தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் மது.
“ஹலோ மேடம்!!!”
“சொல்றேன்…சொல்றேன்…அதுக்கு தான உன்னை வர சொல்லியிருக்கேன்…அந்த ரஞ்சித்தோட பேசினேன்…”
“ஹ்ம்ம்…”
“நல்லா தான் பேசினான்…”
“அப்புறம் என்ன?”
“ஆக்ட்சுவலா ரொம்ப நல்லா பேசினான்…ஒரு மணி நேரம் போனதே தெரியல…அவன் எல்லா விஷயத்திலையும் ரொம்ப தெளிவா, கான்ஃபிடென்ட்டா இருக்கற மாதிரி தெரிஞ்சுது…ஆனா…எனக்கு தான் ஒரு சந்தேகம்…”

“என்ன சந்தேகமோ, அதை அவன்கிட்டையே கேட்டிருக்க வேண்டியது தான?”
“அதில்லை திவ்ஸ்…முதல் தடவையா அவனோட பேசினேன்…இதுக்கு முன்னாடி அவன் யாருன்னு கூட தெரியாது, அவன நேர்லையும் பாத்ததில்லை…அப்படி இருக்கும் போது, எனக்கு ஏன் அவனை அவ்ளோ பிடிச்சிருக்கு? அவன் ஃபோன வைக்கவான்னு சொல்லும் போது எனக்கு மனசே இல்லை….”

“அடக் கஷ்டமே!!!” திவ்யா நக்கலாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“என்ன திவ்யா சிரிக்கற? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…எங்க அம்மாகிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லலாம் தான்…ஆனா….ஒரு வேளை இதெல்லாம் முதல் முறையா நடக்கறதால, நான் எக்ஸைட் ஆகி இப்படி முடிவு பண்றேனோன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு…இது சரியா, இல்லையான்னு யோசிக்கவே முடியல…”

“இவ்ளோ தானா உன் சந்தேகம்? இது வரைக்கும் நீ எத்தனையோ பேர பாத்திருக்க, பேசியிருக்க.,..ஆனா, கல்யாணத்துக்காகன்னு பேசினது இது தான் முதல்முறைங்கறதால நீ எக்ஸைட் ஆகியிருக்கலாம்…அது இல்லைன்னு சொல்ல முடியாது…ஆனா, ஒருத்தங்களோட நமக்கு அலைவரிசை ஒத்து போச்சுன்னா தான், பேச்சே சுவாரசியமா இருக்கும், நமக்கும் அவங்கள பிடிக்கும்…எனக்கென்னவோ நீ இன்னொரு தடவை, கொஞ்ச நாள் கழிச்சு பாத்து பேசிட்டு முடிவு பண்ணலாம்னு தோணுது…”

“ஹ்ம்ம்…எப்படியும் அது நடக்கத் தான் போகுது…அவங்க இப்ப தான் ஃபோன் பண்ணி, பையனுக்கு பிடிச்சிருக்கு…ஒரு நல்ல நாளா பாத்து நாங்க உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க….அம்மா தான், என்கிட்டையும் அப்பா கிட்டையும் பேசிட்டு சொல்றேன்னு ஃபோன வச்சுட்டாங்க…”

“அப்புறம் என்ன? சீக்கரமே டும் டும் டும் தான்…சரி…நாம போய் பால் பாயாசத்த ஒரு பிடி பிடிக்கலாம்…வா…” மதுவின் கையை பற்றி இழுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா. அங்கு ஊரையே தூக்கும் அளவிற்கு, பால் பாயாசத்தின் மணம் வீசிக் கொண்டிருந்தது.

“என்ன ஆண்ட்டி? மது என்ன சொல்லப் போறான்னே தெரியாம, அதுக்குள்ள பால் பாயாசம் செஞ்சு முடிச்சிட்டீங்க?”

“ஏன்? என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா? என்ன மது?”

“அம்மான்னா அம்மா தான்…” என்றபடி தன் அம்மாவை கட்டிக் கொண்டாள் மது. இதை பார்த்த திவ்யா, “அடப்பாவிகளா…அப்புறம் என்னை எதுக்கு நடுவுல வரச் சொன்னீங்க? ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்சு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு!”

“ஹா ஹா…அப்படியில்லம்மா…கல்யாணம் முடிவாகப் போகுது…அதான் உடனே உன்னையும் வரச் சொன்னேன்…மது! இப்ப தான் அப்பா பேசினாரு…இந்த வார வெள்ளிக் கிழமையே பொண்ணு பாக்கறத வச்சுக்க சொன்னாரு…”

“ஏன்? அவரு வரமாட்டாராமா?”

“இப்பயே எப்படிமா வர முடியும்? கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் இருக்கும் போது தான் வருவாரு…அதான், உனக்கு நான் இருக்கேன்ல? அப்புறம் என்ன?”

’வெள்ளிக் கிழமைக்கு இன்னும் ஐஞ்சு நாள் தான் இருக்கு…’ என்ற நினைப்பே, அவளை என்னவோ செய்தது. ஒரே நொடியில், ஒரு வித பரபரப்பும், சந்தோஷமும், அச்சமும் ஒரு சேர மதுவை ஆக்ரமித்துக் கொள்ள, மாலை ரஞ்சித்தின் அழைப்புக்காக காத்திருக்கத் துவங்கினாள்.

******************************************************************
கண்ணீர் விட்டு அழுவதற்கு கூட தோன்றாமல் திக்பிரம்மை பிடித்ததை போல் நின்று கொண்டிருந்தாள் முகில். ’ஹய்யோ, பகவானே!!! இது என்ன சோதனை’ என்று சத்தம் போட்டு அரற்றிக் கொண்டிருந்தார் தனலட்சுமி.

“சார்…நான் உண்மையை சொல்லிடறேன்…அந்த பொண்ணு கீழ குதுக்கும் போது, நான் அங்க இருந்தது உண்மை…நான்…நான்…அவள காப்பாத்த முயற்சி பண்ணேன்…ஆனா..அவ…அவ…கீழ குதிச்சிட்டா…அவளை யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்…எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…”

“எது சொல்றதா இருந்தாலும் ஷ்டேஷன்ல வந்து சொல்லுங்க சார்…உங்கள ஷ்டேஷன்ல வச்சு விசாரிக்க ஆர்டர் இருக்கு…நீங்க சொல்ற மாதிரி யோக்கியமானவரா இருந்தா, இப்ப சொல்றத முன்னாடியே சொல்லியிருக்கனும்…அப்ப நல்லா கதை விட்டுட்டு, இப்ப வந்து சொன்னா என்ன அர்த்தம்? ஏதோ படிச்சவரா இருக்கீங்க, புரிஞ்சு உடனே வருவீங்கன்னு நானும் டீஸன்ட்டா பேசிட்டு இருக்கேன்…இல்லன்னா நடக்கறதே வேற…”

“முகில்…” அதற்கு மேல் எதுவும் பேச அவனுக்கு நா எழவில்லை. அவன் அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று, தலைகவிழ்ந்தவாறே, “அப்பா! ஏன்ப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க? நான் எந்த தப்பும் பண்ணலைப்பா…”

“அப்புறம் எதுக்குடா பொய் சொன்ன?” நெருப்பு துகள்களாய் வந்து விழுந்தது அவரது வார்த்தைகள்.

“அப்பா…வந்து…”

“உங்க பிரச்சனையெல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க…முதல்ல கிளம்புங்க…நீங்களா வந்தா நல்லாயிருக்கும்…”

ரஞ்சித் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் கதவை நோக்கி நகரவும், அதுவரை அமைதியாய் சிலைபோல் நின்றிருந்த முகில், திடீரென்று உயிர்ப்படைந்தைப் போல், “ஹய்யோ…ரஞ்சி…” என்று கதறிக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள்!

****
காவல் நிலையத்திற்கு ரஞ்சித் சென்ற ஒரு மணி நேரத்திலேயே, ஒரு வக்கீலுடன் காவல் நிலையத்தை வந்தடைந்தனர் ரஞ்சித்தின் அப்பாவும் முகிலும். அவர்களை பார்த்ததும், ஏற்கனவே எரிச்சலுற்றிருந்த பரத் மேலும் கொதிப்படைந்தார்.

“என்ன சார்? என்ன பிரச்சனை இப்போ? சந்தேகம் இருக்கு அவர் மேல…விசாரணை இன்னும் முடியல…அதுக்குள்ள வக்கீலோட வந்து நிக்கறீங்க? எப்படியும் ரெண்டு நாள் மேஜிஸ்ட்ரேட் கிட்ட ரிமாண்ட்ல வச்சு விசாரிக்க பெர்மிஷனுக்கு கோர்ட்டுக்கு தான போக போறோம்? அங்க வந்து காட்டுங்க…உங்க பவரையெல்லாம்…”

“என்ன சார் பேசறீங்க? சம்மந்தமே இல்லாத ஒரு ஆள பிடிச்சுட்டு வந்து விசாரிப்பீங்க…”

அதற்கு மேல் வக்கீலை பேச விடாமல் இடைமறித்தார் பரத், “சம்மந்தம் இருக்கா இல்லையான்னு நீங்க சொல்ல வேண்டாம்…எல்லாம் சம்மந்தம் இருக்கறதால தான் கொண்டு வந்து விசாரிச்சுகிட்டு இருக்கோம்!” என்று குரலை உயர்த்தி கத்தினார்.

“சார்…அவரு சொஸைட்டியில ஒரு நல்ல…”

“நிறுத்துங்க சார்…ச்சும்மா…மனுசன வேலை செய்ய விடாம…நானே ஒரு மணி நேரத்துல அனுப்பி வைக்கறேன்…நாளைக்கு ரிமாண்ட் கேட்டு கோர்ட்டுக்கு போகும் போது, பேசிக்கோங்க…உங்க சொஸைட்டி, அந்தஸ்த்து இதெல்லாம்…நடுராத்தியில ஒன்பது மாடி ஏறி மொட்டைமாடிக்கு போயிருக்கான்…பிரஸ்லட்ட அப்ப விட்டுட்டு, முன்னாடியே தொலைஞ்சிடுச்சுன்னு புழுகியிருக்கான்…அந்த பொண்ண இவன் தான் தள்ளிவிட்டான்ங்கறத கண்ணால பாத்த சாட்சி இருக்கு…இதுக்கு மேல என்ன சார் வேணும்?”

உறைந்து போய் நின்றிந்த ரஞ்சித் அப்பாவிடம், பரத், “சார்…எதுக்காக உங்க அருமை புள்ளை ராத்திரி பனிரெண்டு மணிக்கு மொட்டை மாடிக்கு போனாருன்னு நீங்களே வேணா கேட்டுப் பாருங்க...இன்னைக்கு ஒரு நாள் போகட்டும்…ஆர்டர் மட்டும் வரட்டும், அப்புறம் விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, உண்மை தானா வரும்…”

“முருகேசன்! அந்தாளோட கைரேகைய எடுத்துட்டு இவங்களோட அனுப்பி விடுங்க…”

சிறிது நேரத்திலேயே அவர்கள் நால்வரும், காவல் நிலையத்திலிருந்து காரில் மீண்டும் வீட்டிற்கு பயணப்பட்டனர்.

“ஹலோ ரஞ்சித்…நான் சுமன்...” வக்கீல் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். ரஞ்சித் பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், ஒரு தயக்கப் புன்னகையை மட்டும் புரியவும், முகில், “என்ன ரஞ்சி இதெல்லாம்? என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்களேன்…நிஜமாவே நீங்க முந்தாநேத்து ராத்திரி மாடிக்கு போனீங்களா?”

“ஹ்ம்ம்…ஆமா…”

“எதுக்கு???”

“ரஞ்சித்! ஒரு விஷயமும் மறக்காம, மறைக்காம தெளிவா சொல்லுங்க…” சுமன் இப்படி கேட்கவும், ரஞ்சித் அன்று நடந்த சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தான்.

“அன்னிக்கு நான் ஒரு பன்னெண்டு மணிக்கு மாடியில அந்த ரூம்ல நின்னுகிட்டு இருந்தேன்…”

முகில், “அதான் எதுக்குன்னு….” உடனே அவரை இடைமறித்த சுமன், “விடுங்க மேடம்…அவரு முழுசா சொல்லட்டும்…”

“அப்ப யாரோ அழுகற மாதிரி சத்தம் கேட்டுச்சு…ஏதோ உருள்ற மாதிரியும் சத்தம் கேட்டுச்சு…இன்னேரத்துல யாருன்னு, நானும் கதவை திறந்துட்டு மாடிக்கு போனேன்…அப்ப….அந்த பொண்ணு மாடி திண்டு மேல ஏறி நின்னுகிட்டு, ஏதோ புரியாத மாதிரி என்னவோ பேசிகிட்டு அழுதுட்டே இருந்தா…நானும் உடனே அவ நின்னுட்டு இருந்த இடத்துக்கு ஓட ஆரம்பிச்சேன்…அவ கையில ஒரு மெழுகுவர்த்தி வச்சிருந்தா…நான் போய், அவள இறங்கு இறங்குன்னு சொல்லி, அவ கையை பிடிச்சு கீழ இறக்கப் பாத்தேன்…அப்ப அவ கை தவறி அந்த மெழுவர்த்தி தீ என்னை சுட்டுடுச்சு…நான் அசந்த அந்த ஒரு நொடியில என் பிடியிலிருந்து திமிறி, ’அம்மா நான் வந்துட்டேன்ம்மா…’ ன்னு கத்திகிட்டே, அவ கீழ குதிச்சிட்டா…இவ்ளோ தான் நடந்துச்சு…எனக்கு ரொம்ப படபடப்பா ஆயிட்டதால, நான் இதை யார்கிட்டையும் சொல்லலை… மறுபடியும் வீட்டுக்கு வந்து பேசாம படுத்துட்டேன்…”

“எல்லாம் சரிதான்டா…ஆனா, முதல்ல அந்த நேரத்துல எதுக்காக நீ அங்க போன?”

“அப்பா…அது…சும்மா தான்ப்பா…காத்து வாங்கலாமேன்னு…” ரஞ்சித் தடுமாறிய விதத்திலேயே மிக நன்றாக தெரிந்தது அவனுக்கு பொய் சொல்ல வராதென்று.

“ரஞ்சித்! நீங்க எதுக்கு போனீங்கன்னு சொன்னா தான் இந்த கேஸுக்கு உதவியா இருக்கும்…”

“அதான் சொன்னேனே சார்…காத்து வாங்க தான்…”

ரஞ்சித் அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “பாருடா…இந்த பொண்ணு மூஞ்சிய பாரு…எவ்ளோ பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்னு தெரியுமா? காத்து வாங்க ஒன்பது மாடி ஏறிப் போனேன்னு சொன்னா போலீஸ்காரன் நம்புவானாடா? அவங்கள விடு, நானே முதல்ல நம்ப மாட்டேன்…ஒரு மாடி ஏர்றதுக்கு கூட லிஃட்ல போறவன்…நைட்டு லிஃப்ட்டும் ஆஃப் பண்ணி வச்சிருக்கறப்போ, ஒன்பது மாடி ஏறிப் போனியா?”

ரஞ்சித் பதில் சொல்லாமல் இருக்கவும், கெஞ்சும் பாவனையில் முகில் அவனை பார்த்தாள்.

சுப்பிரமணியம் பொறுமையிழந்தவராய், “இப்ப சொல்ல போறியா இல்லையாடா? அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?”

“அப்பா!!! அவ யாருன்னே எனக்கு தெரியாதுப்பா…”

“அப்ப சொல்லுடா!!! நடுராத்திரியில உனக்கு டெரெஸ்ல என்ன வேலை?”

“ப்ளீஸ்ப்பா…அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…என்னால…என்னால…சொல்லமுடியாது…”


[தொடரும்]

Wednesday, September 16, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 4

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3

தண்ணீருக்குள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த தங்க நிற மீண்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. ஆனால் அவள் மனம் மட்டும் அந்த மீண்களில் ஓட்டத்தை போல் எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது.

முதன்முறை ரஞ்சித்திடன் தொலைபேசி முடித்து ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. அவனுடன் பேசியதை அசைப்போட்டுக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அவளையும் அறியாத ஒரு மெல்லிய புன்னகை அரும்பியிருந்தது. முதல் முறை பேசும் போதே, மிக தெரிந்தர்வர்கள் போல சகஜமாக கிட்டதட்ட ஒரு மணி நேரம் உரையாடி இருந்தனர். எதேதோ எண்ணஓட்டங்களின் இடையே, ’மது…மது…’ என்று அருகிலேயே ஒலித்த அவளது அம்மாவின் குரல், அவள் காதுகளை அடைந்தாலும், மூலையை அடையவில்லை.

“என்னடி பண்ணிட்டு இருக்க?” அவள் தோலை பிடித்து அம்மா உலுக்கவும், நிகழ்காலத்துக்கு வந்தாள் மதுவந்த்தி.
“எப்பம்மா வந்த?”
“எப்பவா? நல்லாயிருக்கு போ…உன்னை நம்பி வீட்டை விட்டுட்டு போனா, திருடன் வந்தா கூட இப்படியே உக்காந்திருப்ப போல இருக்கு?”
“அம்மா…வந்து…அந்த பையன் ஃபோன் பண்ணான்”
“எந்த பையன்?”
“அதாம்மா….அந்த ரஞ்தித்…”
“ஓஹ்ஹ்…அடடா… சாய்ந்தரமா தான் பண்ணுவாங்கன்னு நினைச்சு நான் வேற இன்னேரம் பாத்து கோயிலுக்கு போய்ட்டனே?”
“ஹ்ம்ம்…ஏன்? இருந்திருந்தா நீ பேசியிருப்பியாக்கும்?”
“சரி…சரி…சொல்லு….என்ன சொன்னாரு?”
“ஹ்ம்ம்…என்ன சொன்னாருன்னா? என்னென்னவோ சொன்னாரு…” இதை சொல்லி விட்டு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக சிரித்தாள் மது.
“என்ன மது இது? விளையாடாம சொல்லு…”
“போம்மா…என்னவோ பேசினோம்…சரியா ஞாபகம் இல்ல….மறந்துடுச்சு…”
“என்னது மறந்திடுச்சா? சரி….நான் போய் சமையல பாக்கறேன்…குளிக்காம இன்னும் என்ன பண்ற? போய் சீக்கரமா குளி போ…”

’என்ன அதிசயம், அம்மா அதுக்குள்ள விட்டுடாங்களே…’ என்று நினைத்தபடி, அவளது அறைக்குள் நுழைந்தாள் மது. குளியறைக்குள் அவள் நுழைந்தது தான் தாமதம், உடனே மதுவின் அம்மா யாரையோ தொலைபேசியில் அழைத்தார்.

“ஹலோ!”
“என்ன கொரங்கு? திடீர்ன்னு ஃபோன்?” மறுமுனையில் உற்காத்துடன் ஒரு குரல் ஒலிக்க,
“ஹலோ…மது இல்லை…நான் ஆண்ட்டி பேசறேன்…”

“அச்சசோ…சாரி ஆண்ட்டி….நான் மதுன்னு…”

“போதும் போதும்…உன் நடிப்பெல்லாம் எனக்கு தெரியும்…சரி…சரி…ஒரு முக்கியமான விஷயம்…சீக்கரம் கேளு…உன் ஃப்ரெண்ட் ரெண்டு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுவா…அதுக்குள்ள சொல்றேன்…கேட்டுக்கோ…”

“சொல்லுங்க ஆண்ட்டி…என்ன ஆச்சு?”

“மதுவுக்கு ஒரு மாப்ளை பாத்துருக்கேன்னு சொன்னேல திவ்யா?”

“ஆமா…ஃபோட்டோ கூட காமிச்சீங்களே?”

“ஆமா…அவரே தான்…ஜாதகம் எல்லாம் சேந்திருக்கு…இவ ஃபோட்டோவும் அவங்க வீட்டுக்கு அனுப்பி, அவங்களுக்கும் பிடிச்சு போச்சு…இன்னிக்கு மாப்ளை ஃபோன் பண்ணி பேசுவாருன்னு சொல்லிருந்தாங்க….நான் கோவிலுக்கு போன நேரமா பாத்து ஃபோன் பண்ணிட்டாரு திவ்யா…”

“அச்சச்சோ….இப்ப என்ன? அவ என்ன பேசினான்னு உங்ககிட்ட சொல்ல மாட்டேன்னு பிகு பண்றா…அத உங்களுக்கு கேட்டு சொல்லனும்…அவ்ளோ தான?”

“எப்படிமா? உன் ஃப்ரெண்ட பத்தி ரொம்ப நல்லா தான் தெரிஞ்சு வச்சிருக்க?”

“அவள பத்தி எனக்கு தெரியாதா ஆண்ட்டி? நீங்க மட்டும் ஒரு அரை மணி நேரம் கோவில்ல இருந்து லேட்டா வந்திருந்தீங்கன்னா, அவளே எனக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பா…இப்ப மட்டும் என்ன? நீங்க அப்படியே கொஞ்சம் கண்டுக்காத மாதிரி இருங்க…நான் ஃபோன் பண்ணி, அவகிட்ட பேசிட்டு உங்ககிட்ட விஷயத்த கக்குறேன்…”

“ஹய்யோ…திவ்யான்னா, திவ்யா தான்…நீ சாய்ந்தரம் வீட்டுக்கு வா…பால் பாயசம் செஞ்சு வைக்கறேன்…”

“என்ன ஆண்ட்டி? உங்களுக்காண்டி இது கூட செய்ய மாட்டனா?”

சொன்னதோடு நில்லாமல் உடனே மதுவை அழைத்தும் விட்டாள் திவ்யா. திவ்யா ஹலோ சொன்னது தான் தாமதம், உடனே மது, “ஏதேது…ரொம்ப சரியான டைம்ல உனக்கு மூக்கு வேர்த்திருக்கு…உண்மையை சொல்லு…எங்கம்மா தான?”

“அடிப்பாவி! உனக்கெப்படி தெரியும்? ஆண்ட்டி உங்கிட்டையே சொல்லிட்டாங்களா? அம்மாவும் பொண்ணும் நல்லா தான் நாடகம் ஆடறீங்க…”

மது பலமாக சிரித்துக் கொண்டே, “இல்லை இல்லை…அம்மா எங்கிட்ட சொல்லலை…நானே தான் கெஸ் பண்ணேன்…எங்கம்மாவ பத்தி எனக்குத் தெரியாதா? என்னவோ தெரியல…அம்மா இந்த சம்பந்தத்துல ரொம்பவே ஆர்வமா இருக்குற மாதிரி தெரிஞ்சுது…அதான்…சும்மா…அம்மாவ கலாய்க்கலாம்னு நான் எதுவும் சொல்லலை…”

“பாவம் ஆண்ட்டி, உங்கிட்ட மாட்டிட்டு முழிக்கறாங்க….சரி….சரி…சொல்லு, என்ன சொன்னாரு உன் ஆளு? முதல்ல இதுக்கு பதில் சொல்லு பிடிச்சிருக்கா, இல்லையா?”“நீ வீட்டுக்கு வாயேன்…உன்கிட்ட நேர்லையே சொல்றேன்…”

“இந்த சுத்தி வளைக்கற வேலையெல்லாம் வேண்டாம்…வீட்டுக்கு எப்படியும் வரத் தான் போறேன்…அதுக்கு முன்னாடி ஒத்த பதிலா சொல்லு…யெஸ்ஸா? நோவா?”

“யெஸ் தான்…ஆனா….எனக்கு தெரியல…”

“என்ன லூஸ் உளர்ற?”

“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…என்கிட்டையே எனக்கு கன்ஃபூஷன்…நீ வீட்டுக்கு வாயேன்….சொல்றேன்…”

**********************************************************
“முருகேசன்!!! முருகேசன்!!! எங்க போய்ட்டீங்க?”

“சார்! ஒரு நிமிஷம் சார்…இதோ வந்துட்டேன்…சொல்லுங்க சார்…”

“அந்த மெழுகுவர்த்தியை லேபுக்கு அனுப்ச்சீங்களே, ரிபோர்ட் வந்துடுச்சா?”

“அப்பவே வந்துடுச்சு சார்…உங்க டேபிள் மேல தான் வச்சிருக்கேன்…”

“ஹ்ம்ம்…”

அந்த லேப் ரிப்போர்ட்டை புரட்டியபடியே, “நான் நினைச்ச மாதிரியே தான் இருக்கு…ரெண்டு பேரோட கைரேகை இருக்குன்னு போட்ருக்கான்…”

“மெழுகுவர்த்தி தான? எத்தன பேர் ரேகை வேணா இருக்குமே சார்?”

“எல்லாம் ஒரு கெஸ் தான்…எனக்கென்னவோ அந்த கைரேகைல ஒன்னு, அந்த பொண்ணோடதும், இன்னொன்னு கொலைகாரனோடதுமா தான் இருக்கும்னு தோணுது… ஆனா, ஒன்னு மட்டும் தான் புரியல… அந்த மெழுகுவர்த்திய சைஸ பாத்தா ஒரு பதினஞ்சு இல்ல இருபது நிமிஷம் எறிஞ்சிருக்க மாதிரி இருக்கு…அந்த நேரத்தில கரண்டும் இருந்திருக்கு…மொட்டை மாடியில லைட் எல்லாம் வேலை செய்யுது…அப்புறம் எதுக்கு மெழுகுவர்த்தி எடுத்துட்டு வந்தாங்க?”

அடுத்த அறையில் இருந்து வந்த அந்த வயதான சப் இன்ஸ்பெக்டர், “என்ன சார், அதை அந்த நேரத்துல தான் அங்க கொண்டு வந்துருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? வேற எப்பவோ, யாரோ போட்ட மெழுகா கூட இருக்கலாம்ல?”

“இருக்கலாம் தான்…இருந்தாலும் ஏன் நான் சொல்ற மாதிரி இருக்க கூடாது? இது ஒரு மாதிரியான out of box thinking சார்…”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க….என் சர்வீஸ்ல எத்தனையோ பாத்ததால சொல்றேன்…குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி இது கொலை தான்னு முடிவு பண்ணிட்டு, அந்த கோணத்துலையே யோசிச்சா, இப்படி தான் தேவையில்லாம தோணும்…”

“எல்லா கோணத்திலையும் விசாரிக்கனும் சார்…முருகேசன், லேப்புக்கு அந்த பொண்ணோட கைரேகை அனுப்பி வைங்க…அது மேட்ச் ஆகுதான்னு பாப்போம்…”

ஒரு ஆயாசப் பெருமூச்சை உதிர்த்தபடி, முகத்தில் எரிச்சலோட மீண்டும் அடூத்த அறைக்குள் சென்றுவிட்டார் சப் இன்ஸ்பெக்ட்டர்.
அவரையும், பரத்தையும் மாறி மாறி பார்த்தபடி முருகேசன் நின்றிருக்க, பரத், “என்ன முருகேசன்? பதிலையே காணோம்?”

“ஹாங்….சரி…சரி சார்…அனுப்சர்லாம் சார்…”

“ஆமா…அந்த ஃபங்ஷன் வீடியோவ கேட்டிருந்தனே, அத கிடைச்சுதா?”

“அது கிடைச்சுது சார்…போட்டு பாத்தோம்…ஒன்னும் பெருசா இருக்கற மாதிரி தோணல…”

“என்ன உங்களுக்கும் யெஸ்.ஐ வியாதி ஒட்டிகிச்சா? என்ன கிறுக்கன்னு சொல்றாறா அந்த ஆளு?”

“ச்சே…ச்சே…இல்லை சார்…”

“இருக்கட்டும், இருக்கட்டும், கொலைகாரன கையும் கலவுமா பிடிச்சப்புறம் என்ன சொல்றீங்கன்னு பாக்கத் தான போறேன்? வீடியோவ பாத்தன்னீங்களே? முழுசாவா பாத்தீங்க? “

“இல்லை சார்…அப்படியே ஓட்டி ஓட்டி தான் பாத்தோம்…சும்மா ஏதோ பாட்டு, டான்ஸ் அவ்ளோ தான் இருக்கு…அந்த பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருக்கற மாதிரி ஒரே ஒரு இடத்துல தான் வருது…வேற எதுவும் இல்லை…”

“எங்க போடுங்க பாக்கலாம்…”

உணவுப் பொட்டலத்தை பிரித்து வைத்துக் கொண்டு உன்னிப்பாக அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே உண்ண ஆரம்பித்துவிட்டார் பரத். ஆனால் அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்கள் முகத்தில் அவருக்கு இருந்த அளவிற்கு ஆர்வம் இல்லை. அடுத்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சப் இன்ஸ்பெக்டர், “யோவ் முருகேசு…இங்க வாய்யா…” என்றழைக்கவும், அங்கிருந்து நகர்ந்து அடுத்த அறைக்குள் நுழைந்தார் முருகேசன்.
“என்ன சார்?”

“அந்தாளு என்ன லூசா? அதான் நாம பாத்துட்டோம்னு சொல்றோம்ல, அப்புறம் என்ன? அதுவும் கொலை நடந்தது பன்னென்டு மணிக்கு, அந்த ஃபங்ஷன்ல எல்லா பயலும் தின்னுட்டு கூத்தடிச்சிட்டு பத்து மணிக்கே நடைய கட்டிட்டானுவ…அப்புறம் என்னத்தைய்யா இந்த வீடியோவுல இருக்க போகுது? சும்மா…நேரத்த கடத்திகிட்டு்…தற்கொலை தான்னு ஃபைல க்லோஸ் பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டிய கேஸு இதெல்லாம்…நான் என் சர்வீஸ்ல எத்தனை பாத்திருக்கேன்…சின்ன பய…படிச்சி பரிட்ச்சை எழுதிட்டு நேரா வந்துடறானுங்க…அனுபவம் பத்தல… "

முருகேசன் அவர் சொன்னதை ஆமோதிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் சங்கடத்தில் நெளியவும், அதே சமயம், “மாட்னான்டா!!!” என்ற பரத்தின் உரத்த குரல் அந்த அறைக்குள்ளும் ஒலித்தது.

“எவன்ய்யா மாட்னான்? வா…போய் பாப்போம்…”

அலட்சியமாக முன் அறைக்குள் நுழைந்த சப் இன்ஸ்பெக்டரும், முகத்தில் கேள்விக் குறியோடு நுழைந்த முருகேசன் இருவருமே, திரையில் தெரிந்த காட்சியை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்று விட்டனர்.
திரையில் ஓடிக் கொண்டிருந்த படம் ஓரிடத்தில் பாஸ் செய்யப்பட்டு, ஜூம் செய்த நிலையில் நின்றிருக்க, அதில் தெளிவாக தெரிந்தது, ரஞ்சித் கையில் தொங்கிக் கொண்டிருந்த ப்ரேஸ்லட். மீண்டும் அந்த காட்சியை பரத் உயிர்பிக்க, திரையில் ரஞ்சித் சிரித்தபடி முகிலுடைய வாயில் தன் கையில் இருந்த கற்கண்டை போட்டபடி கதவின் அருகே சென்று கொண்டிருந்தான். முகில் செல்வதற்காக, கதவை திறந்து பிடித்துக் கொண்டிருந்தவனின் கையில் அப்போதும் மின்னிக் கொண்டிருந்தது அந்த ப்ரேஸ்லட்! திரையின் ஓரத்தில் மணி 10:02:55, 10:02:56 என்று அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

[தொடரும்]

Thursday, September 10, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 3

பாகம் 1 , பாகம் 2

விளம்பர பலகைகளால் ஏற்படும் ஆபத்துகள் – ஒரு அலசல்
மதுரை மூன்றுமகடியை சேர்ந்த மகேஷ் (25) என்ற வாலிபர், இரவு ஷிஃட் முடிந்து தனது டி.வி.எஸ் 50யில் வீட்டிற்க்கு திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் ஒரு மணியளவில், திருநகர் சாலையில் கேட்பாறற்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த ஒரு பெரிய விளம்பர பலகையில் மோதி, பெரும் விபத்துக்கு உள்ளானார். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள, மகேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதாக…

“டேய்!!!”

“என்னமா?”

“காலங்காத்தால இந்த ஆக்ஸிடன்ட் நியூஸ் எல்லாம் தேவையா? அத சத்தமா வேற படிச்சிகிட்டு இருக்கான்! இந்தா புடி காபியை”

“ஏன்மா? முகில் எங்க?”

“ஏன்ப்பா? நான் குடுத்தா வாங்கிக் குடிக்கமாட்டியோ?”

“ம்மா! ஏம்மா? சும்மா கேட்டேன்…குடுங்க…” ரஞ்சித் காபியை வாங்கவும், அப்போது தான் அவன் கையை கவனித்த தனலட்சுமி, “ப்ரேஸ்லட் எங்கடா?”

அப்போது தான் கையை பார்த்தவன், “பெட்ல தான் கிடக்கும்…அது அப்படி தான்…அப்பப்ப கலண்டுக்கும்…”

“எவ்ளோ அசால்ட்டா சொல்றான் பாரு? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா ஒன்னா…என்னடா இது கைல, தீக்காயம் மாதிரி…என்ன பண்ண?”

“தெரிலமா…எதோ பட்டிருக்கும்…”

“சமயக்கட்டு பக்கமும் வரதில்லை….ஏன்டா? சிகரெட், கிகரெட் எதாவது…”

“ஐயோ!! குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணாதீங்க…முகில் இன்னேரத்துல சமையல்ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கா? முதல்ல நீங்க போய் பாருங்க…”“ஹ்ம்ம்…என்னவோ!” முனுமுனுத்தபடியே தனலட்சுமி சமையலறையை நோக்கி செல்லவும், வாசல் அழைப்பு மணியின் சத்தம் ஒலித்தது.

“அம்மா! யாருன்னு பாருங்க…இன்னேரத்துல யாரு? பாலும் வந்தாச்சு…பேப்பரும் வந்தாச்சு” என்றவாறு காபியை குடுக்க போனவன், வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும், மீண்டும் அதை மேஜை மீதே வைத்தான்.

“யார் வேணும்?” பதட்டமான குரலில் தனலட்சுமி வினவ, ரஞ்சித் எழுந்து நின்று, “யார் வேணும் சார்?”

“இங்க முகில்ங்கறது?”

“என் வைஃப் தான்…சொல்லுங்க…என்ன விஷயம்?”

ரஞ்சித் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர் பரத். அவர் பின்னோடு, இரண்டு கான்ஸ்டபிள்களும். அதற்கு மேல் வேறு வழியில்லாமல் ரஞ்சித்தும் நாற்காலிகளை காட்டி, “உக்காருங்க சார்…” என்று உபசரித்தான்.

அதற்குள் சமையலறையிலிருந்து வெளிவந்த முகில், “என்னது?” என்பதை போல் ரஞ்சிதிற்கு சைகை செய்ய, அவனும் தெரியாது என்பதை போல் பதில் சைகை செய்தான்.

“உக்காரதுக்கெல்லாம் நேரம் இல்லை மிஸ்டர்….”

“ரஞ்சித்…”

“ரஞ்சித்…காலையில இருந்து நீங்க யாரும் வெளிய போலையா என்ன?”

“ஏன் சார்? ஏன் கேக்கறீங்க?”

“இந்த அபார்ட்மெண்ட்ல ஒரு பொண்ணு, தற்கொலை பண்ணியிருக்கு….அந்த விஷயமா தான்…”

“என்னது?” அதிர்ச்சியில் ஒரே சேர ஒலித்தது தனலட்சுமியின் குரலும், முகிலின் குரலும்.

“யார் சார்?”

“மதுன்னு ஒரு பொண்ணு…அது விஷயமா தான் உங்ககிட்ட விசாரிக்கலாம்னு”

“சொல்லுங்க சார்…எங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷன நாங்க சொல்றோம்…”

“முருகேசன், அதை எடுங்க…”
“இந்த ப்ரேஸ்லட்….”

ரஞ்சித், “என்னது தான் சார்…இது எப்படி…? உங்ககிட்ட…?”
“இப்ப தான் காணமேன்னு சொல்லிட்டு இருந்தோம்…” இது தனலட்சுமி.

“மேல மாடியில கிடந்தது”

“என்ன மாடியிலையா? ஒரு வேளை நேத்து பார்ட்டியில கலண்டு விழுந்திருக்குமோ? கொஞ்சம் லூசாயிடுச்சு, அடிக்கடி இப்படி தான் கலண்டுடும்…எப்படியோ, ரொம்ப தாங்க்ஸ் சார்…” என்றபடி அதை வாங்குவதற்காக ரஞ்சித் கையை நீட்ட,
“சாரி ரஞ்சித்…இதை இப்ப குடுக்க முடியாது…அந்த பொண்ணு மாடியில இருந்து விழுந்து தான் தற்கொலை பண்ணியிருக்காங்க…இது போக மாடியில கிடச்ச சில பொருள்களும் எங்க விசாரணைக்கு தேவைப் படுது…”

இன்ஸ்பெக்டர் இப்படி சொல்லவும், மூவர் முகத்திலும் ஈயாடவில்லை, ஆனால் ரஞ்சித் முதலில் சமாளித்துக் கொண்டு, “அதனால என்ன சார்…பரவாயில்லை…நீங்க விசாரணை முடிஞ்சே குடுங்க…ஆனா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க…என் மாமனார் கல்யாணத்துல போட்டது…” என்ற நகைத்தபடி பதிலளித்தான்.

பரத்தும் சிரித்தவாறே, “அப்படீன்னா இத கீழ போட்டதுக்கே உங்களுக்கு காத்துட்டு இருக்குன்னு நினைக்கறேன்…கவலைபடாதீங்க…எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் குடுத்தர்றோம்…வேற எதாவது விசாரணைன்னா, உங்கள கூப்பிட வேண்டி வரும்…கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க…”

“ஷ்யூர் சார்…கண்டிப்பா…”

அவன் கையை பிடித்து குலுக்கியபடி இன்ஸ்பெக்டர் பரத், “ஓகே மிஸ்டர் ரஞ்சித்….பாப்போம்” என்றபடி கதவை நோக்கி நகரவும், அந்த இரு கான்ஸ்டபிள்களும், அங்கு நடப்பதை நம்பமுடியாதது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அவர் பின்னோடு சென்றனர்.

“என்ன சார்? ஒன்னுமே சொல்லாம வந்துட்டீங்க?” முருகேசம் வினவவும்

“வேற என்ன பண்றது முருகேசன்? இந்த ப்ரேஸ்லட்ட மட்டும் வச்சுட்டு என்னத்த பண்ண சொல்றீங்க? பாப்போம்…வேற எதாவது கிடைக்குதான்னு…ஆமா, வேற எதாவது இருந்துச்சா அங்க பக்கத்துல?”

“ஆமா சார்…ஒரு மெழுகுவர்த்தி மாடி திண்டுக்கு பக்கத்துலையே கிடந்தது…”

“சரி…லேபுக்கு அனுப்சிடுங்க…அந்த செக்யூரிட்டி எங்க?”

“இங்க தான் சார்…ஆபிஸ் ரூம்ல உக்கார வச்சிருக்கேன்…”
அதற்குள் மூவரும் கீழ்தளத்தில் அமைந்திருந்த அலுவலக அறையை அடைந்தனர். அங்கு பாதி தூக்கத்தில் அமர்ந்திருந்த அந்த செக்யூரிட்டி, அவர்களை பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.

அங்கிருந்த மேஜை மீது அமர்ந்தவாறே, “உக்காருங்க…உக்காருங்க…ஆமா, இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு செக்ரட்ரின்னெல்லாம் யாரும் இல்லையா?”

“இருக்காங்க சார்…இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாரு…ராமசாமின்னு பேரு…இப்ப தான் காபி குடிச்சிட்டு வரேன்னு வீட்டுக்கு போயிருக்காரு…”

“ஹ்ம்ம்…மறுபடியும் ஒரு தடவை நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க…என்ன பாத்தீங்க…”

“ஞாபகப்படுத்திக்கவே வேண்டாம் சார்…இன்னும் அப்படியே கண்ணு முன்னாடி இருக்கு…நான் நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தேன்…திடீர்ன்னு அம்மாஆஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டுச்சு…திடுக்குன்னு முழிச்சு எந்திருச்சு, அந்த கன்னாடி கூண்டு வழியா பாத்தா, ஒரு பொண்ணு சரியா நாலாவது மாடி பக்கத்துல கீழ விழுந்துகிட்டே இருக்கா…நீளமா விரிச்சு விட்ட முடியெல்லாம் காத்துல அப்படி பறக்குது…என்னடான்னு மேல பாத்தா…அங்க ஒரு ஆளு, கீழ பாத்துகிட்டே நின்னுட்டு இருக்கான்…மாடி பக்கம் ஓடி போறதுக்குள்ள, அந்த ஆள் எப்படியோ கீழ இறங்கிட்டான்…”

“மேல நிக்கறவங்கவள இங்கிருந்து பாத்தா தெரியுமா என்ன?”

“யாருன்னெல்லாம் தெரியாது சார்…ஆம்பளையா பொம்ளையான்னு முடி, ட்ரெஸ் வச்சி சொல்லலாம்…அதுவே உத்து பாத்தா தான் தெரியும்…”

“ஹ்ம்ம்…அப்ப சுமார் எத்தனை மணியிருக்குனு ஞாபகம் இருக்கா?”

“நான் மணியெல்லாம் பாக்கலை சார்…”

காண்ஸ்டபிள் உடனே, “நமக்கு தகவல் கிடைச்சப்போ, பன்னென்டரை சார்…”

உடனே அந்த செக்யூரிட்டி, “சார்!!! இப்ப தான் ஞாபகம் வருது…அந்த பொண்ணு விழுகறத நான் எழுந்து பாத்த போது, டங் டங்ன்னு மணியடிச்சுது…சரியா பன்னென்டு மணி…ஆமா…பன்னெண்டு தான்…உறுதியா சொல்லுவேன்…”

“ஹ்ம்ம்…சரி, நீங்க போலாம்…போய் உங்க அப்பார்ட்மெண்ட் செரட்ரிய பாக்கனும்னு சொன்னேன்னு சொல்லுங்க…”

“வணக்கம்! நான் தான் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி…ராமசாமி!” கைகளை கூப்பியபடி, போலி புன்னகையுடன் அந்த அறைக்குள் நுழைந்தார் ராமசாமி.

“சொல்லுங்க…உங்களுக்கு நான் என்ன பண்ணனும்?” அதே சிரிப்போடு ராமசாமி இப்படி கேட்கவும், பரத், “ஒன்னும் இல்லை…உங்களுக்கு தெரிஞ்ச தகவல் மட்டும் சொன்னா போதும்…அந்த பொண்ணோட சித்தி எத்தன வருஷமா இங்க இருக்காங்க? சொந்த வீடு தானா? இல்லை வாடைக்கு இருக்காங்களா? பொதுவா அவங்க எப்படி? அவங்கனால பிரச்சனை எதாவது…?”

“அப்படியெல்லாம் இல்லை சார்…அவங்க புருஷன் ரொம்ப வருஷமா குவைத்துல இருக்காரு…இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு…ஒரே ஒரு தடவை தான் அந்தம்மா வீட்டுக்காரர் இங்க வந்திருக்காரு…அப்பவே இந்த பொண்ணும் வந்திருந்துச்சு…மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் பெருசா இல்லை….ஆனா…”

“என்ன ஆனா? சொல்லுங்க…”

“அந்தம்மா கொஞ்சம் ஒரு மாதிரி…புருஷன் வேற இங்கில்லையா? கொஞ்சம் அப்படி இப்படின்னு இங்க ஒரு பேச்சு…அவ்ளோ தான்…”

“அந்த பொண்ணு? அத பத்தி எதாவது தெரியுமா?”

“இதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு மூணு தடவை வந்திருக்கு…ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வந்திருந்தது…எப்பவும் ஒரு மாதிரி மயக்கமா இருக்கற மாதிரி தான் பாக்கும்…எனக்கென்னவோ ட்ரக் அடிக்டுன்னு தோணுது…”

ஒரு ஆயாச பார்வையை உதிர்த்தபடி, “சரி ராமசாமி சார்! நீங்க இப்ப கிளம்பலாம்…நான் வேற எதாவது வேணும்ன்னா சொல்லி அனுப்பறேன்…”

“இல்லை சார்…நான் வேணா இங்கயே இருக்கேன்…ஒன்னும் பிரச்சனை இல்லை…”

“இல்லை சார்…நாங்க இன்னும் சில பேத்த விசாரிக்க வேண்டியது இருக்கு…அதனால…நீங்க…ப்ளீஸ்…”

“அப்ப உங்க இஷ்டம்…” கையை கூப்பி ஒரு வணக்கத்தை போட்டபடி அங்கிருந்தி சென்றார் ராமசாமி.

ராமசாமி சென்றவுடன், கதவருகே காத்து நின்று கொண்டிருந்த ராணி ஏதோ முனுமுனுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

“நீ தான் ராணியாம்மா?”
“ஆமா சார்…”
“இங்க தான் தங்கியிருக்கியா?”
“இல்லை சார்…நான் பக்கத்து ஏரியா…இங்க ஐஞ்சாறு வீட்ல வேலை செய்யறேன்….அதனால நாள் பூரா இங்கிட்டு தான் இருப்பேன்…”

“ஹ்ம்ம்…அந்த செக்ரட்டரி சொன்னதெல்லாம் கேட்டியா?” நகைத்தபடி பரத் கேட்ட விதமே, ராமசாமி பேசியதை கேட்டு வெளியே நின்று கொண்டிருந்த ராணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடுத்ததை அவர் பார்த்துவிட்டார் என்று சொல்லாமல் சொல்லியது.

“கடங்காரன்…அயோக்கியபய…பொம்பளைன்னாலே அத்தனை இளப்பம் அவனுக்கு…”

“ஏம்மா? இப்படி ஒரு கோவம்?”

“பின்ன என்ன சார்? இந்தாளு கல்லுக்கு சீலை கட்டி வச்சிருந்தா கூட போய் மோப்பம் பிடிப்பான்…அப்படி ஒரு வெட்கங்கட்டவன்…அந்தம்மா ஏதோ புருஷம் கூட இல்லாம ஒத்த பொம்பளையா இருக்க போக, இந்த மாதிரி ஆளுககிட்டெல்லா விலகியே தான் இருப்பாங்க…அதனால, சும்மா இவனே இப்படி ஒரு பொய்யை சொல்லிட்டு திரியறான்….அந்தம்மா கேட்டா எத்தன மனசு சங்கடப்படும்?” ராணி உண்மையாகவே வருத்தப்பட, பரத், “சரி…அந்த பொண்ண பத்தி ஏதோ சொன்னாரே?”

“நான் அந்த பொண்ண இதுக்கு முன்னாடி பாத்ததில்லை சார்…நான் வேலைக்கு சேந்தே ஆறு மாசம் தான் ஆகுது…ரொம்ப நாள் கழிச்சு அக்கா பொண்ணு வீட்டுக்கு வரான்னு சொன்னாங்க…அந்த பொண்ணு வந்ததுல இருந்தே சரியாவே பேசலை…உம்முன்னு தான் இருந்துச்சு…வந்து ரெண்டே நாள் தான்…அதுக்குள்ள இப்படி பண்ணிகிடுச்சு…”

“ஓஹோ…வேற எதாவது, அந்த பொண்ணுக்கும் அவங்க சித்தி, இல்லை வேற யாருக்கும் சண்டை, சச்சரவு எதாவது?”

“அப்படி எல்லாம் இல்லை சார்…ஹாங்…இப்ப தான் ஞாபகம் வருது…அந்த வீட்டம்மா ரொம்ப நாள் முன்னாடி சொன்னது…இந்த பில்டிங்குல வேலைக்கு சேந்த புதுசுல, செக்ரட்டரி கடங்காரன் சும்மா சும்மா என்னை ஒரச்சிட்டு திரியறான்னு அந்தம்மா கிட்ட ஒரு நாள் பொலம்பிட்டு இருந்தேன்…அப்ப சொன்னாங்க…எங்க அக்கா பொண்ணு போன தடவை வந்தப்போ இப்படி தான் அவகிட்ட வாலாட்டினான்….ஒரே அறை, அவன பளார்ன்னு அறைஞ்சிட்டான்னு சொன்னாங்க….”

“ஓஹ்….போன தடவைன்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடி கடைசியா வந்தப்பவா?”

“அதெல்லாம் தெரியாது சார்…பொதுவா போன தடவைன்னு தான் சொன்னாங்கன்னு…”

“ஹ்ம்ம்…அப்ப சந்தேக லிஸ்ட்ல ரெண்டாவது பேர் ராமசாமி…”

“ரெண்டாவது பேரா? அப்ப முதல் பேர் யாரு சார்? தற்கொலைன்னு இல்ல பேசிக்கறாங்க?” ஆர்வத்துடன் ராணி கேட்கவும், “நீ இப்ப போலாம்” என்றபடி வாசலை நோக்கி கையை காண்பித்தார் பரத்.

ராணி அங்கிருந்து அகன்றதும், முருகேசன், “அப்ப இன்னும் அந்த ப்ரேஸ்லட் ஆள விடலையா சார்?”

“எப்படி விட முடியும்? அவன் மேல தான் எனக்கு ஜாஸ்தி சந்தேகமா இருக்கு!”

[தொடரும்]

Sunday, September 6, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 2

பாகம் 1

“இவங்க அக்கா பொண்ணு தான்…லீவுக்கு ஊருக்கு வந்திருந்துச்சாம்…”

“இருபத்தி ரெண்டு…இல்லை இருபத்தி மூணு தான் இருக்கும் போல…”

இப்படி பல குரல்களுக்கு இடையே ஒரு குரல் மட்டும், பெருங்குரலெடுத்து அழும் சக்தி கூட இல்லாமல் கம்மி போய் ஒலித்துக் கொண்டிருந்தது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார் காமாட்சி, அவருக்கு அருகிலேயே அவரை ஒட்டியவாறு ஒரு சிறுவன்.

“நீங்க என்ன வேணும் இந்த பொண்ணுக்கு?”

“நான் இவ சித்தி சார்…என் சொந்த அக்கா பொண்ணு…” சொல்லிவிட்டு மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார் காமாட்சி.

“அழாம கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்கம்மா….ப்ளீஸ்…பொண்ணு இறந்து கிட்ட தட்ட ஆறு மணி நேரம் ஆகப் போகுது…இந்த விசாரணை எல்லாம் முடிச்சா தான் ஆஸ்பத்திருக்கு அனுப்ப முடியும்…”

“----“

“பொண்ணோட அப்பா, அம்மா எங்க?”

“அப்பா குவைட்ல இருக்காரு சார்…அவருக்கு விஷயத்த சொல்லியாச்சு…இன்னேரம் கிளம்பியிருப்பாரு…”
“ஓ....சரி, அவங்க இங்க எங்க தங்கியிருந்தாங்க? உங்களோடையா?”

“இல்லை சார்…அவ தின்டுக்கல்ல காலேஜ்ல படிச்சிகிட்டு இருக்கா…வெளிய லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தங்கி இருந்தா…”

“ஓஹ்ஹ்…பொண்ணுக்கு காலேஜ்ல எதாவது பழக்கம், அப்படி….இந்த மாதிரி எல்லாம் எதாவது உண்டா?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்…யார்கிட்டையும் தேவையில்லாம பேச கூட மாட்டா…”

“வேற எதாவது சோகம், இல்லை உடம்பு சரியில்லை…இப்படி எதாவது?”

“அப்படி எல்லாம் ஒன்னுமே இல்லை…அருமையா தான் இருந்தா…ஆசையா, நான் உங்க வீட்டுக்கு வந்து நாளாச்சு…உங்கள பாக்கனும் போல இருக்கு சித்தின்னு கிளம்பி வந்த பொண்ணு…பாவி…இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியலையே…”

“ஹ்ம்ம்…உங்க வீட்ல எத்தனை பேரு?”

“எனக்கு ஒரே பையன் சார்…இவன் தான்…ஏழாவது படிக்கறான்…எங்க வீட்டுக்காரரும் குவைட்ல தான் இருக்காரு…இப்ப அவரும் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு…”

“ஹ்ம்ம்…ஒரு கவலையும் இல்லாத பொண்ணுங்கறீங்க…எந்த பழக்கமும் கிடையாது…அப்புறம் எப்படி? இவ்ளோ பெரிய காரியத்த பண்ணுவா? வேற எதாவது இருக்காம்மா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க…”

“எங்கக்கா…அதான் அவ அம்மா திடீர்ன்னு இறந்துட்டா…அதுல தான் மனசொடிஞ்சு போய்ட்டா….ஆனா, அது நடந்து ரெண்டு வருஷம் ஆகப் போகுதே…”

“சரி, இப்ப போஸ்ட் மார்ட்டமுக்கு அனுப்ப போறோம்…நீங்களும் ஆஸ்பத்திருக்கு வரனும்…ஆமா…பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?”

“மது சார்…மதுவந்த்தி

****************************************************************

“மது!!! மதும்மா!!!”

“---“

“யேய் மது!!! காட்டுக் கத்தல் கத்திட்டு இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்க? மது….ஏய் மதுமந்தி…”

“அம்மா!!! நீங்களே என் பேரை கிண்டல் பண்றீங்களே!!!” சிணுங்கலுடன் அம்மாவை கோபித்துக் கொண்டாள் மது, மதுவந்த்தி…ஒடிந்து விழுந்துவிடும் அளவுக்கு மெல்லிய தேகம், மிகவும் கலையான மாநிறம், செதுக்கி அளவெடுத்து வைத்தாற் போல் முகவெட்டு. இவள் சிரிப்பதற்காவே பிறந்தவளோ என்று அவளை பார்ப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யப் படும் அளவிற்கு, என்னேரமும் சிரித்துக் கொண்டே இருப்பாள்.
“கண்ணா….உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா…”
“என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? சொல்லுங்க…”

“அப்பா காலையில கூப்பிட்டிருந்தார்ல?”

“என்னவாம்? இந்த தடவையும் லீவுக்கு வர முடியாது, வேலை இருக்கு…பிசினஸ பாக்கனும், வேணும்னா நீங்க கிளம்பி வாங்கன்னு சொல்லியிருப்பாரு….வருஷாவருஷம் இது தான நடக்குது?”

“ஹ்ம்ம்…அது தான் இல்லை…அப்பா அங்க எல்லாத்தையும் ஓரக் கட்டிட்டு இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…”

“ஹா….இது ஷாக் ஆஃப் தி சென்ட்சுரியா இல்லை இருக்கு…இரு…” என்றபடி அம்மாவை கிள்ளினாள்.“ஏய்!! எதுக்கு டீ கிள்ளுற?”

“இல்லை, கனவா, நிஜமான்னு பாத்தேன்…”

“முழுசா கேளு…உனக்கு முதல்ல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு, நீ இங்கிருந்து போனப்புறம் நான் தனியா தான இருப்பேன்? அப்ப இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…” சொல்லிவிட்டு நக்கல் சிரிப்பு ஒன்றை சிரித்தார், மதுவின் அம்மா.

“ஆரம்பிச்சிட்டீங்களா? என்னடா நமக்கு இன்னும் மணியடிக்கலையேன்னு பாத்தேன்…ஏற்கனவே ஜோதி, வாசுகி…இவங்க வீட்லையும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“என்னடி மணியடிக்கறது?”

“அதான்மா…இந்த கோர்ட்ல எல்லாம் கைதி, சாட்சிகளை கூப்பிடறதுக்கு முன்னாடி மணியடிச்சு கூப்பிடுவாங்களே! அந்த மாதிரி தான்…உனக்கு வீட்ட விட்டு கிளம்ப டைம் வந்தாச்சுன்னு சொல்லி மணியடிக்கறது…எங்க க்ளாஸ்ல லைனா எல்லாருக்கும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“அவங்கவங்க பொண்ணுக்கு காலாகாலத்துல கல்யாணம் ஆகனுமேன்னு வயத்துல நெருப்ப கட்டிகிட்டு இருந்தா, நீங்க இதுவும் பேசுவீங்க…இன்னமும் பேசுவீங்க…”

“இன்னும் எத்தன நாளைக்கு தாம்மா இதே டைய்லாக பேசிட்டு இருப்பீங்க? கொஞ்சம் புசுசா யோசிக்க கூடாது? வெயில் காலத்துக்கு தகுந்த மாதிரி வயத்துல ஐஸ கட்டிக்க வேண்டியது தான?”

“சரி…சரி…சொல்ல வந்த விஷயத்த சொல்ல விடாம பண்ணிடுவியே! முதல்ல நான் சொல்றது கேளும்மா…என் கண்ணில்லை?”

“இல்லை…நான் உன் கண்ணும் இல்லை…மூக்கும் இல்லை…”

“இத பாரு மது…அப்பா உன்னை கேட்டுட்டு தான் மாப்ளை பாக்க ஆரம்பிக்கனும்னு இருந்தாரு…ஆனா, நம்ம ராமன் அங்கிள் இல்லை? அவரு தான்…நல்ல ஒரு இடம் வந்துருக்கு…பாருங்க…ஒத்துவந்தா செய்யலாம்….பையனுக்கும், அவங்க குடும்பத்துகும் நான் கியாரண்டின்னு சொல்லியிருக்காரு…அதான், எனக்கும் அப்பாவுக்கும் உடனே பாக்கலாம்னு ஒரு எண்ணம்…”

“என்னம்மா, பெருசா ப்ரீத்திக்கு நான் கியாரண்டிங்கற மாதிரி, காமடி பண்ணிட்டு இருக்கீங்க? இந்த காலத்து பசங்களுக்கு, அவங்க அப்பா அம்மாவே கியாரண்டி குடுக்க முடியாது தெரிஞ்சுக்கோ…”“சும்மா வளவளன்னு பேச்ச வளக்காத….என்ன சொல்ற? பாக்கலாமா? வேண்டாமா?”

“வேண்டாம்…” ஒற்றை பதிலை திட்டவட்டமாய் சொன்னபடி கம்ப்யூட்டரில் மீண்டும் மூழ்கினாள் மது. உடனே பக்கத்தில் இருந்த கைபேசியை எடுத்து, கணவரை அழைத்தார் மது அம்மா.

“ஹலோ…நான் தான் பேசுறேன்…”
“ஹ்ம்ம்…ஆமா…நீங்க என்ன பண்றீங்க? சாப்டாச்சா?”
“அவகிட்டையா? ஹ்ம்ம்…ஹ்ம்ம்…கேட்டாச்சு….அவ என்ன சொல்ல போறா? சரி ன்னு தான் சொல்லுவா…நீங்க அவங்க வீட்ல பேசுங்க…”
“ஆமாங்க…பாப்போமே…ஒத்துவந்தா பண்ணலாம்…பொறுமையா பாப்போம்…”

“என்னமா? நான் வேண்டாம்னு சொல்றேன்…நீங்க என்னடான்னா அப்பா கிட்ட சரின்னு தான் சொல்லுவான்னு கூலா சொல்றீங்க?”

“கூல் தான்…நீ தான வயத்துல ஐஸ கட்டிக்க சொன்னே?”

“உங்கள!!! என்னவோ பண்ணித் தொலைங்க…”

“இந்தா…பாரு ஃபோட்டோ…”
உச்சு கொட்டியபடி தலையை திருப்பிக் கொண்டு, மது மீண்டும் கம்ப்யூட்டர் திரையை பார்க்கவும், அவளது அம்மா, “மதும்மா…நீ மட்டும் ஃபோட்டோவ பாக்கனுமே! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்…உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காரேன்னு தான் நான் கூட அப்பா கேட்ட போது உடனே ஒத்துகிட்டேன்…”

“அதென்னம்மா எனக்கு பிடிச்ச மாதிரி? உங்களுக்கு என்ன தெரியும்? கண்டிப்பா உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்து வராது….”

“அது தான் இல்லை…அன்னிக்கு நீயும், திவ்யாவும் மதுரை டைம்ஸை பாத்துட்டு பேசிட்டு இருந்தீங்களே…எதோ TDH, TDH ன்னு, என்னததுன்னு நானும் தான் பேப்பர எடுத்து பாத்தேன்…” நமட்டு சிரிப்போடு அம்மா கூறவும், மது, “கொடுமை மா…இத வேற ஒட்டு கேட்டீங்களா? ச்சே…போங்கம்மா…” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

“இதுல ஒட்டுக் கேக்கறதுக்கு என்ன இருக்கு? இப்ப பாரு…உனக்கு பாத்துவச்சிருக்க மாப்ளை கூட TDH தான்” என்றபடி கண்களை சிமிட்டினார்.

“நிஜமாவாம்மா? எங்க? காட்டுங்க…” அம்மாவின் கைகளில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த மாத்திரத்தில் மதுவின் முகம் மலர்ந்தாலும், வேண்டுமென்றே உதட்டை சுழித்தாள்…”ஹ்ம்ம்…ஓ…க்கே…ஆமா…இந்த பையன் பேரென்ன சொன்னீங்க?”

“நான் சொல்லவே இல்லையே…” என்றபடி சிரித்தார் மது அம்மா.

“சரி…வேணாம்…சொல்லாதீங்க…”

“சரி…சரி…சொல்றேன்…சொல்றேன்…ரஞ்சி்த்…ரஞ்சித்குமார்…”

********************************************************
ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் மொட்டை மாடியில், இன்டு இடுக்குகளில் எல்லாம் டார்ச் விளக்கின் உதவியுடன், கடமை கண்ணியத்துடன் கண்ணில் எதாவது புலப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தார், வயது முதிர்ந்த முருகேசன் என்ற அந்த கான்ஸ்டபில். ஒரமாக நின்றபடி ஏதோ யோசனையுடன், ஒரு கரத்தில் கைகுட்டையில் சுற்றியிருந்த ஒரு பெரிய மெழுவர்த்தியை உற்றுப் பார்த்தபடி, புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த இளவயது இன்ஸ்பெக்டரின் சிந்தனையை கலைத்தது, கான்ஸ்டபிலின் குரல்.“சார்…இங்க என்னவோ இருக்கு…”

கைவசம் வைத்திருந்த வெள்ளை கைக்குட்டையால், முருகேசன் அதை குனிந்து எடுக்க, புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை காலில் போட்டு அனைத்து விட்டு உடனடியாக அவரிடத்தில் வந்தார் இன்ஸ்பெக்டர் பரத்.

“என்ன முருகேசன்?”

“இங்க பாருங்க சார்!!!”

அவரது வெள்ளை கைக்குட்டையின் நடுவில், ஜொலித்துக் கொண்டிருந்தது ஒரு அழகிய தங்க ப்ரேஸ்லட். கான்ஸ்டபில் அதை திருப்பிப் பிடிக்க, டார்ச் உதவியில்லாமையே, அதிகாலை நேரத்து சூர்ய ஒலியில் தகதகவென மின்னியது, அதில் அழகாய், கலைநயத்தோடு பொறிக்கப்பட்டிருந்த பொன்னெழுத்துக்கள்.

முகில்” என்று சத்தமிட்டு படித்தபடி யோசனையுடன் கான்ஸ்டபிளை பார்த்தார் இன்ஸ்பெக்டர்!

[தொடரும்]

Thursday, September 3, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 1

“ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்”

என்று பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட பெரியதொரு கம்பீரமான பெயர் பலகை, மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அழகான அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நம்மை வரவேற்றது. நகரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்த அந்த குடியிருப்பு பகுதியில் அன்று சுதந்திர தின விழா.
கதவு எண் 1A, முதல் மாடியில் நுழைந்தவுடன் அமைந்திருந்த அந்த வீட்டு வாசலில் ஒரு அழகான மாக்கோலம்.
தாமரை வண்ண டஸர் புடவை சரசரக்க, படிய வாரிய தலையில், அழகான மல்லிச்சரத்துடன், அதைவிட அழகாக முகத்தில் என்றுமே மறையாத புன்னகையுடன் வந்த மருமகளைப் பார்த்து, “என் கண்ணே பட்டுரும் போல!!!” என்று தன்னக்குள்ளே பெருமையினூடே சலித்தும் கொண்டார் தனலட்சுமி.

“முகில்! அன்னிக்கு நம்மெல்லாம் போய் வாங்கின புடவை தான? அட்டகாசமா இருக்கு….”

“ஆமாங்கத்தை…” என்று மெலிதாக முறுவலித்தாள் முகில்.

அம்மா சொன்னதை கேட்டு ஒரு நொடி மனைவியை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் கையிலிருந்த செய்திதாளில் மூழ்கினான் ரஞ்சித்.
முகில் முகத்தில் எப்போதும் மறையாத சிரிப்பு இருப்பதை போல, ரஞ்சித் முகத்தில் என்றும் கடுகடுப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவன் குணம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

எதோ விசில் அடித்துக் கொண்டு செய்திதாளே கண்ணாய் இருந்த மகனை பார்த்து தனலட்சுமி, ’ச்சே…இந்த பசங்களே இப்படி தான்! சட்டுன்னு எதையும் பாராட்டறதுக்கு மனசு வராதே! இந்த கருப்பனுக்கு போய் இத்தனை அழகான பொண்ண கட்டி வச்சமே! கொஞ்சமாவது அருமை தெரியுதா பாரு’ என்று மனதிற்குள்ளே பெற்ற மகனை வசைப் பாடிக் கொண்டிருந்தார்.
ஆனால் ’தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்’ பாடலை விசில் அடித்துக் கொண்டே முகிலை ஓரக் கண்ணில் அவன் பார்த்ததையும், அதை உணர்ந்து அவள் வெட்கப் புன்னகை புரிந்ததையும் அவர் கவனிக்கவில்லை பாவம்!

“தனம்!! அங்க என்ன யோசனை? எல்லாரும் கிளம்பியாச்சுல்ல? நடங்க…. நடங்க….நேரம் ஆகுது…” ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம் சொல்லவும், வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே நடந்தனர்.
லிஃப்ட் அருகே சென்ற ரஞ்சித்தை தடுத்து நிறுத்தயது அவன் அம்மாவின் குரல், “டேய்! ரெண்டாவது மாடில புஷ்பா வீட்டுக்கு போய்ட்டு, அவங்களோட சேந்து போலம்னு சொன்னேன்ல?”

“ஆமா…எத்தனை தடவை மா சொல்லுவீங்க? நல்லா ஞாபகம் இருக்கு…”

“அப்புறம் எதுக்குடா லிஃப்டு?”

“ஏன் ரெண்டாவது மாடின்னா லிஃப்ட்ல போகக் கூடாதா?”

உடனே சுப்பரமணியமும், தனலட்சுமியும் ஒரு சேர சலித்துக் கொண்டனர், “நாலு படி ஏறதுக்கு ஒரு லிஃப்ட்டா? இந்த காலத்து பசங்க…”

ஒரு வழியாக புஷ்பா வீட்டிளுள்ள அனைவரைவும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் விழா நடக்கும் கட்டிடத்தின் மேல் தளத்தை அடைந்த போது மணி ஆறு.
ஷோபா அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஒன்பது தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள் தான். மேலிருந்த பத்தாவது தளம், வீடுகள் எதுவும் இல்லாத ஒரு காலியிடம். விழாக்கள் நடத்த வசதியாக ஒரு மேற்கூரை போன்றதொரு அமைப்பை மட்டும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
லிஃப்ட்டை விட்டிறங்கியவுடன் ஒரு சிறிய அறை, அதை கடந்து கதவை திறந்து கொண்டு சென்றால், மொட்டை மாடி.

ரஞ்சித் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, தனலட்சுமி, “என்னடா இது இந்த அபார்ட்மெண்ட் கதவெல்லாம் இப்படி? ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர அமுத்திட்டு தான் திறக்கனுமா? சரியான தொல்லை…”

“என்னம்மா அப்படி சொல்லிட்டீங்க? இது தான் ரொம்ப சேஃப்ட்டி! சாவி, பூட்டு தேவையில்லை, எல்லாம் எலெக்ட்ரானிக் தான். பாரு, பக்கத்துலையே ஒட்டின மாதிரி எத்தனை கட்டிடம் இருக்கு? அதுல இருந்து குதிச்சாலும், யாரும் பூட்ட உடைச்சோ, இல்ல வேற எப்படியோ வரவே முடியாது. இந்த நம்பர கரெக்ட்டா அமுத்தினா தான் வர முடியும்…அது மட்டுமில்லை, மூனு தடவைக்கும் மேல தப்பா அமுத்தினா, அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு திறக்க முடியாது. செக்யூரிட்டி ரூம்லையும் உடனே அலாரம் அடிக்கும்…”

“ஆமா…இந்த ஐஞ்சு ஜீரோ அமுத்தறது ரொம்ப தான் கஷ்டம் பாரு…”

ரஞ்சித் சிரித்துக் கொண்டே, “இல்லம்மா…இது டிஃபால்ட் கோட், இப்போதைக்கு தற்காலிகமாத் தான் இப்படி வச்சிருக்காங்க…இப்ப தான புசுசா இத எல்லா கதவுலையும் ஃபிட் பண்ணியிருக்காங்க? எல்லாத்துக்கும் பழகினப்புறம், இந்த மாடி கதவுக்கும் ஒரு நம்பர செட் பண்ணி, எல்லாருக்கும் சொல்லுவாங்க…”

“என்னமோ போடா…ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர வேற ஞாபகம் வச்சுகிட்டு இருக்கனும்…ஆமா, நம்ம வீட்டுக்கும் இதே மாதிரி தான? என்ன நம்பர் அது?”

முகில், “எங்க கல்யாண தேதி தான் அத்தை…4-11-08” என்று சிரித்தபடி பதிலளித்தாள்.

உரை, கலைநிகழ்ச்சிகள் என்று இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், எட்டு, எட்டரைக்கெல்லாம் இரவு உணவும் ஆரம்பமானது.
ரஞ்சித், சுப்பிரமணியம், இரண்டாவது மாடி புஷ்பாவின் மகன் ராகேஷ் உட்பட இன்னும் சில நண்பர்கள் கூடி நின்று உணவருந்திக் கொண்டிருக்க, முகில், தனலட்சுமி, புஷ்பா என்று பெண்கள் கூட்டமெல்லாம் அவர்களுக்கு எதிர் திசையில் சற்று தள்ளி உணவருந்திக் கொண்டிருந்தனர்.

புஷ்பா தனலட்சுமியிடம், “ஏங்க…உங்க மருமகளுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?”

“ஏன் கேக்கறீங்க?”

“இல்ல…எங்க ராக்கேஷுக்கு பாக்கலாமேன்னு தான்…” என்று சொல்லிச் சிரித்தார் புஷ்பா.

தனலட்சுமியும் சிரித்துக் கொண்டே, “எங்க முகில் மாதிரி வேற பொண்னெல்லாம் கிடைக்காது…”
“ஏம்மா முகில்! கேட்டியா? உன்னை மாதிரியே மருமக வேணுமாம் புஷ்பா ஆண்டிக்கு…”

முகில் பதிலேதும் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, தனலட்சுமி, “முகில்!” என்று மீண்டும் ஒருமுறை அழைத்தார்.
கனவில் இருந்து விழித்தவளைப் போல, “என்னங்கத்தை? என்ன சொன்னீங்க?”

“என்னது? என்ன சொன்னேனா? எந்த உலகத்துல இருக்க நீ?”

முகில் பதிலேதும் சொல்லாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, “அங்க பாருங்களேன்!!! அவருக்கு இந்த டிரெஸ் எவ்ளோ நல்லா இருக்குன்னு…”

“யாருக்கு”

“அவருக்கத்தான் அத்தை …”

“ரஞ்சித்தா? என்ன ட்ரெஸ் போட்ருக்கான்? வெள்ள சட்டையா? இதுல என்னத்த சூப்பரா இருக்கு? எல்லாரும் போடறது தான?”

“போங்கத்தை….எவ்ளோ நல்லா இருக்கு? அவருக்கு எப்பயுமே வெள்ளை ஃபார்மல் சட்டை ரொம்ப பொருத்தமா இருக்கும்…”

“ஹ்ம்ம்ம்…”

“என்ன ஹ்ம்ம் ன்னு மட்டும் சொல்றீங்க? அங்க பாருங்க…அந்த பச்சை சுடிதார் பொண்ணு…ரொம்ப நேரமா அங்கயே தான் பாத்துட்டு இருக்கா…அவரை தான் சைட் அடிச்சிட்டு இருக்கா…” என்று முகில் பெருமையடித்துக் கொள்ள,

தனலட்சுமி, “என்னது?” என்றபடி அந்த பச்சை சுடிதார் அணிந்த பெண்ணைப் பார்த்தார், “அட ஆமா…அவங்க நிக்குற பக்கமே தான் பாத்துட்டு இருக்கா…யேய்…இரு…அவ ராக்கேஷத் தான் பாக்குறான்னு நினைக்குறேன்…அவன் தான் பேச்சுலர், இவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், இவனைப் போய் எதுக்கு பாக்கப் போறா?”
“இல்ல இல்ல…இவரை தான் பாத்துட்டு இருக்கா…ஒரு நிமிஷம் இருங்க…இப்ப நான் அவரை இங்க கூப்பிடறேன், நீங்க அந்த பொண்ணயே பாத்துகிட்டிருங்க…”

“ஏய்…என்னதிது விளையாட்டு? சும்மா இரு” என்று தனலட்சுமி தடுப்பதற்குள் முகில், “ஏங்க! ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்….” என்று அவனை அழைத்தே விட்டாள்.

பதறிப் போன தனலட்சுமி, “என்ன முகில் இது?”,
முகில், “பேசாம அந்த பொண்ணயே பாத்துட்டு இருங்கத்தை…”

“என்னம்மா…” என்றபடி அருகில் வந்த கணவனிடம், யாருக்கும் கேட்காத வண்ணம், அவனது காதருகே, “ரஞ்சி! இந்த ட்ரெஸ்ல நீங்க எவ்ளோ ஹான்சம்மா இருக்கீங்க தெரியுமா?” என்று கிசுகிசுத்தாள்.

கண்களில் நட்சத்திரங்கள் மின்ன, “ஹேய்…நிஜமாவா சொல்ற?” என்று கேட்கவும், நிஜம் தான் என்பது போல அவன் கைபேசி அழகாய் பாடியாது. ’ஒரு நிமிஷம்’ என்று மனைவிக்கு கண்களாலேயே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ரஞ்சித்.

உடனே அத்தையிடம் திரும்பிய முகில், “என்னத்தை…பாத்தீங்களா?” என்று நமட்டு சிரிப்புடம் கேட்டாள்.

“ஆமா…உனக்கெப்படி தெரிஞ்சுது?”

“முதல்ல நீங்க என்ன பாத்தீங்கன்னு சொல்லுங்க…அப்புறம் நான் சொல்றேன்…”

“அவன் அங்கிருந்து இங்க வர வரைக்கும் அந்த பொன்னோட பார்வையும் அப்படியே பின்னாடியே வந்துச்சு…ரஞ்சித் இங்க வந்ததும், நீ வேற அவன்கிட்ட என்னவோ சொல்லி சிரிச்சியா? அப்ப அந்த பொன்னு முகத்த பாக்கனுமே…”

“ஹா ஹா….நான் சொன்னேன்ல? நம்ம ப்ரோக்ராம்ஸ் பாத்துட்டு இருக்கும் போதே நான் பாத்தேன்…அந்த பொண்ணு அவரை அநியாயதுக்கு சைட் அடிச்சுட்டு இருந்துச்சு…” முகில் முகத்தில் ஏகத்துக்கும் பெருமை மின்ன, தனலட்சுமி,
“ஹ்ம்ம்…இதுல உனக்கு பெருமை வேற? ஆமா, உனக்கெப்படி தெரியும்?”

“எல்லாம் எனக்கு தெரியும்…” என்று சொல்லி, சத்தமிட்டு முகில் சிரிக்கவும், ரஞ்சித் தொலைபேசிவிட்டு அங்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன எல்லாம் தெரியும்? என்ன ஜோக், எதுக்கு சிரிக்கற முகில்?”

“அதுவா…அங்க ஒரு பச்சை சுடிதார்…” முகிலை மேலே பேச விடாமல் செய்தது, தனலட்சுமியின் பெருத்த இருமல் ஒலி, “டேய்…கொஞ்சம் தண்ணி கொண்டாடா…” பொய்யாய் வரவழைத்த இருமலுடன் தனலட்சுமி இப்படி கேட்கவும், ரஞ்சித்தும் “தோ…” என்றபடி சிட்டாய் பறந்தான்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இதையெல்லாமா போய் அவன்கிட்ட சொல்லுவ?”

“ஏன்? சொன்னா என்னங்கத்தை?”

“சொன்னா என்னவா? சரியான பேக்கு பொண்ணு தான் போ…பேசாம இரு, இதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்…”

முகிலும் அத்தையை அதற்கு மேல் எதிர்த்து பேசாமல், ஒரு குறு புன்னகையுடன் அமைதி காத்தாள்.

“ஆமா, அந்த பொண்ணு காமாட்சி சொந்தக்காரப் பொண்ணு தான?”

“ஆமாங்கத்த”
“இதுக்கு முன்னாடியே எங்கையோ பாத்தாப்புல இருக்கு…எங்கன்னு தான் தெரியல…”
***
பத்து மணியளவில், விழா முடிந்ததும், அனைவரும் தத்தம் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எல்லோரும் மாடி கதவை நோக்கி நடக்கத் துவங்க, அத்தையின் பின்னோடு சென்று கொண்டிருந்த முகில், மாடி அறையின் கதவை கடக்கும் வேளையில் சற்றே தாமதித்து நின்று, பின்னால் வந்து கொண்டிருந்த ரஞ்சிதை பார்த்தாள்.

“ரஞ்சி! அங்க பாருங்களேன்…அந்த பச்சை சுடிதார் போட்ட பொண்ணு…”

“எங்க?”

“அங்க பாருங்க…அந்த வாட்டர் சின்டேக்ஸ் பக்கத்துல…”

“ஆமா…யாரது? புதுசா இருக்கு? நம்ம பில்டிங்கா?”

“இல்லல்ல…ரெண்டாவது மாடி, புஷ்பா ஆண்டி வீட்டுக்கு ஆப்போஸிட் வீட்ல இருக்காங்களே, அவங்க வீட்டுக்கு வந்திருக்க சொந்தகார பொண்ணு…”

“ஒஹ்ஹ்…”

“அந்த பொண்ணு, இங்க வந்ததுல இருந்து என்ன பண்ணிட்டு இருந்தா தெரியுமா?” என்றபடி விஷமப் புன்னகை புரிந்த மனைவியை பார்த்து, “போச்சுடா…ஏதோ என் பொன்டாட்டி கொஞ்ச நல்லவன்னு நினைச்சேன்…இப்ப அந்த ஆண்ட்டீஸோட சேந்து நீயும் காஸிப் பண்ண ஆரம்பிச்சிட்டியா?”

முகத்தில் செல்லக் கோபத்துடன், “ஹய்யோ…அதில்லைடா மடையா…அந்த பொண்ணு வந்ததில இருந்து உங்கள பயங்கரமா சைட் அடிச்சிட்டு இருந்துச்சு…அத சொல்லலாம்னு பாத்தா…”

“ஹே…என்ன சொல்ற? ஜோக்கா?”

“இல்லப்பா…நிஜம்ம்மா…நானே பாத்தேன்…”

முகம் மலர, அந்த பெண்ணை பார்த்தபடி, விசிலடித்துக் கொண்டு ரஞ்சித், “ஹ்ம்ம்…பொண்ணு பாக்கறதுக்கு நல்லா தான் இருக்கு…இந்த இனிப்பான செய்திய சொன்ன என் இனிய பொன்டாட்டி வாய்ல ஸ்வீட் தான் போடனும்” சொன்னதோடு நிற்காமல், அங்கே கதவருகே வரவேற்பதற்காக வைத்திருந்த தட்டிலிருந்த கல்கண்டை எடுத்து முகில் வாயில் போட்டான் ரஞ்சித்.

***
காலை மணி ஆறு, ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்ஸில் காலை வாக்கிங்க் செல்லும் பெரியவர்கள், கீழ் தளத்தில் இருந்த ஜிம்மிற்கு போவதற்காக கிளம்பி வந்த இளவட்டங்கள், பால் வாங்குவதற்காக வந்த இல்லத்தரசிகள், இப்படி அந்த அதிகாலை வேளையில் வெளியே எட்டிப் பார்த்த அனைவருமே தத்தம் வேலைகளை மறந்து, முகத்தில் மறையாத கலவரத்துடன் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருக்க, சைரன் பொருத்திய வாகனங்கள் உள்ளே வருவதும், செல்வதுமாய், பல காக்கி சட்டைகள் கூட்டமாக அந்த வளாகத்தையே சுற்றி வலைத்திருக்க, ஷோபா அபார்ட்மெண்ட்ஸே அல்லகோல கல்லகோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு கூடியிந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, சாக்பீஸ் கோடுகளுக்குள்ளே, ரத்தவெள்ளத்தில், குப்புற விழுந்த நிலையில், பச்சை சுடிதார் அணிந்த ஒரு பெண்…அங்கு நிகழ்வது எதுவும் தெரிந்து கொள்ளும் சக்தியற்ற பிணமாய்!

[தொடரும்]