Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, November 12, 2008

அன்புள்ள பாலு…

ஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சு…பையன், அவனும் நல்ல வேலைல கை நிறையா சம்பாதிக்கிறான்…பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சு…அது ஆச்சு ஆறு மாசம்…

 

ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான? அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க? இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே!!!

 

இதோ…இன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்…அதுக்கப்புறம் என்ன? அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்…

 

புத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது…என் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்…அதெல்லாம் அப்பங்க…அது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ஒன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா? ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.

 

பாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...

 

இந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா? இல்ல,

 

கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல,

 

அந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா? இல்ல,

 

மூணு வருஷத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச  குணத்த சொல்றதா? இல்ல,

 

முப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்திலும் உருவாக்கி,  அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா?

 

பாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்…அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்…

அந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும்,  தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன்? டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.

 

'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...

இந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா? நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.

 

இப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்கு…அந்த ஒரே ஒரு சம்பவத்த தவிர…அதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருது…சரி, நானும் மனுஷன் தானே?

அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா? இதோ…

 

"பாலு! எப்படி இருக்க?"

 

"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

என்ன திடீர்ன்னு ஃபோன்?"

 

"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்…"

 

"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்…"

 

"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்…"

 

"ஹ்ம்ம்...கண்டிப்பா…"

 

கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும்.’ ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...

 

நல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.

ஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல! ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது? இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.

 

என் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.

 

ச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும்,  நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.

 

கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட  இருந்து ஒரு கடிதம்.

 

அன்புள்ள ரகு,

நலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி

 

 அதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.

 

ச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது? மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது? வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ?

 

சரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க? பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான்.  நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க?’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன? என்ன நான் சொல்றது? கரெக்ட்டு தான? சரி, அப்ப பாப்போமா?

 

P.S: எப்பவும் தொடர் கதையே எழுதிட்டு இருந்த நான், ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது. கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.

Sunday, September 21, 2008

கூடப் பிறந்தவன்(ள்)…

***
தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல், இன்று வரை எனக்கு இன்னொரு தாயாக இருக்கும் என் அக்காவுக்காக…
***

“அம்மா…” ஆசையாக அழைத்துக் கொண்டே வீட்டிற்க்குள் நுழைந்தான் அருண்.

“கண்ணா!!! வந்துட்டியா…அம்மா இதோ வரேன்…பாப்பாவ சாப்ட வச்சுட்டு இருக்கேன்…” ஏதோ ஒரு உள் அறையில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.

பையை சோஃபா மீது எறிந்து விட்டு, அவனும் அதில் சரிந்தான்.

அருண்…இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டி பையன். அம்மா, அப்பாவின் செல்லகட்டி.

“அருண்…எத்தன தடவை சொல்லி இருக்கேன்? பேக அப்படியே சோஃபா மேல போடாதன்னு? பாரு, இன்னும் ஷூ கூட கலட்டல…இன்னும் சின்ன பையன் மாதிரி….” கையில் தங்கையோடு வந்த அம்மா அப்படி சொன்னதும் அருண் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

இதே அம்மா தான், அவனை பஸ் ஸ்டான்டில் இருந்து தினமும் அழைத்து வந்து, வீட்டிற்கு வந்ததும், அவன் ஷூ, ஸாக்ஸ் எல்லாம் கலட்டி விட்டு, எதாவது சாப்பிட குடுத்து, ஹோம் வர்க் செய்து, அவனோடு விளையாடி, தூங்க செய்வார்.

இப்போ இந்த பாப்பா வந்தனால, அம்மா என்ன கண்டுக்கவே மாட்டிங்கறாங்க…
நினைக்க, நினைக்க அருணுக்கு விக்கி விக்கி அழ வேண்டும் போல இருந்தது. அதற்குள் மீண்டும் ஒலித்தது அம்மாவின் குரல்,

“அருண் கண்ணா…ஷூ வ கலட்டிட்டியா? அங்க ஷெல்ஃல பிஸ்கட் இருக்கும் பாரு, எடுத்து சாப்ட்டுட்டு ஹோம் வர்க் பண்ண ஆரம்பி…அம்மா பாப்பாவ தூங்க வச்சிட்டு வந்து பூஸ்ட் போட்டு குடுக்கறேன்…”

கிட்சனுக்கு சென்று அலமாரியை திறந்தான்…அவனுக்கு ரொம்ப பிடித்த ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்…ஆனால் சாப்பிட தோன்றவில்லை. நேராக திரும்பி வீட்டுக்கு வெளியே ஓடினான்.

“டேய்…எங்க போற??? பூஸ்ட் குடிச்சுட்டு போ…”

“நான் விளையாட போறேன்…” கத்தி விட்டு வீட்டுக்கு வெளியே ஓடினான்.

கால் போன போக்கில் நடந்தான் அருண். அவனுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல.

’ச்சே…இந்த பாப்பா ஏன் தான் பொறந்ததோ? யாருமே என்ன கண்டுக்க மாட்டிங்கறாங்க…’

மனதின் பாரம் தொண்டையை அடைக்க, ’அம்மாஅ….”என்று ஒரு முறை உரக்க சொல்லி பார்த்தான். கண்களில் நீர் புரண்டு ஓடியது.

நீ அளித்த உணவை கூட பகிர்ந்துண்டதில்லை…
இப்போது உன்னையே பகிர்ந்து கொள்ள சொன்னால்,
நீ அளிக்கும் உணவு கூட இறங்க மறுக்கிறதம்மா…

என் தலை கோதும் உன் விரல்கள், எனக்கு மட்டுமே சொந்தம்…
என்னை தூங்க வைக்கும் உன் தாலாட்டு, எனக்கு மட்டுமே சொந்தம்…
நான் பற்றி திரியும் உன் சேலைத் தலைப்பு, எனக்கு மட்டுமே சொந்தம்…

நான் மட்டுமே தூங்க, மறுபடி உன் முழு மடி கிடைக்குமா அம்மா?

அருண் வீட்டிற்குள் சென்ற போது, குழந்தை மட்டும் ஒரு அறையில் தனியாக தூங்கி கொண்டிருந்தது. அம்மா கிட்சனில் ஏதோ வேலையாக இருந்தார்.

மெதுவாக குழந்தை அருகில் சென்று அதன் விரலை பிடித்து முறுக்கினான். வீறிட்டு அழுத தன் தங்கையை பார்த்ததும், துக்கமும், குதூகலமும் ஒரு சேர வந்தது அவனுக்கு. அம்மா அங்கு வருவதற்குள் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான்.

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை…’ஒரு நாள் தான கிடைக்குது’ என்று பாப்பாவை கொஞ்சிக் கொண்டிருந்த அப்பா, என்னேரமும் ஏதோ வேலையாகவே இருக்கும் அம்மா… இவர்களுக்கு இடையில் பெரியப்பா, பெரியம்மாவின் குரல் கேட்க, கதவருகே ஒடினான் அருண்.

அவன் பெரியம்மாவுக்கு ரொம்ப செல்லம். அவரை பார்த்ததும், அவனுக்குள் ஒரே குதூகலம்.

“அருணு….எப்டி தங்கம் இருக்க?” ஆசையாக வினவிய பெரியம்மாவை அப்படியே கட்டிக் கொண்டான்.

அவனை தூக்கிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த பெரியம்மா, “அட டே….தங்க பாப்பா அதுக்குள்ள குளிச்சாச்சா…” அவனை இறக்கி விட்டு, அப்பா கையில் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.

கானாததை கண்டது போல குழந்தையை அவர் கொஞ்சுவதை பார்த்து,
’பெரியம்மாவுமா…’ என்பது போல வெறித்துக் கொண்டு எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

குசலம் விசாரிப்பெல்லாம் முடிந்த பின்னர் அவனது அப்பாவும், பெரியப்பாவும் கிளம்பி எங்கோ வெளியில் சென்றனர்.

“ஹ்ம்ம்…நல்ல வேளை, பொண்ணாவது தம்பி கலர்ல பிறக்காம, உன் கலர்ல பிறந்துச்சு…” இது அவன் பெரியம்மா…

உடனே அவன் அம்மா, “ஆமாங்க்கா…அவர் கூட அதே தான் சொல்லிட்டு இருந்தாரு…” என்று சொல்லி சிரித்தார்.

அவன் கைகளை இப்படி, அப்படி ஆட்டிப் பார்த்தான். மாநிறமான அவன் தோல், அப்போது மட்டும் ஏனோ அட்டை கரியாக தோன்றியது. முதன் முறையாக அவன் நிறத்தின் மீது வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு, தங்க கலரில் ஜொலித்துக் கொண்டிருந்த தங்கை மீது திரும்பியது.

பெரியம்மா அருகில் சென்று அமர்ந்து கொண்டு, அவர் கவனிக்காத நேரத்தில் தன் தங்கையை நறுக்கென்று கிள்ளினான்.

பெருங்குரலெடுத்து குழந்தை அழும் முன்பு, படீர் என்று அவன் கால்களில் இடியென விழுந்தது ஒரு அடி. அடித்தது அவன் அம்மா தான், “ஏய்…இப்ப எதுக்குடா பாப்பாவ கிள்ளின? பிச்சுருவேன் பிச்சு…ராஸ்கல்…”

பெரியம்மாவிம் சமாதானம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடினான்.

தன் அப்பாவுடன் வெளியே சென்று விட்டு தனியாக திரும்பிய பெரியப்பா மீது மோதினான்.

“அருண்…ஏன்டா கண்ணா, அழற?”

“ஹ்ம்ம்ம்…ஹ்ம்ம்…அம்மா….அம்மா…அடிச்சுட்டாங்க…” அழுகையினூடே திக்கித் திக்கி சொன்னான்.

“அடிச்சிட்டாங்களா? வா….என்னன்னு போய் கேப்போம்…”

“வேண்டாம்…நான் உள்ள வரல…”

“சரி வா…இந்த ஊஞ்சல்ல உக்காந்துக்குவோம்…” வாசலருகே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு, அவனை தன் மடியில் வைத்துக்கொண்டார் அவன் பெரியப்பா.

“என்னடா அருண் செஞ்ச? அம்மா தான் உன்ன அடிக்கவே மாட்டாங்களே…”

“நான்… நான்…பாப்பாவ கிள்ளி வச்சுட்டேன்…”

“அச்சச்சோ…அப்படி செய்யலாமா? தப்பில்லை? நீ good boy தான?”

“எனக்கு அவள பிடிக்கல…பெரீப்பா… பெரீப்பா…ஹ்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்…நீங்க…அந்த பாப்பாவ உங்க வீட்டுக்கு தூக்குட்டு போய்டறீங்களா?”

“உன் தங்கச்சி டா…”

“எனக்கொன்னும் தங்கச்சி வேணாம்…”

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது அருணு…சாமி உனக்கே உனக்காக தான் அந்த தங்கச்சி பாப்பாவ அனுப்பி இருக்காரு…தெரியுமா?”

“ஒன்னும் இல்ல…”

“ஆமாடா கண்ணா... இப்ப நீ விளையாடுறதுக்காக…பெரியவனானப்புறம் நீ பேசி சிரிக்கறதுக்காக…நீ எங்கள மாதிரி ஆனப்புறம், உனக்கொன்னுன்னா ஓடி வர்ரதுக்காக…வயசாகி, அம்மா அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாரும் செத்தப்புறமும், உனக்கு துணைக்கு தங்கச்சி மட்டும் தான்டா இருக்கும்…”

அருண் எதுவும் பேசாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

“உனக்கொன்னு தெரியுமா? பாப்பாக்கு ஒரு ரெண்டு வயசு ஆகுர வரைக்கும் தான் உங்கம்மா பாத்துக்குவாங்க…”

“அதுக்குப்புறம்?”

“நீ தான் பாத்துக்கனும்…சாமி என்ன தெரியுமா பண்ணுவாரு? யாரெல்லாம் குட் பாய், குட் கேர்ள்ன்னு பாத்து, அவங்களுக்கு தான், தங்கச்சி, தம்பி எல்லாம் அனுப்பி வைப்பாரு…நீ குட் பாய், அதான் உனக்கு தங்கச்சி பாப்பாவ அனுப்பி வச்சுருக்காரு…நீ என்னடான்னா எனக்கு வேணாங்கற…”

“நிஜமாவா பெரியப்பா?” ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிந்தது.

“ஆமாடா என் சிங்க குட்டி…நிஜம்மா…”

லேசாக புன்னகைத்துக் கொண்டே, “அப்டீன்னா…எங்க அப்பா, பாப்பா எல்லாம் பேட் பாய்ஸ் தான?” என்று கேட்டான்.

“ஹா ஹா ஹா….அப்படி இல்ல டா…அவங்கெல்லாம் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்காங்க…அதான், தம்பி தங்கச்சியா பிறந்திருக்காங்க…”

“ஹ்ம்ம்…சரி, நான் இனிமே பாப்பாவ கிள்ள மாட்டேன்…”

“கிள்ளாம இருந்தா மட்டும் போதாது, இனிமே அவள ரொம்ப பாசமா பாத்துக்கனும்… அவ தப்பு பண்ணா, திருத்தனும்…நல்லது பண்ணா, பாராட்டனும்…அவள ஜாக்கரதையா பாத்துக்கனும்…ஏன், அவ கல்யாணத்த கூட நீ தான் முன்னாடி நின்னு நடத்தனும்…அவளும் அதே மாதிரி தான் இருப்பா...உன் மேல ரொம்ப பாசமா இருப்பா…யாராவது உன்ன எதாவது சொன்னா, உடனே அவங்ககிட்ட சண்டைக்கு போவா…கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆனாலும், கூட பிறந்தவன்…தாய் மாமன்ன்னு சொல்லி, அவ வீட்ல நடக்குற எந்த விஷேசத்திலையும் உனக்கு தான் முதல் மரியாதை குடுப்பா…”

எதுவுமே புரியாவிட்டாலும், ரொம்ப புரிந்தது போல கேட்டுக் கொண்டிருந்த அருண், “கூட பிறந்தவனா? நான் பொறந்து ஆறு வருஷம் ஆய்டுச்சே…அவ இப்ப தான பொறந்தா?”

“ஹா ஹா ஹா….அப்படி கேளுடா என் சிங்கக் குட்டி…கூட பிறந்தவங்கன்னா, ஒன்னா ஒரே சமயத்தில பிறந்தவங்கன்னு அர்த்தம் இல்ல…வாழ்க்கை முழுக்க கூடி வாழ பிறந்தவங்கன்னு அர்த்தம்…”

பெரியப்பா மடியில் இருந்து எழுந்து உள்ளே ஒடிய அருணிடம் , “அருண்! நான் எடுத்துட்டு போட்டா உங்க பாப்பாவ?” என்று பெரியப்பா கேட்க…

“அஸ்கு…புஸ்கு…ஆசை தோசை அப்பள வடை…அது எங்க பாப்பாவாக்கும்…” என்றபடி வீட்டிற்குள் ஓடி சென்று, தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.


P.S: அக்கா அண்ணா தம்பி தங்கை இல்லாமல் ஒரே குழந்தையா இருக்கறவங்கெல்லாம், “நாங்க மட்டும் என்ன?’ ன்னு கேக்காதீங்க. அப்பா, அம்மா, சொந்த பந்தம், எல்லாருடைய பாசமும் ஒட்டு மொத்தமா கிடைக்கறதுக்கும், ரொம்பவே புண்ணியம் பண்ணி இருக்கனும்.