Friday, October 9, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 8

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7

“நில்லு மது! எங்க போற?” கோபத்துடன் திவ்யா கேட்க, மது பதிலேதும் சொல்லாமல் அவளை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் வெளியே செல்லவும், ஓடி வந்து அவளை பலவந்தமாக பிடித்து நிறுத்தினாள். “உன்னை இனிமே போக விட மாட்டேன்...நீ என்ன பண்ணிகிட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா? பைத்தியமாடி நீ?”

“ஆமா...நான் பைத்தியம் தான்...உனக்கு என்கூட இருக்க பிடிக்கலன்னா நான் வேற ரூமுக்கு மாறிக்கறேன்...”

“ஹ்ம்ம்...வேற ரூமுக்கு போய்? என்ன பண்ணுவ? சொல்லு மது! நிம்மதியா எந்த தொந்தரவும் இல்லாம அந்த கருமாந்தரத்த செய்ய போற? சரி தான?”

“இத பாரு திவ்யா! உன்னை பொறுத்த வரைக்கும் அது கருமாந்திரமா இருக்கலாம்...நான் கண்ணால் பாத்திருக்கேன்...நான் நம்பறேன்...தட்ஸ் இட்...” கதவை படாறென்று அடித்து விட்டு ரதியின் அறையை நோக்கி நடந்தாள்.

ரதி அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மதுவிற்காக காத்திருந்தாள். தரையில் எதேதோ காகிதங்கள் சிதறிக் கிடக்க, நடுவில் ஒரு சிறிய பலகை, அதில் ஏதோ எழுத்துக்களும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

“வா மது! வந்துட்டியா?” கிணற்குள்ளிருந்து ஒலிப்பதைப் போன்று ஒலித்தது ரதியின் குரல்.

பேசிக்கொண்டே அந்த மெழுகை பற்ற வைத்தாள். இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தை தவிர வேறு ஒளியே இருக்கவில்லை. ஜன்னல்கள் திறந்துவிடப்பட்டு காற்றில் திரைசீலைகள் ஆடிக் கொண்டிருக்க, அந்த சிறிய அறையின் நடுவே இருவரும் எதிரெதிரே பார்த்த வண்ணம் முட்டியிட்டு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது மரத்தினாலான அந்த பலகை...சதுர வடிவில் இருந்த பலகையின் முனையில் வட்ட வடிவமாக ஆங்கில எழுத்துக்களும், அதன் கீழ் எண்களும், இரு முனைகளிலும் ’YES’, ‘NO’ மற்றும் நடுவே “GOOD BYE” என்ற வார்த்தைகளும் பொறிக்கப் பட்டிருந்தன. அந்த பலகையின் நடுவே சிறியதாய் ஒரு சிகப்பு நிற பந்து. இவ்வளவு குறிப்புகளையும் தாங்கியபடி, மிகச்சாதாரணப் பலகையை போல் அவர்களுக்கிடையே விரிந்து கிடந்தது அந்த பலகை. ஆத்மாக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் ’ஓஜா பலகை’.

அந்த பலகையின் நடுவில் இருந்த ஒரு சிகப்பு பந்தின் மேற்புறத்தில் அவளது நடு விரலை வைத்த ரதி, மதுவை பார்த்தாள். ரதியின் சைகையை பார்த்ததும் மதுவும் அந்த சிகப்பு ’ப்ளேன்சட்’டின் மீது விரலை வைத்தாள். அவர்களுக்கு நடுவே எரிந்து கொண்டிருந்த மெழுகின் வெளிச்சத்தில் தீர்கமாக பார்வையை செழுத்தினார்கள்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருவரும் அந்த ப்ளேன்சட்டை பலகையில் வட்டவடிவமாக சுற்றத் துவங்கினர்.
மது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, ரதி கண்கள் மூடி மிக சன்னமாக மதுவிற்கே கேட்காத வண்ணம் ஏதோ முனுமுனுத்தாள். பின்பு ரதி சன்னமான குரலில், “யாராவது இருக்கீங்களா?” என்றாள்.

சற்று நேர மயான அமைதிக்கு பின்பு, ரதி மீண்டும், “அண்ணா இருக்கியா?” என்றாள்.

உடனே ரதியின் கை தானாக அந்த பலகையின் ஓரத்திற்கு ஒரே சீராக நகரத் துவங்கியது. அவளது கை பலகையை சுற்றி நகரத் துவங்கவும், மதுவின் விரலும் தானாக ரதியின் விரலோட நகரத் துவங்கயது. ‘YES’ என்று எழுதியிருந்த அந்த எழுத்துக்களின் கீழ் சென்றதும் அவளது விரலின் அசைவு சட்டென நின்றது.

“உன்னோட வேற யாராவது இருக்காங்களா?” மீண்டும் சன்னமாக ஒலித்தது ரதியின் குரல்.

இம்முறை ப்ளேன்சட் செல்லும் திசையையே தொடர்ந்து கொண்டிருந்த மதுவின் விழிகளில் பதட்டம் அதிகரித்தது. கடைசியில் பலகையின் மற்றொரு மூலையில் எழுதியிருந்த “NO” என்ற எழுதுக்களின் கீழ் வந்து நின்றது. சோர்ந்து போனவளாய் பலகையிலிருந்து விரலை எடுக்க மது முயற்கிக்கவும், அவளது விரலை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரதியின் விரல், பலகையின் குறுக்கும் நெடுக்கும் பேயாட்டம் அடித்துவங்கம், மதுவின் முகத்தில் திகில் படர்ந்தது. ரதி எதோதோ சொல்ல, ஒரு வழியாக விரல்களின் ஆட்டம் நின்றது.

மதுவின் முகத்தை கோபத்துடன் பார்த்த ரதி, மெழுகை பார்த்து எதோ சொல்ல, உடனே அவர்களது கை பலகையின் நடுப்புறத்திற்கு செல்லத் துவங்கியது. “GOODBYE” என்ற எழுத்துக்களின் கீழ் வந்து நின்றவுடன், இருவரும் விரலை அதிலிருந்து எடுத்தனர்.

“என்ன ஆச்சு மது? நடுவுல கையை எடுக்க கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருகேன்?” தீனமாக ரதி கேட்கவும், மது, “ஏன் ரதி எங்கம்மா மட்டும் வரவே மாட்டேங்கறாங்க?”

“நீ இன்னும் நிறைய காண்சென்ட்ரேட் பண்ணனும் மது! நம்பிக்கை தான் முக்கியம்...கண்டிப்பா வருவாங்கன்னு முதல்ல நம்பனும்...”

“நான் நம்பறதால தான உன்கூட இதை பண்ணிட்டு இருக்கேன்...அப்புறம் ஏன்?” முட்டியில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகே வந்து அவளது முடியை கோதி விட்டபடி, “கண்டிப்பா வருவாங்க மது! ஒரு வேளை...இது அவங்களுக்கு பழக்கமில்லாத இடமா இருக்கறதால வர மாட்டிங்கறாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் தான் எந்த இடத்துக்கு வேணும்னாலும் போவாங்களாம்...எங்க அண்ணன் மாதிரி! எனக்கு மொதல்ல இத பழக்கின மீடியேட்டர் சொல்லியிருக்காரு...”

மது தலையை தூக்கி ரதியை பார்க்க, அவள், “அப்ப ஒன்னு செய்யலாம்...உங்க வீட்டுக்கு போய் செஞ்சு பாக்கலாம்...”

“அதெப்படி முடியும்? எங்க வீட்ல தான் வேற யாரோ குடியிருக்காங்களே!”

“ஓ...அப்ப என்ன பண்றது?” சற்று நேரம் யோசித்தவள், “வேற எதாவது அவங்களுக்கு பரிச்சையமான இடம், இல்ல அவங்க அடிக்கடி போன இடம்...இப்படி எதாவது?”

“எங்க சித்தி விடு இருக்கு...ஆனா அவங்க இப்ப புது விட்டுக்கு போனப்புறம் நானும் அம்மாவும் அந்த வீட்டுக்கு ஒரு தடவை தான் போயிருக்கோம்...ஆனா அங்கயும் போக முடியாது...எங்க சித்தி...”

அவளை மேலே பேச விடாமல் இடைமறித்தாள், “அப்ப அது தான் சரியான இடம்...அங்க முயற்சி பண்ணி பாக்கலாம்...அதுவும் சரியா வரலைன்னா...அப்புறம் எதாவது திறந்த வெளில முயற்சி பண்ணலாம்...ஆனா அதுல ஆபத்து அதிகம்...”

தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு, “ஆபத்தா?” என்று வியப்படைந்தாள்.

“ஆமா...அங்க நம்ம அழைக்கிற ஆத்மாவ தவிர வேற நிறைய ஆத்மா இருக்கவும் வாய்ப்பு இருக்கு...அப்ப மீடியேட்டரையே கூட சில ஆத்மாகள் அவங்க ஆளுகைக்குள்ள கொண்டு வர முயற்சிக்கும்...அப்ப பய ந்து போய் நம்ம போர்ட்ட சரியா மூடாமை வச்சுட்டாலோ, இல்ல போர்ட்டை அழிக்க முயற்சி பண்ணாலோ, விளைவு ரொம்ப விபரீதமா இருக்கும்... “

“ஹய்யோ…அப்படியெல்லாம் வேண்டாம்…நான் எங்க சித்தி வீட்லையே பண்றேன்…”
ஒரு வருடம் கழித்து என்னவென்று சொல்லிக் கொண்டு சித்தி வீட்டுக்கு செல்வது, அதை தவிர வேறு இடம் ஏதும் இருந்தால் பரவாயில்லை என்று யோசிக்கத் துவங்கினாள் மது.

***********************************************************************************

கோர்ட் வளாகத்தில் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தாள் முகில். ஒன்பது மணிக்கெல்லாம் வருவதாக சொல்லியிருந்த சோமநாதனை இன்னும் காணவில்லை. ஒன்பது முப்பதுக்கு ரஞ்சித்தின் முதல் ஹியரிங். அவன் கைதாகி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருந்தது.

அப்போது ஒரு நடுத்தற வயது பெண்மணியும் இன்ஸ்பெக்ட்டர் பரத்தும், ஏதோ பேசிக் கொண்டே கோர்ட் படிகளில் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தனர். முகில் நின்றிருந்த இடத்தை கடக்கும் போது, பரத் குனிந்து அந்த பெண்மணியிடம் ஏதோ சொல்ல, முகிலை கடக்கும் போது, அவளை ஒரு நொடி ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றார். அவரது பார்வையில் இருந்த ஏளனத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.

அவரது செய்கையை கவனித்தாலும், எதற்காக தன்னை அப்படி பார்த்தார் என்று யோசிக்கும் மனநிலையில் முகில் அப்போது இல்லை. சற்றே சோர்வுற்ற கண்களுடன் சோமநாதனுக்காக காத்திருக்கலானாள். சற்று நேரத்திலிலெல்லாம், சோமநாதன் முகில் நிற்கும் இடத்திற்கு ஓடி வந்தார். “என்னம்மா? ரொம்ப நேரமா காக்க வச்சுட்டேனா?”
“ச்சே…ச்சே…அப்படி எல்லாம் ஒன்னுமில்ல சார்…”

“சரி…வாம்மா….இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு…உள்ள போவோம்…”
அந்த சிறிய அறைக்குள் இருவரும் நுழைந்தனர். அவர்களை தவிர, அங்கு அவர்களுக்காக ஏற்கவனே காத்திருந்த சோமநாதனின் ஜூனியர் வக்கீல் ஒருவரும், டைபிஸ்ட் ஒருவரும் இருந்தனர். எந்த நேரத்திலும் ரஞ்சித் அங்கு வரக் கூடும் என்று ஆர்வமாய் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்த்த முகில், வாயிலருகே நடந்து வந்து கொண்டிருந்த அந்த பெண்மணியை பார்த்து துணிக்குற்றாள், அவளை சற்று முன்னர் ஏளனமாக பார்த்து விட்டு சென்ற அதே பெண்மணி தான். முகத்தில் இருந்த வசீகரமான அவரது அழகையெல்லாம், முகத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த கடுகடுப்பு மறைக்க, வக்கீல் கருப்பு கோட் அணிந்து, கையில் கேஸ் கட்டிக்களை ஏந்தியவாறு, ஹை ஹீல்ஸ் தரையில் பட்டு அதிரும் சத்தத்தில், கோர்ட் வளாகமே அதிரும் அளவுக்கு வேகமாய் புயலென வந்தார் அந்த பெண்மணி. அவரை பின்தொடர்ந்து பரத் என்றுமில்லாத அடக்க ஒடுக்கத்துடன் வந்துகொண்டிருந்தார். “இவங்க தான்…பப்ளிக் ப்ராசிக்யூட்டர்…லீலாவதி!!!” என்று சோமநாதன் முகில் காதுக்குள் ஓதினார்.

அவரை ஏறேடுத்து பார்த்த முகிலை மீண்டும் அதே ஏளனப் பார்வை பார்த்து விட்டு அவர்களுக்கெதிரே அமர்ந்தார் லீலாவதி! “அப்பா…அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சரியா தான் சொல்லியிருக்காங்க…என்ன ஒரு கர்வம் தெரியுது முகத்துல!” என்று தன் சூழ்நிலையையும் ஒரு நொடி மறந்து வியப்புற்றாள் முகில்!

சிறிது நேரத்தில் இரு கான்ஸ்டபிள்களுடன் ரஞ்சித்தும், அவர்களை தொடர்ந்து நீதிபதியும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

“எதக்காக அந்த நேரத்துல மாடிக்கு போனீங்க? உங்க வீட்ல தான் ஏ.ஸி இருக்கே, அப்புறம் என்ன காத்து வாங்க போனதா சொல்றீங்க? போலீஸ் கிட்ட உடனே ஏன் சொல்லல? “ இப்படி லீலாவதி குடைந்து குடைந்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ரஞ்சித் வழக்கமான அதே பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தான். லீலாவதி குறுக்கு விசாரணை முடிந்தபின், சோமநாதனும் அவர் தரப்பு வாதங்களை முன் வைத்தார். போலீஸ் தரப்பு சாட்சியான அபார்ட்மென்ட் வாட்ச்மேனை விசாரத்த பின்பு, லீலாவதி வாதி தரப்பில் மற்றுமொரு சாட்சியை ஆஜர் படுத்தினார். மதுவின் சித்தி காமாட்சி தான் அது.

“மதுவுக்கு ரஞ்சித்தை தான் மாப்ள பாத்திருந்தோம்…ரெண்டு பேரும் ஒரு வாரத்துக் மேல பேசி பழகினாங்க…ஆனா, அதுக்கப்புறம் அக்கா செத்ததும், கல்யாணம் நின்னுடுச்சு…மது அப்பா எவ்வளவோ சொல்லியும், மது வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கலை…மதுரையிலையே எம்.எஸ்.சி சீட் கிடைச்சுது. எங்க வீட்ல தங்கி படிக்க சொன்னா, முடியாதுன்னு காந்தி கிராமத்துக்கு படிக்க போய்ட்டா, தின்டுக்கல்ல ஒரு ஹாஸ்ட்டல்ல இருந்தா. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் அவங்கப்பா கல்யாணப் பேச்ச தொடங்கவும், ரஞ்சித்தை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு மது பிடிவாதம் பிடிச்சா…எங்க மாமாவும் இறங்கி போய் அவங்க வீட்ல சம்பந்தம் பேசினாரு…ஆனா அவங்க ஒத்துக்கலை…உடனே ரஞ்சித்துக்கு வேற ஒரு கல்யாணம் ஆகி, எங்க அபார்ட்மெண்ட்டுகே வந்துட்டான். இவன் இங்க இருக்கற விஷயத்தை நான் மதுகிட்ட சொன்னதே இல்லை…ஆனா ஏனோ தெரியல, அது வரைக்கும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு இருந்தவ, கடைசி ஒரு வருஷமா வீட்டுப் பக்கமே வரலை. சரியா பேசறது கூட இல்ல…எப்ப ஃபோன் பண்ணாலும் லைனே கிடைக்காது. யாரோ ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன் சித்தின்னு சொல்லுவா. இப்ப இங்க வந்து ரஞ்சித்தை பாத்தப்புறம் கூட அவனை பத்தி அவ என்கிட்ட எதுவுமே கேக்கல….எனக்கென்னவோ, அவன் இங்க இருக்கறது அவளுக்கு ஏற்கனவே தெரியும், அவனோட ஏதோ பேசத்தான் எங்கவீட்டுக்கு வந்திருந்தான்னு தோணுது!”

காமாட்சி சாட்சியத்தை முடிக்கவும், ரஞ்சித் உறைந்து போய் நின்றான்,
உடனே லீலாவதி ரஞ்சித்திடம், “இப்ப சொல்லுங்க மிஸ்டர் ரஞ்சித்…எத்தன நாளா இந்த பழக்கம் தொடர்ந்துட்டு இருக்கு? எதுக்காக மதுவந்த்தி உங்கள பாக்க வந்தாங்க?”

தட்டு தடுமாறிய ரஞ்சித், சில நொடிகள் பதில் சொல்ல முடியாமல் விழித்தான், பின்பு, “செத்த பொண்ணு தான் மதுன்னே எனக்கு அப்புறமா என் அம்மா சொல்லி தான் தெரியும்…அவங்களை நான் அதுக்கு முன்னாடி பாத்தது கூட இல்லை, ஃபோட்டல மட்டும் தான். அவங்க முகம் கூட எனக்கு ஞாபகம் இல்ல….”
“முகம் கூட ஞாபகம் இல்லாத பொண்ணுக்காகவா ஒரு வருஷம் வேற பொண்ணே பாக்க கூடாதுன்னு அடம் பிடிச்சீங்க?”
உடனே சோமநாதன் குறிக்கிட்டு, “இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லாத கேள்விகள கேக்கறீங்க மேடம்!”

“ஏன் இல்லை? கண்டிப்பா இருக்கு…கல்யாணம் பண்ணிகிட்டா அந்த பொண்ண தான் பண்ணிக்குவேன்னு ஒரு வருஷம் இவரு சொல்லியிருக்காரு…யாருன்னே தெரியாத பொண்ணுக்காக யாராவது இந்த மாதிரி செய்வாங்களா?”

“அவங்க குடும்ப விஷயத்த பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசறீங்க? ரஞ்சித் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு வேற எவ்வளவோ காரணம் இருக்கலாமே?”

“அவங்க வீட்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு தான் சார் பேசறேன்…அத நேர்ல பாத்த சாட்சி இருக்காரு…”

உடனே காமாட்சிக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவரை காட்டி அவரை விசாரிக்க அனுமதி வாங்கினார் லீலாவதி. தான் ஒரு கல்யாணத் தரகரென்றும், ரஞ்சித் மது கல்யாணத்தை முதலில் ஏற்பாடு செய்தது தானென்றும் தன்னை அறிமுகப் படித்து கொண்டார். ரஞ்சித் வீட்டுக்கு சென்ற போதெல்லாம், வேறு பெண் பார்க்க கூடாது, முடிந்தால் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து வையுங்கள் என்று ரஞ்சித் அவன் அம்மாவிடம் வீட்டில் சண்டை போட்டதை தானே நேரில் ஓரிரு முறை பார்த்திருப்பதாக சாட்சியம் அளித்தார் அவர்.

அவர் பேசி முடித்ததும் லீலாவதி, “வீட்டு வற்புறுத்தலுக்காக காதலியை விட்டுட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்றதும், மனைவிக்கும் வீட்டுக்கும் தெரியாம அந்த உறவ தொடர்றதும் இப்ப வாடிக்கை ஆகிடுச்சு, இதுக்கு ஒரு படி மேல போய் காதலி உதவியோடு கட்டின மனைவியை கொலை செய்றது போன்ற சம்பவங்கள் இப்ப பெருகிட்டு இருக்கு…சமீபத்துல பெங்களூர்ல கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு….ரஞ்சித்தும் அது போல தான், பெத்தவங்க வற்புறுத்தலுக்காக வேற கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்காரு. ஆனா மதுவந்த்தியோட பழக்கத்த விட முடியாம கல்யாணத்துக்கு அப்புறம் தொடர்ந்திருக்காரு…அப்புறம் அவங்களுக்குள்ளயே பிரச்சனை வெடுச்சு அவங்கள கொலை பண்ண அளவுக்கு துணிஞ்சிருக்கலாம். There is every possibility! He was at the wrong place at the wrong time, he is innocent என்று டிஃபண்ஸ் தரப்பு வக்கீல் சொல்றது ஏத்துக்க முடியாத ஒரு விஷயம்! ரஞ்சித்துக்கும் மதுவந்த்திக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு…அதன் விளைவா மதுவந்த்தி கீழ தள்ளிவிடப்பட்டிருக்காங்க!”

அவரை குறுக்கிட்ட சோமநாதன், “என்ன தான் சண்டையா இருந்தாலும் ஒரு பொண்ண எப்படி தூக்கி அத்தனை உயரமான அந்த மாடித்திண்டு மேல நிறுத்தி அப்புறம் தள்ளிவிட முடியும்? வாக்குவாதத்துல மதுவந்த்தியா போய் மாடித் திண்டு மேல ஏறிட்டாங்களா?”

“சாகும் போது மதுவந்த்தி நாப்பதஞ்சு கிலோ தான் இருந்திருக்காங்க…அந்த வெயிட்ட தூக்கறதுக்கு ஆறடியுள்ள வாட்டசாட்டமான ஆளால முடியாதா? திண்டு மேல உக்கார வச்சுகூட அப்படியே பின்புறமா தள்ளியிருக்கலாமே!”

ஆனால் மதுவந்த்தி தலையின் பக்கவாட்டில் தான் அடிபட்டிருந்தது என்று சோமநாதன் வாதாட, லீலாவதி அதற்கும் தக்க பதிலளிக்க இப்படியே சில மணி நேரங்கள் அவர்களது வாதம் முடிவில்லாமல் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் ரஞ்சித் அன்னேரத்தில் அங்கு என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதும் ரஞ்சித் அசைந்து கொடுக்காமல் சொன்ன பதிலையே சொல்லிக் கொண்டிருந்ததில், சோமநாதன் சலிப்புற்றார்.

எல்லாம் முடிந்து வெளியே வரும் போது, லீலாவதி பரத்திடம், “இந்த மாதிரி பொண்ணுங்கள தான் பரத் சொல்லனும்…இவங்க இப்படி புருஷன கண்மூடித் தனமா நம்பறதால தான் இது போல தப்பெல்லாம் நடக்குது! எத்தன பட்டாலும், நம்ம ஊர் பொண்ணுக திருந்த மாட்டாங்க…” முகிலுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சத்தமாக சொல்லிக் கொண்டே நடந்தார். ரஞ்சித் மீண்டும் ஜீப்பிற்கு அழைத்துச் செல்ல படுவதை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த முகில் லீலாவதி சொன்னதை கேட்டு அவரை திரும்பி பார்த்தாள், அவரை பார்த்தது அவளது முகபாவனை அப்படியே மாறியது. “இவங்களும் ஒரு பொம்பள தானே! ஏன் இப்படி இரக்கமில்லாம குறுக்கு புத்தியோட என்னனென்னவோ பேசறாங்க?” என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள்.

முகில் நின்று கொண்டிருந்த நிலையும், அவர் முகத்தில் தெரிந்த பல்வேறு மாற்றங்களையும் பரத் கவனிக்கத் தவறவில்லை. அவர் முகத்தில் சந்தேகக் கோடுகள் ஓட ஆரம்பித்தன.

நீதிமன்றத்தின் வாயிலில், சுடும் வெயிலில் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த முகிலுக்கு அன்று ஏனோ மிகவும் கலைப்பாக இருந்தது. காலையில் நீதிமன்றதுக்கு வர முடியாது, நீயும் போகக் கூடாது என்று கண்டித்த மாமனாராலா, ஹியரிங் முடிந்து ரஞ்சித் சரியாக ஒத்துழைக்க மறுக்கிறான் என்று சொல்லிவிட்டு சென்ற சோமநாதனாலா, தன்னை ஏளனமாக பார்த்து பேசிவிட்டு சென்ற லீலாவதியாலா, இல்லை உடம்பு சரியில்லாமல் இருக்கும் தன் தந்தையாலா,என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு காரணம் அவள் மனதையும் குறிப்பாக உடலையும் வாட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ ஒரு வழியாக வீட்டை அடைந்தவள், தனலட்சுமி வந்து கதவை திறக்கும் முன்னரே, வாயிலருகிலேயே மயங்கி சரிந்தாள்!

பதபதைத்து இருவருமே மருமகளை மருத்தவமணைக்கு தூக்கிச் செல்ல, மருத்துவர் அவளை பரிசோத்தித்து விட்டு, மருத்துவ அறிக்கை வரும் வரை காத்திருக்க சொன்னார். மிகவும் கவலையுற்று தனலட்சுமி, ’சரியா சாப்பிட்டா தான? காலையில சொல்ல சொல்ல கேக்காம, சாப்பிடாம அவ்ளோ தூரம் போய்..வெய்யில அலைஞ்சு….எல்லாம் போதாத நேரம்…நான் அப்பயே சொன்னேன்…வேணான்டா இந்த வீடு வாஸ்த்து சரியில்லை…வாங்கதன்னு…கேட்டானா? எதுக்கெடுத்தாலும் எதிர்த்து எதிர்த்து பேசற புள்ளைய குடுத்திருக்கான் ஆண்டவன் எனக்கு” என்று வெகுவாய் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவர்களை அழைத்த மருத்துவர் புன்னகையுடன், “முன்னாடியே ஏன் சொல்லலை? ரிப்போர்ட் வரவரைக்கும் வெயிட் பண்ணியிருக்க வேண்டாமே…ஆமா….எந்த கைனக் கிட்ட செக்கப்க்கு போய்ட்டு இருக்கீங்க?” என்றார்.
அவர் சொல்வது ஒன்றுமே புரியாமல் முகில், “என்ன செக்கப் டாக்டர்? இதுக்கு முன்னாடி எந்த கைனக் கிட்டையும் போனதில்லை…” என்றாள்.
“என்னம்மா இது? பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்கீங்க? இவ்ளோ நாளா ஏன் செக்கப் போகல…”
“நீங்க சொல்றது…எனக்கு புரியல டாக்டர்…”
“என்ன புரியலையா? நீங்க கன்ஸீவ் ஆகியிருக்கீங்க…ட்வெல் வீக்ஸ்!” என்று அதிர்ச்சியுடன் டாக்டர் சொல்லவும், முகிலும் தனலட்சுமியும் அவருக்கும் மேலாக அதிர்ந்தனர். சந்தோஷத்துடன் குதூகலிக்க வேண்டிய விஷயத்தை கேள்விப்பட்டும், அமைதியாய் எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தனர். தன் அறைக்குள் நுழைந்து கதவை லேசாக சாத்திக் கொண்டாள் முகில். சில நிமிடங்கள் கழித்தும் அவள் வெளியே வராததால், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கதவை மெல்ல திறந்து பார்த்த தனலட்சுமி, முகில் இருந்த நிலையை பார்த்து செய்வதறியாது விக்கித்து நின்றார்.

[தொடரும்]

19 comments:

Raghav said...

அடேங்கப்பா... எத்தனை முறை சொன்னாலும் இதே தான் திவ்யா.. கலக்கல்

Raghav said...

ஓஜோ பலகை விஷயம் நீங்க முயற்சி பண்ணிருக்கீங்களா :)

சில வருடம் முந்தி என் அறையில் செய்து பார்த்தோம் (ஒரு நண்பன் மூலமாக)... அறையில் இருந்த இன்னொரு அம்மாஞ்சி பயந்து போய் ரூம் காலி செஞ்சுட்டு போயிட்டான் )

Raghav said...

கோர்ட் விசாரணை கொஞ்சம் சுவாரசியமா இருந்துருக்கலாம்.. விஜயகாந்த் படம் கொஞ்சம் பாருங்க :)

Raghav said...

இந்த ரஞ்சித் ஏன் இப்புடி மறைக்கணும்.. அதுதான் புரியல.. ஒருவேளை அத சொல்லிட்டா கதை முடிஞ்சிருமா ?

சங்கர் said...

ஒரே கலக்கல்ஸ் தான் போங்க..

Vijay said...

இதை ஒரு நாவலாகப் போடலாம். அல்லது உங்கள் கதைகளனைத்தையும் ஒரு சிறு கதைத் தொகுப்பாக வெளியிடலாம். சீக்கிரமே ஒரு பப்ளிஷரைத் தொடர்பு கொள்ளவும் :-)

G3 said...

Avvvvvvvv.. inimae unga thodar neenga mudiyum pottappuram dhaan padikkanum.. nammala imbuttu suspense ellam thaanga mudiyaadhu da saami :((((

gils said...

dbl repeet to g3 comment ... kathiaya mail panungannalum pannama attozhiyam pannings :(( aana chaancela..court scenes rocking..padam paakra epect

FunScribbler said...

kalakalz thaan ponnga! century adikaama vida maateenga pola!hehe:) keep rocking

sri said...

Its neat like a professional novel, suspense and twists are really good, please consider writing for magazines and/or book

Karthik said...

Dhan te nan.. Ta na na na..

konjam slow aanapla irunthuchu last two parts..ippo marupatiyum speed..

egappatta aaraichi senchiruppeenga pola..kalakkals...:))

GHOST said...

நேற்று தான் உங்கள் பதிவு அறிமுகம் ஆகியது, ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படித்துவிட்டேன், என்ன சொல்லறது கலக்கறீங்க

Nimal said...

கலக்கல்...

புதுசு புதுசா சஸ்பென்ஸ் கூட்டீட்டே போறீங்க...

Prabhu said...

அப்புறம்?

எனதுகுரல் said...

முதல் அத்தியாயத்துக்கும் இரண்டாம் அத்தியாயத்துக்கும் தொடர்பில்லாம கொண்டுபோய் கடைசியில இரண்டையும் சேர்க்கிறது நாவல் மன்னன் ரஜெஷ்குமாரோட style . அதனாலேயே அவரோட நாவலோட முழு நேர வாசகன் நான் ... ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் படிக்கும்போது அதுமாதிரி ஒரு அனுபவம். அடுத்த அத்தியாயத்தை எதிர் நோக்கி [:)]

மதி said...

நெக்ஸ்ட்... :)

Kadhambari Swaminathan said...

இன்னிக்குத்தான் உங்க blog பார்த்தேன்.. கதை ரொம்ப நல்லா இருக்கு.. நல்ல எழுத்து வீச்சு.. தனியா படிக்கக் கொஞ்சம் பயமா இருந்துது!!
expecting more..

anbudan vaalu said...

then???

pari@parimalapriya said...

dhivya superb....story's pace is gr8.. madhu's character is weak..a gal believing in spirits-something non-existent....
at d same time i liked Leelavathy n mukil's character...
wen is the next part..plz post it soon...