Friday, October 9, 2009
ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 8
“நில்லு மது! எங்க போற?” கோபத்துடன் திவ்யா கேட்க, மது பதிலேதும் சொல்லாமல் அவளை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் வெளியே செல்லவும், ஓடி வந்து அவளை பலவந்தமாக பிடித்து நிறுத்தினாள். “உன்னை இனிமே போக விட மாட்டேன்...நீ என்ன பண்ணிகிட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா? பைத்தியமாடி நீ?”
“ஆமா...நான் பைத்தியம் தான்...உனக்கு என்கூட இருக்க பிடிக்கலன்னா நான் வேற ரூமுக்கு மாறிக்கறேன்...”
“ஹ்ம்ம்...வேற ரூமுக்கு போய்? என்ன பண்ணுவ? சொல்லு மது! நிம்மதியா எந்த தொந்தரவும் இல்லாம அந்த கருமாந்தரத்த செய்ய போற? சரி தான?”
“இத பாரு திவ்யா! உன்னை பொறுத்த வரைக்கும் அது கருமாந்திரமா இருக்கலாம்...நான் கண்ணால் பாத்திருக்கேன்...நான் நம்பறேன்...தட்ஸ் இட்...” கதவை படாறென்று அடித்து விட்டு ரதியின் அறையை நோக்கி நடந்தாள்.
ரதி அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மதுவிற்காக காத்திருந்தாள். தரையில் எதேதோ காகிதங்கள் சிதறிக் கிடக்க, நடுவில் ஒரு சிறிய பலகை, அதில் ஏதோ எழுத்துக்களும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தது.
“வா மது! வந்துட்டியா?” கிணற்குள்ளிருந்து ஒலிப்பதைப் போன்று ஒலித்தது ரதியின் குரல்.
பேசிக்கொண்டே அந்த மெழுகை பற்ற வைத்தாள். இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் ஒற்றை மெழுகின் வெளிச்சத்தை தவிர வேறு ஒளியே இருக்கவில்லை. ஜன்னல்கள் திறந்துவிடப்பட்டு காற்றில் திரைசீலைகள் ஆடிக் கொண்டிருக்க, அந்த சிறிய அறையின் நடுவே இருவரும் எதிரெதிரே பார்த்த வண்ணம் முட்டியிட்டு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது மரத்தினாலான அந்த பலகை...சதுர வடிவில் இருந்த பலகையின் முனையில் வட்ட வடிவமாக ஆங்கில எழுத்துக்களும், அதன் கீழ் எண்களும், இரு முனைகளிலும் ’YES’, ‘NO’ மற்றும் நடுவே “GOOD BYE” என்ற வார்த்தைகளும் பொறிக்கப் பட்டிருந்தன. அந்த பலகையின் நடுவே சிறியதாய் ஒரு சிகப்பு நிற பந்து. இவ்வளவு குறிப்புகளையும் தாங்கியபடி, மிகச்சாதாரணப் பலகையை போல் அவர்களுக்கிடையே விரிந்து கிடந்தது அந்த பலகை. ஆத்மாக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் ’ஓஜா பலகை’.
அந்த பலகையின் நடுவில் இருந்த ஒரு சிகப்பு பந்தின் மேற்புறத்தில் அவளது நடு விரலை வைத்த ரதி, மதுவை பார்த்தாள். ரதியின் சைகையை பார்த்ததும் மதுவும் அந்த சிகப்பு ’ப்ளேன்சட்’டின் மீது விரலை வைத்தாள். அவர்களுக்கு நடுவே எரிந்து கொண்டிருந்த மெழுகின் வெளிச்சத்தில் தீர்கமாக பார்வையை செழுத்தினார்கள்.
சற்று நேரம் எதுவும் பேசாமல் இருவரும் அந்த ப்ளேன்சட்டை பலகையில் வட்டவடிவமாக சுற்றத் துவங்கினர்.
மது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, ரதி கண்கள் மூடி மிக சன்னமாக மதுவிற்கே கேட்காத வண்ணம் ஏதோ முனுமுனுத்தாள். பின்பு ரதி சன்னமான குரலில், “யாராவது இருக்கீங்களா?” என்றாள்.
சற்று நேர மயான அமைதிக்கு பின்பு, ரதி மீண்டும், “அண்ணா இருக்கியா?” என்றாள்.
உடனே ரதியின் கை தானாக அந்த பலகையின் ஓரத்திற்கு ஒரே சீராக நகரத் துவங்கியது. அவளது கை பலகையை சுற்றி நகரத் துவங்கவும், மதுவின் விரலும் தானாக ரதியின் விரலோட நகரத் துவங்கயது. ‘YES’ என்று எழுதியிருந்த அந்த எழுத்துக்களின் கீழ் சென்றதும் அவளது விரலின் அசைவு சட்டென நின்றது.
“உன்னோட வேற யாராவது இருக்காங்களா?” மீண்டும் சன்னமாக ஒலித்தது ரதியின் குரல்.
இம்முறை ப்ளேன்சட் செல்லும் திசையையே தொடர்ந்து கொண்டிருந்த மதுவின் விழிகளில் பதட்டம் அதிகரித்தது. கடைசியில் பலகையின் மற்றொரு மூலையில் எழுதியிருந்த “NO” என்ற எழுதுக்களின் கீழ் வந்து நின்றது. சோர்ந்து போனவளாய் பலகையிலிருந்து விரலை எடுக்க மது முயற்கிக்கவும், அவளது விரலை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரதியின் விரல், பலகையின் குறுக்கும் நெடுக்கும் பேயாட்டம் அடித்துவங்கம், மதுவின் முகத்தில் திகில் படர்ந்தது. ரதி எதோதோ சொல்ல, ஒரு வழியாக விரல்களின் ஆட்டம் நின்றது.
மதுவின் முகத்தை கோபத்துடன் பார்த்த ரதி, மெழுகை பார்த்து எதோ சொல்ல, உடனே அவர்களது கை பலகையின் நடுப்புறத்திற்கு செல்லத் துவங்கியது. “GOODBYE” என்ற எழுத்துக்களின் கீழ் வந்து நின்றவுடன், இருவரும் விரலை அதிலிருந்து எடுத்தனர்.
“என்ன ஆச்சு மது? நடுவுல கையை எடுக்க கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருகேன்?” தீனமாக ரதி கேட்கவும், மது, “ஏன் ரதி எங்கம்மா மட்டும் வரவே மாட்டேங்கறாங்க?”
“நீ இன்னும் நிறைய காண்சென்ட்ரேட் பண்ணனும் மது! நம்பிக்கை தான் முக்கியம்...கண்டிப்பா வருவாங்கன்னு முதல்ல நம்பனும்...”
“நான் நம்பறதால தான உன்கூட இதை பண்ணிட்டு இருக்கேன்...அப்புறம் ஏன்?” முட்டியில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகே வந்து அவளது முடியை கோதி விட்டபடி, “கண்டிப்பா வருவாங்க மது! ஒரு வேளை...இது அவங்களுக்கு பழக்கமில்லாத இடமா இருக்கறதால வர மாட்டிங்கறாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் தான் எந்த இடத்துக்கு வேணும்னாலும் போவாங்களாம்...எங்க அண்ணன் மாதிரி! எனக்கு மொதல்ல இத பழக்கின மீடியேட்டர் சொல்லியிருக்காரு...”
மது தலையை தூக்கி ரதியை பார்க்க, அவள், “அப்ப ஒன்னு செய்யலாம்...உங்க வீட்டுக்கு போய் செஞ்சு பாக்கலாம்...”
“அதெப்படி முடியும்? எங்க வீட்ல தான் வேற யாரோ குடியிருக்காங்களே!”
“ஓ...அப்ப என்ன பண்றது?” சற்று நேரம் யோசித்தவள், “வேற எதாவது அவங்களுக்கு பரிச்சையமான இடம், இல்ல அவங்க அடிக்கடி போன இடம்...இப்படி எதாவது?”
“எங்க சித்தி விடு இருக்கு...ஆனா அவங்க இப்ப புது விட்டுக்கு போனப்புறம் நானும் அம்மாவும் அந்த வீட்டுக்கு ஒரு தடவை தான் போயிருக்கோம்...ஆனா அங்கயும் போக முடியாது...எங்க சித்தி...”
அவளை மேலே பேச விடாமல் இடைமறித்தாள், “அப்ப அது தான் சரியான இடம்...அங்க முயற்சி பண்ணி பாக்கலாம்...அதுவும் சரியா வரலைன்னா...அப்புறம் எதாவது திறந்த வெளில முயற்சி பண்ணலாம்...ஆனா அதுல ஆபத்து அதிகம்...”
தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு, “ஆபத்தா?” என்று வியப்படைந்தாள்.
“ஆமா...அங்க நம்ம அழைக்கிற ஆத்மாவ தவிர வேற நிறைய ஆத்மா இருக்கவும் வாய்ப்பு இருக்கு...அப்ப மீடியேட்டரையே கூட சில ஆத்மாகள் அவங்க ஆளுகைக்குள்ள கொண்டு வர முயற்சிக்கும்...அப்ப பய ந்து போய் நம்ம போர்ட்ட சரியா மூடாமை வச்சுட்டாலோ, இல்ல போர்ட்டை அழிக்க முயற்சி பண்ணாலோ, விளைவு ரொம்ப விபரீதமா இருக்கும்... “
“ஹய்யோ…அப்படியெல்லாம் வேண்டாம்…நான் எங்க சித்தி வீட்லையே பண்றேன்…”
ஒரு வருடம் கழித்து என்னவென்று சொல்லிக் கொண்டு சித்தி வீட்டுக்கு செல்வது, அதை தவிர வேறு இடம் ஏதும் இருந்தால் பரவாயில்லை என்று யோசிக்கத் துவங்கினாள் மது.
***********************************************************************************
கோர்ட் வளாகத்தில் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தாள் முகில். ஒன்பது மணிக்கெல்லாம் வருவதாக சொல்லியிருந்த சோமநாதனை இன்னும் காணவில்லை. ஒன்பது முப்பதுக்கு ரஞ்சித்தின் முதல் ஹியரிங். அவன் கைதாகி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருந்தது.
அப்போது ஒரு நடுத்தற வயது பெண்மணியும் இன்ஸ்பெக்ட்டர் பரத்தும், ஏதோ பேசிக் கொண்டே கோர்ட் படிகளில் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தனர். முகில் நின்றிருந்த இடத்தை கடக்கும் போது, பரத் குனிந்து அந்த பெண்மணியிடம் ஏதோ சொல்ல, முகிலை கடக்கும் போது, அவளை ஒரு நொடி ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றார். அவரது பார்வையில் இருந்த ஏளனத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.
அவரது செய்கையை கவனித்தாலும், எதற்காக தன்னை அப்படி பார்த்தார் என்று யோசிக்கும் மனநிலையில் முகில் அப்போது இல்லை. சற்றே சோர்வுற்ற கண்களுடன் சோமநாதனுக்காக காத்திருக்கலானாள். சற்று நேரத்திலிலெல்லாம், சோமநாதன் முகில் நிற்கும் இடத்திற்கு ஓடி வந்தார். “என்னம்மா? ரொம்ப நேரமா காக்க வச்சுட்டேனா?”
“ச்சே…ச்சே…அப்படி எல்லாம் ஒன்னுமில்ல சார்…”
“சரி…வாம்மா….இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு…உள்ள போவோம்…”
அந்த சிறிய அறைக்குள் இருவரும் நுழைந்தனர். அவர்களை தவிர, அங்கு அவர்களுக்காக ஏற்கவனே காத்திருந்த சோமநாதனின் ஜூனியர் வக்கீல் ஒருவரும், டைபிஸ்ட் ஒருவரும் இருந்தனர். எந்த நேரத்திலும் ரஞ்சித் அங்கு வரக் கூடும் என்று ஆர்வமாய் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்த்த முகில், வாயிலருகே நடந்து வந்து கொண்டிருந்த அந்த பெண்மணியை பார்த்து துணிக்குற்றாள், அவளை சற்று முன்னர் ஏளனமாக பார்த்து விட்டு சென்ற அதே பெண்மணி தான். முகத்தில் இருந்த வசீகரமான அவரது அழகையெல்லாம், முகத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த கடுகடுப்பு மறைக்க, வக்கீல் கருப்பு கோட் அணிந்து, கையில் கேஸ் கட்டிக்களை ஏந்தியவாறு, ஹை ஹீல்ஸ் தரையில் பட்டு அதிரும் சத்தத்தில், கோர்ட் வளாகமே அதிரும் அளவுக்கு வேகமாய் புயலென வந்தார் அந்த பெண்மணி. அவரை பின்தொடர்ந்து பரத் என்றுமில்லாத அடக்க ஒடுக்கத்துடன் வந்துகொண்டிருந்தார். “இவங்க தான்…பப்ளிக் ப்ராசிக்யூட்டர்…லீலாவதி!!!” என்று சோமநாதன் முகில் காதுக்குள் ஓதினார்.
அவரை ஏறேடுத்து பார்த்த முகிலை மீண்டும் அதே ஏளனப் பார்வை பார்த்து விட்டு அவர்களுக்கெதிரே அமர்ந்தார் லீலாவதி! “அப்பா…அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சரியா தான் சொல்லியிருக்காங்க…என்ன ஒரு கர்வம் தெரியுது முகத்துல!” என்று தன் சூழ்நிலையையும் ஒரு நொடி மறந்து வியப்புற்றாள் முகில்!
சிறிது நேரத்தில் இரு கான்ஸ்டபிள்களுடன் ரஞ்சித்தும், அவர்களை தொடர்ந்து நீதிபதியும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
“எதக்காக அந்த நேரத்துல மாடிக்கு போனீங்க? உங்க வீட்ல தான் ஏ.ஸி இருக்கே, அப்புறம் என்ன காத்து வாங்க போனதா சொல்றீங்க? போலீஸ் கிட்ட உடனே ஏன் சொல்லல? “ இப்படி லீலாவதி குடைந்து குடைந்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ரஞ்சித் வழக்கமான அதே பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தான். லீலாவதி குறுக்கு விசாரணை முடிந்தபின், சோமநாதனும் அவர் தரப்பு வாதங்களை முன் வைத்தார். போலீஸ் தரப்பு சாட்சியான அபார்ட்மென்ட் வாட்ச்மேனை விசாரத்த பின்பு, லீலாவதி வாதி தரப்பில் மற்றுமொரு சாட்சியை ஆஜர் படுத்தினார். மதுவின் சித்தி காமாட்சி தான் அது.
“மதுவுக்கு ரஞ்சித்தை தான் மாப்ள பாத்திருந்தோம்…ரெண்டு பேரும் ஒரு வாரத்துக் மேல பேசி பழகினாங்க…ஆனா, அதுக்கப்புறம் அக்கா செத்ததும், கல்யாணம் நின்னுடுச்சு…மது அப்பா எவ்வளவோ சொல்லியும், மது வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கலை…மதுரையிலையே எம்.எஸ்.சி சீட் கிடைச்சுது. எங்க வீட்ல தங்கி படிக்க சொன்னா, முடியாதுன்னு காந்தி கிராமத்துக்கு படிக்க போய்ட்டா, தின்டுக்கல்ல ஒரு ஹாஸ்ட்டல்ல இருந்தா. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் அவங்கப்பா கல்யாணப் பேச்ச தொடங்கவும், ரஞ்சித்தை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு மது பிடிவாதம் பிடிச்சா…எங்க மாமாவும் இறங்கி போய் அவங்க வீட்ல சம்பந்தம் பேசினாரு…ஆனா அவங்க ஒத்துக்கலை…உடனே ரஞ்சித்துக்கு வேற ஒரு கல்யாணம் ஆகி, எங்க அபார்ட்மெண்ட்டுகே வந்துட்டான். இவன் இங்க இருக்கற விஷயத்தை நான் மதுகிட்ட சொன்னதே இல்லை…ஆனா ஏனோ தெரியல, அது வரைக்கும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு இருந்தவ, கடைசி ஒரு வருஷமா வீட்டுப் பக்கமே வரலை. சரியா பேசறது கூட இல்ல…எப்ப ஃபோன் பண்ணாலும் லைனே கிடைக்காது. யாரோ ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன் சித்தின்னு சொல்லுவா. இப்ப இங்க வந்து ரஞ்சித்தை பாத்தப்புறம் கூட அவனை பத்தி அவ என்கிட்ட எதுவுமே கேக்கல….எனக்கென்னவோ, அவன் இங்க இருக்கறது அவளுக்கு ஏற்கனவே தெரியும், அவனோட ஏதோ பேசத்தான் எங்கவீட்டுக்கு வந்திருந்தான்னு தோணுது!”
காமாட்சி சாட்சியத்தை முடிக்கவும், ரஞ்சித் உறைந்து போய் நின்றான்,
உடனே லீலாவதி ரஞ்சித்திடம், “இப்ப சொல்லுங்க மிஸ்டர் ரஞ்சித்…எத்தன நாளா இந்த பழக்கம் தொடர்ந்துட்டு இருக்கு? எதுக்காக மதுவந்த்தி உங்கள பாக்க வந்தாங்க?”
தட்டு தடுமாறிய ரஞ்சித், சில நொடிகள் பதில் சொல்ல முடியாமல் விழித்தான், பின்பு, “செத்த பொண்ணு தான் மதுன்னே எனக்கு அப்புறமா என் அம்மா சொல்லி தான் தெரியும்…அவங்களை நான் அதுக்கு முன்னாடி பாத்தது கூட இல்லை, ஃபோட்டல மட்டும் தான். அவங்க முகம் கூட எனக்கு ஞாபகம் இல்ல….”
“முகம் கூட ஞாபகம் இல்லாத பொண்ணுக்காகவா ஒரு வருஷம் வேற பொண்ணே பாக்க கூடாதுன்னு அடம் பிடிச்சீங்க?”
உடனே சோமநாதன் குறிக்கிட்டு, “இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லாத கேள்விகள கேக்கறீங்க மேடம்!”
“ஏன் இல்லை? கண்டிப்பா இருக்கு…கல்யாணம் பண்ணிகிட்டா அந்த பொண்ண தான் பண்ணிக்குவேன்னு ஒரு வருஷம் இவரு சொல்லியிருக்காரு…யாருன்னே தெரியாத பொண்ணுக்காக யாராவது இந்த மாதிரி செய்வாங்களா?”
“அவங்க குடும்ப விஷயத்த பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசறீங்க? ரஞ்சித் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு வேற எவ்வளவோ காரணம் இருக்கலாமே?”
“அவங்க வீட்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு தான் சார் பேசறேன்…அத நேர்ல பாத்த சாட்சி இருக்காரு…”
உடனே காமாட்சிக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவரை காட்டி அவரை விசாரிக்க அனுமதி வாங்கினார் லீலாவதி. தான் ஒரு கல்யாணத் தரகரென்றும், ரஞ்சித் மது கல்யாணத்தை முதலில் ஏற்பாடு செய்தது தானென்றும் தன்னை அறிமுகப் படித்து கொண்டார். ரஞ்சித் வீட்டுக்கு சென்ற போதெல்லாம், வேறு பெண் பார்க்க கூடாது, முடிந்தால் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து வையுங்கள் என்று ரஞ்சித் அவன் அம்மாவிடம் வீட்டில் சண்டை போட்டதை தானே நேரில் ஓரிரு முறை பார்த்திருப்பதாக சாட்சியம் அளித்தார் அவர்.
அவர் பேசி முடித்ததும் லீலாவதி, “வீட்டு வற்புறுத்தலுக்காக காதலியை விட்டுட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்றதும், மனைவிக்கும் வீட்டுக்கும் தெரியாம அந்த உறவ தொடர்றதும் இப்ப வாடிக்கை ஆகிடுச்சு, இதுக்கு ஒரு படி மேல போய் காதலி உதவியோடு கட்டின மனைவியை கொலை செய்றது போன்ற சம்பவங்கள் இப்ப பெருகிட்டு இருக்கு…சமீபத்துல பெங்களூர்ல கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு….ரஞ்சித்தும் அது போல தான், பெத்தவங்க வற்புறுத்தலுக்காக வேற கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்காரு. ஆனா மதுவந்த்தியோட பழக்கத்த விட முடியாம கல்யாணத்துக்கு அப்புறம் தொடர்ந்திருக்காரு…அப்புறம் அவங்களுக்குள்ளயே பிரச்சனை வெடுச்சு அவங்கள கொலை பண்ண அளவுக்கு துணிஞ்சிருக்கலாம். There is every possibility! He was at the wrong place at the wrong time, he is innocent என்று டிஃபண்ஸ் தரப்பு வக்கீல் சொல்றது ஏத்துக்க முடியாத ஒரு விஷயம்! ரஞ்சித்துக்கும் மதுவந்த்திக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு…அதன் விளைவா மதுவந்த்தி கீழ தள்ளிவிடப்பட்டிருக்காங்க!”
அவரை குறுக்கிட்ட சோமநாதன், “என்ன தான் சண்டையா இருந்தாலும் ஒரு பொண்ண எப்படி தூக்கி அத்தனை உயரமான அந்த மாடித்திண்டு மேல நிறுத்தி அப்புறம் தள்ளிவிட முடியும்? வாக்குவாதத்துல மதுவந்த்தியா போய் மாடித் திண்டு மேல ஏறிட்டாங்களா?”
“சாகும் போது மதுவந்த்தி நாப்பதஞ்சு கிலோ தான் இருந்திருக்காங்க…அந்த வெயிட்ட தூக்கறதுக்கு ஆறடியுள்ள வாட்டசாட்டமான ஆளால முடியாதா? திண்டு மேல உக்கார வச்சுகூட அப்படியே பின்புறமா தள்ளியிருக்கலாமே!”
ஆனால் மதுவந்த்தி தலையின் பக்கவாட்டில் தான் அடிபட்டிருந்தது என்று சோமநாதன் வாதாட, லீலாவதி அதற்கும் தக்க பதிலளிக்க இப்படியே சில மணி நேரங்கள் அவர்களது வாதம் முடிவில்லாமல் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் ரஞ்சித் அன்னேரத்தில் அங்கு என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதும் ரஞ்சித் அசைந்து கொடுக்காமல் சொன்ன பதிலையே சொல்லிக் கொண்டிருந்ததில், சோமநாதன் சலிப்புற்றார்.
எல்லாம் முடிந்து வெளியே வரும் போது, லீலாவதி பரத்திடம், “இந்த மாதிரி பொண்ணுங்கள தான் பரத் சொல்லனும்…இவங்க இப்படி புருஷன கண்மூடித் தனமா நம்பறதால தான் இது போல தப்பெல்லாம் நடக்குது! எத்தன பட்டாலும், நம்ம ஊர் பொண்ணுக திருந்த மாட்டாங்க…” முகிலுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சத்தமாக சொல்லிக் கொண்டே நடந்தார். ரஞ்சித் மீண்டும் ஜீப்பிற்கு அழைத்துச் செல்ல படுவதை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த முகில் லீலாவதி சொன்னதை கேட்டு அவரை திரும்பி பார்த்தாள், அவரை பார்த்தது அவளது முகபாவனை அப்படியே மாறியது. “இவங்களும் ஒரு பொம்பள தானே! ஏன் இப்படி இரக்கமில்லாம குறுக்கு புத்தியோட என்னனென்னவோ பேசறாங்க?” என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள்.
முகில் நின்று கொண்டிருந்த நிலையும், அவர் முகத்தில் தெரிந்த பல்வேறு மாற்றங்களையும் பரத் கவனிக்கத் தவறவில்லை. அவர் முகத்தில் சந்தேகக் கோடுகள் ஓட ஆரம்பித்தன.
நீதிமன்றத்தின் வாயிலில், சுடும் வெயிலில் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த முகிலுக்கு அன்று ஏனோ மிகவும் கலைப்பாக இருந்தது. காலையில் நீதிமன்றதுக்கு வர முடியாது, நீயும் போகக் கூடாது என்று கண்டித்த மாமனாராலா, ஹியரிங் முடிந்து ரஞ்சித் சரியாக ஒத்துழைக்க மறுக்கிறான் என்று சொல்லிவிட்டு சென்ற சோமநாதனாலா, தன்னை ஏளனமாக பார்த்து பேசிவிட்டு சென்ற லீலாவதியாலா, இல்லை உடம்பு சரியில்லாமல் இருக்கும் தன் தந்தையாலா,என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு காரணம் அவள் மனதையும் குறிப்பாக உடலையும் வாட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ ஒரு வழியாக வீட்டை அடைந்தவள், தனலட்சுமி வந்து கதவை திறக்கும் முன்னரே, வாயிலருகிலேயே மயங்கி சரிந்தாள்!
பதபதைத்து இருவருமே மருமகளை மருத்தவமணைக்கு தூக்கிச் செல்ல, மருத்துவர் அவளை பரிசோத்தித்து விட்டு, மருத்துவ அறிக்கை வரும் வரை காத்திருக்க சொன்னார். மிகவும் கவலையுற்று தனலட்சுமி, ’சரியா சாப்பிட்டா தான? காலையில சொல்ல சொல்ல கேக்காம, சாப்பிடாம அவ்ளோ தூரம் போய்..வெய்யில அலைஞ்சு….எல்லாம் போதாத நேரம்…நான் அப்பயே சொன்னேன்…வேணான்டா இந்த வீடு வாஸ்த்து சரியில்லை…வாங்கதன்னு…கேட்டானா? எதுக்கெடுத்தாலும் எதிர்த்து எதிர்த்து பேசற புள்ளைய குடுத்திருக்கான் ஆண்டவன் எனக்கு” என்று வெகுவாய் புலம்பிக் கொண்டிருந்தார்.
அவர்களை அழைத்த மருத்துவர் புன்னகையுடன், “முன்னாடியே ஏன் சொல்லலை? ரிப்போர்ட் வரவரைக்கும் வெயிட் பண்ணியிருக்க வேண்டாமே…ஆமா….எந்த கைனக் கிட்ட செக்கப்க்கு போய்ட்டு இருக்கீங்க?” என்றார்.
அவர் சொல்வது ஒன்றுமே புரியாமல் முகில், “என்ன செக்கப் டாக்டர்? இதுக்கு முன்னாடி எந்த கைனக் கிட்டையும் போனதில்லை…” என்றாள்.
“என்னம்மா இது? பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்கீங்க? இவ்ளோ நாளா ஏன் செக்கப் போகல…”
“நீங்க சொல்றது…எனக்கு புரியல டாக்டர்…”
“என்ன புரியலையா? நீங்க கன்ஸீவ் ஆகியிருக்கீங்க…ட்வெல் வீக்ஸ்!” என்று அதிர்ச்சியுடன் டாக்டர் சொல்லவும், முகிலும் தனலட்சுமியும் அவருக்கும் மேலாக அதிர்ந்தனர். சந்தோஷத்துடன் குதூகலிக்க வேண்டிய விஷயத்தை கேள்விப்பட்டும், அமைதியாய் எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தனர். தன் அறைக்குள் நுழைந்து கதவை லேசாக சாத்திக் கொண்டாள் முகில். சில நிமிடங்கள் கழித்தும் அவள் வெளியே வராததால், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கதவை மெல்ல திறந்து பார்த்த தனலட்சுமி, முகில் இருந்த நிலையை பார்த்து செய்வதறியாது விக்கித்து நின்றார்.
[தொடரும்]
Monday, October 5, 2009
ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 7
“ஆசை முகம் மறந்து போச்சே…"
பதினந்தாவது முறையாக அதே பாடல் ஒலிக்க, பொறுமையிழந்த திவ்யா மதுவின் லேப்டாப்பை பிடிங்கி அந்த பாடலை நிறுத்தினாள்.
"என்னாச்சு திவ்யா? நல்ல பாட்டு தானே?"
"நல்ல பாட்டு தான்...அதுக்காக? பதினங்சு தடவையா கேப்பாங்க?"
"அதுக்குள்ள பதினஞ்சு தடவை ஓடிடுச்சா?"
"ஹ்க்கூம்...கிழிஞ்சுது...ஆமா...என்ன நீ ஒரு மாதிரியா உக்காந்திருக்க?"
"அது ஒன்னுமில்லை...அப்பா இன்னிக்கு மறுபடியும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க..."
"ஹ்ம்ம்...நீ என்ன சொன்ன?"
"நான் என்ன சொல்றது? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டேன்..."
"என்ன மது இது? அம்மா இறந்து ஒரு வருஷத்துக்கு மேலையே ஆகப் போகுது...நமக்கும் இனி இந்த வருஷம் முழுக்க ப்ராஜக்ட் தான்...பேசாம அப்பாகிட்ட சரின்னு சொல்லிட வேண்டியது தான?"
மது ஒன்றும் பேசாமல், தரையை வெறித்து நோக்கத் துவங்கினாள்.
"கல்யாணப் பேச்சுன்னு எடுத்தாலே, எங்கம்மா ஞாபகம் தான் திவ்யா வருது...அன்னிக்கு, அன்னிக்கு...அவ்ளோ அவசர அவசரமா வேலை செய்யாம இருந்திருந்தா அம்மா இன்னும் இருந்துருப்பாங்களோ என்னவோ..."
"விடு மது...இன்னும் எத்தன நாளைக்கு தான் அதையே நினைச்சுட்டு இருப்ப?"
"அப்பா கேட்டாரு...அன்னிக்கு பாக்க வந்தாங்களே...அந்த பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையாம்...அவங்களையே வேணா கேட்டுப் பாப்போமான்னு..."
"அவங்க தான் அதுக்கப்புறம் எதுவுமே பேசலையே...அவங்கள போய் எப்படி?"
"நானும் அதே தான் சொன்னேன்...ஆனா, அப்பாவுக்கு என்னன்னா, அவன் அம்மா செலக்ட் பண்ண பையனாம்...அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க..."
"ஓஓ...அதானா விஷயம்? ஆசை முகம் மறந்து போச்சே பாட்டெல்லாம்?" திவ்யா சிரிக்க, மது, "நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாக்கறேன்...எனக்கு சுத்தமா ஞாபகம் வர மாட்டேங்குது..."****
“அந்த பொண்ணோட அப்பாகிட்ட என்ன சொன்னீங்க?” ரஞ்சித் வெகுவாக பொறுமை இழந்திருந்தது அவன் குரலிலேயே தெரிந்தது.
’அவன்கிட்ட சொல்ல வேண்டாம்னு அப்பயே சொன்னேன்…கேட்டியா?’ என்று பார்வையாலேயே மனைவியை கடிந்து கொண்டார் சுப்ரமணியம்.
ஆனால் தனலட்சுமி, மிக பொறுமையாக “இதப் பாருப்பா ரஞ்சித்து…எங்களுக்கு இருக்கறது நீ ஒரே பையன்…உனக்கு பாத்து பாத்து கல்யாணம் பண்ணனும்னு தான் நாங்க ஆசைபடறோம்…சும்மா, எடுத்தோமா கவுத்தோமான்னு எல்லாம் செய்ய முடியாதுப்பா…அந்த பொண்ண பாக்க போன நேரமே சரியி்ல்லை…ஏதோ நம்ம நல்ல நேரம் நிச்சயம் பண்றதுக்கு முன்னாடியே அது தட்டி போயிருச்சு…”
“என்னம்மா இப்படி பேசுறீங்க? அந்த அம்மா இறந்தது ஒரு விபத்து…”
“அதெல்லாம் எனக்கு தெரியாதுடா…இத பாரு…ஒரு வருஷமா பொண்ணெல்லாம் பாக்க வேணாம்னு சொல்லி நீ வீம்பு பண்ணதுக்கு நான் ஒத்துகிட்டேன்ல? இப்ப நான் சொல்ற பேச்ச, நீ கேளு…இந்த ஃபோட்டவ பாரு….எங்க தூரத்து சொந்தம் தான்…பொண்ணு ரொம்ப அமைதியான பொண்ணாம்…”
“முடியாதும்மா…நீங்க சொல்ற காரணமெல்லாம் ஏத்துக்குற மாதிரி இல்லை…நான் ஏன் அந்த மதுவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஒரே ஒரு சரியான காரணம் சொல்லுங்க…அப்புறம் நீங்க காட்ற எந்த பொண்ண வேணா பாக்கறேன்…”
அவனுக்கும் ஏதோ நேரம் சரியில்லை என்று ஜோசியர் சொல்லியிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அவன் போக்கிலேயே விட்டிருந்தார் தனலட்சுமி. அதற்கு மேல் அவன் பேச்சை கேட்க அவர் தயாராக இல்லை. ரஞ்சித்தின் பிடிவாதம்மும் அவன் அம்மாவின் முன் ஒரு சில நாட்களிலேயே செல்லாக்காசாகிப் போனது. ஒரு முறை கூட பார்த்திறாத ஒரு பெண்ணிற்காக அம்மாவிடம் கோபித்துக் கொள்ளவும் முடியாமல், அம்மா இஷ்டப்படியே நடக்க சம்மதித்தான் ரஞ்சித்.
ரஞ்சித்திற்கு வேறு இடத்துல் ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாய் அப்பா சொன்ன செய்தியை கேட்டு சொன்ன செய்தியை கேட்டு சோர்வடைந்தாள் மது. அவள் மனதிற்கு திட்ட வட்டமாகத் தெரிந்திருந்தது, அவள் ராசியற்றவள் என்று கருதியே அவர்கள் அப்படி சொல்லியிருக்கக்கூடும் என்று.
அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட எட்டு மாதங்கள் கடந்திருந்ததன, அவள் அப்பாவும் முனைப்பாக அவளுக்கு வேறு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார், அவரது எல்லா முயற்சியும் பயனளிக்காது போகவே, அம்மா இறந்த தினத்தன்று அதை பற்றி மதுவிடம் மிகுந்து கவலையோடு பேசிக்கொண்டிருந்தார் அவர். கடந்து ஒரு வருடமாக, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த மது, இதைப் பற்று அதிகம் சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்திருந்த போதும், அப்பாவின் குரலில் இருந்த சோகம், அவளை கவலைக்குள்ளாக்கியது. அவள் அம்மா இறந்த தினத்தன்று நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் மீண்டும் அவள் கண் முன் தோன்றி உயிரை வதைத்தது.
“அம்மா! நானே போய் அந்த செயின எடுத்து போட்டுக்கறேம்மா…நீ மாடிக்கு போகாதம்மா என்று தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.
பொதுவாக ஆழ்ந்து உறங்கும் திவ்யா, அன்று தொடர்ந்து பேச்சொலி கேட்கவே, லேசாக கண்ணைத் திறந்தவள், மது உளறிக் கொண்டிருப்பதை பார்த்து, “மது!” என்று உரக்க அவளை அழைத்துவிட்டு மீண்டும் உறங்கிப் போனாள்.
திடுக்கிட்டு விழித்த மதுவிற்கு ஒரு நொடி எதுவுமே புரியவில்லை, முதலில் திவ்யாவை பார்த்தாள், வழக்கம் போல திவ்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன்னை யாரோ அழைத்தது போல் தோன்றியது நிச்சயமாக கனவல்ல என்று உணர்ந்தாள். குழம்பிய குட்டையில் கல்லாய் அவளுக்குள் ஒரெண்ணம் உதித்தது. “இன்று அம்மாவின் இறந்த தினமாயிற்றே? அப்படியென்னாறால் என்னை அழைத்தது அம்மாவாக இருக்குமோ?” இப்படி பலவாறு யோசித்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மது, திரைசீலை வழியாக எதிர் அறையில் விளக்கு எரிந்து எரிந்து அனைவதை கண்டு வியப்படைந்தாள். அந்த அறையில் வசித்த ரதி, வெகு நாட்களாய் அந்த விடுதியில் வசித்து வந்தாலும், யாருடனும் அதிகம் பேசியதில்லை அல்லது வேறு யாருக்கும் அவளுடன் பேசும்எண்ணம் கூட தோன்றியதில்லை.
அன்று ஏனோ, அவள் அறைக்கு போய் என்ன தான் செய்து கொண்டிருக்கிறாள் பார்ப்போம் என்ற எண்ணம் மதுவிற்கு தோன்றியது. மறு கணமே, சத்தம் எழுப்பாமல் தன் அறையை விட்டு வெளியேறினாள். அப்போது திடீரென்று விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, நிசப்தமாய் போயிருந்த அந்த இருட்டு அறையை நோக்கி நடந்தாள் மது! மது அந்த அறையின் வாயிலில் கால் வைக்கவும், கோரமான ஒரு அழுகை ஒலி, இரவின் நிசப்பத்தை கீறிக் கொண்டு அவளது செவிப்பாறைகளை துழைத்தது. கதவின் கைப்பிடியை மெதுவாய் சத்தம் எழுப்பாமல் திருகியவள், கதவு திறந்ததும் அங்கு கண்ட காட்சியில் பயத்தில் அப்படியே உறைந்து போய் நின்றாள்.
***************************************************************
தன் அப்பா சொன்ன வக்கீலை சென்று பார்ப்பதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள் முகில். ரஞ்சித்தின் அப்பா கோபம் தனிந்து வேறொரு வக்கீலை உடனே ஏற்பாடு செய்வார் என்று தான் அவளும் அவ்வளவு நாட்களாக காத்திருந்தாள். அவர் கோபம் குறையாதது மட்டுமின்றி, முகிலிடமும் அவனை மறந்துவிடும் படி கூறியது அவளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ரஞ்சித் நிச்சயமாக எந்த தப்பும் செய்திருக்க மாட்டான் என்று முகிலுக்கு திட்டவட்டமாக தெரிந்தாலும், தன் மாமனார்அவ்விதம் எண்ணவில்லை என்ற உண்மை அவளை பெரிதாக வேதனை படுத்தியது. இப்படி பலவாறு யோசித்தவாறே, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொல்லாமல் வெளியே செல்லத் துவங்கிய முகிலை தடுத்து நிறுத்தினார் சுப்பிரமணியம்.
"எங்கம்மா கிளம்பிட்ட?"
"வக்கீலை பாக்கறதுக்கு தான் மாமா...அப்பா எங்கயோ விசாரிச்சு, ஒரு வக்கீலை கண்டுபிடிச்சு சொன்னாரு, அவரை தான் பாக்க போய்ட்டு இருக்கேன்...நீங்களும் வரீங்களா?"
அவர் எதுவுமே பேசாமல் ’போ’ என்று கதவை நோக்கி சைகை செய்தார். அவரது செய்கை, ’எக்கேடோ கெட்டுப் போ’ என்று சொல்லாமல் சொல்லியதை போல் பட்டது முகிலுக்கு. அது நாள் வரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அந்த கணமே வெடித்துச் சிதற, ஆவேசமாய், "பெத்த பையன் மேலையே சந்தேகப் படறீங்களே மாமா? இதெல்லாம் உங்களுக்கு ஞாயமா இருக்கா?"
ஆனால் அவர் எந்த வித பதட்டமும் படாமல், மனைவியை பார்த்து, "கேக்குறாள்ல? சொல்லு தனம்...ஏன் முழிக்கற?"
"என்ன அத்தை? என்ன இதெல்லாம்? யாரோ தெரியாத ஒரு பொண்ணு செத்ததுக்கு அவர் யதேச்சயா அங்க போனதுக்கும் முடிச்சு போட்டு அநியாயமா அவரை ஜெயில்ல வச்சிருக்காங்க....மாமாவும் அவர் மேல கோவப்பட்டுகிட்டு இருக்காரு..."
தனலட்சுமி எதுவும் பேசாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க, சுப்பிரமணியம், "யாரோ தெரியாத பொண்ணாம்...எத்தன நாளைக்கு தான் மறைச்சு வைக்க போற? இப்ப நீயே சொல்றியா? இல்லை நான் சொல்லவா?"
தனலட்சுமி, "அது வந்து முகில்...அந்த பொண்ணு யாரோ தெரியாத பொண்ணுன்னு சொல்லிட முடியாது...ஆனா, ரஞ்சித்துக்கும் அந்த பொண்ணுக்கும் பழக்கம் இருக்குன்னு எனக்கு தோணலை..."
"என்ன உனக்கு தோணல? அந்த பொண்ணோட ஒரு வாரம் மட்டும் பேசிட்டு, அதுக்கப்புறம் ஒரு வருஷம் முழுக்க வேற பொண்ணே பாக்க கூடாது, அதே பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு உன் மகன் அடம்புடிச்சான்னு மறந்து போச்சா? இவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை...ச்சை..."
முகில் திகைத்து நிற்க, தனலட்சுமி ரஞ்சிதிற்கு மதுவை பெண் பார்த்த கதை, அவள் அம்மா இறந்ததும், தனலட்சுமி அந்த கல்யாணப் பேச்சை நிறுத்தியது, ரஞ்சித் ஒரு வருடமாக வேறெந்த பெண்ணையும் பார்க்க விடாமல் அடம் பிடித்தது என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.
அத்தை சொன்னவையெல்லாம் நிதானமாக கேட்டு முடித்த முகில், "அப்ப என்ன மாமா சொல்ல வர்றீங்க? அவருக்கு அந்த பொண்ண தெரிஞ்சிருக்கும்னு சொல்றீங்களா?"
"சொல்ல என்ன இருக்கு? அது தான் உண்மை!"
"இல்லை!!! இதை நான் நம்ப மாட்டேன்...அவருக்கு அந்த பொண்ணு முகம் கூட ஞாபகம் இல்லை...இப்ப கூட அவருக்கு செத்தது அந்த பொண்ணு தான்னு தெரியாது...நீங்க சொன்ன கதையை அவரே எங்கிட்ட சொல்லியிருக்காரு....அவரு ஒரு வருஷம் அடம்பிடிச்சதே, உங்க மூட நம்பிக்கையால ஒரு கல்யாணத்தையே நிறுத்த வேணாமேங்கற எண்ணம் தான்..."
"நீ இந்த மாதிரி இருக்கறதால தான், அவன் உன்னை இத்தன நாளா ஏமாத்திட்டு இருக்கான்...அப்படி பெரிய உத்தமனா இருந்தா, நைட்டு பன்னென்டு மணிக்கு மாடிக்கு எதுக்கு போறான்? அதுக்கு மொதல்ல பதில் சொல்லச் சொல்லு அவன..."
"அவரு எதுக்கு போனாருன்னு எனக்கு தெரியாது...ஆனா அவர் எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டாரு...அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்...வக்கீலை பாக்க நேரமாச்சு! நான் வரேன்..." அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடு விடுவென வீட்டை விட்டு வெளியேறினாள் முகில்.
வெளியே அடித்துக் கொண்டிருந்த வெயிலை போலவே, அவள் மனதும் தகித்து கொண்டிருந்தது. எப்பேர்பட்ட தன் கணவனை சர்வசாதரணமாக குறை கூறி விட்டாரே, அதுவும் பெற்ற தந்தையே! ’சரி! ஆனாது ஆகட்டும், ரஞ்சித்தை பற்றி அவள் அறிந்த அளவிற்கு வேறு யாரும் அறிந்திருக்க ஞாயமில்லை தான். இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
வக்கீல் சோமநாதனின் அறையில் காத்திருந்தவளுக்கு, அந்த அறையின் செழிப்பு சற்றே நிம்மதியை தர நிம்மதி பெருமூச்சு விட்டாள். பழைய வக்கீலும் விலகிக் கொள்ள, மாமனாரும் கை கழுவிவிட, யாரிடம் போவது, எந்த வக்கீலை தேடுவது என்று மலைத்துப் போயிருந்த நிலையில்,அவளது அப்பா சோமநாதனின் விவரங்களைப் பற்றி சொன்ன போது கூட, பிறந்த கிராமத்தை தவிர வேறு ஊரையே பார்த்திராத தன் அப்பாவிற்கு இதிலெல்லாம் விவரம் போதாது, எப்படிப் பட்ட வக்கீலோ என்று மனச்சோர்வடைந்திருந்தாள். இன்று இந்த வக்கீலின் அலுவலகத்தில், நிறைய இளம் வக்கீல்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்ததையும், அவளுக்கு முன்னரே ஒரு சிலர், வக்கீலை பார்க்க காத்திருந்ததையும் பார்த்து முகில் மனதில் பெரிதாக நம்பிக்கை மலர்ந்தது.
மனிதனுக்கு கஷ்டம் என்று வரும் போது, பணத்தையும், அறிவையும் விட நம்பிக்கையும், சக மனிதர்களின் ஆதரவும் தான் மிக மிக முக்கியம் என்று அப்போது தெளிவாக அவளுக்கு புரிந்தது. இவ்வாரு ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கும் போது, சோமநாதனை அவள் சந்திக்கும் முறையும் வந்தது.
சுமனிடமிருந்து ஏற்கனவே கேஸ் பற்றின விவரங்களை திரட்டி வைத்திருந்த சோமநாதன், முகிலுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் விதமாக பேசிக் கொண்டிருந்தார். கடைசியில், ’ஆனா...ஒரே ஒரு விஷயம்..."
"சொல்லுங்க சார்..."
"உங்க ஹஸ்பென்ட் நடு ராத்திரி எதுக்கு மாடிக்கு போனாருன்னு சொல்ற காரணத்த கண்டிப்பா கோர்ட் நம்பாதும்மா...ஏன் நீங்களே அதை நம்பறீங்களா சொல்லுங்க?"
"அது வந்து..."
"சும்மா சொல்லுங்க...எங்கிட்ட தான சொல்றீங்க?"
"என்னாலையும் நம்ப முடியல சார்....ஆனா....கண்டிப்பா அவரு எந்த தப்பான காரியத்துக்காகவும் போயிருக்க மாட்டாருன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்..."
"அதெல்லாம் சரிம்மா...அப்படி நம்பறதால தான் நானே இந்த கேஸ் எடுக்க ஒத்துகிட்டேன்...ஆனா, இந்த விஷயத்த மட்டும் எப்படியாவது அவர்கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா, அப்புறம் தீர்ப்பு நமக்கு சாதகமா தான் வரும்னு நான் அடிச்சு சொல்லுவேன்! பப்ளிக் ப்ராசிக்யூட்டர் லீலாவதின்னு கேள்விப் பட்டேன்…அந்தம்மா தோண்டி துருவி கொடைஞ்செடுத்துடும்! அதுக்கு முன்னாடி சரியான காரணம் மட்டும் ரஞ்சித் சொல்லலை, அப்புறம் ரொம்ப கஷ்டம் தான்…"
தன்னால் இயன்ற வரை முயற்சிப்பதாக சொல்லிவிட்டு நேரே வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். ரஞ்சித் காரணமின்றி பிடிவாதம் பிடிக்கும் குணமல்ல. அப்படி இருக்கும் போது, அவன் ஒரு விஷயத்தை மறைக்கிறான் எனும் போது, அவனை நம்பாமல் அவனை மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்க முகிலுக்கு மனமில்லை. ’எல்லோரையும் போல் நானும் அவரை நச்சரித்தால், மற்றவர்களைப் போல் நானும் அவரை நம்பவில்லை என்றாகிவிடுமே! அவராக சொல்கிற வரை அவரிடம் எதுவும் கேட்கக்கூடாது’ என்று திட்டவட்டமாக முடிவெடுத்தாள்.
அவளே, அவனிடம் அந்த காரணத்தை சொல்லச் சொல்லி மன்றாடும் நாள் கூடிய சீக்கிரமே வரப்போவதை அறியாமல்.
[தொடரும்]
Thursday, October 1, 2009
விடாது [தொடரும்]
என் இனிய தமிழ் ப்ளாக் வாசகர்களே!
பாசத்துக்குறிய உங்கள் திவ்யபிரியா எழுதுவது :)))
நான் ஒரு பேட்ஸ்மேனா இருந்திருந்தா, இன்னேரம் பேட் மட்டைய மேல தூக்கிப் பிடிச்சு வானத்த பாத்திருப்பேன்...ஆனா ஒரு (ப்ளாக்) போஸ்ட்மேனா இருக்கறதால், இந்த பதிவ போடறேன்...Yes, some how i've managed to reach 100 posts!!! ஆமாங்க...ஒரு வழியா நானும் 100 பதிவு போட்டுட்டேன்! :))
ஒரு வேஸ்ட்மேனா இருந்த நான் இப்ப (ப்ளாக்) போஸ்ட்மேனா ஆகி செஞ்சுரி அடிச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் முழுக்க முழுக்க முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத என் நண்பர்களான நீங்க தான், நீங்க மட்டும் தாங்க! (இதை பெப்ஸி உமா ஸ்டைலில் படிக்கவும்னு நான் சொல்லவே இல்லை :o )
இப்ப ஒன்பதாவது தொடர்கதை போய்ட்டு இருக்கு, இதோட போதும், ஆட்டத்த
முடிச்சுக்கலாம்னு என் அம்பயர் மனசு சொல்லுச்சு...சரி, i'll quit blogging after this shoba apts அப்டீன்னு நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில பேர்கிட்ட சொல்லி வச்சுருந்தேன். அப்பாடி, இனிமே இந்த [தொடரும்] இம்சைகள் தொடராதுன்னு அவங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க...ஆனா, இது என்னவோ என்னை பிடிச்ச வியாதி மாதிரி விடவே மாட்டேங்குது! ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும் போது கூட, பை பைக்கு பதிலா ’தொடரும்’ சொல்லிடுவேன் போல இருக்கு :( ஷோபா அபார்ட்மெண்ட்ஸே இன்னும் எழுதி முடிச்ச பாடில்லை, அதுக்குள்ள அடுத்த கதை எழுதி அதை முடிச்சிட்டேன் :( நானே நினைச்சாலும் நிறுத்த முடியல, அதனால் இனிமேலும் இம்சைகள் ’விடாது [தொடரும்]’ ;) ஏன்னா என் ப்ளாக்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாத ஒரே வார்த்தை...தொடரும்...அவ்வ்வ்வ்!!!
P.S: முதல்ல கதை போட ஆரம்பிச்சப்ப, ஒரு பாகம் முடிஞ்சு தொடரும் கூட போட மறந்த அறிவாளி தான நீ ன்னு பழம் பெரும் பின்னூட்டக்காரர்கள் சொல்வது எனக்கு காதுலையே விழல :D
இப்படிக்கு,
திக்கி திணறி நூறாவது பதிவை அடைந்தாலும்
சீனுக்கு பஞ்சமில்லாது பதிவு போடும்,
உங்கள் அ.பொ.தி.பி :P (அ.பொ ன்னா ’அருமை பொருந்திய’ :P....தி.பி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்! )
Tuesday, September 29, 2009
ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 6
கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை பார்த்தபடி, தனக்குத் தானே மெலிதான ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்துக் கொண்டாள் மது.
’ரஞ்சித் நேர்ல எப்படி இருப்பாரு? அட்லீஸ்ட் ஒரு தடவையாவது நேர்ல பாத்து பேசியிருக்கலாம்…ச்சே…இன்னிக்கு இத்தனை கூட்டத்துக்கு முன்னாடி எப்படி தான் பாக்கறது?’
“மதூ!!!” அம்மாவின் பலத்த குரல் ஈட்டியாய் அவள் காதுகளை மட்டுமல்லாது, அவளது அழகிய சிந்தனைகளையும் துழைக்க, சற்றே எரிச்சலுற்றவளாய், “என்னம்மா?” என்று பதிலுக்கு இரைந்தாள்.
“தூங்கி எழுந்து அரை மணி நேரம் ஆச்சு…இன்னும் கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கரம்…அவங்க வர்றதுக்கு இன்னும் மூனு மணி நேரம் தான் இருக்கு!!!”
“இன்னும் மூனு மணி நேரம் இருக்கு!!!” என்றபடி சாவதானமாக படிகளில் இறங்கத் துவங்கினாள். கடிகாரம் அப்போது தான் ஆறு முப்பது என்று காட்டிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது, ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துவிடுகிறோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லியிருந்ததால் அன்று மது அம்மாவிற்கு காலை எழுந்ததுமே பரபரப்பு ஒற்றிக் கொண்டது.
சமையலறைக்குள் நுழைந்தவள் அப்போதே அம்மா குளித்து முடித்து, தலையில் ஈரத்துண்டுடன் இருந்ததைக் கண்டதும் சிரிக்கத் துவங்கினாள், “அம்மா!!! என்னை தான் பொண்ணு பாக்க வராங்க…என்னமோ உன்னைப் பாக்க வர மாதிரி, இப்படி முதல்ல கிளம்பி நின்னுட்டு இருக்க?”
“அடி வாங்கப் போற…போடி…போய் முதல்ல பல்ல விளக்கிட்டு வா!!!”
“ஏம்மா…என்னை பொண்ணு பாக்க வரதுக்கே நீ இத்தன பரபரப்பா இருக்கியே…அப்பா உன்னைப் பாக்க வந்தப்ப, தரையிலையே நின்னிருக்க மாட்ட போலயிருக்கு?” நமட்டுச் சிரிப்புடன் கேட்ட மகளை முறைத்தவாறு, அவள் முதுகை பிடித்து தள்ளிக் கொண்டு அந்த அறையை விட்டு அவளை வெளியேற்றி, “முதல்ல குளிச்சிட்டு வா…அப்புறமா உங்கப்பா வந்தப்ப, நான் என்ன பண்ணேன்னு சொல்றேன்…”
ஆனால் குளிக்கப் போகாமல், கைபேசியை எடுத்துக் கொண்டு நேரே தன் அறையை அடைந்தாள் மது.மறுபக்கம் வெகு நேரமாகியும் எந்த பதிலும் இல்லாமல் போகவே, சலித்தவாறே மீண்டும் ஒரு முறை முயற்சித்தாள்.
“பன்னி!!! காலங்காத்தால எதுக்கு ஃபோன் பண்ற?” தூக்கத்தில் குளறியபடி ஒலித்தது திவ்யாவின் குரல்.
“ஒரு முக்கியமான விஷயம் திவ்ஸ்…அதான்…”
“ம்ம்ம்…”
“கேக்கிறியா? ஹலோ…”
“ம்ம்…ம்ம்…சொல்லு…”
“அது வந்து…எனக்கு ஒரு சந்தேகம்…இப்ப பொண்ணு பாக்க வராங்களே, நான் என்ன பண்ணனும்னே எனக்குத் தெரியல…”
“அதான், உங்கம்மா, சித்தி, அப்புறம் ஏகப்பட்ட சொந்தகாரங்க எல்லாம் இருக்க போறாங்களே…அப்புறம் நீ என்னத்த பண்ணப் போற? அவங்க பண்றதையெல்லாம் நல்லா உக்காந்து தின்னு!”
“அடச்சே! எப்ப பாரும் திங்கறதுலையே இரு!!! நான் அத கேக்கல…ஹ்ம்ம்…நான் பழைய காலத்துல இருக்கற மாதிரி, ரொம்ப அடக்க ஒடக்கமா நடந்துக்கனுமா? இல்லை எப்பயும் போல கேஷுவலா இருந்தா போதுமா?”
“நீ எப்பயும் போல ப்ளேடு போட்டா அவங்க தாங்குவாங்கன்னு நினைக்கற? விட்டா போதும்னு ஓடிப் போயிட மாட்டாங்க?”
“அது என்னவோ உண்மை தான்…எதாவது சொல்லு திவ்யா…நீ நல்லா ஐடியா குடுப்பன்னு உங்கிட்ட கேட்டா….”
“சரி விளக்கமா சொல்றேன்…நல்லா கவனமா கேளு! அந்த காலத்து பொண்ணுக மாதிரி வெட்கப் படனும்னு நினைச்சாலும் கண்டிப்பா உன்னால முடியாது…ஆனா அதுக்காக, நீ எப்பயும் இருக்கற மாதிரி, கால் மேல கால போட்டுகிட்டு, கெக்க பெக்கென்னு சிரிச்சீன்னு வை…அப்புறம் உங்கம்மா உன்னை செறுப்பாலையே அடிப்பாங்க…”
“அதான உன்னை கேக்கறேன்?”
“நீ ரொம்ப தலையை குனிஞ்சுகிட்டும் இருக்க வேணாம், அதுக்காக யாரையும் நிமிந்தும் பாக்க வேணாம்…நடுல பாரு…”
“என்னது?”
“இந்த டேபிள், சேர் எதையாவது பாரு, அந்த ஆங்கிள்ல பாத்தா போதும்…”
“ஆமா…நீ சொல்ற மாதிரி பாத்தா அப்புறம் மாப்ளை வயிரு தான் தெரியும்”
“கரெக்ட்! உன்னை அந்த மாதிரி தான் பாக்க சொல்றேன்…அப்படியே மாப்ளைக்கு தொப்பை இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கலாம்…”
“நீயும் உன் ஐடியாவும்…மூஞ்சிய எப்ப தான் பாக்கறது?”
“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு…உங்க சித்தப்பு, பெரியப்பு இவங்கெல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க…எப்படியும் அவரை ரெண்டு, மூனு கேள்வி எல்லாம் கேப்பாங்க…அப்ப நீ என்ன பண்ற…யாராவது பேசும் போது மட்டும் அவங்க முகத்தையே பாக்கற…அப்படியே மாப்ளை பேசும் போதும் அதை கவனிக்கற மாதிரி அவரு முகத்தை பாத்துக்கோ…”
“ஹை! இது நல்ல ஐடியாவா இருக்கே…தாங்க்ஸ்மா…திவ்யான்னா திவ்யா தான்!!”
“ஹே…இரு இரு…இந்த ஐடியாவ கொஞ்சம் சிக்கல் இருக்கு…கொஞ்சம் பாத்து தான் அப்ளை பண்ணனும்”
“சிக்கலா? என்னதது?”
“நீ ரொம்ப நேரமா டேபிளையே உத்து பாத்துட்டு இருந்தேன்னு வை…அங்க வச்சிருக்கு ஸ்வீட்ட பாத்து நீ ஜொள்ளு விட்டுட்டு இருக்கன்னு நினைச்சுக்குவாங்க….அதனால, பாத்து நடந்துக்கோ…”
“அடச்சே…உனக்கு இத விட்டா வேற நினைப்பே கிடையாது…சரி, எங்கம்மா வந்து கழுத்த பிடிச்சு பாத்ரூம்ல தள்றதுக்கு முன்னாடி நானே குளிக்கப் போறேன்…பை பை…”குளித்து முடித்து, உடை மாற்றி வந்த மகளை பார்த்த விசாலாட்சியின் கண்களில் ஒரு வித திருப்தி ஒலிர்ந்தது.
“ஹ்ம்ம்…ஒரு நாளைக்காவது உருப்படியா ட்ரெஸ் பண்ணியிருக்கியே…ஆமா….போன தடவை அப்பா வாங்கிட்டு வந்தாரே, அந்த புது நெக்லஸ் போட்டுக்கல?”
“போம்மா….அது பெருசா இருக்கு…எனக்கு வேண்டாம்…”
“என்னம்மா? ஒரு நாள் தானே…அத போட்டுக்கோ…”
“போம்மா…வேற வேலையில்லை…சும்மாயிரு…”
“நீ இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்ட, நானே போய் எடுத்துட்டு வரேன்” என்றபடி மாடியிலிருந்த மதுவின் அறைக்கு விரைந்தார் விசாலாட்சி.
ஒரு சில நிமிடங்களில் கையில் நகைப்பெட்டியுடன் அவர் படிகளில் இறங்கத் துவங்கும் முன்னரே, தொலைபேசி அழைக்க, மது காலர் ஐடியை பார்த்தபடி, “அப்பாம்மா…” என்றபடி ரீஸீவரை எடுக்கப்போனாள்.
“அப்பாவா? இத்தன நேரம் கழிச்சு இப்ப தான் ஃபோன் பண்றாரா?” வேகமாக படிகளின் அருகில் வந்தவர், முதல் படியை கவனிக்காமல் காலை வைக்க, “மதூஊஊஊஊஊ” என்ற அவரின் அலறலில், கையிலிடுத்த தொலைபேசியை அப்படியே எறிந்து விட்டு அம்மாவை நோக்கி ஓடினாள் மது.
நிலைதடுமாறி படிகளில் தலைகுப்புற உருண்டு கீழே வந்துகொண்டிருந்தார் விசாலாட்சி. ’அம்மாஆஆஅ…” என்று அலறியபடி அவள் முதல் படியை அடைவதற்கும், படியின் அருகிலேயே வைத்திருந்த அந்த அழகிய வெங்கல சிலையில் விசாலாட்சின் தலை மோதுவதற்கும் சரியாக இருந்தது.
ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து விட்ட விபரீதத்தில் தலை கிறுகிறுக்க, கண்களில் நீர் பெருக, நடுங்கும் கரங்களுடன், குனிந்து தாயின் தலையை கைகளில் ஏந்தினாள் மது. ரத்தக் கோடுகள் படிந்த முகத்துடன், கண்களில் கண்ணீர் தேம்பியிருக்க, கண்களை படபடக்க மதுவை நோக்கி, “மது….ம்மா…உன் கல்…யா…” அதற்கு மேல் பேச முடியாமல், அவரின் குரல் கமற, கண்களின் படபடப்பு அடங்க, மெல்ல மெல்ல அவரது மூச்சும் அடங்கியது. அந்த அறையில் சுடர் விட்டுக் கொண்டிருந்த விளக்கின் ஒளி, உயிரற்ற அவரது கண்களில் பிரதிபலிப்பதை திக்பிரம்மை பிடித்ததை போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
அவளுக்கு அன்று ஏற்பட்ட அதிர்ச்சியில், உடனே அவளது அப்பா ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து பக்கத்து வீட்டிற்கு தவகல் சொல்லி, அவர்கள் வந்ததும், பின்பு சொந்த பந்தம், அறிந்தர் தெரிந்தவர் என்று அந்த வீடு அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே நிரம்பி வழிந்ததும் எதுவுமே நினைவில் இல்லை. எத்தனை மணி நேரம், இல்லை எத்தனை நாட்கள் என்று கூட தெரியாமல், அம்மாவின் உடலை வெறித்துப் பார்த்தபடி, தன் அம்மாவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் மது.
அவள் அப்பா வந்தவுடன் அவளை கட்டிக் கொண்டு அழுத போது கூட அவளுக்கு அழத் தோன்றவில்லை, ’மதும்மா....அம்மா எங்கடா? அம்மாக்கு என்னடா ஆச்சு? மதும்மா…பேசுடா…பேசுடா…” என்று அவள் நினைவறிந்து அழுதே பார்த்திறாத அவளது அப்பா குழந்தை போல தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்தும் மரக்கட்டையை போன்றே நின்று கொண்டிருந்தாள் மது!
************************************************************************
ரஞ்சித்தின் வீட்டில் அமர்ந்து அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்துக் கொண்டிருந்தார் வக்கீல் சுமன்,
“கேஸ் நம்ம மேல ஸ்டராங்கா இருக்கு ரஞ்சித்! நீங்க தான் கோ-ஆப்ரேட் பண்ணனும்…தயவு செஞ்சு சொல்லுங்க” மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்கவும், கொதிப்படைந்தான் ரஞ்சித்.
“நான் தான் எந்த தப்பும் செய்யலன்னு சொல்றேன்ல? நீங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேக்காதீங்க சார்…காத்து வாங்கத் தான் போனேன்…”
“டேய்!!! திரும்ப திரும்ப ஒரு பொய்ய சொல்றதால அது உண்மையாயிடுமா? நீ காத்து வாங்க போனேன்னு சொல்றது பச்சைப் பொய்யின்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்! ஒரு மாடிக்கே லிஃப்ட்ல போன ராஸ்கல்! யாரு காதுல பூ சுத்தற? இப்ப சொல்லப் போறியா இல்லையா? ஒழுங்கான காரணத்த சொல்லன்னா, நீ எனக்கு மகனே இல்லடா…” ஆவேசமாய் கத்தினார் சுப்பிரமணியம்.
ஆனால் முகில் மட்டும் எதுவும் பேசாமல் கெஞ்சும் பார்வையில் ரஞ்சித்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையை சந்திக்க முடியாதவன், “சுமன்! எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் சொல்லிட்டேன்…இத வச்சு முடிஞ்சா ஜாமீன் வாங்குங்க…இதுக்கு மேல என்கிட்ட ஒரு கேள்வியும் கேக்காதீங்க…” என்றபடி எழுந்து உள்ளறைக்குள் நுழைந்தான்.
“என்ன சார் இவரு? புரியாம பேசிகிட்டு இருக்காரு…” சுப்பிரமணியத்திடம் சுமன் முறையிட, அவர் கோபமாய், “எனக்கு இப்படியாப்பட்ட ஒரு பையனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன்!!!” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவரும் விடுவிடுவென மற்றொரு அறைக்குள் சென்று விட்டார்.
செய்வதறியாது தானும் எழுந்த வண்ணம் சுமன், பேய் அறைந்ததைப் போல் நின்று கொண்டிருந்த முகிலையும் தனலட்சுமியையும் பார்த்து, “அப்ப சரிங்க மேடம்…நான் மட்டும் உக்காந்து பேசி என்ன பிரயோஜம்? நானும் கிளம்பறேன்….ஜாமினுக்கு ஆக வேண்டியத பாக்கறேன்….ஆனா என்னால எதுவும் உறுதியா சொல்ல முடியாது…லெட்ஸ் ஸீ!”
மறுநாள் சுமன் எதிர்பார்த்தது போலவே ரஞ்சித்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மது குதித்த இடத்தில் இருந்த மாடி திண்டு, மற்றும் அங்கு கிடந்த மெழுகுவர்த்தி, மதுவின் கால்கள், உடை என்று எல்லா இடத்திலும் ரஞ்சித்தின் கைரேகை இருந்ததை ஆதாரத்துடன் அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அன்றே ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கும் உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி.
கண்ணீர் மல்க ரஞ்சித்திடம் பேசுவதற்கு அவனருகே சென்ற முகிலை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், "இவனோட என்ன பேச்சு? நீ வாம்மா.." என்று தரதரவென இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம்.
மனதில் இடியிறங்கியது போல் அடுத்த என்ன செய்வதென்றே தெரியாமால் வீட்டில் அமர்ந்திருந்த அவளை பேரிடியென தாக்கியது வக்கீல் சுமனின் தொலைபேசி அழைப்பு.
"சாரி மேடம்! என்னால இதுக்கு மேல உங்க ஹஸ்பன்டை ரெப்ரஸண்ட் பண்ண முடியாது. கண்டிப்பா தோக்கத் தான் போறோம்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட கோ-ஆப்ரேட் பண்ணாத ஒரு க்ளைண்டுக்காக செலவலிக்கற அளவுக்கு என்கிட்ட டைமில்லை...ஐம் ரியலி சாரி...நீங்க வேற வக்கீல் பாத்துக்கோங்க..."
அவள் பதிலை எதிர்ப்பார்க்காமலே மறுமுனை துண்டிக்கப்பட்டது. அதோடு முகில் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் துண்டிக்கப்பட்டது!
[தொடரும்]
