பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11, பாகம் 12
“நான் அன்னிக்கே சொன்னேன்…தற்கொலை தான்னு…கேட்டீங்களா?” பரத்து தம்பி! நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே? நீங்க உண்மையிலையே புத்திசாலி தான்..அதை நான் ஒத்துக்கறேன்…ஆனா உங்க புத்திசாலித் தனத்தை ரொம்ப உபயோகிச்சீங்கன்னா இப்படி தான் எல்லாருக்கும் நேர விரயம் ஆகும்…”
யெஸ். ஐ யின் பேச்சிற்கு பதிலேதும் பேசாமல் அவரை விருட்டென திரும்பி முறைத்தார் பரத்.உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவர், கோபத்தையெல்லாம் தன் இருசக்கர வாகனத்தில் மேல் காட்ட, அது சீறிக் கொண்டு பாய்ந்தது. நேரே பில்டிங் சொல்யூஷன்ஸ் சென்றவர் ரமேஷை அழைத்தார், “நான் கேட்ட டேட்டா எடுத்து வச்சிடீங்களா?”
“அப்பவே ரெடி சார்…பிரின்ட் அவுட்டே எடுத்து வச்சுட்டேன்…”
“ஓ…குட் குட்…கொஞ்சம் வெளிய கொண்டு வந்துருங்க…ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்…”
ரமேஷ் வந்தவுடன் அவன் குடுத்த ப்ரிண்ட் அவுட்டை ஆராய்ந்தவர் முகத்தில் அன்றைய முதல் வெற்றிப் புன்னகை. ஏனென்றால் அவர் கையிலிருந்தது ஒன்பதாவது மாடி கதவு மற்றும் மது வீட்டு கதவின் தகவல்கள்!
நேரே தரகர் ராமன் வீட்டிற்கு சென்றார் பரத். எந்த கவலையும் இல்லாமல் தொலைகாட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார் ராமன். மஃடியில் பரத் திடீரென்று வீட்டிற்குள் பிரவேசிக்கவும், திடுக்கிட்ட ராமன், “யார் சார் நீங்க?” என்று அதட்டலாக வினவினார்.
தன் ஐ.டி கார்டை வெளியே எடுத்த பரத், “பரத்! இன்ஸ்பெக்ட்டர் ஆஃப் போலீஸ்! அதுக்குள்ள மறந்துட்டீங்க போல?” என்று மிடுக்காக கேட்க, ஒரு நொடி ஆடிப்போனார் ராமன்.
பரத்தின் முகம் சட்டென்று நினைவுக்கு வர, “சார்….சாரி சார்…அது வந்து…போலீஸ் ட்ரெஸ் போடலையா…அதான்…வாங்க…உக்காருங்க…” என்று குழைந்தார்.
“உக்காரதுக்கு வரலை…மதுவந்த்தி கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்கு…நடங்க ஸ்டேஷனுக்கு…” என்று அதிகாரத் தொனியில் பரத் சொல்லவும், வெலவெலத்துப் போன ராமன், “என்னது? என்ன சொல்றீங்க? என் மேல சந்தேகமா? என்ன சார் உளர்றீங்க? நானே அந்த பொண்ண ஃபோட்டோவில மட்டும் தான் பாத்திருக்கேன்…எந்த அடிப்படையில என் மேல சந்தேகப் படறீங்க?”
“ஓ? அடிப்படையெல்லாம் உங்ககிட்ட விளக்கனுமா? பொண்ணுக்கு சொந்தக்காரங்க உங்க மேல சந்தேகம் இருக்கறதா சொல்லியிருக்காங்க…அந்த அடிப்படையில தான்…”
“சொந்தக்காரங்களா? அந்த பொண்ணுக்கு தான் அம்மாவும் இல்லை, அப்பாவும் ஆஸ்பத்திரியில கிடக்கறாரே?”
“அவங்க சித்தி தான் கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்காங்க…உங்க மேல சந்தேகம் இருக்கறதா…”
அதிர்ச்சியில் ராமனின் முகம் இருண்டது, கோபம் தலைக்கேற, “என்னது? காமாட்சியா? அந்த பொம்பளையா? அவளுக்கு என்ன துணிச்சல்?” என்று கத்தத் துவங்கினார். உடனே பரத், “நீங்களா வர்றீங்களா? இல்லை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகவா?”
“சார்…நான் எந்த தப்பும் பண்ணல சார்…அந்த காமாட்சி தான் பணம் குடுத்து என்னை சாட்சி சொல்ல சொல்லுச்சு சார்…ஆனாலும் நான் சொன்னது பொயில்ல சார்…உண்மை தான்…எனக்கு அதுக்கு மேல எதுவுமே தெரியாது சார்… என் கொழந்தைங்க மேல சத்தியமா…”
அடுத்த வெற்றிப் புன்னகையோடு ராமனை அழைத்துக் கொண்டு காமாட்சி வீட்டை நோக்கி விரைந்தார் பரத்.
-------
15th Aug 12:00 A.M
மதுவின் அறையிலிருந்து “அம்மாஆஆ” என்று அலறல் சத்தம் கேட்டு மது இருந்த அறையில் எட்டிப் பார்த்த காமாட்சி, ஏதோ ஒரு பலகையை வைத்துக் கொண்டு மது திரும்பி அமர்ந்திருப்பதை பார்த்தார். மது பலகையை பார்த்து அம்மா, அம்மா என்று அழுவதை பார்த்த காமாட்சிக்கு ஒரு நிமிடத்திலேயே அவள் செய்து கொண்டிருப்பது புரிந்தது. மதுவை அன்று பார்த்ததுமே, சில மாதங்களாக அவர் மனதில் புகைந்து கொண்டிருந்த வன்மம் அதிகமாக, அது முதல் மதுவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனமாக கண்கானிக்கத் துவங்கினார் காமாட்சி.
15th Aug 11:30 P.M
மது ஓஜா பலகை, மெழுகு வர்த்தி சகிதம் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்ததும், சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்த காமாட்சியின் உள்ளத்தில் உடனே அந்த திட்டம் உருவானது. உடனே அறைக்குள் சென்று தன் அக்காவின் புடவையை எடுத்து தான் கட்டியிருந்த புடவை மேலே கட்டிக் கொண்டார். மாமாவிடம் நல்லவிதமாக பேசி, விசாலாட்சியின் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்றி எண்ணிக் கொண்டு, கன்னாடியில் தன் உருவத்தை பார்தார். அக்கா போன்றே பெரிதாக பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டதும், இரு புடவை கட்டியதால் சற்றே குண்டாக, தான் அக்காவை போலவே இருப்பதாக காமாட்சிக்கு தோன்றவே, அவருடைய முகத்தில் ஒரு குரூர புன்னகை அரும்பியது.
மது மொட்டை மாடிக்கு தான் போயிருப்பாள் என்று திட்டவட்டமாக தெரிந்ததால், காமாட்சி ஒன்பதாவது மாடி வழியே சென்று அங்கிருந்த கதவின் வழியாக, ஒன்பதாவது மாடிக்கருகில் இருந்த அந்த சிறு பால்கனியை சிரமப்பட்டு அடைந்தார்.ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிற்கு இருந்த அந்த இடத்தில் சிரமத்துடன் நின்றுகொண்டு, மது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவரால் பார்க்க முடியாவிட்டாலும், இருட்டின் நிசப்தத்தில் அவருக்கு மது அழும் குரல் லேசாக கேட்டது. உடனே இது தான் சமயம் என்று மது மது என்று உரக்கக் கத்தினார் காமாட்சி. தன் சத்தம் கேட்டு அலறியடித்து சத்தமிட்டு அழுது கொண்டே மது ஓடி வரும் சத்தம் கேட்கவும், “மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” என்று அவரும் கத்தினார். அவள் வந்து குனிந்து தன்னை பார்த்ததும், சிரிக்கும் போது தான் அக்கா மாதிரியே இருப்பதாக பல பேர் சொல்லிக் கேட்ட விஷயத்தை அப்போது சரியாக உபயோகித்துக் கொண்ட காமாட்சி பெரிதாய் புன்னகைத்து கைகளை நீட்டியவாறு, “வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” என்றார்!
அதே நேரத்தில் யாரோ தடுக்கி விழும் சத்தம் கேட்கவும், ஆபத்தை உணர்ந்த காமாட்சி மது திரும்பிப் பார்த்த கணத்தில் உடனே பக்கவாட்டில் ஓடி மறைந்தார். சற்றும் தாமதிக்காமல் ஒரே மூச்சில் தடதடவென விரைந்து ஓடி இரண்டாம் தளத்திலிருந்த தன் வீட்டை அடைந்தார் காமாட்சி. விட்டை அடைந்து ஒருசில நொடிகளிலேயே ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்த காமாட்சி, செக்யூரிட்டி தடதடவென ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார். மது கீழே குதித்தே விட்டாள் என்று காமாட்சிக்கு ஊர்ஜிதம் ஆனது. உடனே சென்று இரண்டாவது புடவையை கழட்டிவிட்டு, எதுவுமே தெரியாதது போல் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் துவங்கினார். மது யாரென்று செக்யூரிட்டிக்கு தெரியாததால், காலை ஐந்து மணிக்கு வேலைக்கார பெண் ராணி வந்து அடையாளம் காட்டி, காமாட்சியை எழுப்ப போலீஸ் வந்த போது மணி ஐந்து பத்து. அதற்குள்ளாக எப்படியெல்லாம் அழுது நடிப்பது, மது அப்பாவிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள்ளேயே திட்டம் தீட்டி முடித்திருந்தார் காமாட்சி என்ற அந்த பணப்பேய்!
***********************************************************************************
தற்கொலைக்கு தூண்டியதற்காக காமாட்சியையும், காசு பெற்று சாட்சி சொல்லி கேஸை திசை திருப்பியதற்காக ராமனையும் கைதி செய்வதற்காக ஆவணங்கள் தயாரித்துக் கொண்டிருந்த பரத்திடம் வந்த யெஸ்.ஐ, “பரத் தம்பி! உண்மையிலையே பெரிய ஆள் தான் நீங்க…இப்ப சொல்றேன்....எக்ஸ்பீரியன்ஸ விட படிப்பும் புத்திசாலித் தனமும் தான் முக்கியம்”
சிரித்துக் கொண்டே பரத், “இல்லை சார்…அனுபவமும் சேந்தா தான் ஜெயிக்க முடியும்…இப்ப பாருங்க…தேவையில்லாம அந்த ரஞ்சித்த சந்தேகப்பட்டு எத்தனை பேருக்கு சிரமம்?”
“ச்சே…அதனால தான உண்மை என்னன்னு தெரிஞ்சுது? என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல பாத்தத வச்சு சொல்றேன்…உன்னை மாதிரி ஒருத்தன பாத்ததில்லை…நீ தான்யா போலீஸ்காரன்….”
பெரிதாய் சிரித்துக் கொண்டே பரத் தன் போலீஸ் தொப்பியை கழற்றி யெஸ்.ஐ யின் முன் நீட்டி, “தாங்க் யூ சார்!” என்றார்.
யெஸ்.ஐ, “ஆமாம்…அந்த காமாட்சி எதுக்காக சொந்த அக்கா பொண்ணுகிட்ட இப்படி பண்ணுச்சு?”
“எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான்…வேறென்ன? பொண்ண எதாவது பண்ணிட்டா, சொத்து பூரா அவ பையனுக்கு வரும்னு ஆசை…மது அப்பா கிட்ட தான் இந்தம்மா புருஷன் வேலை செய்யறாராம்…அங்க ஏதோ பிரச்சனை, இவ புருஷன வேலையை விட்டு நிறுத்திட்டாராம் மது அப்பா…அந்த கோவம் வேற…என்னவோ ப்ளான் பண்ண போய் கடைசியில இப்படி ஆகி போச்சு…”
***********************************************************************************
முகமெல்லாம் புன்னகையாக நின்று கொண்டிருந்த லீலாவதியிடம் சென்றார் சோமநாதன்,
“என்ன மேடம்? முகத்துல இப்படி ஒரு சந்தோஷம்?”
“ஆமா ஸார்! எனக்கு சந்தோஷம் தான்…ரொம்ப ரொம்ப சந்தோஷம்…இந்த பொண்ணு இப்படி கர்பினியா கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிட்டு இருந்தத பாத்து, எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு…அதிலும், அர்த்த ராத்திரியில காத்து வாங்கறதுக்கு ஒன்பது மாடி படி ஏறி போனேன்னு திரும்ப திரும்ப, சொல்ற பொறுப்பில்லாத ஒரு புருஷனுக்காக…ஏன் தான் ஆண்டவன் இந்த பெண் ஜென்மத்த படச்சானோன்னு வேதனையா இருந்துச்சு…எப்படியோ, போராடி ஜெயிச்சிட்டா…நான் கேஸ் ஜெயிச்சுருந்தா எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ, அத விட இப்ப ரெட்டிப்பு சந்தோஷம், ஏன்னா…ஜெயிச்சது எங்க இனமாச்சே…”
“உங்க இனமா? என்னமா சொல்றீங்க?”
“எங்க இனம் ஸார்…பெண் இனம்!!! அவன் அந்த நேரத்துல எதுக்கு போனானோ, என்னவோ தெரியல, ஆனா இனிமேலாவது இந்த பொண்ணுக்கு உண்மையா இருந்தா சரி தான்…” உண்மையான அக்கறையுடன் லீலாவதி சொல்லவும், சோமநாதன் முகத்தில் லேசான சோகம் பரவியது. இத்தனை நாட்களாக முகிலுடன் பழகியதில், அவளிடம் அவருக்கு ஏதோ ஒரு பாசம் ஏற்பட்டிருந்தது. கடைசியில் ரஞ்சித் என்ன தான் முரண்டு பிடித்தாலும், முகிலின் முகத்துக்காகவும், அவளின் நிலையை நினைத்தும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். அப்படிப்பட்ட பெண்ணிற்கு அவள் கணவன் துரோகம் செய்யக் கூடாது ஆண்டவனே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு தனது அறையை அடைந்தார்.
ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டு, ரஞ்சித்தும், முகிலும் சோமநாதனின் அறைக்கு வந்தனர். அவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சோமநாதன், “வாங்க…உக்காருங்க…” என்று வரவேற்றார்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ஸார்… ரொம்ப ரொம்ப நன்றி…” குரல் தழு தழுக்க ரஞ்சித் சொல்லவும்,
“நன்றி எல்லாம் உங்க வைஃபுக்கு சொல்லுங்க…”
கண்கள் பனிக்க ரஞ்சித் அவன் மனைவியை பார்த்தான். இந்த பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும், நீயே எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று உணர்த்தியது அவன் பார்வை.
அங்கு நிலவிய அமைதியை கலைக்க விரும்பி, சோமநாதன், லேசாக தொண்டைய செறுமினார், ’என்ன’ என்பது போல் இருவரும் பார்க்க,
“ரஞ்சித்! இப்பவாவது சொல்லுங்க…அன்னிக்கு நைட்டு மாடிக்கு எதுக்கு போனீங்க?”
“ப்ளீஸ் ஸார், இப்பதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே, அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…ப்ளீஸ்…”
பொங்கி வந்த ஆத்திரத்தை அவர் கொட்டும் முன்பு, அவரது அலைபேசி அலறியது.
“எக்ஸ்யூஸ்மீ…” என்றபடி அலைபேசியோடு வெளியே சென்றார்.
சற்று நேரம் மெளனமாய் இருந்த முகில், “ரஞ்சி…என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி…ப்ளீஸ்…”
“முகில்…என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல? அப்புறம் அது எதுக்கு? விடும்மா…”
“உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னா, என் மேலையே எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்…இருந்தாலும், காரணம் இல்லாம நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…சொல்லுங்க ரஞ்சி…என் விஷயமா தான ஏதோ…”
ரஞ்சித் எதுவும் பேசாமல் அமைதி காக்கவும், முகில் நடுங்கும் குரலில், “அந்த மஹேஷ் விஷயம் தான?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…” அவசர அவசரமாக ரஞ்சித் மறுத்த விதமே, முகிலுக்கு சந்தேகத்தை கிளப்ப,
“இல்லை…உங்க முகமே சொல்லுது…அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான்….சொல்லுங்க ரஞ்சி…எங்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க…ப்ளீஸ்…”
“ஆமா முகில்…அவனே தான்…நான் கைதாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அந்த மஹேஷ் எனக்கு ஃபோன் பண்ணி, இருபதாயிரம் பணம் வேணும், குடுக்கலன்னா, நீ அவனுக்கு எழுதின லெட்டர்ஸ், காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட ஃபோட்டோஸ், அப்புறம்…அப்புறம் அந்த ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட் இதெல்லாத்தையும் எங்க அம்மா, அப்பாவுக்கும், உன் அம்மா அப்பாவுக்கும் அனுப்சிடுவேன்னு மிரட்டினான்…உங்கிட்ட சொன்னா, நீ வருத்தபடுவேன்னு தான் உங்கிட்ட சொல்லாமலே, நானும் பணத்த குடுத்து தொலச்சிடேன்…ஆனா, உன் விஷயம் எல்லாமே எனக்கு தெரியும்ங்கறது அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு மட்டும் தான் எனக்கு புரியல...”
“மொதல்ல அவன் எனக்கு தாங்க ஃபோன் பண்ணான்…உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன்னு என்ன ப்ளாக் மெயில் பண்ணான்…”
ரஞ்சித் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள். “இத ஏன் முகில் நீ என்கிட்ட சொல்லல?”
“நீங்க கோவத்துல அவன ஏதாவது பண்ண போய் பிரச்சனை ஆய்டுமோன்னு பயந்துட்டு தான் நான் உங்ககிட்ட சொல்லல, நான் அவன்ட்ட, என் வீட்டுக்காரருக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரிஞ்சு தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவர் என்ன முழுசா நம்பறார்…அதனால, நீ என்னை மிரட்டி எந்த பிரியோஜனமும் இல்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்…அதுக்கு அப்புறம் அவனும் ஃபோன் பண்ணாததால, நானும் பேசாம இருந்துட்டேன்…அப்போ நீங்க அவன பாக்கத்தான் மாடிக்கு போனீங்களா?
“ஆமா முகில்…ஒன்பாதாம் தேதி ஃபோன் பண்ணி, அவன் துபாய்க்கு போறதாகவும், ரெண்டு லட்சம் குடுத்தா அவன்ட்ட இருக்கற எல்லாத்தையும் குடுத்துட்டு, இனி நம்ம வாழ்கைல குறிக்கிட மாட்டேன்னும் சொன்னான்… நானும் பணத்த எடுத்து ரெடியா வச்சிருந்தேன்…பதினஞ்சாம் தேதி நைட்டு, தீடீர்ன்னு ஃபோன் பண்ணி, அன்னிக்கே பணம் வேணும்ன்னு சொல்லவும், நான் தான் அவன அந்த பின்னாடி சந்து வழியா உள்ள வந்து மாடி ரூமுக்கு வர சொன்னேன்…அவன் போனப்புறம் ஏதோ சத்தம் கேட்குதேன்னு கதைவ திறந்துட்டு போய் பாத்தப்ப தான், அந்த பொண்ணு, மதில் மேல ஏறி நின்னுட்டு இருந்தா…ஆனா, நான் போறதுக்குள்ள அவ…”
“ரஞ்சி! நீங்க அவன பாக்கத் தான் போனீங்கன்னு போலிஸ் கேக்கும் போதே சொல்லி இருந்தா, இத்தன நாள் இவ்ளோ கஷ்டம் வந்திருக்குமா?”
“எப்படி முகில் சொல்லுவேன்? என் பொன்டாட்டியோட பழைய காதலன் மிரட்டினான், அவனுக்கு பணம் குடுக்கறதுக்காக தான் போனேன்னு சொல்ல சொல்றியா? உங்க வீட்ல உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க? உங்க வீட்டை விடு, எங்க விட்ல? என் பொண்ணு, என் பொண்ணுன்னு எப்படி கொண்டாடுறாங்க? நான் மட்டும் அத சொல்லி இருந்தா உன் நிலைமை என்ன? அந்த மஹேஷே வந்து சாட்சி சொல்லியிருந்தாலும், இத்தன நாளா அவன் ஏன் வரலை, அவன் யாரு, என்ன, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு போலீஸ்ல தோண்டி எடுத்துற மாட்டாங்க? அறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…”
“ரஞ்சி…” அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.
ரஞ்சித் அதை துடைத்த வாறே, “இனிமே நீ அழவே கூடாது…அன்னிக்கு காலைல நான் நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்ல? அப்ப தான் பாத்தேன், அந்த மஹேஷ் அன்னிக்கு ராத்திரி ஏதோ பெரிய ஆக்ஸிடண்ட்ல மாட்டிகிட்டான்…ஜெயில்ல என்னை பாக்க வந்திருந்தான்….செத்து பொழச்சிருக்கான்…என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தமா பேசினான்…”
“நிஜமாவா?”
“ஆமா…அவனும் மனுஷன் தான? அவனுக்கு ஏதோ தேவை…நம்மள உபயோகிச்சுகிட்டான்…நம்ம போறாத நேரம், எனக்கு இப்படி ஆகவும், இதுக்கு நான் தான் காரணம்னு ரொம்ப வருத்தப் பட்டான்...அந்த பணத்தை கூட திருப்பி குடுத்தர்றேன்னு சொன்னான்னா பாத்துக்கோயேன்? நான் தான், அதை வச்சு நீ துபாய் போற வேலையை பாரு, இனிமே எங்க வாழ்க்கையில குறுக்கிடாதன்னு புத்தி சொல்லி அனுப்பிட்டேன்…அவனும் இன்னேரம் துபாய்ல இருப்பான்னு தான் நினைக்குறேன்…அதனால இனி வருத்தப்படறதுக்கு எதுவுமே இல்லை முகில்….எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு மறந்துடுவோம்…இன்னும் கொஞ்ச நாள்ல உன்ன மாதிரி அழகா ஒரு குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துடும்…”
விரக்தியுடன் சிரித்தாள் முகில், “ஹ்ம்ம்…ரெண்டு தடவை குழந்தை உண்டாகி… ஆனா ரெண்டு தடவையும் நிம்மதியே இல்லை… எல்லாம் என் ராசி! அந்த குழந்தையை யாருக்கும் தெரியாம கருவிலையே கொன்ன பாவம் தான் இப்படி வாட்டுது…ஆனா ஒரு பாவமும் அறியாத உங்கள போய்…” அதற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ வென்று அழுதாள்.
“முகில்! இந்த ராசி, பாவம், பரிகாரம்னு பேசுறத மொதல்ல நிறுத்து! நல்ல மனசிருந்தா எல்லாமே நல்லதா தான் நடக்கும்.”
எதுவுமே பேசாமல் அவள் சிறுது நேரம் அமைதி காக்கவும், “என்னம்மா?’ என்று மெதுவாக அவள் தலை வருடினான். அப்படியே அவனை பார்த்து புன்னகைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டவள், அவன் தோளில் இருந்து தலையை எடுக்க மனமின்றி அப்படியே கண்களை மூடினாள். இப்படி அவன் மார்பில் தலை சாய்ந்து கொண்டு, இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் பேச அவர்களுக்கு எவ்வளவோ காலம் இன்னும் மீதம் இருக்கிறதே!
இவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததில், வெளியே அலைபேசியோடு சென்ற சோமநாதனை மறந்து விட்டால் எப்படி? அவர்கள் பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு, கண்கள் பனித்து, வாயில் அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தார் அவர்!
அப்போது அந்த வழியாக சென்ற லீலாவதி, “என்ன ஸார்? இங்க நின்னுட்டு இருக்கீங்க? லஞ்சுக்கு போகலையா?” என்று கேட்கவும்,
கண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்!!!” என்றார்.
*********[முற்றும்]********