பாகம் 1 பாகம் 2
ஞான பண்டிதா, சரணம்…சரணம்…
ஞான ஸ்காந்தா, சரணம்…சரணம்…
“பாட்டீஈஈஈஈ!!!! பாட்டீஈஈஈஈ!!!!” ஹய் பிட்சில் ஒலித்தது அனுவின் குரல்.
“என்ன குட்டி? சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்ல? ஒரே நிமிஷம், தோ வரேன்…” பூஜை அறையில் இருந்து கொண்டே பதில் அளித்தார் அனுவின் பாட்டி, காந்திமதி. நல்ல வெள்ளை நிறம், அதை விட வெண்மையான, மேகம் போன்ற கூந்தல். என்னேரமும் திருநீரு துலங்கும் நெற்றி, எப்போதும் சிரித்த முகம், இப்படி தான் பாட்டியை பார்த்து பழக்கப் பட்டிருந்தாள் அனு, பிறந்தது முதல்.
“சீக்ரம் வா…லேட் ஆச்சு, 3rd year ஃபர்ஸ்ட் டே…லேட்டா போக போறேன் போ…சீக்கரம் வாஆஆஆஅ”
ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, ஐந்து நிமிடமும் ஆனது, ஆனால் பாட்டி பூஜை அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அனு, பூஜை அறைக்குள்ளே சென்றாள்.
“என்ன பாட்டி, இத்தன நேரம் என்ன பண்ணிட்டு இருக்க? ஹேன், ஹேன்னு சத்தம் மட்டும் வருது…”
“இந்த விளக்கு ஏத்தறேன், ஏத்தறேன்…அனஞ்சுகிட்டே இருக்குது…பாரு, அட…என்னன்னே தெரியலயே…”
அருகில் இருந்த பாட்டிலை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் அனு.
“என்ன சிரிப்பு? என்ன தான் ஆச்சோ இந்த விளக்குக்கு…”
“ஹய்யோ…பாட்டி, எண்ணைக்கு பதில் தேன ஊத்திட்டு…ஹா ஹா, இதுல எழுபத்தி ஐஞ்சு வயசு ஆனாலும், எனக்கு கண்ணாடி இல்லமையே, கண்ணு நல்லா தெரியும்னு சீனு வேற…சரி சரி, லேட் ஆச்சு…சீக்கரம் வந்து எனக்கு சாப்பாடு குடு…வா…”
“என்னச் சொல்ற…இவ்ளோ வயசு ஆச்சு, ஊட்டி விட்டாத் தான் சாப்பிடுவியா? நீயே சாப்பிட வேண்டியது தான?”
“சரி, அப்ப எனக்கு சாப்பாடு வேண்டாம் போ…நான் போறேன்…”
“ஐயோ! அனுக்குட்டி…இரு, இரு, கையை கழுவிட்டு வந்தர்றேன்…போய்டாத”
க்ரீச்ச்ச்ச்….
ப்ரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள் அனு.
“ஹேய்…பாலா!!! எங்க காலேஜுக்கா கிளம்பிட்ட?”
“ஆமா அனு…”
“எப்டி போகப் போற?”
“பஸ்ல தான்…”
“அப்ப வா என்னோட…நான் உன்ன ட்ராப் பண்றேன்…”
“தாங்ஸ் அனு…” என்றவாரே அவள் பின்னால் அமர்ந்தான் பாலா, பாலக்குமார். அனுவுக்கு ஒரு வருடம் சீனியர். சென்ற வருட விடுமுறை சமயத்தில் தான், அனு குடியிருக்கும் ஃப்ளாட்டுக்கு அவன் குடும்பமும் குடி வந்திருந்தது. இன்டேர்ன்ஷிப், அது, இது என்று இருந்ததனால், அனுவும் ஒரு மாதத்திலேயே, விடுமுறை முடிந்து யு.யெஸில் இருந்து இந்தியா திரும்பி விட்டாள். அது வரை, முகத்தளவில் மட்டுமே தெரிந்திருந்த அவர்கள் இருவரும், அந்த ஒரு மாதத்தில் தான், ஓரளவிற்கு பேசி பழகி இருந்தனர்.
ஐந்தே நிமிடங்களில் கல்லூரியும் வந்துவிட்டது. அனு வண்டியை நிறுத்தவும், கவிதா அப்பாவின் கார் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“அனு!!!” ஆயிரம் வாட்ஸ் ஒளி முகத்தில் பிரகாசிக்க, உற்சாக மிகுதியில் கத்திக் கொண்டே காரை விட்டு இறங்கி, நீண்ட கூந்தல் அலைபாய, ஓடி வந்தாள் கவிதா.
“ஹே…கவி!!!” துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் அனுவும். கரை புரண்டு ஓடிய அவர்களது உற்சாகமும், அலப்பறையும் ரொம்ப நாள் கழித்து பார்த்துக் கொண்ட தோழிகள் போல் இருந்தாலும், ஒரு வாரம் முன்பு தான் இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
அனு, “கவி…ஊஊஹ்ஹ்…what a bingo man!!! ரெண்டு பேருமே லேட்டு…ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க?”
“நான் இருக்கறது எல்லாம் இருக்கட்டும், 8.35 ஆச்சு…ஓடுங்க…ரெண்டு பேரும் நல்லா தான் செட்டு சேந்திருக்கீங்க…”
கைகள் கோர்த்துக் கொண்டு தட தட வென ஓட ஆரம்பித்தனர் அனுவும், கவிதாவும். அனு…கவி…இவர்கள் இருவருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் தான். கொட்டும் அருவி போல், ஒரு இடத்தில் நிற்காமல், எப்பொழுதும் சிரித்துக் கொண்டோ, விளயாடிக் கொண்டோ, சந்தோஷமாக, full of life என்று சொல்வார்களே, அப்படி! ஆனால், கவிதா கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி, அந்த வகையில் அனு கொஞ்சம் தேவலை.
“Excuse me, sir…”
“Sorry, you are too early for the next class…” ராமமூர்த்தி ஸார் கொஞ்சம் கண்டிப்பு தான். வாசலருகே நின்று கொண்டு ஸார், ஸார் என்று இருவரும், ஒரு ’ஐயோ பாவம்’ முகபாவனையுடன் இழுக்கவும், சரி, போனாப் போகுது, முதல் நாள் வேற, நல்லா படிக்கற பொண்ணுக தானே என்று, ஒரு எச்சரிக்கையுடன் அவர்களை உள்ளே அனுமதித்தார்.
இருவரும் ஹப்பாடா என்று வகுப்புக்குள் நுழைய, முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டு, இவர்கள் இருவரையும் முறைத்த படி இளமதி…படிய வாரிய தலை முடி…எப்போதும், திருநீரும் குங்குமுமாகத் தான் காட்சி அளிப்பாள். அனுவும், கவிதாவும், அருவி போல என்றால், இளமதி, தெளிந்த நீரோடை போல. எப்பொழுதும் ஒரே மாதிரி, ஒரே சீராய் ஓடிக் கொண்டு, எந்த வித சலசலப்பும் இல்லாமல், ஆனால் ஆழ்ந்த சிந்தனைகளோடு இருக்கும் ஒரு பெண்…இல்லை இல்லை… டீச்சர்!!! இப்படி தான் அனுவும் கவிதாவும் சொல்வார்கள்.

கவிதா ஊர் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம், விவசாயக் குடும்பம். நல்ல கல்விக்காக, சிறு வயதிலிருந்தே விடுதி வாசம். அதனால், அவள் வாழ்வில், எப்போதுமே நண்பர்களுக்கென்று மிக மிக முக்கிய இடம் உண்டு. இளமதி ஊர் திண்டுக்கல் அருகே காந்தி கிராமம்…அம்மா, அப்பா இருவருமே தமிழ் பேராசிரியர்கள். அனுவோ பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்க நாட்டில். ப்ளஸ் ஒன் முதல் தான், பாட்டியுடன் அந்த ஊரில் வசிக்க ஆரம்பித்திருந்தாள்.
இப்படி எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த அவர்கள் மூவரும், கல்லூரிக்கு வந்த நாள் முதல், ஒன்றாகவே தான் சுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்படி, ஏன் நண்பர்களானார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கல்லூரியின் முதல் நாள், மற்ற இருவர் அமர்ந்திருந்த பென்சில் சென்று அமர்ந்தது தான் செய்த பாக்கியம் என்று தான் மூவருமே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதோ இதோ என்று மூன்றாம் ஆண்டும் வந்தாச்சு. அன்று தான், மூன்றாம் ஆண்டின் முதல் நாள். வழக்கம் போல், இன்டர்வெல்லில், கேண்டினில் மூவரும் ஆஜர்.
அனு, “ஹே…இன்னிக்கு ட்ரீட்…” தொட்டதற்கெல்லாம், ட்ரீட் கேட்பதும், கொடுப்பதும் அனுவுடைய பகுதி நேரத் தொழில்.
இளமதி, “எங்கடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்…சொல்லுங்க, இன்னிக்கு என்ன?”
கவிதா, “ஹே…வெய்ட், வெய்ட்…நான் சொல்றேன், நான் சொல்றேன்…இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே, அதான அனு?”
அனு, “naa…bad guess”
இளமதி, “ஹாங்ங்…நாம இனிமே சூப்பர் சீனியர்ஸ் ஆய்ட்டோம்…அதான?”
அனு, “இன்னும், ஃபர்ஸ்டு இயர்ஸே வரல, அதுக்குள்ள என்ன சூப்பர் சீனியர்ஸ்?”
கவிதா, “ஹான்…கண்டு பிடிச்சுட்டேன்…இன்னிக்கு லேட்டா, லேட்டஸ்டா வந்தமே, அதுக்கு…”
அனு, “ஹ்ம்ம்…குட் ரீசன்…ஆனா, அதுவும் இல்ல…”
இளமதி, “இதுல பெருமை வேறயா? என்னன்னு சொல்லு அனு…”
அனு, “இன்னிக்கு வீட்ல இருந்து வந்துருக்கனால, ரொம்ப நாளைக்கு அப்புறம் கவி, குளிச்சுட்டு காலேஜ் வந்துருக்கா…அதுக்கு நான் ட்ரீட் குடுக்கறேன்…” சொல்லி விட்டு அனு சிரிக்கவும், இளமதியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். “பாவி…கொரங்கு, பன்னி” என்று கவிதா சிணுங்கவும், அவர்கள் சிரிப்பு மேலும் தொடர்ந்தது.
இப்படியே சிரிப்பும், கூத்துமாகவே நகர்ந்தது அந்த வாரம். வெள்ளி கிழமை, வழக்கம் போல பாலாவை அழைத்துக் கொண்டு கல்லூரியை வந்தடைந்தாள் அனு. வண்டியை பார்க் செய்யப் போனவள், அவளுக்காக இளமதி காத்துக் கொண்டிருப்பதை பார்த்து, “இளம்ஸ்…நீ எப்படி? மணி எட்டேகால் தான் ஆச்சா? என் வாட்சுல 8.26 காட்டுது?” என்றவாரு தன் வாட்சை பார்த்தாள் அனு.
“இல்ல, அனு…இன்னிக்கு லேட் ஆய்டுச்சு…”
“ஹய்யயோ, அப்ப இன்னிக்கு மழை தான்…ஜர்கின் கூட எடுத்துட்டு வரலையே…சரி, சரி, எங்க அந்த கவி கொரங்கு? இன்னிக்கும் ஃபர்ஸ்ட் பீரியட் கட்டா?”
“என்னது நான் கொரங்கா? நீ தான் பன்னி…” எங்கிருந்தோ தீடிரென்று அங்கு வந்து நின்றாள் கவிதா.
இளமதி, “காலங்காத்தால ஆரம்பிக்காதீங்க…ஆமா அனு! அது…அந்த பாலக்குமார் தான? நம்ம சீனியர்?”
“ஆமா இளம்ஸ்…நான் தான் சொன்னனே, அவனும் இப்ப எங்க ஃப்ளாட்ல தான் இருக்கான்…”
“ஓஹ்ஹ்…” எதுவும் பேசாமல் ஒரு வித சிந்தனையுடன் இளமதி வகுப்பறையை நோக்கி நடக்கவும், கவிதாவும், அனுவும் எப்பொழுதும் போல் ஒருவர் காலை ஒருவர் வாரிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் அவளை தொடர்ந்தனர்.
சில வினாடிகள் பொறுத்து இளமதி, “அனு…நீ ஏன் அவனை வண்டில எல்லாம் கூட்டிட்டு வர?”
அனு, “அவன் பஸ்ல தான் வரனும்னு சொன்னான்…சரின்னு நான் தான் தினமும் என்னோடயே வந்துடுன்னு சொன்னேன்…”
பெரும் அதிர்ச்சி அடைந்தவளாய் இளமதி, “என்னது??? தினமுமா? ஏன் அனு இப்படி எல்லாம் பண்ற? ஏதோ ஒரு நாளைக்குன்னா பரவாயில்ல…எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அனு, சில பேர் இத தப்பா கூட பேசுவாங்க…”
அனு, “என்னது? தப்பா பேசுவாங்களா? What the…இளம்ஸ்…come on!!! This is 21st century…ஒருத்தனுக்கு லிஃட் குடுத்தா தப்பா? I just…just…don’t understand”
“யு.யெஸ் இல்ல அனு இது…ஒரு பொண்ணும், பையனும் பேசிக்கறது கூட தப்புன்னு சொல்ற ஊர்ல இருந்து கூட இங்க வந்து படிக்கறவங்க இருக்காங்க…அவங்கள சொல்லியும் தப்பில்ல…நாம தான ஒழுங்கா இருக்கனும்? சரி, ஒரு பேச்சுக்கு சொல்றேன்…இதயே சில பேர் கதை கட்டி பேசுனா, என்ன பண்ணுவ?”
“ஹ்ம்ம்ம்… பல்ல ஒடப்பேன்…”
கவிதா “அனு! அதுக்கு பக்கத்துல டென்டல் காலேஜ் இருக்கு…அங்க படிச்சிருக்கனும்” உடனே, சூழல் மறந்து அனுவும், கவிதாவும் சத்தம் போட்டு சிரிக்க,
இளமதி, “எப்ப பாத்தாலும் சிரிப்பு தானா? இங்க பாரு அனு! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…இனிமே அவனுக்கு லிஃட் எல்லாம் குடுக்காத…சொல்லிட்டேன்” என்ற படி விடு விடு என்ற நடக்க ஆரம்பித்து விட்டாள்.
குழம்பிய முகத்துடன் அனு, “கவி!!! Whats her problem?
கவிதா, “எல்லாம் பேஸிக் ஜீன் ப்ராளம் தான்…ரெண்டு தமிழ் professors பெத்த நம்ம டீச்சர் அம்மா, இப்படி பேசலைன்னா தான் அதிசயம்…”
அனு, “ஹய்யோ…டீச்சர் திரும்பி நின்னு மொறைக்குது கவி…வா சீக்கரம்”
ஆனால் அங்கிருந்து நகராமல் விஷமமான முகத்துடன் கவிதா, “ஹே….ஒரு வேளை இப்படி இருக்குமோ? Actually, இளம்ஸ் is J on you…”
“You mean Jealous?”
“ஆமா…அந்த பாலா பையன் வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருக்கானா…” என்று சொல்லி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கவிதா.
அனு, “என்னது? நம்ம சாமியார் இளமதியா? கவி! என்ன வார்த்தை சொல்லி விட்டாய்? அபச்சாரம், அபச்சாரம்…ஹே…இரு, இரு…என்ன சொன்ன…என்ன சொன்ன? அப்படியே சைடு கேப்ல அவன் நல்லா இருக்கான்னு சொல்ற? ஹ்ம்ம்…சொல்லு, சொல்லு, என்ன நடக்குது? ஹாங்?” மறுபடியும், சத்தமாய் ஒலித்தது அவர்களது சிரிப்பொலி.
சற்று தூரம் சென்று விட்ட இளமதி திரும்பி நின்று, “அங்க என்ன சிரிப்பு? க்ளாஸுக்கு லேட் ஆச்சு…சீக்கரம் வாங்க” என்று அதட்டவும், வேகமாக நகர்ந்தனர் இருவரும்.
இவர்கள் இப்படி என்றால், அதே நேரத்தில், நான்காம் ஆண்டு வகுப்பறையில்...
“டேய் பாலாஆஆ!!! என்னடா? நம்ம சானியா மிர்ஸா உனக்கு லிஃட்டு எல்லாம் குடுக்குது போல?” ஒரு நாள் கல்லூரிக்கு, தெரியாத் தனமாக ஸ்கர்ட் அணிந்து கொண்டு சென்றதால், அப்படி ஒரு பட்டப் பெயர் அனுவுக்கு, பசங்க மத்தியில்.
“லிஃட்டு என்னடா பெரிய விஷயம்? இந்த லீவ்லயே அவள கரெக்ட் பண்ணிட்டேன்…” சொல்லி விட்டு, ஸ்டைலாக காலரை தூக்கி விட்டுக் கொண்டான் பாலா.
இருங்க, இருங்க…இப்படி சொன்னதால, பாலாவ பத்தி தப்பா நினைச்சுடாதீங்க. ஏதோ நண்பர்கள் மத்தியில், ஒரு கெத்து காட்டுவதற்காக, அவன் அப்படி சொல்லி விட்டான். மற்றபடி, அவன் ரொம்ப மோசமான பையன் எல்லாம் இல்லை. கொஞ்சம் பொறுப்பில்லாத, எதையும் ஒரு ஜாலிக்காக செய்யக் கூடிய, சாதாரணப் பையன் தான்.
ஆனால் இந்த விஷயம் தெரிந்ததும், அனு செய்த காரியம் இருக்கே…’இந்த பொண்ணு எதையும் வேகத்துல செஞ்சிட்டோ, பேசிட்டோ அப்புறம் தான் யோசிப்பா…” என்று இளமதி சொல்வது கூட சரி தாங்கற மாதிரி இல்ல பண்ணிட்டா?
[தொடரும்]