Sunday, September 6, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 2

பாகம் 1

“இவங்க அக்கா பொண்ணு தான்…லீவுக்கு ஊருக்கு வந்திருந்துச்சாம்…”

“இருபத்தி ரெண்டு…இல்லை இருபத்தி மூணு தான் இருக்கும் போல…”

இப்படி பல குரல்களுக்கு இடையே ஒரு குரல் மட்டும், பெருங்குரலெடுத்து அழும் சக்தி கூட இல்லாமல் கம்மி போய் ஒலித்துக் கொண்டிருந்தது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார் காமாட்சி, அவருக்கு அருகிலேயே அவரை ஒட்டியவாறு ஒரு சிறுவன்.

“நீங்க என்ன வேணும் இந்த பொண்ணுக்கு?”

“நான் இவ சித்தி சார்…என் சொந்த அக்கா பொண்ணு…” சொல்லிவிட்டு மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார் காமாட்சி.

“அழாம கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்கம்மா….ப்ளீஸ்…பொண்ணு இறந்து கிட்ட தட்ட ஆறு மணி நேரம் ஆகப் போகுது…இந்த விசாரணை எல்லாம் முடிச்சா தான் ஆஸ்பத்திருக்கு அனுப்ப முடியும்…”

“----“

“பொண்ணோட அப்பா, அம்மா எங்க?”

“அப்பா குவைட்ல இருக்காரு சார்…அவருக்கு விஷயத்த சொல்லியாச்சு…இன்னேரம் கிளம்பியிருப்பாரு…”
“ஓ....சரி, அவங்க இங்க எங்க தங்கியிருந்தாங்க? உங்களோடையா?”

“இல்லை சார்…அவ தின்டுக்கல்ல காலேஜ்ல படிச்சிகிட்டு இருக்கா…வெளிய லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தங்கி இருந்தா…”

“ஓஹ்ஹ்…பொண்ணுக்கு காலேஜ்ல எதாவது பழக்கம், அப்படி….இந்த மாதிரி எல்லாம் எதாவது உண்டா?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்…யார்கிட்டையும் தேவையில்லாம பேச கூட மாட்டா…”

“வேற எதாவது சோகம், இல்லை உடம்பு சரியில்லை…இப்படி எதாவது?”

“அப்படி எல்லாம் ஒன்னுமே இல்லை…அருமையா தான் இருந்தா…ஆசையா, நான் உங்க வீட்டுக்கு வந்து நாளாச்சு…உங்கள பாக்கனும் போல இருக்கு சித்தின்னு கிளம்பி வந்த பொண்ணு…பாவி…இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியலையே…”

“ஹ்ம்ம்…உங்க வீட்ல எத்தனை பேரு?”

“எனக்கு ஒரே பையன் சார்…இவன் தான்…ஏழாவது படிக்கறான்…எங்க வீட்டுக்காரரும் குவைட்ல தான் இருக்காரு…இப்ப அவரும் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு…”

“ஹ்ம்ம்…ஒரு கவலையும் இல்லாத பொண்ணுங்கறீங்க…எந்த பழக்கமும் கிடையாது…அப்புறம் எப்படி? இவ்ளோ பெரிய காரியத்த பண்ணுவா? வேற எதாவது இருக்காம்மா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க…”

“எங்கக்கா…அதான் அவ அம்மா திடீர்ன்னு இறந்துட்டா…அதுல தான் மனசொடிஞ்சு போய்ட்டா….ஆனா, அது நடந்து ரெண்டு வருஷம் ஆகப் போகுதே…”

“சரி, இப்ப போஸ்ட் மார்ட்டமுக்கு அனுப்ப போறோம்…நீங்களும் ஆஸ்பத்திருக்கு வரனும்…ஆமா…பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?”

“மது சார்…மதுவந்த்தி

****************************************************************

“மது!!! மதும்மா!!!”

“---“

“யேய் மது!!! காட்டுக் கத்தல் கத்திட்டு இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்க? மது….ஏய் மதுமந்தி…”

“அம்மா!!! நீங்களே என் பேரை கிண்டல் பண்றீங்களே!!!” சிணுங்கலுடன் அம்மாவை கோபித்துக் கொண்டாள் மது, மதுவந்த்தி…ஒடிந்து விழுந்துவிடும் அளவுக்கு மெல்லிய தேகம், மிகவும் கலையான மாநிறம், செதுக்கி அளவெடுத்து வைத்தாற் போல் முகவெட்டு. இவள் சிரிப்பதற்காவே பிறந்தவளோ என்று அவளை பார்ப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யப் படும் அளவிற்கு, என்னேரமும் சிரித்துக் கொண்டே இருப்பாள்.
“கண்ணா….உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா…”
“என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? சொல்லுங்க…”

“அப்பா காலையில கூப்பிட்டிருந்தார்ல?”

“என்னவாம்? இந்த தடவையும் லீவுக்கு வர முடியாது, வேலை இருக்கு…பிசினஸ பாக்கனும், வேணும்னா நீங்க கிளம்பி வாங்கன்னு சொல்லியிருப்பாரு….வருஷாவருஷம் இது தான நடக்குது?”

“ஹ்ம்ம்…அது தான் இல்லை…அப்பா அங்க எல்லாத்தையும் ஓரக் கட்டிட்டு இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…”

“ஹா….இது ஷாக் ஆஃப் தி சென்ட்சுரியா இல்லை இருக்கு…இரு…” என்றபடி அம்மாவை கிள்ளினாள்.“ஏய்!! எதுக்கு டீ கிள்ளுற?”

“இல்லை, கனவா, நிஜமான்னு பாத்தேன்…”

“முழுசா கேளு…உனக்கு முதல்ல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு, நீ இங்கிருந்து போனப்புறம் நான் தனியா தான இருப்பேன்? அப்ப இங்கயே வந்துடறேன்னு சொன்னாரு…” சொல்லிவிட்டு நக்கல் சிரிப்பு ஒன்றை சிரித்தார், மதுவின் அம்மா.

“ஆரம்பிச்சிட்டீங்களா? என்னடா நமக்கு இன்னும் மணியடிக்கலையேன்னு பாத்தேன்…ஏற்கனவே ஜோதி, வாசுகி…இவங்க வீட்லையும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“என்னடி மணியடிக்கறது?”

“அதான்மா…இந்த கோர்ட்ல எல்லாம் கைதி, சாட்சிகளை கூப்பிடறதுக்கு முன்னாடி மணியடிச்சு கூப்பிடுவாங்களே! அந்த மாதிரி தான்…உனக்கு வீட்ட விட்டு கிளம்ப டைம் வந்தாச்சுன்னு சொல்லி மணியடிக்கறது…எங்க க்ளாஸ்ல லைனா எல்லாருக்கும் மணியடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்…”

“அவங்கவங்க பொண்ணுக்கு காலாகாலத்துல கல்யாணம் ஆகனுமேன்னு வயத்துல நெருப்ப கட்டிகிட்டு இருந்தா, நீங்க இதுவும் பேசுவீங்க…இன்னமும் பேசுவீங்க…”

“இன்னும் எத்தன நாளைக்கு தாம்மா இதே டைய்லாக பேசிட்டு இருப்பீங்க? கொஞ்சம் புசுசா யோசிக்க கூடாது? வெயில் காலத்துக்கு தகுந்த மாதிரி வயத்துல ஐஸ கட்டிக்க வேண்டியது தான?”

“சரி…சரி…சொல்ல வந்த விஷயத்த சொல்ல விடாம பண்ணிடுவியே! முதல்ல நான் சொல்றது கேளும்மா…என் கண்ணில்லை?”

“இல்லை…நான் உன் கண்ணும் இல்லை…மூக்கும் இல்லை…”

“இத பாரு மது…அப்பா உன்னை கேட்டுட்டு தான் மாப்ளை பாக்க ஆரம்பிக்கனும்னு இருந்தாரு…ஆனா, நம்ம ராமன் அங்கிள் இல்லை? அவரு தான்…நல்ல ஒரு இடம் வந்துருக்கு…பாருங்க…ஒத்துவந்தா செய்யலாம்….பையனுக்கும், அவங்க குடும்பத்துகும் நான் கியாரண்டின்னு சொல்லியிருக்காரு…அதான், எனக்கும் அப்பாவுக்கும் உடனே பாக்கலாம்னு ஒரு எண்ணம்…”

“என்னம்மா, பெருசா ப்ரீத்திக்கு நான் கியாரண்டிங்கற மாதிரி, காமடி பண்ணிட்டு இருக்கீங்க? இந்த காலத்து பசங்களுக்கு, அவங்க அப்பா அம்மாவே கியாரண்டி குடுக்க முடியாது தெரிஞ்சுக்கோ…”“சும்மா வளவளன்னு பேச்ச வளக்காத….என்ன சொல்ற? பாக்கலாமா? வேண்டாமா?”

“வேண்டாம்…” ஒற்றை பதிலை திட்டவட்டமாய் சொன்னபடி கம்ப்யூட்டரில் மீண்டும் மூழ்கினாள் மது. உடனே பக்கத்தில் இருந்த கைபேசியை எடுத்து, கணவரை அழைத்தார் மது அம்மா.

“ஹலோ…நான் தான் பேசுறேன்…”
“ஹ்ம்ம்…ஆமா…நீங்க என்ன பண்றீங்க? சாப்டாச்சா?”
“அவகிட்டையா? ஹ்ம்ம்…ஹ்ம்ம்…கேட்டாச்சு….அவ என்ன சொல்ல போறா? சரி ன்னு தான் சொல்லுவா…நீங்க அவங்க வீட்ல பேசுங்க…”
“ஆமாங்க…பாப்போமே…ஒத்துவந்தா பண்ணலாம்…பொறுமையா பாப்போம்…”

“என்னமா? நான் வேண்டாம்னு சொல்றேன்…நீங்க என்னடான்னா அப்பா கிட்ட சரின்னு தான் சொல்லுவான்னு கூலா சொல்றீங்க?”

“கூல் தான்…நீ தான வயத்துல ஐஸ கட்டிக்க சொன்னே?”

“உங்கள!!! என்னவோ பண்ணித் தொலைங்க…”

“இந்தா…பாரு ஃபோட்டோ…”
உச்சு கொட்டியபடி தலையை திருப்பிக் கொண்டு, மது மீண்டும் கம்ப்யூட்டர் திரையை பார்க்கவும், அவளது அம்மா, “மதும்மா…நீ மட்டும் ஃபோட்டோவ பாக்கனுமே! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்…உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காரேன்னு தான் நான் கூட அப்பா கேட்ட போது உடனே ஒத்துகிட்டேன்…”

“அதென்னம்மா எனக்கு பிடிச்ச மாதிரி? உங்களுக்கு என்ன தெரியும்? கண்டிப்பா உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்து வராது….”

“அது தான் இல்லை…அன்னிக்கு நீயும், திவ்யாவும் மதுரை டைம்ஸை பாத்துட்டு பேசிட்டு இருந்தீங்களே…எதோ TDH, TDH ன்னு, என்னததுன்னு நானும் தான் பேப்பர எடுத்து பாத்தேன்…” நமட்டு சிரிப்போடு அம்மா கூறவும், மது, “கொடுமை மா…இத வேற ஒட்டு கேட்டீங்களா? ச்சே…போங்கம்மா…” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

“இதுல ஒட்டுக் கேக்கறதுக்கு என்ன இருக்கு? இப்ப பாரு…உனக்கு பாத்துவச்சிருக்க மாப்ளை கூட TDH தான்” என்றபடி கண்களை சிமிட்டினார்.

“நிஜமாவாம்மா? எங்க? காட்டுங்க…” அம்மாவின் கைகளில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த மாத்திரத்தில் மதுவின் முகம் மலர்ந்தாலும், வேண்டுமென்றே உதட்டை சுழித்தாள்…”ஹ்ம்ம்…ஓ…க்கே…ஆமா…இந்த பையன் பேரென்ன சொன்னீங்க?”

“நான் சொல்லவே இல்லையே…” என்றபடி சிரித்தார் மது அம்மா.

“சரி…வேணாம்…சொல்லாதீங்க…”

“சரி…சரி…சொல்றேன்…சொல்றேன்…ரஞ்சி்த்…ரஞ்சித்குமார்…”

********************************************************
ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் மொட்டை மாடியில், இன்டு இடுக்குகளில் எல்லாம் டார்ச் விளக்கின் உதவியுடன், கடமை கண்ணியத்துடன் கண்ணில் எதாவது புலப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தார், வயது முதிர்ந்த முருகேசன் என்ற அந்த கான்ஸ்டபில். ஒரமாக நின்றபடி ஏதோ யோசனையுடன், ஒரு கரத்தில் கைகுட்டையில் சுற்றியிருந்த ஒரு பெரிய மெழுவர்த்தியை உற்றுப் பார்த்தபடி, புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த இளவயது இன்ஸ்பெக்டரின் சிந்தனையை கலைத்தது, கான்ஸ்டபிலின் குரல்.“சார்…இங்க என்னவோ இருக்கு…”

கைவசம் வைத்திருந்த வெள்ளை கைக்குட்டையால், முருகேசன் அதை குனிந்து எடுக்க, புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை காலில் போட்டு அனைத்து விட்டு உடனடியாக அவரிடத்தில் வந்தார் இன்ஸ்பெக்டர் பரத்.

“என்ன முருகேசன்?”

“இங்க பாருங்க சார்!!!”

அவரது வெள்ளை கைக்குட்டையின் நடுவில், ஜொலித்துக் கொண்டிருந்தது ஒரு அழகிய தங்க ப்ரேஸ்லட். கான்ஸ்டபில் அதை திருப்பிப் பிடிக்க, டார்ச் உதவியில்லாமையே, அதிகாலை நேரத்து சூர்ய ஒலியில் தகதகவென மின்னியது, அதில் அழகாய், கலைநயத்தோடு பொறிக்கப்பட்டிருந்த பொன்னெழுத்துக்கள்.

முகில்” என்று சத்தமிட்டு படித்தபடி யோசனையுடன் கான்ஸ்டபிளை பார்த்தார் இன்ஸ்பெக்டர்!

[தொடரும்]

Thursday, September 3, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 1

“ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்”

என்று பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட பெரியதொரு கம்பீரமான பெயர் பலகை, மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அழகான அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நம்மை வரவேற்றது. நகரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்த அந்த குடியிருப்பு பகுதியில் அன்று சுதந்திர தின விழா.
கதவு எண் 1A, முதல் மாடியில் நுழைந்தவுடன் அமைந்திருந்த அந்த வீட்டு வாசலில் ஒரு அழகான மாக்கோலம்.
தாமரை வண்ண டஸர் புடவை சரசரக்க, படிய வாரிய தலையில், அழகான மல்லிச்சரத்துடன், அதைவிட அழகாக முகத்தில் என்றுமே மறையாத புன்னகையுடன் வந்த மருமகளைப் பார்த்து, “என் கண்ணே பட்டுரும் போல!!!” என்று தன்னக்குள்ளே பெருமையினூடே சலித்தும் கொண்டார் தனலட்சுமி.

“முகில்! அன்னிக்கு நம்மெல்லாம் போய் வாங்கின புடவை தான? அட்டகாசமா இருக்கு….”

“ஆமாங்கத்தை…” என்று மெலிதாக முறுவலித்தாள் முகில்.

அம்மா சொன்னதை கேட்டு ஒரு நொடி மனைவியை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் கையிலிருந்த செய்திதாளில் மூழ்கினான் ரஞ்சித்.
முகில் முகத்தில் எப்போதும் மறையாத சிரிப்பு இருப்பதை போல, ரஞ்சித் முகத்தில் என்றும் கடுகடுப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவன் குணம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

எதோ விசில் அடித்துக் கொண்டு செய்திதாளே கண்ணாய் இருந்த மகனை பார்த்து தனலட்சுமி, ’ச்சே…இந்த பசங்களே இப்படி தான்! சட்டுன்னு எதையும் பாராட்டறதுக்கு மனசு வராதே! இந்த கருப்பனுக்கு போய் இத்தனை அழகான பொண்ண கட்டி வச்சமே! கொஞ்சமாவது அருமை தெரியுதா பாரு’ என்று மனதிற்குள்ளே பெற்ற மகனை வசைப் பாடிக் கொண்டிருந்தார்.
ஆனால் ’தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்’ பாடலை விசில் அடித்துக் கொண்டே முகிலை ஓரக் கண்ணில் அவன் பார்த்ததையும், அதை உணர்ந்து அவள் வெட்கப் புன்னகை புரிந்ததையும் அவர் கவனிக்கவில்லை பாவம்!

“தனம்!! அங்க என்ன யோசனை? எல்லாரும் கிளம்பியாச்சுல்ல? நடங்க…. நடங்க….நேரம் ஆகுது…” ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம் சொல்லவும், வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே நடந்தனர்.
லிஃப்ட் அருகே சென்ற ரஞ்சித்தை தடுத்து நிறுத்தயது அவன் அம்மாவின் குரல், “டேய்! ரெண்டாவது மாடில புஷ்பா வீட்டுக்கு போய்ட்டு, அவங்களோட சேந்து போலம்னு சொன்னேன்ல?”

“ஆமா…எத்தனை தடவை மா சொல்லுவீங்க? நல்லா ஞாபகம் இருக்கு…”

“அப்புறம் எதுக்குடா லிஃப்டு?”

“ஏன் ரெண்டாவது மாடின்னா லிஃப்ட்ல போகக் கூடாதா?”

உடனே சுப்பரமணியமும், தனலட்சுமியும் ஒரு சேர சலித்துக் கொண்டனர், “நாலு படி ஏறதுக்கு ஒரு லிஃப்ட்டா? இந்த காலத்து பசங்க…”

ஒரு வழியாக புஷ்பா வீட்டிளுள்ள அனைவரைவும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் விழா நடக்கும் கட்டிடத்தின் மேல் தளத்தை அடைந்த போது மணி ஆறு.
ஷோபா அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஒன்பது தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள் தான். மேலிருந்த பத்தாவது தளம், வீடுகள் எதுவும் இல்லாத ஒரு காலியிடம். விழாக்கள் நடத்த வசதியாக ஒரு மேற்கூரை போன்றதொரு அமைப்பை மட்டும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
லிஃப்ட்டை விட்டிறங்கியவுடன் ஒரு சிறிய அறை, அதை கடந்து கதவை திறந்து கொண்டு சென்றால், மொட்டை மாடி.

ரஞ்சித் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, தனலட்சுமி, “என்னடா இது இந்த அபார்ட்மெண்ட் கதவெல்லாம் இப்படி? ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர அமுத்திட்டு தான் திறக்கனுமா? சரியான தொல்லை…”

“என்னம்மா அப்படி சொல்லிட்டீங்க? இது தான் ரொம்ப சேஃப்ட்டி! சாவி, பூட்டு தேவையில்லை, எல்லாம் எலெக்ட்ரானிக் தான். பாரு, பக்கத்துலையே ஒட்டின மாதிரி எத்தனை கட்டிடம் இருக்கு? அதுல இருந்து குதிச்சாலும், யாரும் பூட்ட உடைச்சோ, இல்ல வேற எப்படியோ வரவே முடியாது. இந்த நம்பர கரெக்ட்டா அமுத்தினா தான் வர முடியும்…அது மட்டுமில்லை, மூனு தடவைக்கும் மேல தப்பா அமுத்தினா, அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு திறக்க முடியாது. செக்யூரிட்டி ரூம்லையும் உடனே அலாரம் அடிக்கும்…”

“ஆமா…இந்த ஐஞ்சு ஜீரோ அமுத்தறது ரொம்ப தான் கஷ்டம் பாரு…”

ரஞ்சித் சிரித்துக் கொண்டே, “இல்லம்மா…இது டிஃபால்ட் கோட், இப்போதைக்கு தற்காலிகமாத் தான் இப்படி வச்சிருக்காங்க…இப்ப தான புசுசா இத எல்லா கதவுலையும் ஃபிட் பண்ணியிருக்காங்க? எல்லாத்துக்கும் பழகினப்புறம், இந்த மாடி கதவுக்கும் ஒரு நம்பர செட் பண்ணி, எல்லாருக்கும் சொல்லுவாங்க…”

“என்னமோ போடா…ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர வேற ஞாபகம் வச்சுகிட்டு இருக்கனும்…ஆமா, நம்ம வீட்டுக்கும் இதே மாதிரி தான? என்ன நம்பர் அது?”

முகில், “எங்க கல்யாண தேதி தான் அத்தை…4-11-08” என்று சிரித்தபடி பதிலளித்தாள்.

உரை, கலைநிகழ்ச்சிகள் என்று இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், எட்டு, எட்டரைக்கெல்லாம் இரவு உணவும் ஆரம்பமானது.
ரஞ்சித், சுப்பிரமணியம், இரண்டாவது மாடி புஷ்பாவின் மகன் ராகேஷ் உட்பட இன்னும் சில நண்பர்கள் கூடி நின்று உணவருந்திக் கொண்டிருக்க, முகில், தனலட்சுமி, புஷ்பா என்று பெண்கள் கூட்டமெல்லாம் அவர்களுக்கு எதிர் திசையில் சற்று தள்ளி உணவருந்திக் கொண்டிருந்தனர்.

புஷ்பா தனலட்சுமியிடம், “ஏங்க…உங்க மருமகளுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?”

“ஏன் கேக்கறீங்க?”

“இல்ல…எங்க ராக்கேஷுக்கு பாக்கலாமேன்னு தான்…” என்று சொல்லிச் சிரித்தார் புஷ்பா.

தனலட்சுமியும் சிரித்துக் கொண்டே, “எங்க முகில் மாதிரி வேற பொண்னெல்லாம் கிடைக்காது…”
“ஏம்மா முகில்! கேட்டியா? உன்னை மாதிரியே மருமக வேணுமாம் புஷ்பா ஆண்டிக்கு…”

முகில் பதிலேதும் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, தனலட்சுமி, “முகில்!” என்று மீண்டும் ஒருமுறை அழைத்தார்.
கனவில் இருந்து விழித்தவளைப் போல, “என்னங்கத்தை? என்ன சொன்னீங்க?”

“என்னது? என்ன சொன்னேனா? எந்த உலகத்துல இருக்க நீ?”

முகில் பதிலேதும் சொல்லாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, “அங்க பாருங்களேன்!!! அவருக்கு இந்த டிரெஸ் எவ்ளோ நல்லா இருக்குன்னு…”

“யாருக்கு”

“அவருக்கத்தான் அத்தை …”

“ரஞ்சித்தா? என்ன ட்ரெஸ் போட்ருக்கான்? வெள்ள சட்டையா? இதுல என்னத்த சூப்பரா இருக்கு? எல்லாரும் போடறது தான?”

“போங்கத்தை….எவ்ளோ நல்லா இருக்கு? அவருக்கு எப்பயுமே வெள்ளை ஃபார்மல் சட்டை ரொம்ப பொருத்தமா இருக்கும்…”

“ஹ்ம்ம்ம்…”

“என்ன ஹ்ம்ம் ன்னு மட்டும் சொல்றீங்க? அங்க பாருங்க…அந்த பச்சை சுடிதார் பொண்ணு…ரொம்ப நேரமா அங்கயே தான் பாத்துட்டு இருக்கா…அவரை தான் சைட் அடிச்சிட்டு இருக்கா…” என்று முகில் பெருமையடித்துக் கொள்ள,

தனலட்சுமி, “என்னது?” என்றபடி அந்த பச்சை சுடிதார் அணிந்த பெண்ணைப் பார்த்தார், “அட ஆமா…அவங்க நிக்குற பக்கமே தான் பாத்துட்டு இருக்கா…யேய்…இரு…அவ ராக்கேஷத் தான் பாக்குறான்னு நினைக்குறேன்…அவன் தான் பேச்சுலர், இவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், இவனைப் போய் எதுக்கு பாக்கப் போறா?”
“இல்ல இல்ல…இவரை தான் பாத்துட்டு இருக்கா…ஒரு நிமிஷம் இருங்க…இப்ப நான் அவரை இங்க கூப்பிடறேன், நீங்க அந்த பொண்ணயே பாத்துகிட்டிருங்க…”

“ஏய்…என்னதிது விளையாட்டு? சும்மா இரு” என்று தனலட்சுமி தடுப்பதற்குள் முகில், “ஏங்க! ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்….” என்று அவனை அழைத்தே விட்டாள்.

பதறிப் போன தனலட்சுமி, “என்ன முகில் இது?”,
முகில், “பேசாம அந்த பொண்ணயே பாத்துட்டு இருங்கத்தை…”

“என்னம்மா…” என்றபடி அருகில் வந்த கணவனிடம், யாருக்கும் கேட்காத வண்ணம், அவனது காதருகே, “ரஞ்சி! இந்த ட்ரெஸ்ல நீங்க எவ்ளோ ஹான்சம்மா இருக்கீங்க தெரியுமா?” என்று கிசுகிசுத்தாள்.

கண்களில் நட்சத்திரங்கள் மின்ன, “ஹேய்…நிஜமாவா சொல்ற?” என்று கேட்கவும், நிஜம் தான் என்பது போல அவன் கைபேசி அழகாய் பாடியாது. ’ஒரு நிமிஷம்’ என்று மனைவிக்கு கண்களாலேயே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ரஞ்சித்.

உடனே அத்தையிடம் திரும்பிய முகில், “என்னத்தை…பாத்தீங்களா?” என்று நமட்டு சிரிப்புடம் கேட்டாள்.

“ஆமா…உனக்கெப்படி தெரிஞ்சுது?”

“முதல்ல நீங்க என்ன பாத்தீங்கன்னு சொல்லுங்க…அப்புறம் நான் சொல்றேன்…”

“அவன் அங்கிருந்து இங்க வர வரைக்கும் அந்த பொன்னோட பார்வையும் அப்படியே பின்னாடியே வந்துச்சு…ரஞ்சித் இங்க வந்ததும், நீ வேற அவன்கிட்ட என்னவோ சொல்லி சிரிச்சியா? அப்ப அந்த பொன்னு முகத்த பாக்கனுமே…”

“ஹா ஹா….நான் சொன்னேன்ல? நம்ம ப்ரோக்ராம்ஸ் பாத்துட்டு இருக்கும் போதே நான் பாத்தேன்…அந்த பொண்ணு அவரை அநியாயதுக்கு சைட் அடிச்சுட்டு இருந்துச்சு…” முகில் முகத்தில் ஏகத்துக்கும் பெருமை மின்ன, தனலட்சுமி,
“ஹ்ம்ம்…இதுல உனக்கு பெருமை வேற? ஆமா, உனக்கெப்படி தெரியும்?”

“எல்லாம் எனக்கு தெரியும்…” என்று சொல்லி, சத்தமிட்டு முகில் சிரிக்கவும், ரஞ்சித் தொலைபேசிவிட்டு அங்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன எல்லாம் தெரியும்? என்ன ஜோக், எதுக்கு சிரிக்கற முகில்?”

“அதுவா…அங்க ஒரு பச்சை சுடிதார்…” முகிலை மேலே பேச விடாமல் செய்தது, தனலட்சுமியின் பெருத்த இருமல் ஒலி, “டேய்…கொஞ்சம் தண்ணி கொண்டாடா…” பொய்யாய் வரவழைத்த இருமலுடன் தனலட்சுமி இப்படி கேட்கவும், ரஞ்சித்தும் “தோ…” என்றபடி சிட்டாய் பறந்தான்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இதையெல்லாமா போய் அவன்கிட்ட சொல்லுவ?”

“ஏன்? சொன்னா என்னங்கத்தை?”

“சொன்னா என்னவா? சரியான பேக்கு பொண்ணு தான் போ…பேசாம இரு, இதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்…”

முகிலும் அத்தையை அதற்கு மேல் எதிர்த்து பேசாமல், ஒரு குறு புன்னகையுடன் அமைதி காத்தாள்.

“ஆமா, அந்த பொண்ணு காமாட்சி சொந்தக்காரப் பொண்ணு தான?”

“ஆமாங்கத்த”
“இதுக்கு முன்னாடியே எங்கையோ பாத்தாப்புல இருக்கு…எங்கன்னு தான் தெரியல…”
***
பத்து மணியளவில், விழா முடிந்ததும், அனைவரும் தத்தம் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எல்லோரும் மாடி கதவை நோக்கி நடக்கத் துவங்க, அத்தையின் பின்னோடு சென்று கொண்டிருந்த முகில், மாடி அறையின் கதவை கடக்கும் வேளையில் சற்றே தாமதித்து நின்று, பின்னால் வந்து கொண்டிருந்த ரஞ்சிதை பார்த்தாள்.

“ரஞ்சி! அங்க பாருங்களேன்…அந்த பச்சை சுடிதார் போட்ட பொண்ணு…”

“எங்க?”

“அங்க பாருங்க…அந்த வாட்டர் சின்டேக்ஸ் பக்கத்துல…”

“ஆமா…யாரது? புதுசா இருக்கு? நம்ம பில்டிங்கா?”

“இல்லல்ல…ரெண்டாவது மாடி, புஷ்பா ஆண்டி வீட்டுக்கு ஆப்போஸிட் வீட்ல இருக்காங்களே, அவங்க வீட்டுக்கு வந்திருக்க சொந்தகார பொண்ணு…”

“ஒஹ்ஹ்…”

“அந்த பொண்ணு, இங்க வந்ததுல இருந்து என்ன பண்ணிட்டு இருந்தா தெரியுமா?” என்றபடி விஷமப் புன்னகை புரிந்த மனைவியை பார்த்து, “போச்சுடா…ஏதோ என் பொன்டாட்டி கொஞ்ச நல்லவன்னு நினைச்சேன்…இப்ப அந்த ஆண்ட்டீஸோட சேந்து நீயும் காஸிப் பண்ண ஆரம்பிச்சிட்டியா?”

முகத்தில் செல்லக் கோபத்துடன், “ஹய்யோ…அதில்லைடா மடையா…அந்த பொண்ணு வந்ததில இருந்து உங்கள பயங்கரமா சைட் அடிச்சிட்டு இருந்துச்சு…அத சொல்லலாம்னு பாத்தா…”

“ஹே…என்ன சொல்ற? ஜோக்கா?”

“இல்லப்பா…நிஜம்ம்மா…நானே பாத்தேன்…”

முகம் மலர, அந்த பெண்ணை பார்த்தபடி, விசிலடித்துக் கொண்டு ரஞ்சித், “ஹ்ம்ம்…பொண்ணு பாக்கறதுக்கு நல்லா தான் இருக்கு…இந்த இனிப்பான செய்திய சொன்ன என் இனிய பொன்டாட்டி வாய்ல ஸ்வீட் தான் போடனும்” சொன்னதோடு நிற்காமல், அங்கே கதவருகே வரவேற்பதற்காக வைத்திருந்த தட்டிலிருந்த கல்கண்டை எடுத்து முகில் வாயில் போட்டான் ரஞ்சித்.

***
காலை மணி ஆறு, ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்ஸில் காலை வாக்கிங்க் செல்லும் பெரியவர்கள், கீழ் தளத்தில் இருந்த ஜிம்மிற்கு போவதற்காக கிளம்பி வந்த இளவட்டங்கள், பால் வாங்குவதற்காக வந்த இல்லத்தரசிகள், இப்படி அந்த அதிகாலை வேளையில் வெளியே எட்டிப் பார்த்த அனைவருமே தத்தம் வேலைகளை மறந்து, முகத்தில் மறையாத கலவரத்துடன் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருக்க, சைரன் பொருத்திய வாகனங்கள் உள்ளே வருவதும், செல்வதுமாய், பல காக்கி சட்டைகள் கூட்டமாக அந்த வளாகத்தையே சுற்றி வலைத்திருக்க, ஷோபா அபார்ட்மெண்ட்ஸே அல்லகோல கல்லகோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு கூடியிந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, சாக்பீஸ் கோடுகளுக்குள்ளே, ரத்தவெள்ளத்தில், குப்புற விழுந்த நிலையில், பச்சை சுடிதார் அணிந்த ஒரு பெண்…அங்கு நிகழ்வது எதுவும் தெரிந்து கொள்ளும் சக்தியற்ற பிணமாய்!

[தொடரும்]

Sunday, August 30, 2009

ஒரு தொடர்பதிவும் அறிவிப்பும்...

பல நாளா எதுவும் எழுதாமலே இருக்கறதால, பாவம் பொண்ணுன்னு பெரிய மனசு பண்ணி, நம்ம g3 tag பண்ணிடாங்க.

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மனசுல காதல் இருந்தா, பாக்குற எல்லாமே அழகு.
அழகு குறைந்தாலும் மறையாத காதல் அழகு.
எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.

3. கடவுள் உண்டா?
நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)

4. பணம் அவசியமா?
g3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது. so, நானும் அதுவே :)
(ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை)

அறிவிப்பு என்னன்னா, கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.

இந்த பதிவை தொடர இவரை அழைக்கிறேன்...welcome to the tamil blog world muni sir ;)

Saturday, August 1, 2009

சூர்யகாந்தி கவிதைகள் - II

ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?

பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?

சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?

கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?

கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?

விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?

இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

ஒரு விரல் வந்து எனைத் தீண்ட,

என் வசம் நான் தோற்று…

மறுவிரல் வந்து தீண்டவும்,

என்னிடமிருந்து விடைபெற்று…

உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,

உன்னிடமே தஞ்சமடைந்தேன்!

நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,

பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்

உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!

என் அன்பை நீ மறுத்தாலும்,

என்னை அடியோடு வெறுத்தாலும்,

ஏதோ ஒரு உலகத்தில்…

ஏதோ ஒரு தருணத்தில்…

வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,

நம் கடந்த காலத்தை!


அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…

தேனில் தோய்த்த கனியாய்,

கடைந்தெடுத்த அமுதாய்,

பாலைவனத்து நீராய்,

என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…