தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல், இன்று வரை எனக்கு இன்னொரு தாயாக இருக்கும் என் அக்காவுக்காக…
***
“அம்மா…” ஆசையாக அழைத்துக் கொண்டே வீட்டிற்க்குள் நுழைந்தான் அருண்.
“கண்ணா!!! வந்துட்டியா…அம்மா இதோ வரேன்…பாப்பாவ சாப்ட வச்சுட்டு இருக்கேன்…” ஏதோ ஒரு உள் அறையில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.
பையை சோஃபா மீது எறிந்து விட்டு, அவனும் அதில் சரிந்தான்.
அருண்…இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டி பையன். அம்மா, அப்பாவின் செல்லகட்டி.
“அருண்…எத்தன தடவை சொல்லி இருக்கேன்? பேக அப்படியே சோஃபா மேல போடாதன்னு? பாரு, இன்னும் ஷூ கூட கலட்டல…இன்னும் சின்ன பையன் மாதிரி….” கையில் தங்கையோடு வந்த அம்மா அப்படி சொன்னதும் அருண் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
இதே அம்மா தான், அவனை பஸ் ஸ்டான்டில் இருந்து தினமும் அழைத்து வந்து, வீட்டிற்கு வந்ததும், அவன் ஷூ, ஸாக்ஸ் எல்லாம் கலட்டி விட்டு, எதாவது சாப்பிட குடுத்து, ஹோம் வர்க் செய்து, அவனோடு விளையாடி, தூங்க செய்வார்.
இப்போ இந்த பாப்பா வந்தனால, அம்மா என்ன கண்டுக்கவே மாட்டிங்கறாங்க…
நினைக்க, நினைக்க அருணுக்கு விக்கி விக்கி அழ வேண்டும் போல இருந்தது. அதற்குள் மீண்டும் ஒலித்தது அம்மாவின் குரல்,
“அருண் கண்ணா…ஷூ வ கலட்டிட்டியா? அங்க ஷெல்ஃல பிஸ்கட் இருக்கும் பாரு, எடுத்து சாப்ட்டுட்டு ஹோம் வர்க் பண்ண ஆரம்பி…அம்மா பாப்பாவ தூங்க வச்சிட்டு வந்து பூஸ்ட் போட்டு குடுக்கறேன்…”
கிட்சனுக்கு சென்று அலமாரியை திறந்தான்…அவனுக்கு ரொம்ப பிடித்த ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்…ஆனால் சாப்பிட தோன்றவில்லை. நேராக திரும்பி வீட்டுக்கு வெளியே ஓடினான்.
“டேய்…எங்க போற??? பூஸ்ட் குடிச்சுட்டு போ…”
“நான் விளையாட போறேன்…” கத்தி விட்டு வீட்டுக்கு வெளியே ஓடினான்.
கால் போன போக்கில் நடந்தான் அருண். அவனுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல.
’ச்சே…இந்த பாப்பா ஏன் தான் பொறந்ததோ? யாருமே என்ன கண்டுக்க மாட்டிங்கறாங்க…’
மனதின் பாரம் தொண்டையை அடைக்க, ’அம்மாஅ….”என்று ஒரு முறை உரக்க சொல்லி பார்த்தான். கண்களில் நீர் புரண்டு ஓடியது.
நீ அளித்த உணவை கூட பகிர்ந்துண்டதில்லை…
இப்போது உன்னையே பகிர்ந்து கொள்ள சொன்னால்,
நீ அளிக்கும் உணவு கூட இறங்க மறுக்கிறதம்மா…
என் தலை கோதும் உன் விரல்கள், எனக்கு மட்டுமே சொந்தம்…
என்னை தூங்க வைக்கும் உன் தாலாட்டு, எனக்கு மட்டுமே சொந்தம்…
நான் பற்றி திரியும் உன் சேலைத் தலைப்பு, எனக்கு மட்டுமே சொந்தம்…
நான் மட்டுமே தூங்க, மறுபடி உன் முழு மடி கிடைக்குமா அம்மா?
அருண் வீட்டிற்குள் சென்ற போது, குழந்தை மட்டும் ஒரு அறையில் தனியாக தூங்கி கொண்டிருந்தது. அம்மா கிட்சனில் ஏதோ வேலையாக இருந்தார்.
மெதுவாக குழந்தை அருகில் சென்று அதன் விரலை பிடித்து முறுக்கினான். வீறிட்டு அழுத தன் தங்கையை பார்த்ததும், துக்கமும், குதூகலமும் ஒரு சேர வந்தது அவனுக்கு. அம்மா அங்கு வருவதற்குள் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான்.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை…’ஒரு நாள் தான கிடைக்குது’ என்று பாப்பாவை கொஞ்சிக் கொண்டிருந்த அப்பா, என்னேரமும் ஏதோ வேலையாகவே இருக்கும் அம்மா… இவர்களுக்கு இடையில் பெரியப்பா, பெரியம்மாவின் குரல் கேட்க, கதவருகே ஒடினான் அருண்.
அவன் பெரியம்மாவுக்கு ரொம்ப செல்லம். அவரை பார்த்ததும், அவனுக்குள் ஒரே குதூகலம்.
“அருணு….எப்டி தங்கம் இருக்க?” ஆசையாக வினவிய பெரியம்மாவை அப்படியே கட்டிக் கொண்டான்.
அவனை தூக்கிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த பெரியம்மா, “அட டே….தங்க பாப்பா அதுக்குள்ள குளிச்சாச்சா…” அவனை இறக்கி விட்டு, அப்பா கையில் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.
கானாததை கண்டது போல குழந்தையை அவர் கொஞ்சுவதை பார்த்து,
’பெரியம்மாவுமா…’ என்பது போல வெறித்துக் கொண்டு எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தான்.
குசலம் விசாரிப்பெல்லாம் முடிந்த பின்னர் அவனது அப்பாவும், பெரியப்பாவும் கிளம்பி எங்கோ வெளியில் சென்றனர்.
“ஹ்ம்ம்…நல்ல வேளை, பொண்ணாவது தம்பி கலர்ல பிறக்காம, உன் கலர்ல பிறந்துச்சு…” இது அவன் பெரியம்மா…
உடனே அவன் அம்மா, “ஆமாங்க்கா…அவர் கூட அதே தான் சொல்லிட்டு இருந்தாரு…” என்று சொல்லி சிரித்தார்.
அவன் கைகளை இப்படி, அப்படி ஆட்டிப் பார்த்தான். மாநிறமான அவன் தோல், அப்போது மட்டும் ஏனோ அட்டை கரியாக தோன்றியது. முதன் முறையாக அவன் நிறத்தின் மீது வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு, தங்க கலரில் ஜொலித்துக் கொண்டிருந்த தங்கை மீது திரும்பியது.
பெரியம்மா அருகில் சென்று அமர்ந்து கொண்டு, அவர் கவனிக்காத நேரத்தில் தன் தங்கையை நறுக்கென்று கிள்ளினான்.
பெருங்குரலெடுத்து குழந்தை அழும் முன்பு, படீர் என்று அவன் கால்களில் இடியென விழுந்தது ஒரு அடி. அடித்தது அவன் அம்மா தான், “ஏய்…இப்ப எதுக்குடா பாப்பாவ கிள்ளின? பிச்சுருவேன் பிச்சு…ராஸ்கல்…”
பெரியம்மாவிம் சமாதானம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடினான்.
தன் அப்பாவுடன் வெளியே சென்று விட்டு தனியாக திரும்பிய பெரியப்பா மீது மோதினான்.
“அருண்…ஏன்டா கண்ணா, அழற?”
“ஹ்ம்ம்ம்…ஹ்ம்ம்…அம்மா….அம்மா…அடிச்சுட்டாங்க…” அழுகையினூடே திக்கித் திக்கி சொன்னான்.
“அடிச்சிட்டாங்களா? வா….என்னன்னு போய் கேப்போம்…”
“வேண்டாம்…நான் உள்ள வரல…”
“சரி வா…இந்த ஊஞ்சல்ல உக்காந்துக்குவோம்…” வாசலருகே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு, அவனை தன் மடியில் வைத்துக்கொண்டார் அவன் பெரியப்பா.
“என்னடா அருண் செஞ்ச? அம்மா தான் உன்ன அடிக்கவே மாட்டாங்களே…”
“நான்… நான்…பாப்பாவ கிள்ளி வச்சுட்டேன்…”
“அச்சச்சோ…அப்படி செய்யலாமா? தப்பில்லை? நீ good boy தான?”
“எனக்கு அவள பிடிக்கல…பெரீப்பா… பெரீப்பா…ஹ்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்…நீங்க…அந்த பாப்பாவ உங்க வீட்டுக்கு தூக்குட்டு போய்டறீங்களா?”
“உன் தங்கச்சி டா…”
“எனக்கொன்னும் தங்கச்சி வேணாம்…”
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது அருணு…சாமி உனக்கே உனக்காக தான் அந்த தங்கச்சி பாப்பாவ அனுப்பி இருக்காரு…தெரியுமா?”
“ஒன்னும் இல்ல…”
“ஆமாடா கண்ணா... இப்ப நீ விளையாடுறதுக்காக…பெரியவனானப்புறம் நீ பேசி சிரிக்கறதுக்காக…நீ எங்கள மாதிரி ஆனப்புறம், உனக்கொன்னுன்னா ஓடி வர்ரதுக்காக…வயசாகி, அம்மா அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாரும் செத்தப்புறமும், உனக்கு துணைக்கு தங்கச்சி மட்டும் தான்டா இருக்கும்…”
“உனக்கொன்னு தெரியுமா? பாப்பாக்கு ஒரு ரெண்டு வயசு ஆகுர வரைக்கும் தான் உங்கம்மா பாத்துக்குவாங்க…”
“அதுக்குப்புறம்?”
“நீ தான் பாத்துக்கனும்…சாமி என்ன தெரியுமா பண்ணுவாரு? யாரெல்லாம் குட் பாய், குட் கேர்ள்ன்னு பாத்து, அவங்களுக்கு தான், தங்கச்சி, தம்பி எல்லாம் அனுப்பி வைப்பாரு…நீ குட் பாய், அதான் உனக்கு தங்கச்சி பாப்பாவ அனுப்பி வச்சுருக்காரு…நீ என்னடான்னா எனக்கு வேணாங்கற…”
“நிஜமாவா பெரியப்பா?” ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிந்தது.
“ஆமாடா என் சிங்க குட்டி…நிஜம்மா…”
லேசாக புன்னகைத்துக் கொண்டே, “அப்டீன்னா…எங்க அப்பா, பாப்பா எல்லாம் பேட் பாய்ஸ் தான?” என்று கேட்டான்.
“ஹா ஹா ஹா….அப்படி இல்ல டா…அவங்கெல்லாம் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்காங்க…அதான், தம்பி தங்கச்சியா பிறந்திருக்காங்க…”
“ஹ்ம்ம்…சரி, நான் இனிமே பாப்பாவ கிள்ள மாட்டேன்…”
“கிள்ளாம இருந்தா மட்டும் போதாது, இனிமே அவள ரொம்ப பாசமா பாத்துக்கனும்… அவ தப்பு பண்ணா, திருத்தனும்…நல்லது பண்ணா, பாராட்டனும்…அவள ஜாக்கரதையா பாத்துக்கனும்…ஏன், அவ கல்யாணத்த கூட நீ தான் முன்னாடி நின்னு நடத்தனும்…அவளும் அதே மாதிரி தான் இருப்பா...உன் மேல ரொம்ப பாசமா இருப்பா…யாராவது உன்ன எதாவது சொன்னா, உடனே அவங்ககிட்ட சண்டைக்கு போவா…கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆனாலும், கூட பிறந்தவன்…தாய் மாமன்ன்னு சொல்லி, அவ வீட்ல நடக்குற எந்த விஷேசத்திலையும் உனக்கு தான் முதல் மரியாதை குடுப்பா…”
எதுவுமே புரியாவிட்டாலும், ரொம்ப புரிந்தது போல கேட்டுக் கொண்டிருந்த அருண், “கூட பிறந்தவனா? நான் பொறந்து ஆறு வருஷம் ஆய்டுச்சே…அவ இப்ப தான பொறந்தா?”
“ஹா ஹா ஹா….அப்படி கேளுடா என் சிங்கக் குட்டி…கூட பிறந்தவங்கன்னா, ஒன்னா ஒரே சமயத்தில பிறந்தவங்கன்னு அர்த்தம் இல்ல…வாழ்க்கை முழுக்க கூடி வாழ பிறந்தவங்கன்னு அர்த்தம்…”
பெரியப்பா மடியில் இருந்து எழுந்து உள்ளே ஒடிய அருணிடம் , “அருண்! நான் எடுத்துட்டு போட்டா உங்க பாப்பாவ?” என்று பெரியப்பா கேட்க…
“அஸ்கு…புஸ்கு…ஆசை தோசை அப்பள வடை…அது எங்க பாப்பாவாக்கும்…” என்றபடி வீட்டிற்குள் ஓடி சென்று, தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.
P.S: அக்கா அண்ணா தம்பி தங்கை இல்லாமல் ஒரே குழந்தையா இருக்கறவங்கெல்லாம், “நாங்க மட்டும் என்ன?’ ன்னு கேக்காதீங்க. அப்பா, அம்மா, சொந்த பந்தம், எல்லாருடைய பாசமும் ஒட்டு மொத்தமா கிடைக்கறதுக்கும், ரொம்பவே புண்ணியம் பண்ணி இருக்கனும்.