பாகம் – 6 (சென்னை -> கொடை, கொடை -> சென்னை)
“பாஸ்…கொடைக்காணலுக்கு இன்னிக்கு நைட்டுக்கு ஒரு டிக்கட்”
என்னிடம் சில குறிப்புகளை கேட்டுவிட்டு டிக்கட் பதிவு செய்பவர், “இன்னிக்கு நைட்டு, சென்னை டூ கொடைக்காணல், ஒரு ஜென்ட்ஸ் டிக்கட்., வால்வோ…சரியா?”
“ஆங்…சரி…பண்ணிடுங்க…”
“ரிட்டர்ன்?”
ஒரே ஒரு நொடி தயக்கதிற்கு பின், “ரிட்டர்னுக்கு ரெண்டு டிக்கட் வேணும்…ஒரு டிக்கட் லேடீஸ் சீட் போட்டுடுங்க” திட்டவட்டமாய் ஒலித்தது என் குரல்.
******
கொடைக்காணலில் அன்று மலர் கண்காட்சி. போதாகுறைக்கு நான் சென்ற வழியெங்கும் கொட்டிக் கிடந்தன வண்ணமயமான, வாசமிகு மலர்கள். அந்த மலர்கள் ஒவ்வொன்றிலும் அவள் முகமே தெரிந்தது. ஆனால், சிரித்த முகமாய் இல்லாமல் அழுது வடிந்த முகமாய் தெரிந்து என்னை வாட்டி வதைத்தது. எத்தனை முறை முயன்றும், கடைசியாய் அவளை சந்தித்த பொழுது, அவளது அழுது சிவந்திருந்த முகம் என் அகத்தை விட்டு அகல மறுத்தது. மழைநீரிலேயே நிமிடத்தில் முழுகி விடும் காகித ஓடத்தை கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டால், அதற்கு என்ன கதி நேரிடுமோ, அதே கதி தான் நேர்ந்திருந்தது, அவளது அழுகையையும் ஆற்றாமையையும் அருகிருந்து பார்த்திருந்த என் மனதிற்கு.
காகித ஓடமடி என் மனது!
உன் விழித்திரையில்,
மெலிதாய் பூக்கும் நீர்த்துளிகளிலேயே
தடுமாறி தத்தளித்து போகையில்,
பெருக்கெடுத்து ஓடும்
உன் கண்ணீர் அலைகளில்,
சிக்கிச் சிதைந்து,
கரைந்தழிந்து போகாதோ?
இப்படி பலவாறான யோசனைகள் மனதின் வெளியில் உலவிக் கொண்டிருந்தாலும், நான் புறப்பட்டதிலிருந்தே, மனதின் உட்புற சுவரை அரித்தபடி என்னுடனேயே பயணித்தன சில சங்கடமான கேள்விகளும்! ’அவளை வீட்டில் கொண்டு விட்ட பின்? பிறகென்ன? நன்றி என்று சொல்லி, அந்த மூன்றெழுத்தால், என் மனதிற்குள் வேர்விட்டிருக்கும் மூன்றெழுத்தை அடியோடு அழித்திடுவாளா? எதுவுமே நடக்காததைப் போல் விருந்து உபச்சாரம் செய்து மேலும் அந்நியப் படுத்துவாளா? இல்லை…இல்லை…ஒரு வேளை…நானும் உன்னை தான் நினைத்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி திக்கு முக்காட வைப்பாளா? சடுதியில் மூழ்கிப் போவதற்கு அதிக வாய்ப்புள்ளதென்று தெரிந்தும், நீரினில் காகித ஓடம் விட்டு விளையாடும் சிறுவனைப் போல், மூழ்கினாலும் பரவாயில்லை என்று என்னையே தேற்றத் துவங்கியது என் ஆழ்மனது.
******
இருவரும் தேனீர் கோப்பைகளுடன் அவள் தங்கியிருந்த அறைக்கு பின்புற தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். நான் சங்கீதாவை சென்று சந்தித்தது அவளுக்கு இன்னேரம் தெரிந்து தானிருக்க வேண்டும், நான் அங்கு சென்றது முதல், ’எதற்கு வந்தாய், ஏன் வந்தாய்’ என்று எந்த விதமான விசாரணைகளிலும் அவள் இறங்காமல் இருந்ததே அதற்கு அத்தாட்சி. எனக்கோ பேச்சை எப்படி ஆரம்பிப்பது, எதில் ஆரம்பிப்பது, எதுவுமே விளங்கவில்லை. அவளை ஒரு வருடமாக நன்கு அறிந்திருந்தாலும், அவள் பெற்றோர்களைப் பற்றியோ, அவளது குடும்ப சூழல் பற்றியோ நான் பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில்லை. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கிளம்பி வந்தாயிற்று. எதாவது பேச வேண்டியது தான். ஒரு முறை, ஒரே ஒரு முறை அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால், பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று என் மனது ஓயாமல் கூவிக் கொண்டேயிருந்தது.
நானாக பேச்சை ஆரம்பிப்பேன் என்று காத்திருந்து நொந்து விட்டாளோ என்னவோ அவளாக ஆரம்பித்தாள், “நீங்க எதுக்கு சிரமப்பட்டு இவ்ளோ தூரம்…”
“எனக்கு எந்த சிரமமும் இல்லை மலர். கொடைக்காணல் வர்றதுக்கு யாருக்காவது சிரமமா இருக்குமா? எனக்கு உண்மையான சிரமமே போன தடவை பாத்தப்போ அழுது வடிஞ்ச உங்க முகத்த மனசிலிருந்து அழிக்கறது தான்…”
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். சற்றே பொறுத்து, “சாரி…அன்னிக்கு நான் அப்படி அழுதிருக்க கூடாது தான்…உண்மைய சொல்லனும்னா நான் ஏன் அப்படி அழுதேன்னு எனக்கே தெரியல…நான் ஏன் இங்க வந்து இருக்கேன், ஏன் ஊருக்கு போக மாட்டிங்கறேன்…இப்படி நீங்க எதாவது கேள்வி கேக்கறதா இருந்தா, இப்பயே சொல்லிடறேன்…எனக்கே தெரியல…”
“ஹ்ம்ம்…சரி…இந்த கேள்வியெல்லாம் நான் கேக்க மாட்டேன்…இங்க நீங்க சந்தோஷமா இருக்கற மாதிரி தான் தெரியுது…நான் பாத்தப்ப எல்லாம் நீங்க எப்பயும் போல சாதரணமா தான் இருந்தீங்க…ஆனா, ஏதோ ஒன்னு குறையுது…உங்ககிட்ட ஏதோ ஒரு வெறுமைய உணர்றேன்…”
அவளிடமிருந்து ஒரு பெருமூச்சுடன் கூடிய பதில் வந்தது, “ம்ம்…அதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும்…”
“அதான் எப்போ? அந்த கொஞ்ச நாள் இப்ப முடிஞ்சிருச்சுன்னு நினைக்கறேன்…உங்க வீட்டுக்கு போய் மறுபடியும், நீங்க பழைய மாதிரி எந்த விதமான வெறுமையும் இல்லாம, உண்மையான சந்தோஷத்தோட இருக்க வேண்டிய நாள் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்…”
“எனக்கு தெரியும்…ஆனா…” அதற்கு மேல் தொடர முடியாமல் எழுந்து அருகில் இருந்த செடியின் அருகில் சென்று, அதன் இலைகளை ஒவ்வொன்றாய் செடியிலிருந்து கிள்ளி எறியத் தொடங்கினாள். நானும் எழுந்து அவளெதிரே சென்று நின்றேன். அப்போதும் என்னை பார்ப்பதை விடுத்து அந்த இலைகளிலேயே பார்வையை பதித்திருந்தாள்.
“சரி மலர்… காலம் கடந்து சில விஷயங்கள தெரிஞ்சுகிட்டீங்க…ஓகே…அதுக்காக இப்படி யார்கிட்டையும் அதை பத்தி பேசாம இருக்கறதால என்ன பயன், சொல்லுங்க?”
“நான் தான் சொன்னனே…கொஞ்ச நாள் தான்…நானா சரியாயிடுவேன்…”
“நான் இப்படி கேக்கறனேன்னு தப்பா நினைக்காதீங்க…”
என்ன என்பது போல் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள்.
“உங்க அம்மா மேல எதாவது கோபமா?”
“அம்மா மேலையா? எதுக்கு?”
“இல்ல…வந்து…இப்படி உடனே உங்க அம்மா மறுமணம் செஞ்சுகிட்டாங்களேன்னு எதாவது…”
“ச்சே…ச்சே…” அவள் மறுப்பு வந்த வேகமே, இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று சொல்லாமல் சொல்லியதில் எனக்கு நிரம்ப சந்தோஷமே.
“ம்ம்…அப்ப இவ்ளோ நாளா உங்கள்ட்ட இந்த விஷயத்த சொல்லாம மறச்சுட்டாங்களேன்னு உங்க parents மேல வருத்தமா?”
“ஆமா…முதல்ல கொஞ்சம் கோவம் வந்தது உண்மை தான்…ஆனா…எல்லா கோணத்திலையும் யோசிச்சு தான் என்கிட்ட சொல்ல வேண்டாம்னு இருந்திருப்பாங்கன்னு இப்ப தோணுது…”
“கரெக்ட்டு…சரி, ஒரு வேளை…உங்க…உங்கப்பா…அதாவது உங்க biological father அம்மாவையும் உங்களயும் விட்டுட்டு போய்ட்டாரேன்னு நினைச்சு ஃபீல் பண்றீங்களா?”
விரக்தியான குரலில், “ஹூஹூம்…அதப்பத்தி இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்?” என்றாள்.
“அப்புறம் என்ன தான் மலர் பிரச்சனை?
“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு…எனக்கு…அம்மாவ விட அப்பாவ தான் ரொம்ப பிடிக்கும்…சின்ன வயசில இருந்தே, நான் அப்பா செல்லம்…” இப்படி சொல்லும் போதே, அவள் கன்னத்தில் உருண்டோட ஆயத்தமாகிக் கொண்டிருந்தன அவள் விழியோரத்தில் திரண்டு நின்ற நீர் பந்துக்கள்.
செய்வதறியாது நானும், “ஆமா…” என்றேன்.
“அவரு என்கிட்ட எப்பயுமே அப்பா மாதிரி நடந்துகிட்டதில்லை…ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் இருப்பாரு…ஆனா…இப்ப…இப்ப…” அன்று செய்த அதே கொடிய செயலை மீண்டும் செய்தாள். முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் துவங்கினாள்.
அவள் அழுகை ஒலியை என் குரலால் அடக்க நினைத்தேனோ என்னவோ, ஓங்கிய குரலில், “ஆனா இப்ப என்ன மலர்? இப்ப என்ன? உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னே மறந்துடுங்க…எப்பயும் போல இருங்க...”
என் ஓங்கிய குரலுக்கு கட்டுப்பட்டோ என்னவோ, அவளும் உடனே இமை மீறிய விழிநீரை கைகளால் தடுத்து நிறுத்த முயன்றாள்.
“இத பாருங்க மலர்…இது வரைக்கும் அவரு ரொம்ப நல்ல அப்பான்னு மட்டும் உங்களுக்கு தெரியும்…ஆனா, அவரு எவ்ளோ நல்ல மனிதர்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க இது ஒரு வாய்ப்புனு நினைச்சுக்கோங்க…”
“அத நினைச்சா தான் என்னால தாங்கிக்கவே முடியல சுரேன்…உங்களுக்கே தெரியும்…நம்ம ஊர்ல அப்பா இல்லாம ஒரு பொண்ணு இருந்தா, எவ்வளவு கஷ்டம்னு…நானும், அந்த மாதிரி…அப்படி தான் கஷ்டப்பட்டிருக்கனும்…ஆனா…அந்த மாதிரி எந்த கஷ்டமும் இல்லாம, என்னை ராணி மாதிரி வளத்தாங்க…ஒன்னு தெரியுமா? அப்பா என்னை செல்லமா princess னு தான் கூப்பிடுவாரு…ஒரே பொண்ணு, அதனால அதிமான செல்லம்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் என் மேல ஒரு செல்ல பொறாமை கூட உண்டு…எங்க அப்பா மேல எனக்கு பாசத்த விட பெருமை தான் ரொம்ப அதிகம்…மத்த எல்லார் அப்பாவ விட என் அப்பா தான் பெஸ்ட்!!! அப்டீங்கற மாதிரி…ஆனா இப்ப? அந்த பெருமை எல்லாம் தலைகீழா போய்டுச்சே? அவரு என்னோட நிஜ அப்பா இல்ல…நான் வேற யாரோ பெத்த பொண்ணு…”
“மலர்! ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க?”
“இல்ல சுரேன்…’என்னை பெத்தவர் என்னை விட்டுட்டு போய்ட்டாரு, இப்ப எங்க இருக்காரு, இருக்காரா இல்லையா…இல்லை…எனக்கு இத்தன நாளா இவ்ளோ பெரிய விஷயம் தெரியாமையே இருந்திருக்கு…ஏன் மறச்சாங்க? இல்லை, இப்ப மட்டும் ஏன் இது தெரிஞ்சுது?’ இந்த மாதிரி கேள்வியெல்லாம் கூட எனக்கு ஒரே ஒரு நாள் தான் வருத்தத்த குடுத்துச்சு… ஆனா, நான் உலகம்னு நினைச்சுகிட்டு இருக்க எங்க அப்பா, என்னோட நிஜ அப்பா இல்லை…இப்படிப்பட்ட ஒருத்தருக்கு நான் மகளா பிறக்கலைன்னு நினைச்சா தான்…என்னால தாங்கிக்கவே முடியல…என்னால முடியல…”
“புரியுது மலர்…ஆனா, அதுக்காக இப்ப உங்கப்பாவ நீங்களே இப்படி கஷ்டப்படுத்தறீங்களே! அது சரியா? நீங்களே சொல்லுங்க!”
“எனக்கு பயமா இருக்கு…அவங்கள பாக்கவே பயமா இருக்கு…எங்க அவர பாத்தா, கட்டுபடுத்த முடியாம ’ஓ’ன்னு அழுதுடுவனோன்னு பயமா இருக்கு….”
அந்த நிலையில் அவளை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியாமல், “மலர்…இந்த விஷயம் இவ்ளோ நாள் கழிச்சு இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாம் தான்…ஆனா இது கூட நீங்க உங்க அப்பாவ பத்தி புரிஞ்சிக்கறதுக்கு கிடைச்ச சந்தர்ப்பமா நினைச்சுக்கோங்க….வேற யாரையும் விட உங்க அப்பா எவ்ளோ பெஸ்ட்ன்னு நினைச்சு பெருமை படுங்க…”
“அதையெல்லாம் நினைச்சா தான் எனக்கு இன்னும் வேதனை அதிகமாகுது சுரேன்…அவர பத்தி நினைக்கற ஒவ்வொரு நிமிஷமும், அவரு என் நிஜ அப்பா இல்லை, நிஜ அப்பா இல்லன்னு கூடவே ஒரு நினைப்பும் சேந்து வந்து என்னை வாட்டி எடுக்குது…எனக்கு எதுவுமே பிடிக்கல…எங்கயாவது எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே ஓடிப் போய்டலாம் போல இருக்கு…”
“போதும் மலர்!!! எத்தன தடவை தான் நிஜ அப்பா இல்லை, நிஜ அப்பா இல்லைன்னு சொல்லுவீங்க? உங்கள பெத்த அப்பா இல்லைங்கறனால அவரு உங்க நிஜ அப்பா இல்லைன்னு ஆயிடுமா?”
“ஹ்ம்ம்…இப்படியெல்லாம் சொல்லி மனச தேத்திக்க முயற்சி வேணா பண்ணலாம்…ஆனா, உண்மைன்னு ஒன்னு இருக்கே?”
“எத உண்மையில்லைங்கறீங்க? நான் சொல்றது வெறும் தேறுதல் வார்த்தை இல்லை மலர்…உண்மை!!! நூத்துக்கு நூறு சதம் உண்மை…அப்பான்னா யாருங்க? ஒரு குழந்தை உருவாகறதுக்கு காரணமா இருந்தா மட்டும் ஒருத்தர் அப்பா ஆயிட முடியாது… தன் மனைவியையும், அவ வயித்துல இருக்கற குழந்தையையும் கண்ணுக்கு கண்ணா கவனிச்சு, குழந்தை எப்படா பிறக்கும்னு ஆசையோடும், கனவோடும் காத்திருந்து, அதுக்கு நல்லது கெட்டது எல்லாம் பாத்து, கடைசி வரைக்கும் அவங்க பெத்த பிள்ளைகளுக்காகவே வாழ்றவங்க தான் உண்மையான அப்பா…இதுல ஒன்னாவது உங்க அப்பா செய்யாம இருந்தாரா? அப்புறம் எப்படி அவரை உங்க நிஜ அப்பா இல்லைன்னு சொல்றீங்க?”
“இதெல்லாம் எனக்கு புரியுது சுரேன்…ஆனா…”
“என்ன ஆனா? ஒரு குழந்தை பிறக்கும் போது தான் அப்பா, அம்மாவும் பிறக்கறாங்க….அதுவரைக்கும் சாதாரணா ஆண், பெண்ணா இருக்கறவங்க குழந்தைன்னு ஒன்னு அவங்க வாழ்க்கைல வந்த பிறகு தான் அப்பா, அம்மாவா மார்றாங்க…அப்பாங்கறது வெறும் ரத்த சம்பந்த்துல வர உறவு மட்டும் இல்ல….அது ஒரு உணர்வு…பிறந்து கண்ணு கூட முழிக்காத பச்சை குழந்தைய ஒரு ஆண் முதன் முதலா அவன் கையில வாங்கும் போது, அந்த குழந்தையோட முதல் ஸ்பரசத்துல அவனுக்குள்ள வருதே, ஒரு வித சிலிர்ப்பு, உலகமே கைக்குள்ள வந்துட்டா மாதிரி ஒரு ஆனந்தம், திடீர்ன்னு வந்து ஒட்டிக்கற பொறுப்பு, இந்த மாதிரி பலவித உணர்வுகளும் சேரும் போது தான் ஒரு ஆணுக்குள்ள ஒரு அப்பா பிறக்கிறான்…அப்படி பாத்தா, உங்க அப்பா உங்க பாஷையில சொல்லனும்னா, உங்களோட நிஜ அப்பா தான்…நீங்க வருத்தப் படறதுல எந்த அர்த்தமும் இல்லை மலர்…”
அவள் எதுவும் பேசாமல் அர்த்தத்துடன் என்னை உற்றுப் பார்த்தாள்.
“சந்தோஷப் படறதுக்கு தான் பல விஷயங்கள் இருக்கு மலர்...அன்பான குடும்பம், ஒரே செல்ல பொண்ணு, நல்ல படிப்பு, வேலை, எல்லாத்துக்கும் மேல நீங்க சொன்ன மாதிரி உலகத்திலேயே பெஸ்ட் அப்பா… ஆனா, இதெயெல்லாம் விட்டுட்டு இப்படி தனியா…ஏன்? ஏன் மலர்?”
“உங்க வீட்ல ஒரு ஃபோட்டோ இருக்கே…உங்க அப்பா நீங்க சின்ன குழந்தையா இருக்கும் போது உங்கள கையில வச்சுகிட்டு இருக்கற மாதிரி…”
“ஹ்ம்ம்…ஆமா…” முதன்முறையாக சற்றே புன்னகைத்தாள்.
“அது எவ்ளோ அழகா…க்யூட்டா இருக்கு? அதுக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க? உங்க அப்பா முகத்துல இருக்கற சந்தோஷமும், பெருமிதமும் தான்…தயவு செய்து இனி ஒரு தடவை அவர உங்க நிஜ அப்பா இல்லைன்னு சொல்லாதீங்க…சொல்றது என்ன? மனசுல கூட நினைக்காதீங்க…”
கண்கள் பனிக்க, “இல்லை…இனி அப்படி நினைக்க கூட மாட்டேன்…இனிமே அப்படி சொல்ல மாட்டேன்…கண்டிப்பா மாட்டேன்…” கண்களை மூடிக் கொண்டு, “சாரி பா…I m sorry” என்றாள்.
அதன் பின் சிறிது நேரம் மெளன நிலையிலேயே கழிந்தது. ஒரு திடமான முடிவுக்கு வந்தவளாய், இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, “எனக்கு…எனக்கு இப்பயே எங்கப்பாவ பாக்கனும் போல இருக்கு சுரேன்…”
“ஹ்ம்ம்…அப்படி வாங்க வழிக்கு…இது தான் நல்ல பொண்ணுக்கு அழகு!!! தனியா இருக்கறத விட, அதோட செடியிலையே இருந்தா தான், மலருக்கு அழகு…அப்படி இருக்கற மலர பாத்தா தான் யாருக்குமே சந்தோஷமா இருக்கும்…” என்று சொல்லி நான் சிரிக்க, என்னுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.
******
அன்றிரவே இருவரும் சென்னைக்கு பயணமானோம். முதல் நாளிரவு போலின்றி, எந்த வித குழப்பமும் கேள்விகளும் இல்லாமல் ஒரு வித நிறைவோடு இருந்த மனது, என்னை இம்சை பண்ணாமல் நிம்மதியாக தூங்க அனுமதித்திருந்ததில், மறுநாள் அதிக புத்தணர்ச்சியோடு சென்னையை அடைவதற்கு சற்று முன்பே விழித்தும் விட்டேன். நான் வலது வரிசை இருக்கையில் அமர்ந்திருக்க, எனது இருக்கைக்கு பக்கவாட்டில் இருந்த இடது வரிசை இருக்கையிலேயே மலரும் அமர்ந்திருந்தாள். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவளை என்னையும் அறியாமல் நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று திடுக்கிட்டு எழுந்தாள். திரு திருவென விழித்தபடி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, என்னை பார்த்ததும் அவள் முகத்தில் இருந்த குழப்பம் அதிகமானது.
“என்ன ஆச்சு மலர்?”
“ஹாங்….ஒன்னுமில்லை…” தட்டுதடுமாறி பதிலளித்துவிட்டு, மெலிதாக புன்னகைத்தபடியே கண்களை மூடிக் கொண்டு மீண்டும் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் தொடங்கினாள், ஆனால் முகத்தில் இருந்த அந்த மெல்லிய சிரிப்பு மட்டும் மறையவே இல்லை.
“ஹப்பா…இந்த பெண்கள்…” இதற்கு மேல் எனக்கு எதுவும் தோன்றவில்லை. என்ன தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர்களை படைத்த பிரம்மனே வந்தாலும் கண்டுபிடிப்பானா என்று சந்தேகம் தான்!
பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் மலர் வீட்டுக்கு செல்லும் வழியில் கூவம் ஆற்றை கடந்து சென்ற போது, அன்று ஏனோ வழக்கம் போல் முகத்தை சுளித்தேன்.
மலர் சொன்னதை போல், உலகத்திலேயே சிறந்த அப்பா என்று மீண்டுமொருமுறை நீரூபித்தார் அந்த அன்புத் தந்தை. என்னையும் மலரையும் அன்று சற்றும் எதிர்பார்க்காததால், முதலில் அதிர்ச்சியாகி, பின்பு நீண்ட நாள் கழித்து மகள் திடீரென்று வீட்டுக்கு வந்ததில் ஆனந்தத்தில் திக்குமுக்காடி, அதன் பிறகு அவளிடம் ’என்ன பிரச்சனை, ஏன் இது நாள் வரை இப்படி இருந்தாய்’ என்று கவலையோடு வினவ ஆரம்பித்து, இப்படி பல்வேறு உணர்ச்சிகளின் முகங்களை ஒரு சில நிமிடங்களிலேயே கொட்டி விட்டார் அவள் அம்மா. ஆனால், மலர் அப்பா மட்டும், மலரை பார்த்தவுடன் அவர் கண்கள் பனித்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவளது தோளை ஆதரவாய் பற்றி உள்ளே நடத்தி அமரச் செய்து, வாஞ்சையுடன் அவள் தலைகோதி, அவளிடன் எந்த ஒரு கேள்வியும் கேட்கும் எண்ணம் கூட இல்லாமல், அன்பான பார்வை ஒன்றை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய அம்மா அவளை கேள்விகளால் துழைத்தெடுக்கவும் இடம் கொடுக்காமல், “ராஜி! அவளே இப்ப தான் வந்திருக்கா…இப்பயே அத்தனையும் கேக்கனுமா? அவளா சொல்லும் போது சொல்லுவா…கொஞ்ச நேரம் சும்மா விட அவள…” என்று மனைவியையும் அடக்கினார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை அப்போது தான் கவனித்தவர், “சுரேன்!” என்றபடி என் கைகளை குலுக்கினார்.
“சாரி…மலர பாத்த சந்தோஷத்துல உங்கள மறந்துட்டோம்….”
“அதனால என்ன அங்கிள்…” என்று லேசாய் முறுவலித்தேன். பற்றியிருந்த என் கைகளை மேலும் இறுக்கி, “உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தைல சொல்ல முடியாது சுரேன்!” அவர் குரலில் இருந்த நெகிழ்வு, என்னை ஏதோ செய்தது. அது வரை என்னை விட வயதில் பெரியவர் யாரும் என்னிடம் இப்படி நன்றி சொல்லிய அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை. உடலெங்கும் ஒரு வித சிலிர்ப்பு பரவியதை உணர்ந்தேன், ஏதோ பதில் சொல்ல யத்தனித்தும், வார்த்தைகள் என்னுள்ளே அடங்கிப் போயின…அவரை பார்த்து லேசாக புன்னகைத்தேன்.
இத்தனை நேரத்திற்கு பின்னும் மலர் அம்மா, இயல்பு நிலைக்கு திரும்புவதாய் இல்லை. அவளருகிலேயே அவளை பாதி அணைத்த வண்ணம் அமர்ந்திருந்தார். மலரும் எதுவும் பேசத் தோன்றாமல், அம்மாவின் பிடியிலிருந்து விலக விருப்பமில்லாதவளை போல் அமர்ந்திருந்தாள்.
“பேசாம நீ அந்த வேலையை விட்டுட்டு சென்னைலையே எதாவது வேலை வாங்கிட்டு வந்துருமா…என் தங்கமில்லை…” அவள் கன்னத்தை வருடியபடி அவள் அன்னை இப்படி சொல்லவும், மலர் பதிலேதும் பேசவில்லை.
உடனே அவள் அப்பாவும், “அம்மா சொல்றது தான் சரி…இனி கொடைக்காணல் எல்லாம் வேண்டாம்…நீ இங்கயே வந்துடு…”
ஒரு கணம் தயங்கியவள் பேசுவதற்கு முன், என்னை பார்த்தது போலத் தான் தோன்றியது.
“இல்லம்மா…நான்…நான்…பெங்களூர்லையே வேலை தேடிக்கறேன்” என்றபடி ஒரு நொடி, ஒரே ஒரு நொடி…நேருக்கு நேராக என் கண்களை பார்த்தாள். எங்கள் கண்கள் நான்கும் சங்கமித்த அந்த ஒரு வினாடியில், அன்று தூரத்தில் தெரிந்த தொடுவானம், உண்மையில் இன்று தொடுதூரத்தில் இருப்பதை போல உணர்ந்தேன்.
மனதிலும், கண்களிலும் பொங்கி வழிந்த ஆனந்தம் குரலில் தெறிக்க, “இல்ல…நானே சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று குறும்பு நகையோடு நான் சொல்ல, அவள் என்னை பார்த்து பூத்த வெட்க மொழி பேசும் புன்னகையில், இம்முறையும் அவளது பற்களுக்கும் உதடுகளுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் வென்றது அவள் உதடுகள் தான். ஆனால், அன்று போல் அந்த யுத்தத்தில் சரணாகதி அடையாமல், அக்கணமே அவளை முழுவதுமாய் வெல்லத் துடித்த என் பார்வையை சந்திக்க இயலாமல், மெல்ல மெல்ல ஆரம்பமானது அவளது கருவிழிச் சந்திரனின் தேய்பிறை. இமைப்போர்வைக்குள் சிறைப்பட்டது அவளது கண்மணிகள் மட்டுமல்ல, என் இதயமும் தான்! எங்கள் தொடுவானத்தை அந்திவானமாய் மாற்றியது எங்கிருந்தோ அவள் கன்னங்களில் வந்து ஒட்டிக் கொண்ட வெட்க சாயம்.
[சுபம்]
ச்சும்மா…இன்னும் கொஞ்சம், கடைசியா சேத்தது:
“ஏய்…அன்னிக்கு பஸ்ல ஏன் திடீர்ன்னு தூக்கத்தில இருந்து எந்திருச்சு திரு திருன்னு முழிச்ச?”
“என்னிக்கு?”
“தெரியாத மாதிரி கேக்காத…சுத்தி, முத்தி பாத்துட்டு, என்னை பாத்ததும் சிரிச்சிகிட்டே மறுபடியும் தூங்கற மாதிரி நடிச்சியே?”
“ஓ…நீ அத பாத்துட்டியா?”
“பின்ன? நீங்கெல்லாம் எவ்ளோ பெரிய டக்காய்ல்டியா இருந்தாலும், எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா? சொல்லு…சொல்லு…என்ன நினைச்ச? என்னை தான நினைச்ச?”
“ஹ்ம்ம்…” மீண்டும் வழக்கம் போல் நான் தலை குப்புற கவிழும் அதே சிரிப்பை உதிர்த்தாள்.
“சிரிச்சு மழுப்பாத, என்ன நினைச்சன்னு சொல்லு….”
கனவுகளில் தொலைந்து விட்ட
உன் ஒற்றை முத்தத்தை
தேடியபடி தான் விடிகிறது
என் ஒவ்வோர் இரவும்!
மீண்டும் விழிமூடி காத்திருக்கிறேன்,
நீ இதழ் தொட்டு எழுப்புவதற்காக….
என் கண்களை உற்று நோக்கி, “இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட காத்திருக்க முடியாது…” என்றாள்!
[இன்னும் முடியல, பின்குறிப்ப படிங்க]
பின்குறிப்பு:
1. எதுக்கு முதல் பகுதியில இருந்து கதாநாயகன் போற ஊரையெல்லாம் போட்டேன்னு பாத்தீங்களா? இதனால இந்த பதினெட்டு பட்டிக்கும் சொல்றது என்னன்னா, “இப்படி வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு ஊரூரா சுத்தறவங்களுக்கு தான் காதல் சக்ஸஸ் ஆகும்!!! இதுக்கெல்லாம் அஞ்சறவங்களா இருந்தா அந்த பக்கமே தலை வச்சு படுக்காதீங்க…உங்களுக்கெல்லாம் நம்ம குணால், மோனல் நடிச்ச படம் தான்…’பார்வை ஒன்றே போதுமே!’ ”
2. மறக்காமல் முதல் இரண்டு பின்னூட்டங்களை படிக்கவும். இல்லையென்றால், வினோத் @ பாப்பா மிகவும் கோபித்துக் கொள்வார் :)
[சரி, இப்ப கமெண்ட்டுக்கு போங்க]