பேண்ட், சட்டைன்னு எப்ப பாரும் வெளிநாட்ல பொறந்தவ கணக்கா சுத்திகிட்டு இருந்த ஐஷ்வர்யாவா இது?
அன்னிக்கு வெகு அமக்களமா புடவை கட்டிட்டு வந்திருந்தா. புடவையே ஒரு சருகு மாதிரி தாமரப் பூ கலர்ல இருந்துச்சு. அத பாத்துட்டு சூர்யாவுக்கு, ரட்டு துணி மாதிரி இருந்த அவ தாவணிய தொட்டு பாக்கவே புடிக்கல.
புடவை கலர் பிரதிபலிச்சதாலையோ, இல்ல பிறப்பிலேயே வந்த நிறத்தினாலையோ, இல்ல ஊர் முழுக்க கிடைக்குதே, கண்ட க்ரீமும், எதனாலையோ சும்மா தக தக ன்னு ஜொலிச்சுகிட்டு இருந்த ஐஷ்வர்யாவ, சூர்யா வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே நின்னுகிட்டு இருந்தா.
’இவ எப்படி திடீர்ன்னு இவ்ளோ ஒசரமானா? போன தடவ பாத்தப்போ குட்டையாத் தான இருந்தா?’ சூர்யா இப்படி நினைக்கும் போதே, ஸ்டூல் மாதிரி இருந்த செப்பல கலட்டி விட்டா ஐஷ்யர்யா.
அவ செருப்ப பாத்து, சூர்யா தேன்மொழி ரெண்டு பேருமே வாய திறந்துட்டாங்க. திறந்த வாய் திறந்தபடியே சூர்யா நிக்க, தேன்மொழி மட்டும், “ஐசு!!! இவ்ளோஓஓ பெரிய ஹீல்ஸா? கால் வலிக்காது?” ன்னு கேட்டே போட்டா.
“ஜாஸ்தி நடந்தா தான தேன் வலிக்கும், நான் எங்க நடக்கறேன்…ஹேய் சூர்யா! இப்ப தான் பாக்கறேன், என்ன இவ்ளோ அமைதியா நின்னுட்டு இருக்க? ஹவ் ஆர் யூ?”
“நான் நல்லா இருக்கேங்கே! நீங்க எப்படி இருக்கீங்க?”
“ஹேய்!என்னை வாங்க போங்கன்னு கூப்ட்டு அக்கா ஆக்கிடாத” ஐஷ்வர்யா இத சொல்லிட்டு, ஏதோ உலகத்துலையே பெரிய ஜோக் சொல்லிட்ட மாதிரி, அவளே சத்தமா சிரிச்சுகிட்டா. அப்ப தான் வெளிய வந்த கதிர்வேல பாத்து, அந்த சிரிப்பெல்லாம் கானாம போய், ஒரு வசீகர புன்னகையா மறுபடியும் தல காட்டுச்சு, “ஹேய் கதிர்!!!”
“வா ஐஷ்வர்யா…வாங்க மாமா...”
“என்னப்பா கதிர்! எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் மாமா…மத்யானமே வர்றதா சொன்னீங்களே!”
“எங்கப்பா? ஒரே வேலை!!! கடைசி நேரத்துல ஒரு மீட்டிங் வேற…”
அவர மேல பேச விடாம ஐஷ்வர்யா, “டாடி! உங்க ஃபேட்டரி புராணத்த இங்கயும் ஆரம்பிச்சுடாதீங்க ப்ளீஸ்ஸ்” ன்னு சொல்லவும், அவரும் சிரிச்சுகிட்டே, “ஓகே! ஓகே…ஆல்ரைட்! என்ன கதிர்! M.Sc., அக்ரி முடிச்சு ரெண்டு வருஷம் ஆயிடுச்சு, மேல என்ன பண்ணப் போறதா உத்தேசம்?”
“வேறென்ன மாமா? விவசாயம் தான்” பளிச்சுன்னு வந்தது கதிர்வேலோட பதில்.
“வெரி குட்!!!”
ஐஷ்வர்யா, “என்னப்பா வெரி குட்? கதிர்! நீ பேசாம ரிசர்ச் பண்ணிட்டு, அப்ராட் போலாமே? எதுக்கு இந்த பட்டிகாட்ல உக்காந்து வேஸ்ட் பண்ற?”
கதிர் எதுவும் பேசாம ஒரு அர்த்தப் புன்னகையோட இருக்கவும், அவனோட மாமாவே, “என்னமா இப்படி சொல்லிட்ட? எல்லாரும் அப்ராட் போய்ட்டா இங்க விவசாயம் பண்ண யாரு இருக்கா? அதுவும், விவசாயத்த பத்தி அனுபவ அறிவு, படிப்பறிவு ரெண்டுமே இருக்கற கதிர் மாதிரி ஆட்கள, விரல் விட்டு எண்ணிடலாம் நம்ம நாட்ல…கதிர் எங்கயோ போக போறான் பாரு”
“கதிர் போறது இருக்கட்டும், மொதல்ல நீங்க உள்ளார வாங்க மச்சான்!” ராமசாமி ஐயா அப்ப தான் தோட்டத்துல இருந்து வந்தாரு.
ராமசாமி ஐயா! ஊரே அவ இப்படி தான் மரியாதையா கூப்பிடும். பாக்கறதுக்கு ரொம்பவே கரடு முரடா இருந்தாலும், பழகறதுக்கு ரொம்பவே தங்கமான மனுஷன். எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனா என்ன ஒன்னு! அவரோட நிலம் நீச்சுக்கு எதாவது வந்துட்டா சும்மா விட மாட்டாரு மனுசன்! அவங்க ஆத்தா, அப்பன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துங்கறதுனால, அப்படி ஒரு வெறியே என்னமோ! அவரு தோட்டம் காடு சம்பந்தமா எதாவது பிரச்சனைன்னா, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு தான். சொந்த பந்தம்ன்னு கூட பாக்க மாட்டாரு! உசுருக்கு உசுரான செவந்திய வாரி குடுத்ததே, இந்த நிலத்தகராறுல தான?
எல்லாரும் கலகலப்பா பேசி சிரிச்சுகிட்டு இருந்தாலும், சூர்யாவால மட்டும் ஐஷ்யர்யாவ ’பே’ன்னு பாக்காம இருக்க முடியல.
’எவ்ளோ அழகா புடவ கட்டி இருக்கா! புடவ தலப்ப மடிக்காம அப்படியே ஒத்தையா போட்டு, அத ஒரு விதமா ஸ்டைலா வேற புடிச்சுகிட்டு இருக்கா? கை வலிக்கவே வலிக்காதோ? நிமுசத்துக்கு ஒருக்கா தல முடிய கோதி, கோதி விட்டுக்கறாளே! ஒரு வேளை இதுக்குன்னே தலமுடிய விரிச்சு போட்டுருப்பாளோ? ச்சே, நாமளும் தான் இருக்கமே, இன்னும் ஸ்கூல் புள்ளையாட்டம் ரெட்டை ஜடை போட்டுகிட்டு…என்னாமா இங்கிளீஸு பேசுறா? மாமா நம்மள பாத்து சிரிச்சதுல தப்பே இல்ல…ஹ்ம்ம்’ சூர்யாவால பெருமூச்சு மட்டும் தான் விட முடிஞ்சுது.
சித்த நேரத்துக்கெல்லாம், உள்ளூர்ல இருக்க சொந்த பந்தமும் வந்து சேந்துட்டாங்க. எல்லாரும் கிளம்பறதுக்கு ரெடி தான், இத்தன சனம் வந்தும், ராமசாமி ஐயாவோட ஒரே தங்கச்சி, அவ வீட்ல இருந்து சூர்யாவ தவிர வேற யாரையும் கானோம்!
ராமசாமி ஐயா, “சூர்யா கண்ணு! உங்கப்பன் எங்க? வரேன்னு சொன்னானா, இல்ல எப்பயும் போல முறுங்க மரத்துல ஏறி உக்காந்துட்டானா?”
“இல்லீங்க மாமா, அப்பா நேரா கோயிலுக்கே வந்தர்ரேன்னு சொல்லிட்டாருங்க…”
“சரி சரி! எப்படியோ! வந்தா சரி தான்! அப்ப எல்லாரும் கிளம்புவமா? இப்ப புறப்பட்டா தான், கோழி கூப்படறதுக்குள்ள கோயிலு போய்ச்சேர முடியும், எல்லாரும் வந்து வண்டில ஏறுங்க…”
அப்ப தான் ஐஷ்யர்யா அந்த லாரியவே பாத்தா.
“என்ன கதிர் இது? இதுலயா போக போறோம்?”
“ஆமா…”
“You mean…that lorry??? How ridiculous!!! I can’t come in that…No way!!!”
“அப்புறம் இத்தன பேரு எப்படி போறது? வா, வந்து சீக்கரம் ஏறு, லேட் ஆய்டிச்சு”
“hey! Wait wait…I am not coming in that, நான் கார்லையே வரேன்…”
“அங்க பாரு, காரும் ஃபுல் தான், லாரில ஏற முடியாதவங்க எல்லாம் கார்ல தான்…” கதிர் சிரிச்சுகிட்டே சொல்லவும்,
“Oh man!!!”
“ஹ்ம்ம்…வா…வா…”
“ஹே கதிர், இரு, இரு, உன் பைக் எடு…அதுல போலாம்…”
“என்னது பைக்கா? மூணு மணி நேரத்துக்கு மேல ஆகும், 3 hours எப்படி பைல போறது?”
“ஓஹ்…come on கதிர்!!! இந்த லாரிக்கு பைக்கே better…Lets go….”
பைக் புறப்படற சத்தம் கேக்கவும், காருக்குள்ள இருந்த செல்லாத்தா, “பாத்து, பதனமா ஓட்டு தம்பி…” ன்னு கத்தினாங்க.
எல்லாத்துக்கும் முன்னாடி மொத ஆளா ஓடிப் போய், லாரிகுள்ள இருந்த ஸ்டெப்புனி டயர் மேல உக்கார இடம் பிடிச்ச சூர்யா, செல்லாத்தா சத்தத்த கேட்டு தான், அவங்க ரெண்டு பேரையும் பாத்தா. அவங்க ரெண்டு பேரும் சேந்து பைக்ல போறத பாத்த அவ மனசுல, என்னன்னு சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி, ஆக மொத்தத்துல அவ வயித்துல நல்லா புளிய கரைச்சுது.
***
உன் தோள் பற்றி என் உள்ளங்கை கனிந்திருக்க,
உன் முதுகோடு என் கன்னம் கதை பேச,
என் ஈரக் கூந்தல் காற்றில அலைபாய,
அதற்கு போட்டியாய் என் மனமும் அலைபாய,
உன்னை விட்டு விலக எச்சரித்த வெட்கம் அகல,
நம்மிடையே புக முடியாத காற்றைப் பார்த்து சிரித்தபடி,
உன்னோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்க,
அனுதினமும் நான் ஏங்கும் ஏக்கம்,
உன் வண்டிக்கு கூட தெரிந்திருக்கிறது
அதில் தினமும் பயணிக்கும் உனக்கு இன்னுமா புரியவில்லை?
***
லாரி பயணத்துக்கு நடுவுல, அப்ப அப்ப அவங்கள கடந்த போன, கதிரையும் ஐஷ்யர்யாவையும் பாத்து பாத்து சூர்யா பொறுமி முடிக்கறதுக்குள்ள, கோவிலே வந்து சேந்துடுச்சு!
நாலு மணிக்கெல்லாம் கோவில் போய் சேந்துட்டாலும், அங்க பூசாரியை காணோம்.
கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்த ராமசாமி, “டேய் முருகா!!! அந்த பூசாரிய எங்கடா கானோம்? போய் ஒரு நட பாத்துப் போட்டு வந்து போடு…இன்னும் ஊட்டுக்குள்ளாற படுத்து தூங்கிட்டிருக்கறானாட்ட இருக்குது!!!”
அதுக்குள்ள பூசாரியே அங்க வரவும் பூஜைய ஆரம்பிச்சிட்டாங்க. செல்லாத்தா பொங்க வைக்கறதுக்குள்ள நல்லா பளபளன்னு விடிஞ்சும் ஆச்சு.
பூசாரி, “ஐயா! பொங்க நல்ல படியா பொங்கிடுச்சு! இனி கானிக்கைய குடுத்தர்லாங்களா?”
ராமசாமி, “ஆகட்டும் சாமி! உத்தரவு கேட்ருங்க!!!”
உடனே பூசாரி, “ஆத்தா! உத்தரவு கொடு ஆத்தா” ன்னு சத்தமா கத்தினாரு. தமிழ் நாட்லயே பிறந்து வளந்திருந்தாலும், தமிழ் தெரியாத அந்த ஆடு பூசாரி சொன்னதோட அர்த்தம் புரியாம, ’மே’ ன்னு கூட கத்தாம ’தேமே’ன்னு நின்னிட்டு இருந்துச்சு!
பூசாரி திடீர்னு ஒரு சொம்புல தண்ணிய எடுத்து, ஆட்டு மேல தெளிச்சாரு…
ஏற்கனவே விடியக்காலை குளிரு, அதுல பச்சை தண்ணி வேற மேல பட்டதால ஆடு வேகமா தலைய ஒரு சிலுப்பு சிலுப்புச்சு. உடனே பூசாரி, பயபக்தியோட அரிவாள ஓங்கி “ச்சக்க்க்க்…” ன்னு ஒரே வெட்டு! அவ்ளோ தான்!!!
ஆனா, ஆட்டோட்ட ’மே’ ங்கற ஒரு குரலோட, கூடவே ’அம்மாஆஆ’ ன்னு இன்னொரு குரலும் கேட்டுச்சு!
பாதி கண்ண மூடிட்டு, பாதி கண்ணால மட்டும் அங்க நடக்கறத கவனிச்சுகிட்டு இருந்த ஐஷ்யர்யா, எதிர் பாரா விதமா ஆட்டோட தலை பறந்து வந்து அவ கால் கிட்ட விழுந்ததும், கொஞ்சம் ஆடித் தான் போய்ட்டா. அப்படியே தடுமாறி பக்கத்துல நின்னுகிட்டு இருந்த கதிர் மேல சாஞ்சுகிட்டா!
சின்ன புள்ளைல இருந்து பாத்து பழகினதாலையோ என்னமோ, இதெல்லாம் சூர்யாவுக்கும், தேனுக்கும் கொஞ்சம் கூட பயமில்லை. ஆனா ஐஷ்வர்யா இப்படி கத்தினதும் அவள வித்யாசமா பாத்துட்டு நின்னாங்க. இதுல, மயக்கமே வந்துட்ட மாதிரி அவ ஆக்ட் குடுத்ததும், போதாக்குறைக்கு கதிர் மேல வேற சாஞ்சிகிட்டதும், சூர்யாவுக்கு மட்டும் இல்ல, தேனுக்கும் கூட பிடிக்கல.
கெடா வெட்டி முடிச்சு, அங்கயே அடுப்பு கூட்டி, சமையலும் முடிச்சு பந்திய ஆரம்பிச்சாங்க. மொத பந்தில ஐஷ்யர்யாவ தவிர, பொம்பளைங்க யாரும் உக்காரல. கடைசி பந்தில செல்லாத்தா, சூர்யா, தேன்மொழி இவங்கெல்லாம் உக்காந்து சாப்பிடற வரைக்கும், ரொம்ப கலகலப்பா இருந்த சூழல், ஒரே நிமிசத்துல இறுக்கமா மாறி போச்சு. அதுக்கு காரணம், ஆர்ப்பாட்டமா அங்க வந்து சேந்த பூபதி , சூர்யாவோட அப்பா!
[தொடரும்]