கற்பனைச் சுமைகள் – 1
சில்லென்ற ஓர் மழைநாளில்,
உன் கையோடு கை கோர்த்து நடந்த
அந்த மாலை பொழுதின் நினைவுகள்…
உன் சட்டையில் முகம் புதைத்து,
ஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட
அந்த ஈரமான நிமிடங்கள்…
காதலோடு கலந்திட்ட உன் மூச்சுக்காற்று என் மேல் மோத,
என்னையே நான் மறந்த
அந்த ரம்யமான நொடிகள்…
நான் விலகி ஓட,
நீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த,
என் கண்ணாடி வளைத் துண்டுகள்…
இப்படி ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும்,
உன்னோடு சேர்த்து சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்…
உன்னை நினைவில் சுமந்த நாள் முதலாய்…
கற்பனைச் சுமைகள் – 2
உன் தோள் பற்றி என் உள்ளங்கை கனிந்திருக்க,
உன் முதுகோடு என் கன்னம் கதை பேச,
என் ஈரக் கூந்தல் காற்றில அலைபாய,
அதற்கு போட்டியாய் என் மனமும் அலைபாய,
உன்னை விட்டு விலக எச்சரித்த வெட்கம் அகல,
நம்மிடையே புக முடியாத காற்றைப் பார்த்து சிரித்தபடி,
உன்னோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்க,
அனுதினமும் நான் ஏங்கும் ஏக்கம்,
உன் வண்டிக்கு கூட தெரிந்திருக்கிறது
அதில் தினமும் பயணிக்கும் உனக்கு இன்னுமா புரியவில்லை?
கற்பனைச் சுமைகள் – 3
ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…
கற்பனைச் சுமைகள் – 4
நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்,
உன்னை வழியனுப்பிய பிறகும்
வீட்டினுள் செல்ல மனமின்றி,
இந்த தெருவில் பதிந்த உன் கால் தடங்களில்
என் பார்வை தேங்கி நிற்பது போலவும்,
மாலை, உன் வரவுகாக
வீட்டு வாயிலருகே காத்து நின்று,
இந்த தெருவில் ஏக்கப் பார்வைகள்
பதிப்பது போலவும்,
இந்த தெருவை அடைத்து
நான் போடும் கோலத்தை ரசிப்பதாய் சாக்கிட்டு,
காலைப் பணியோடு சேர்த்து,
என்னை நீ ரசிப்பது போலவும்,
இப்படி ஆயிரமாயிரம் கற்பனைகள்,
ஒவ்வொரு முறை
உன் வீட்டுத் தெருவை கடக்கும் போதும்
என்னுள் தோன்றி மறைகிறதே…
என் வீட்டுத் தெருவை
கடக்கும் போது,
ஒரே ஒரு முறையேனும்
என் நினைவாவது
உன்னுள் மலர்கிறதா?
கற்பனைச் சுமைகள் – 5
நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற
என் நெஞ்சத்து தகிப்பெல்லாம்
வெட்கத் தவிப்பாய் உருமாறி,
என்னை ஆட்கொண்டு,
நான் தலை தாழ்த்திக் கொண்ட
அந்த வேளையில்…
மென்மையாய் என் முகம் நிமிர்த்தி
பொங்கி வழியும் என் வெட்கத்தை
உன் கண்களால் நீ பருக
வேண்டுமென்ற குறுகுறுப்பு,
எனக்கு மட்டும் தானா?
உனக்கில்லையா?