Tuesday, February 24, 2009

சூர்யகாந்தி - 6

கடைசியா ஒரு முன்குறிப்பு!
மொத்தம் ஏழு பகுதின்னு வழக்கம் போல தப்பான கணக்கு சொல்லிட்டேன். ஆறு தான்.
இது வரை படிச்சுட்டு வந்த எல்லாருக்கும் அரசியல் வாதி ஸ்டைல்ல கோடான கோடி நன்றிகள் சொல்லிக்கறேன். இன்னையோட சூர்யகாந்திக்கு லீவ் விட்டாச்சு :)
இந்த பகுதியில கவிஜ ஆக்கரமிப்பு கொஞ்சம் அதிகமாய்டுச்சு. மொக்கையா இருந்தா நேரடியா இங்கயே திட்டுடுங்க ;) இது வரை அட்டண்டண்ஸ் போடாம யாராவது இருந்தா இதுலையாவது போடவும் :(

***************
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5

தோட்டத்துக்கும் வீட்டுக்கும் நடுவுல இருக்கற தூரத்தின் அளவு அன்னிக்கு மட்டும் அதிகமாத் தான் தெரிஞ்சது கதிருக்கு.
“ஏதோ தைரியத்துல கிளம்பி வந்துட்டோம்…என்ன பேசறது?” ன்னு யோசிச்சிட்டே நடந்த அவனோட கால்கள் முன் நோக்கி போக, அவன் நினைவுகள் பின்னோக்கி பயணிக்க ஆரம்பிச்சது.

கதிர் பீரோ உள்ள இருந்து விழுந்த சூர்யா ஃபோட்டவ பாத்ததும் முதல்ல செல்லாத்தாவுக்கும் தேன்மொழிக்கும் ஒன்னுமே புரியல. ரொம்ப நாளா, சூர்யா காணோம்ன்னு தேடிகிட்டு இருந்த அதே படங்க தான்னு, தேன்மொழிக்கு அதப் பாத்தவுடனே தெரிஞ்சிடுச்சு.

“என்னண்ணா இது? இது எப்படி உன்னோட ட்ரெஸ்ஸுக்கு நடுவுல வந்துச்சு?”

கதிர் பதிலேதும் பேசாம இருக்கவும், செல்லாத்தா, “கதிரு! என்னப்பா? நீ மனசுக்குள்ள ஒன்னு வச்சுட்டு வெளிய ஒன்னு பேசறவனில்லையே? என்ன இதெல்லாம்?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல மா…இது எப்படி இங்க வந்துச்சுன்னு எனக்கே தெரியல….பாரு, இவளோட வேலையாத் தான் இருக்கும்…”

தேன்மொழி, “எதுக்கு என்னைய வம்புக்கு இழுக்கற? ஏன்ணா! எதுக்கு பொய் சொல்ற? உனக்கு சுத்தமா பொய் சொல்ல வராதுன்னு எங்களுக்கு தெரியும், உன் முகத்த பாத்தாலே தெரியுது…சொல்லு, என்னண்ணா பிரச்சனை?”

கதிர் எவ்வளவோ மழுப்பப் பாத்தும், செல்லாத்தாவும் தேன்மொழியும் விடாம நச்சரிக்கவும், கதிரும் வேற வழியில்லாம, “இல்லம்மா….வந்து….மாமா கண்டிப்பா எதாவது பிரச்சனை பண்ணுவாரும்மா…அத்தை விஷயத்துலையே எத்தனை பிரச்சனை வந்து, கடைசியில அத்தை….அதான்….நானும்…இதெல்லாம் கண்டிப்பா நடக்காதும்மா….அதனால தான் அப்பாவே இதப் பத்தி எதுவும் பேச மாட்டேங்கறார்…ஆனா, நீங்க, பாட்டி எல்லாம் எதேதோ பேசி சூர்யா மனசுலையும் வேண்டாத கற்பனைய வளத்து வச்சுருக்கீங்க….”
“அதெல்லாம் விடு…உன் மனசுல என்ன இருக்குன்னு தான் நாங்க கேக்கறோம்…அதுக்கு முதல்ல பதில சொல்லு நீ!”

“எனக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்தது உண்மை தான்ம்மா…ஆனா…இப்ப எல்லாத்தையும் மறந்துட்டேன்…” மறந்துட்டேன்ங்கற வார்த்தை மட்டும் அவன் இதயத்த கிழிச்சிட்டு, அதுக்கு தண்டனையா தொண்டைக்குள்ளையே சிக்கிச் சிதறி பாதியாத் தான் வெளிவந்துச்சு!

“ஏன்டா நாங்க இத்தன பேர் இருக்கோம், அப்படி எல்லாம் விட்டுருவோமா? உங்க மாமா கிடக்கறாரு…என்னடா பெருசா பிரச்சனை பண்ணிடப் போறாரு? உங்க அத்தைக்கு எதனால பிரச்சனை வந்துச்சு? கட்டினவன் சரியில்லாதனால தான? ஒரு பொண்ணுக்கு உலகமே நல்லவங்களா இருந்து துணையிருந்தாலும், கட்டின புருஷன் சரியில்லன்னா, அவ்ளோ தான்…ஆனா, நீ அப்படியா? நீ எங்க? உங்க மாமா எங்க? நீ சொக்கத் தங்கம்டா ராஜா…”

“ஹய்யோ அம்மா…போதும், போதும்…அண்ணா! நீ மொதல்ல போய் சூர்யாவ சமாதானப் படுத்தி கூட்டிட்டு வாண்ணா…பாவம், எப்படி அழுதுட்டே போனா தெரியுமா?”“அதில்ல தேனு! நான்…எப்படி….?”

கதிர் எவ்வளவு வாதாடியும் ரெண்டு பேரும் காது குடுத்து கேக்கறதா இல்ல. அவனோட அஞ்சு வருஷ தவத்த அஞ்சே நிமிஷத்துல கரைக்க பாத்தாங்க ஆத்தாளும் மகளும். கடைசியில பிடிவாதமா “போ….” ன்னு சொல்லி ரெண்டு பேரும் பிடிச்சுத் தள்ளவும், கதிரும் வேற வழியில்லாம சூர்யாவ தேடி நடக்க ஆரம்பிச்சான்.

***
"யேய் சூர்யா!!! வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
"இல்ல….நேத்திக்கு பேரு எழுதி வச்சமே, அந்த பூவை தான் தேடிட்டு இருக்கேன்…காணவே காணோம்"

"ஓஓஹ்ஹ்…அதுவா? எதாவது ஆடோ, மாடோ தின்னுருக்கும், இல்ல எதாவது குழந்தைங்க பறிச்சிட்டு போயிருப்பாங்க…."

ஹேன்னு சூர்யா உடனே அழுக ஆரம்பிக்க,
“யேய்!!! நிறுத்து…மொத நிறுத்து!!! இப்ப எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கற? நான் வேணா ஒரு பத்து பென்னு வாங்கித் தரேன்…நைட்டு பூரா உக்காந்து எல்லா பூவுலையும் எழுது…லூசு…”

"யாரு லூசு? நீ தான் லூசு!!! போடா!!!”

"என்னடி சொன்ன?”

"ஹ்ம்ம்…போடா லூசுன்னு சொன்னேன்…"

"உன்னை என்ன பண்றேன்னு பாரு!!!” கதிர் துரத்த, சூர்யா ஓட, அந்த தோட்டம் முழுக்க அவங்களோட சிரிப்பு சத்தம் தான் கேட்டுச்சு….

பேங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்!!!!
எங்கயோ தூரத்துல லாரி ஹார்ன் சத்தம் கேக்கவும் தான் இந்த உலகத்துக்கு வந்தான் கதிர்!

கதிர் நினைச்ச மாதிரியே, இப்பவும் சூர்யா அதே கிணத்தடியில தான் உக்காந்துட்டு இருந்தா. இப்படி பல தடவை அவ இதே இடத்துல தனியா, மனசுல தனிமையோட உக்காந்திருக்கறத கதிரே பாத்திருக்கான். அப்பெல்லாம் ஓடிப் போய் அவ பக்கத்துல உக்காந்து அவ தலைய வருடிக் குடுக்கனும்னு அவனுக்குள்ள எழுந்த உணர்ச்சிகள்…ஆனா அத்தனை வருஷமா உள்ளுக்குள்ளயே தேக்கி, தேக்கி வச்ச அந்த உணர்ச்சிகள் எல்லாம் தீப்பிழம்பா மாறி இப்ப அவனையே பொசுக்கற மாதிரி இருந்துச்சு.
மெதுவா அவ பக்கத்துல போய் உக்காந்தான். சூர்யாவும் அவன ஒரு தடவை திரும்பி பாத்துட்டு எதுவும் பேசாமலே உக்காந்திருந்தா. எவ்வளவு நேரம் அவங்க அப்படி உக்காந்திருந்தாங்களோ, அவங்களுக்குத் தான் அது தெரியும்.

கதிர் , “சூர்யா…” ன்னு ரொம்ப சன்னமா அவனுக்கே சொல்லிக்கற மாதிரி அவ பேர சொல்லி கூப்பிட்டான்.
அந்த குரல்ல இருந்த கனிவும், குழைவும் எத்தனையோ ஜென்மத்துக்கு முன்னாடி கேட்டது போல இருந்துச்சு சூர்யாவுக்கு. எதுக்காக காத்திருக்கோம்னே தெரியாம, ஒரு வித ஏக்கத்தோடயே இருந்த அவ மனசுக்கு அப்ப தான் தெரிஞ்சது, இதுக்காகத் தான் இத்தனை நாளா தான் காத்திருந்தோம்னு.

அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…

ஆனா அவ மனசுக்கு தெரிஞ்சது, பாழும் அறிவுக்கு புலப்படாதனால, அவ கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. அனிச்சை செயல் மாதிரி, அவனோட கைகள் அவ கண்ணீர தொட்டுத் துடைக்க நீண்டுச்சு. ஆனா அதுக்குள்ள சூர்யா அவன் கைய தட்டி விட்டுட்டா…அப்பா! எவ்வளவு திடமான வழுவான கை கதிரோடது? பூ மாதிரி இருந்த சூர்யா கைகளுக்கு அவன் கையை தட்டி விடுற அளவுக்கு எங்கிருந்து பலம் வந்துச்சு? இல்ல, அவன் கைகள் தான் எதிர்பாராம ஏற்பட்ட அந்த ஸ்பரிசத்தால செயலிழந்து போயிடுச்சா?

“சூர்யா! இப்ப என்ன நடந்துருச்சுன்னு இப்படி தனியா உக்காந்துட்டு அழுதுட்டு இருக்க?”
ஆனா அவ பதிலேதும் சொல்லாமலேயே இருக்கவும், “நீ தான் எப்பயுமே என்கிட்ட கேப்ப, இப்ப நான் கேக்கறேன்…எங்கூட பேசமாட்டியா? “

சூர்யா எதுவுமே பேசாம அவன முறைச்சு பாத்துட்டு தலைய திருப்பிகிட்டா. சூர்யகாந்தி கதிரவன பாக்காம வேற பக்கம் தலைய திருப்புற இயற்கைக்கு முரணான அந்த செயல் எத்தனை நேரம் தான் நீடிக்க முடியும்?
இந்த முறை “சூர்யா!” ன்னு தெளிவா, அதிகாரத்தோட ஒலிச்ச அவன் குரலுக்கு கட்டுப்பட்டு, முகத்துல கேள்விக்குறியோட அவன ஏறெடுத்து பாத்தா சூர்யா.

“இதப் பாரு சூர்யா! உங்க அப்பா எந்த நேரத்துல எப்படி மாறுவாருன்னு யாருக்கும் தெரியாது….அதனால தான்….நான்…”

சினுங்குற தனக்கு சீறவும் தெரியுங்கறத காட்டற மாதிரி சூர்யாவும், “இப்ப எதுக்கு தேவையில்லாம எங்க அப்பாவ இழுக்கறீங்க? உங்களுக்கு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுங்க…அது தான உண்மை?”

“ஆமா…எனக்கு பிடிக்கல…”

சூர்யா உடனே எழுந்து போகவும், கதிர் அவ கையப் பிடிச்சு பலவந்தமா உக்கார வச்சான். அவனோட பிடியில் இருந்த உறுதி, ’உன் மேல அன்பு மட்டுமில்ல, உரிமையும் உண்டு’ன்னு அவன் சொல்லாம சொன்னது போல இருந்துச்சு.

“நான் சொல்றத முழுசா கேளு!”

“இதுக்கு மேல என்ன கேக்கனும்? ஆனா ஒன்னு மாமா! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்ல…கொஞ்சம் வருத்தம் தான்….உங்களுக்கு சொல்லித் தெரியணும்னு இல்ல, நான் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன். உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காக என்னை நான் மாத்திக்க மாட்டேன், ஆனா இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்…

“பேசி முடிச்சாச்சா? இனி, நான் பேசலாமா?” கோவத்தோட ஒலிச்சது கதிரோட குரல்.
“நான் பிடிக்கலைன்னு சொன்னது உன்னையில்ல…இப்படி புரிஞ்சுக்காம தனியா உக்காந்து அழுதுட்டு இருக்கியே…அத! என்மேல உயிரையே வச்சிருக்கேன்னு சொல்றியே, நீ என்னை புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா?”

“நீங்க என்ன தான் எம்மேல எரிஞ்சு விழுந்தாலும், என்னை அடியோட வெறுக்க மாட்டீங்கன்னு தான இத்தன நாளா நினைச்சுட்டு இருந்தேன்…ஆனா, இப்ப என்னால அழாம வேற என்ன பண்ண முடியும்?”
“ஏன், அழுகறத தவிர உன்னால வேற எதுவும் பண்ண முடியாதா? உன் மனச கேட்ருந்தாலே தெரியுமே?”

“ஹ்ம்ம்…மனசு சொன்னத கேட்டுத் தான இத்தன நாளா ஏமாந்துட்டேன்…நம்ம பாசம் வச்சிருக்கறவங்க என்ன தான் நம்மள மதிக்காம காயப்படுத்தினாலும், இந்த பாழாப் போன மனசு அதையெல்லாம் அடியோட மறந்துட்டு, எப்பயோ, எந்த காலத்திலையோ அவங்களோட சந்தோஷமா பழகின நாளையெல்லாம் நினைச்சு தான ஏங்குது? வேற ஏதோ ஒரு உலகத்துல, எங்கயோ தூரத்துல இன்னும் அந்த நாளெல்லாம் தொடர்ந்துட்டே தான் இருக்குன்னு நினைச்சு அற்ப சந்தோஷம் படறத தவிர மனசுக்கு வேற என்ன தெரியும்?”

என் அன்பை நீ மறுத்தாலும்,
என்னை அடியோடு வெறுத்தாலும்,
ஏதோ ஒரு உலகத்தில்…
ஏதோ ஒரு தருணத்தில்…
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,
நம் கடந்த காலத்தை!

“இவ்ளோ பேசுறியே! நான் உண்மையா என்ன நினைக்கறேன்னு நான் சொல்லித் தான் உனக்கு தெரியனுமா? உன் மனசுல ஒரு சின்ன மூலைல கூட என் மேல நம்பிக்கை இல்லையா?”

“என்ன சொல்றீங்க?”

கதிர் எதுவும் பேசாம, சூர்யாகிட்ட ஒரு நோட்ட குடுத்தான். சூர்யா அத வாங்காமையே, “என்னதிது?” ன்னு கேக்கவும், கதிர், “முதல்ல அத திறந்து பாரு…”

தோட்டத்து காத்துல படபடத்த நோட்டு தாள்களுக்கு நடுவே, எதோ ஒரு காஞ்ச பூ இருந்துச்சு. அந்த பூ வாடியிருந்தாலும், ’கதிர்வேல் சூர்யாகாந்தி’ ன்னு அவங்க பேர் மட்டும் வாடாம இன்னும் வாசம் வீசிட்டு தான் இருந்துச்சு!

நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,
பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்
உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!

ஆச்சர்யத்தில் விரிஞ்சு, ஆனந்ததில் கசிந்த கண்களோட சூர்யா அந்த பூவை வாஞ்சையோட தடவிக் கொடுக்க, கதிர் அது நாள் வரையில் மனசுல பதுக்கி வச்சிருந்த அன்பையெல்லாம் அவனோட விரல்களுக்கு தூதனப்பி, சூர்யா விரல்களுக்கு எதோ ரகசிய செய்தி சொல்ல ஆரம்பிச்சான்!

ஒரு விரல் எனைத் தீண்ட,
என் வசம் நான் தோற்று…
மறுவிரல் வந்து தீண்டவும்,
என்னிடமிருந்து விடைபெற்று…
உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,
உன்னிடமே தஞ்சமடைந்தேன்!

முகம் மலர்ந்திருந்தாலும், சூர்யா கண்ணுல இருந்து தண்ணி வர்றது மட்டும் நின்ன பாடில்லை.

“யேய் ரெட்டை வாலு! அழுதது போதும்டீ…வா, வீட்டுக்கு போவோம்……..உங்க வீட்டுக்கு…”

மேலும் மேலும் இன்ப அதிர்ச்சி தாக்க, சூர்யா, “என்னது???? எங்க வீட்டுக்கா??? நிஜமாவா?”

“ஆமா…நிஜம்…மா…என்ன பண்றது? பேய கட்டிகிட்டா புளிய மரத்துல ஏறித் தான ஆகணும்” ன்னு கதிர் பொய்யா சலிச்சிக்கிட்டான்.

“யாரு பேயி? பாருங்க…ரெண்டு காலு இருக்கு…”சூர்யா அவ பாதங்கள காட்டவும்,

“ஆஹா…பூ மாதிரி இருக்கற இந்த பாதங்கள இனிமே எப்படி என் உள்ளங்கைல வச்சு தாங்குறேன்னு பாரு….”

“ஹய்யோடா…இப்பயே இறங்கி தோட்டத்துல மண்ணுல தான் மாமா நடக்கனும்!!!”

“நீ மட்டும் ’ம்ம்’ ன்னு ஒரு வார்த்தை சொல்லு, வீடு வரைக்கும் உன்னை தூக்கிட்டே போறேன்…போய் உங்கப்பாகிட்ட நேருக்கு நேர் கேக்கக் போறேன், பொண்ண நீங்களே கட்டிக் குடுக்கப் போறீங்களா, இல்ல இப்படியே தூக்கிட்டு போய்டவான்னு…”

“ஹூக்கூம்…நினைப்பு தான்…”

“ஆமா…நினைப்பு தான்…உன் மேல…”

கதிரவனை பார்த்து தலை நிமிர்ந்தது அந்த சூர்யகாந்தி!
கதிரை பார்த்து தலை கவிழ்ந்தாள் இந்த சூர்யகாந்தி!

[முற்றும்]

Tuesday, February 17, 2009

சூர்யகாந்தி - 5

தோட்டத்துல சூர்யகாந்தி பூ குட்டி குட்டியா பூத்திருந்துச்சு!

 

சூர்யா, “மாமா! நம்ம பேர இந்த பூவில எழுதி வச்சு, பூ பெருசாகற வரைக்கும் இருக்குதான்னு பாப்போமா?”

 

“ஹா ஹா…அதெப்படி சூர்யா இருக்கும்?”

 

சூர்யா முகம் உடனே வாடிடுச்சு…பூ வாடினாலே அவனுக்கு பிடிக்காது, அப்படி இருக்கும் போது பூவ விட மென்மையானவன்னு நினைச்சுகிட்டு இருக்குற அவனோட சூர்யா வாடினா அவன் மனசு தாங்குமா?

 

“சரி சரி! எழுதலாம் வா…” ன்னு கதிர் சொல்லவும், மறுபடியும் சூர்யா முகம் பூவா மலர்ந்துடுச்சு. சொன்னதோட நிக்காம, உடனே சட்டையில இருந்து ஒரு பேனாவ எடுத்து எழுதவும் ஆரம்பிச்சுட்டான், “கதிர்வேல் சூர்யகாந்” ன்னு அவன் எழுதறதுக்குள்ள, “ஹய்யோ, காந்தி வேண்டாம்…ச்சே எழுதிட்டீங்களா? ச்சே!! வெரும் சூர்யான்னே எழுதி இருக்கலாம்” ன்னு ரொம்பத்தான் சலிச்சுகிட்டா சூர்யா.

 

“ஏன், அதுக்கென்ன இப்ப?”

 

“எனக்கு இந்த பேரே புடிக்கல…ஸ்கூல்ல எல்லாரும் காந்தி தாத்தா, காந்தி தாத்தான்னு கிண்டல் பண்றாங்க…”

 

“யாரு அப்டி சொல்றது? என்கிட்ட சொல்லு…”

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” சூர்யா அதுக்கு மேல ஒன்னும் பேசாம அவன் எழுதின அவங்க பேரை ஆசையா தடவிப் பாத்துக்கிட்டு இருந்தா.

 

“யேய்…”

 

“ஹ்ம்ம்?”

 

“உனக்கு ஏன் அத்தை சூர்யகாந்தின்னு பேர் வச்சாங்க தெரியுமா?”

 

“ஏனாம்?” எத்தனையோ தடவை எத்தனையோ பேர் சொல்லிக் கேட்ட ஒரு விஷயம் தான். இருந்தாலும் அத சொல்ல வேண்டியங்க வாயால சொல்லிக் கேக்கனும்னு தான பொண்ணுக நெஞ்சுக்குள்ள ஆசைய தேக்கி வச்சுகிட்டு காத்திருக்காங்க? அதே மாதிரி தான் சூர்யாவும், எதுவுமே தெரியாத மாதிரி ’ஏனாம்’ ன்னு கேட்டா.

 

“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…”

 

உடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா? இப்ப மட்டும் என்னவாம்?” ன்னு உதட்ட சுழிச்சா.

 

“இப்ப இந்த பூவ விட நீ தான் அழகா இருக்க…”

 

சூர்யா கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்டுச்சு… ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு நாள், இதே இடத்துல உக்காந்துட்டு அவங்க பேசினதெல்லாம் நினைவு தானா இல்ல வெறும் கனவா?

 

மரக்கிளைல அழகா சாஞ்சிகிட்டு அவளோட மணிக்கணக்குல கதை பேசின கதிர், ஆலமரத்தில தொங்குற தூளிக்காக அவளோட சண்ட பிடிச்ச கதிர், அவ சைக்கள் பழகி கால உடைச்ச போது, தூசு விழுந்துடுச்சுன்னு கண்ண துடைச்சுகிட்ட கதிர், அவ வாசல கடந்து போகும் போது, திண்ணைல உக்காந்துட்டு அவ பாக்கலைங்கற நினைப்புல அவள குறுகுறுன்னு பாத்த கதிர், அவ திரும்பி பாத்தவுடனே, என்னடி வேணும்னு அவளையே திருப்பி அதட்டின கதிர், எல்லாரும் நிச்சலடிக்க போயிருக்க, தனிமைக்கும் தண்ணிக்கும் பயந்த அவளுக்கு துனையிருந்த கதிர், கதிர், கதிர்…

“ஏன் தேவையில்லாம கற்பனைய வளக்கறீங்க?” எவ்வளவு சுலபமா கேட்டுட்டான்? கற்பனைய வளத்தது அத்தை மட்டும் தானா? இந்த கிணறு, அந்த பூ, இந்த வயல், இந்த திண்ணை, இந்த மரம், அந்த தூளி, அந்த சைக்கிள், ஏன் நேத்து பலியான ஆடு வரைக்கும் அவனப் பத்தின ஏதோ ஒரு நினைவ, ஏதோ ஒரு பழைய கதைய, அவளுக்குள்ள கிளறி, புதுசு புதுசா கற்பனைய வளத்து விட்டுட்டு தான இருக்கு? இது எதுவுமே அவனுக்கு நினைவில்லையா?

 

ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?

 

பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?

 

சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?

 

கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?

 

கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?

 

விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?

 

இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

 

இங்க சூர்யா தான் இப்படி உக்காந்திருக்கான்னா, அங்க வீட்லையும் ஒரே ரணகளமாத் தான் இருந்துச்சு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு கதிர், “ஏய் தேன்மொழி! இப்ப எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுகற? ஏய் தேன்மொழி! உன்னை தான்டீ…”

 

“நீ பேசாதன்ணா என்கூட…பேசாத…முதல்ல போய் சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு வந்து பேசு…போ!!!”

 

“என்ன விளையாடுறயா?”

 

“நீ தான் விளையாடுற…சூர்யா வாழ்க்கையோட விளையாடுற…”

 

“உளறாத!!! நீங்களா எதாவது நினைச்சுகிட்டா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி அம்மாவும் பொண்ணும் மூலைக்கு மூலைக்கு உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க?

 

“சூர்யா எப்படி அழுவா தெரியுமா?”

 

“சும்மா சூர்யா சூர்யாங்காத…ரெண்டு நாள் அழுவா, அப்புறம் எல்லாம் சரியா போய்டும்…எனக்கு பசிக்குது…அம்மா வேற கோவமா இருக்காங்க…நீயாவது வந்து சாப்பாடு போடு வா…”

 

“இப்ப உனக்கு சாப்பாடு தான் ரொம்ப முக்கியமா? சரியான கல்நெஞ்சக்காரன்டா நீ!!!”

 

“அம்மாவும் மகளும் என்னவோ பண்ணி தொலைங்க…என்னை ஆளை விடுங்க…” ன்னு சொல்லிட்டு கதிர் அவன் ரூமுக்குள்ள போகவும், தேன்மொழி, “நான் இங்க ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன்…நீ பாட்டுக்கு உள்ளார போனா என்ன அர்த்தம்?”

 

“சும்மா நை நைங்காத தேனு…எனக்கு வேலை இருக்கு…கொஞ்சம் வெளிய இரு…” சொன்னதோட இல்லாம கதிர் ஒரு நோட்ட எடுத்து மும்பரமா எழுதவும் ஆரம்பிச்சுட்டான்.

 

“இதெல்லாம் அப்புறம் எழுதிக்கலாம், இங்க பாருண்ணா, நான் சொல்றத கொஞ்சம் கேளு! சூர்யா உம்மேல உயிரையே வச்சுருக்கா…”

 

“என்னடி சும்மா சூர்யா சூர்யான்னுட்டு? முதல்ல போ வெளிய…”

 

“முடியாது, எனக்கு முதல்ல ஒரு பதில் சொல்லு, நீ ஏன் சூர்யாவ வேணாங்குறேன்னு சொல்லு…நான் பேசிக்கிட்டே இருக்கேன்…நீ என்ன அப்படி எழுதிட்டு இருக்க?” ன்னு சொல்லிட்டே தேன்மொழி அந்த நோட்ட பிடிங்கிட்டா.

 

“தேனு! அத குடு இப்படி! அது முக்கியமான கணக்கு வழக்கெல்லாம் இருக்கற நோட்டு!”

 

“ஓ…அப்படியா….அப்ப இரு இப்பயே இத கிழிக்கறேன்…”

 

“அறஞ்சன்னா பல்லு பகுடெல்லாம் எகிறிடும், குட்றீ அத…”

 

கதிர் அந்த நோட்ட லாவகமா தேன்மொழி கிட்ட இருந்து பிடிங்கி, பீரோவுக்குள்ள வைக்க போனான், தேன்மொழி அத எடுக்க கைய நீட்றதுக்குள்ள, மறுபடியும் பீரோவுக்குள்ள இருந்து வெளிய எடுத்துட்டான். ஆனா அதுக்குள்ள, கோவம் தலைக்கேறி என்ன பண்றோம்னே தெரியாம, தேன்மொழி திறந்திருந்த பீரோவுக்குள்ள இருந்து கதிரோட துணியெல்லாம் எடுத்து வெளிய வீச ஆரம்பிச்சுட்டா.

இத எதிர்பாக்காத கதிர், “அம்மா! அம்மா! இங்க வந்து பாருங்க…உங்க அருமை பொண்ணு பண்ற வேலைய….பைத்தியம் தான் பிடிச்சுருக்கு அவளுக்கு…”

 

“என்ன ரகளை அங்க?” ன்னு கேட்டுகிட்டே செல்லாத்தா அங்க வரவும், கதிர் துணிகளுக்கு அடியில புதைஞ்சு கிடந்த ரெண்டு ஃபோட்டோ பறந்து வந்து தரையில விழவும் சரியா இருந்துச்சு.

 

பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…

 

[அடுத்த பகுதியில் முடியும்]

 

Wednesday, February 11, 2009

சூர்யகாந்தி - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

வழக்கமான துள்ளலோட மாமா வீட்டுத்தெரு வரைக்கும் நடந்து வந்த சூர்யாவோட கால்கள், அவங்க வீடு கண்ணுல பட்டதும், வழக்கத்து மாறா அன்னிக்கு திடீர்ன்னு முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்னிக்கும் இல்லாத ஒரு தயக்கம்! ஏதோ ஒரு அழகான நினைப்பு வந்து அவளுக்குள்ளா ஒட்டிகிட்டது தான் அதுக்கு காரணம்…அந்த நினைப்புல ரோடுன்னு கூட பாக்காம தலைய குனிஞ்சு, நாக்க கடிச்சிட்டு, கண்ண சுருக்கி அவ சிரிக்க, “ஹே சூர்யாக்கா தனியா சிரிக்காராங்க டா…” ன்னு கோலி விளையாடிட்டு இருந்த பசங்க கேலி செய்ய, “ச்சீ…போங்கடா!!!” ன்னு அவங்கள அதட்டிட்டு ஒரே ஓட்டமா கதிர் வீட்டுத் தெருவுக்குள்ள நுழைஞ்சா சூர்யா!

***
கற்பனைச் சுமைகள் – 4

நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்,

உன்னை வழியனுப்பிய பிறகும்
வீட்டினுள் செல்ல மனமின்றி,
இந்த தெருவில் பதிந்த உன் கால் தடங்களில்
என் பார்வை தேங்கி நிற்பது போலவும்,

மாலை, உன் வரவுகாக
வீட்டு வாயிலருகே காத்து நின்று,
இந்த தெருவில் ஏக்கப் பார்வைகள்
பதிப்பது போலவும்,

இந்த தெருவை அடைத்து
நான் போடும் கோலத்தை ரசிப்பதாய் சாக்கிட்டு,
காலைப் பனியோடு சேர்த்து,
என்னை நீ ரசிப்பது போலவும்,

இப்படி ஆயிரமாயிரம் கற்பனைகள்,
ஒவ்வொரு முறை
உன் வீட்டுத் தெருவை கடக்கும் போதும்
என்னுள் தோன்றி மறைகிறதே…

என் வீட்டுத் தெருவை
கடக்கும் போது,
ஒரே ஒரு முறையேனும்
என் நினைவாவது
உன்னுள் மலர்கிறதா?

***
ரொம்ப நேரமா சூர்யாவ காணாம செல்லாத்தா, “தேனு! தேனு! இந்த சூர்யா என்ன இன்னும் வரக் கானோம்…இந்த முருகன விட்டு அவள கூட்டிட்டு வரச் சொல்லியனப்ச்சனே?” செல்லாத்தா இப்படி கேக்கவும், தேன்மொழி, “ஏம்மா? என்ன விஷயம் அவள எதுக்கு தேடற…”

“இல்ல, அவள டவுனுக்கு கூட்டிட்டு போயி ஒரு பொடவ வாங்கலாம்னு தான்…”

“ஏம்மா? நேத்திக்கு அவ அப்படி சொல்லிட்டாளேன்னு மனசு சங்கடமா இருக்கா? எனக்கும் கூட அழுகையே வந்துடுச்சு…ஆனா…மாமா சும்மா இருப்பாரா?”

“இன்னும் எத்தன காலம் தாண்டி அவருக்காக பயப்படறது, அவரோட வரட்டு கெளவரத்தால இந்த புள்ளைக்கு ஒரு நல்லது கெட்டது பண்ண முடியுதா நம்பலால? எல்லாம் இன்னும் ஒன்னு, ரெண்டு வருஷம் தான்…அப்புறம் கல்யாணம் முடிச்சு இங்கயே கூட்டிட்டு வந்தற வேண்டியதுதான்…”

“நீ என்னவோ இவ்ளோ ஈஸியா சொல்லிட்ட…இந்த மாமா ஒத்துக்கனுமே, அப்படி என்ன தான் கோவமோ அவருக்கு…ச்சே….இந்த அப்பாவாவது கொஞ்சம் விட்டு குடுத்திருக்கலாம்…”

“என்ன தேனு இப்படி பேசுற? உங்கப்பா என்ன பண்ணுவாரு?”

“ஏன் நியாயம், அநியாயம் எல்லாம் பாக்காம, அவரு கேட்ட சொத்த எழுதி வச்சிருந்தா, அத்தை இன்னும் இருந்திருப்பாங்களோ என்னவோ?”

“அதுக்காக ஒரு குடிகாரன நம்பி பரம்பரை சொத்தையெல்லாம் குடுக்க சொல்றியா? உங்கப்பா என்ன சொன்னாரு? சூர்யா பெருசானதும் அவ பேர்லையே எல்லாம் மாத்தி தரேன்னு தான?”

“சொத்து போனா மறுபடியும் சம்பாதிச்சுடலாம்…ஆனா…சரி போ…நானே போய் சூர்யாவ கூட்டிட்டு வரேன்…”

தேன்மொழி போனதும் செல்லாத்தா அப்படியே மறுபடியும் பழைய நினைப்புக்கு போய்ட்டாங்க…

எந்த எடுபட்ட பயலோ ஏத்தி விட்டதுல, பூபதி சொத்து குடுக்காம ஏமாத்திட்டாங்கன்னு சொல்லிட்டு திரிய ஆரம்பிச்சிட்டான். நியாயப் படி பாத்தா, செவ்வந்திக்கு கொஞ்சம் அதிமாவே தான் செஞ்சிருந்தாரு ராமசாமி. ஆனா அதெல்லாம் அவனுக்கு விளங்கினாத் தான?
பூபதி என்னடான்னா ராமசாமி மேல கேஸ் போடப் போறேன்…உங்கண்ணன் சொத்து குடுக்காம ஏமாத்திட்டாருன்னு கையெழுத்து போடுன்னு செவ்வந்தி உயிர வாங்க ஆரம்பிச்சுட்டான். அவளும் முடியாதுன்னு எவ்வளவோ அழுது பாத்தா, ஆனா ஒன்னும் உதவல. ஆனா பூபதி ஒரு நாள், ’என் பேச்ச மதிக்காத பொன்டாட்டியோட எதுக்கு வாழனும்னு’ பூச்சி மருந்து குடுக்க போற மாதிரி நடிக்கவும் அத உண்மைன்னு நம்பி ரொம்பவும் சோந்து தான் போய்ட்டா.

பிறந்ததுல இருந்து அண்ணன் கிட்ட எதுவுமே கேட்டதில்லை, எல்லாமே அவ கேக்கறதுக்கு முன்னாடி டான் டான்னு நடக்கும். அப்படி இருக்கும் போது, கல்யாணம் ஆகி இத்தன வருஷம் கழிச்சு, மொதமொதலா அண்ணன் வீட்டுப் படியேறி, பேசாம அவரு கேக்கறத குடுத்திருங்க, கோர்ட்டு, கேஸுன்னு என்னை குத்தி கொல்லாதீங்கன்னு கதறினா. ஆனா ராமசாமி, ’சூர்யா பெருசானதும் என்னோட மொத்த சொத்தையும் வேணா தரேன், இப்ப கானி நிலம் கூட அவன நம்பி மறுபடியும் குடுக்க மாட்டேன், இருக்கறத வச்சுட்டு ஒழுங்கா முதல்ல பொழப்ப நடத்த சொல்லு’ ன்னு பிடிவாதமா மறுத்துட்டாரு.
அது மட்டுமில்லாம, தங்கிச்சிய கட்டின மச்சினனாச்சேன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, வாய்ல வந்ததெல்லாம் சொல்லி அவன திட்ட வேற திட்டிட்டாரு. அத அவன் கேள்விபட்டு, அப்புறம் அடி தடி ரகளை வரைக்கும் போய், கடைசியில செவ்வந்தி அன்னிக்கு ராத்திரியே மாரடப்பு வந்து செத்ததும் தான் நின்னுச்சு!

அதுக்கப்புறம் மாமனும் மச்சானும் ’ஓ’ன்னு கட்டி பிடிச்சுட்டு அழுது என்ன பிரயோஜம்? போனவ போய்ட்டா…அதுவும் போற வயசுல பாதி கூடா தாண்டாமையே போய் சேந்துட்டா! ஆனா சும்மா சொல்லக்கூடாது, பழைய பூபதிய அதுக்கப்புறம் பாக்கவே முடியல. ஆளே ரொம்பவும் மாறி தான் போய்ட்டான். பொண்ணுக்காக எல்லாம் அவனே பாத்து பாத்து பண்ணிட்டு தான் இருக்கான் இந்த ஐஞ்சாறு வருஷமா, சூர்யா அவங்க வீட்டுக்கு வந்து போறத கூட தடுக்கல. ஆனா செவ்வந்தி செத்ததுக்கு ராமசாமியோட பிடிவாதம் தான் காரணங்கற எண்ணம் மட்டும் ஐஞ்சு வருஷம் ஆகியும் கூட அவன விட்டு போகவே இல்ல.அவங்களா பாத்து சூர்யாவுக்கோ, இல்ல அவனுக்கோ எதாவது வாங்கி குடுக்கறேன்னு சொன்னா கூட போதும், ’போதும் உங்க சங்காத்தமே இனி வேண்டாம்’ னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடுவான். எப்படியோ சூர்யா இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போறதால இன்னும் எதோ ஒரு சின்ன ஒட்டு உறவாவது இருக்கு. பூபதி என்ன தான் மாறினாலும், ஒரு விஷயத்துல மட்டும் அவன் இன்னும் திருந்தவே இல்லை. ஊர்ல வீணாப் போனவன் பேச்சையெல்லாம் கேட்டுகிட்டு அத உண்மைன்னு நம்பறது. எவனோ காலேஜுக்கெல்லாம் அனுப்பினா பொண்ணு கெட்டு போயிருன்னு சொல்லிட்டானேன்னு, அவ்ளோ மார்க் வாங்கியும் அவள பன்னென்டாவதோட நிப்பாட்டிடான்.

“இந்த ஐஞ்சாறு வருஷத்துல எல்லாமே எப்படி மாறி போச்சு…தேன்மொழி சொன்ன மாதிரி இவரும் தான் கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இன்னேரம் அவ உயிரோட இருந்திருப்பாளோ…இனிமேவாவது எல்லாம் நல்ல படியா நடக்கனும், முருகா என் மனசுல இருக்கறத மட்டும் நிறைவேத்திட்டன்னா, நான் உனக்கு காவடி எடுக்கறேன்” ன்னு வேண்டிகிட்டு சிரமப்பட்டு, முட்டிய பிடிச்ச படி எழுந்து உள்ள போனாங்க செல்லாத்தா!

தேன்மொழி வாசப்படிய தாண்டறதுக்குள்ள சூர்யாவே அங்க வந்துட்டா. அவள பாத்தவுடனே சந்தோஷமா தேன்மொழி, “அம்மா சூர்யா வந்தாச்சு…நான் போய் முகம் கழுவிட்டு ரெடி ஆகறேன்…” ன்னு கத்திகிட்டே உள்ள ஒடவும், கதிர் அங்க வரவும் சரியா இருந்துச்சு.

ஆனா, அங்க கதிர் வந்ததயே கண்டுக்காத மாதிரி சூர்யா தலையே வேகமா திருப்பிகிட்டு சமயகட்டிக்குள்ள போக பாத்தா. ’வழக்கமா எதாவது அறுப்பாளே, இன்னிக்கு என்ன ஆச்சு?’ ன்னு நினைச்சுகிட்டே கதிர், “என்னதிது? குதிரை வாலு ரொம்ப வேகமா ஆடுது?”

“ஹூக்கூம்…உங்கிட்ட எனக்கென்ன பேச்சு…அத்தை!!!”

“ஓ! அந்த அளவுக்கு போயாச்சா? சரி சரி…ஆமா…வழக்கமா ரெட்டை ஜடை தான போடுவ? இன்னிக்கி என்ன புதுசா இருக்கு?”

சூர்யா முகத்த பாக்கனுமே, அப்படி ஒரு சந்தோஷம், “ஓ! நீங்க அதெல்லாம் கூட கவனச்சுட்டீங்களே மாமா…இன்னிக்கு மழை தான் வரும்…”

“அதில்ல சூர்யா…உனக்கு ரெட்டை ஜடை தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்…”
“நிஜமாவா மாமா?” ஆச்சர்யத்துல அவ வாய பிளக்கவும்,
கதிர், “ஆமா…அப்பத்தான் மாட்டுக்கு ரெண்டு கொம்பு வச்ச மாதிரி பொருத்தமா இருக்கும்”
“ச்சே…எல்லாம் என் நேரம்…”

பொய்யா கோவிச்சுகிட்டாலும், அவளுக்கு ஏதோ மாமா இன்னிக்கு நம்ம கிட்ட நின்னு பேசிட்டாரேனு ஒரே சந்தோஷம் தான். அவள கதிர் பாத்தாலே அன்னிக்கு முழுக்க சந்தோஷம் தான், அப்படி இருக்க, பேசினா கேக்க வேணுமா என்ன? அவளுக்குள்ள என்னென்னவோ கற்பனை ஊற்றெடுக்க ஆரம்பிச்சுடுச்சு! என்னவோ, அன்னிக்கு அவ கற்பனை குதிரை தரிகெட்டு தான் ஒடிட்டு இருந்துச்சு!
***
கற்பனைச் சுமைகள் – 5

நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற
என் நெஞ்சத்து தகிப்பெல்லாம்
வெட்கத் தவிப்பாய் உருமாறி,
என்னை ஆட்கொண்டு,
நான் தலை தாழ்த்திக் கொண்ட
அந்த வேளையில்…

மென்மையாய் என் முகம் நிமிர்த்தி
பொங்கி வழியும் என் வெட்கத்தை
உன் கண்களால் நீ பருக
வேண்டுமென்ற குறுகுறுப்பு,
எனக்கு மட்டும் தானா?
உனக்கில்லையா?

***

சந்தோஷத்துல வழக்கத்த விட அதிகமா துள்ளி குதுச்சு போய், “அத்தை…” னு செல்லாத்தாவ பிடிச்சிகிட்டா.

“என்ன கொஞ்சல் அதிகமா இருக்கு? எதுக்குடி இப்படி ஓடி வரவ? இன்னும் சின்ன புள்ளையாட்டம்…”

“நீங்க தானத்த உடனே கிளம்பி வா ன்னு சொன்னீங்க…என்னைய வரச் சொல்லிட்டு நீங்க எங்கயோ வெளிய போறதுக்கு கிளம்பி நிக்குறாப்புல தெரியுது…”

“நாம எல்லாரும் தான் போகப் போறோம்…உனக்கு சீலையெடுக்க…”

“எனக்கா….எனக்கெதுக்குங்த்த…?”

“ஏன், நாங்க உனக்கு எடுத்தாரக் கூடாதாக்கும்?”

“இல்ல…எங்கப்பா…எதாவது சொல்லுவாரேன்னு தான்…”

“உங்கப்பா கிடக்கறாரு, அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…சும்மா…பேசாம வா…ஆமா…”

அங்க வந்த தேன்மொழி, “யேய் சூர்யா…வாடி, அப்படியே உனக்கு எங்க காலேஜும் காட்றேன்…”

“ஹ்ம்ம் சரி போலாம்…” சூர்யா அரமனசா தலைய ஆட்டி வச்சா.

வாசல் பக்கத்துல அரவம் கேக்கவும், ஹாலுக்கு வந்த செல்லாத்தா, கதிர் செருப்பு மாட்டிட்டு இருக்கறத பாத்து, “கதிரு! எங்கப்பா கிளம்பி்ட்ட?”

“ஏம்மா?”

“இல்ல…எல்லாரும் டவுனுக்கு போய் துணியெடுக்கலாம்னு இருக்கோம்…நீயும் கூட வா…”

“அதான் போன வாரமே எல்லாம் வாங்கியாச்சே…”

“இல்லப்பா…இன்னிக்கு சூர்யாவுக்கு சீலையெடுக்கலான்னு…”

“சரிம்மா…ஆனா, சேலை எடுக்கறதுக்கெல்லாம் நானெதுக்கு? நீங்களே போய் வாங்குங்க…”

“இல்ல கண்ணு! ரெண்டு பொட்ட புள்ளைகள கூட்டிட்டு நானெப்படி தனியா போறது?”

“அதான் முருகம் ஜீப் ஓட்டிட்டு வருவானே…அப்புறம் என்ன தனியா? தேன்மொழி தினமும் அங்க பக்கத்தில இருக்கற காலேஜுக்கு தனியாத் தான போய்ட்டு வரா?”

“டேய்…கூட வாடான்னா இத்தன வியாக்கானம் பேசிக்கிட்டு இருக்க? எங்களோட வந்தா என்னடா கொறஞ்சு போய்டுவ?”

உடனே சூர்யா, “விடுங்கத்தை பரவால்ல…” ன்னு மெதுவா சொல்லவும், செல்லாத்தா, “நீ சும்மா இருடீ! நானும் பாத்துகிட்டே இருக்கேன், வர வர ஒரே விட்டேத்தியாவே பேசிட்டு இருக்கான்…தோட்டம் தொரவுன்னு பாத்துகிட்டா போதுமா? கொஞ்சமாவது கூட மாட வீட்டு வேலையெல்லாம் செய்ய வேண்டாம்?”

“ஏம்மா? இதெல்லாம் உங்களுக்கு ஒரு வீட்டு வேலையா?”

“வீட்டு வேலையில்லாம பின்ன என்னடா?”

“சரி, பேசி பேசி நேரம் தான் வீண்…என்னால இப்ப வர முடியாது…வேற யாரையாவது கூட்டிட்டு போங்க…”

“வேற யாராவது கூட்டிட்டு போறதா? ஏன்டா? கட்டிக் போறவளுக்கு துணியெடுக்கறதுக்கு நீ கூட வராம வேற யாருடா வருவா?”

“அம்மா! இப்ப எதுக்கு கட்டிக்க போறவ அது இதுன்னு தேவையில்லாம பேசறீங்க?”

“எது??? தேவையில்லாம பேசுறனா? என்னிக்கா இருந்தாலும் சூர்யா தான இந்த வீட்டு மருமக?”

“அப்டீன்னு நான் சொல்லனும்! மாமா சொல்லனும்! சும்மா நீங்களே இந்த மாதிரி எல்லாம் பேசி கற்பனைய வளக்காதீங்க….”

பதறிப் போய் செல்லாத்தா, “என்னடா சொல்ற?”

“என்ன சொல்றேன்னு உங்களுக்கு நிஜமாவே புரியலையா? நிச்சயமில்லாத ஒன்னப் பத்தி நீங்களே கற்பனை பண்ணிட்டு அப்புறம் என்னை குத்தம் சொல்லாதீங்க…நீங்க நினைக்கறது எதுவும் நடக்க போறதில்ல…அவ்ளோ தான் நான் சொல்லுவேன்…”

செல்லாத்தா கதிருக்கு ஏதோ பதில் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள, சூர்யா அழுதுகிட்டே வேகமா வெளிய ஓட ஆரம்பிச்சிட்டா.

“சூர்யா! சூர்யா! நில்லுடீ…நில்லு…” தேன்மொழியும் கத்திகிட்டே அவ பின்னாடியே ஓட ஆரமிப்ச்சிட்டா.
செல்லாத்தா, “பாருடா…பாரு! அவ எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு போறா பாரு! ஏன்டா இப்படி பேசுற? உனக்கு மனசாட்சியே இல்லையா?” ன்னு குமுறவும்,
“அதுக்கு காரணம் நானில்ல! நீங்க தான்…” ன்னு சொல்லிட்டு கதிர், அவன் கோவத்தையெல்லாம் அவன் கால்ல மாட்டியிருந்த செருப்பு மேல காட்டி, அத விசிறி அடிச்சிட்டு வெடுக்குன்னு அவன் ரூமுகுள்ள போய் கதவ சாத்திகிட்டான்.

அவ அம்மா போன நாள்ல இருந்து தேக்கி வச்ச சோகமெல்லாம் கண்ணீரோட கரைஞ்சு போற அளவுக்கு, கிணத்தடியில உக்காந்து அழுதுட்டு இருந்தா சூர்யா!

[தொடரும்]

Monday, February 9, 2009

வழக்கொழிந்த சொற்கள்

வழக்கொழிந்த சொற்கள் பத்தி ரொம்ப அழகா பதிவெழுதி இருந்த விஜயும், சந்தனமுல்லையும் என்னையும் எழுத சொன்னாலும், சொன்னாங்க…எங்க எப்படி வார்த்தைகள் கண்டுபிடிக்கறதுன்னு ரொம்பவே யோசிச்சு நிறைய நாள் கடத்திட்டேன்.

ஒரு நாள் என் நண்பன்கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவன் சொன்ன ஒரு வார்த்தை கேள்விப்படாததா இருந்ததால, அவன் வாயப் பிடிங்கி மேலும் ஒரு வார்த்தையை சேத்து ஒரு பதிவா இங்கே…

பத்தாயம் – கிராமத்து வீடுகள்ள நெல் சேகரிக்க பயன்படறதாம். ஏதோ ஒரு சின்ன பீரோ மாதிரி இருக்குமாம். அகராதியில இதுக்கு இன்னொரு பேர் கூட உண்டு, குதிர்.
இந்த வார்த்தையை வைச்சு பேச்சு வழக்குல அழகான (?!?!) சொற்தொடர் கூட உண்டாம். ஒரு பருமனான பொண்ண பாத்தா, “பத்தாயத்துக்கு புடவை கட்டி விட்ட மாதிரி இருக்கா!!!” ன்னு அவங்க ஊர் பக்கம் சொல்லுவாங்களாம்.

இளுப்பங்கரண்டி – தாளிக்க பயன்படும் மிகச் சிறிய வடச்சட்டி மாதிரி, நீண்ட பிடியோட இருக்குமே, அதுக்கு பேர் தான் இ
ளுப்பங்கரண்டியாம். இத வாகனக் கரண்டின்னு கூட சொல்லுவாங்க….

இனி எனக்கு தெரிந்த இரண்டு வார்த்தைகள்

பக்கா – இரண்டு படியை குறிக்கும் அளவு. சின்ன வயசுல ஒரு பொரி தாத்தா மாட்டு வண்டியில வருவாரு…அவர் உபயோகிக்கும் வார்த்தை தான் இந்த பக்கா.

அநாயசம் – ஒரு வேலையை சுலபமா முடிக்கறத குறிக்கும். இத ஒரு முறை பேச்சுவாக்குல நான் பயன்படுத்தி, என் friends எல்லாரும் இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல இல்லைன்னு என்னை கிண்டல் பண்ணப்ப, “தெரியாதுன்னு சொல்லுங்க…இல்லைன்னு சொல்லாதீங்க…” ன்னு நான் எவ்ளோ வாதாடியும் அவங்க யாரும் காது குடுத்து கேக்கறதா இல்லை :( சரி உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் போங்கன்னு நானும் அவங்கள மண்ணிச்சு விட்டுட்டேன் :)

பதிவு எழுதறதுக்கு வார்த்தைகள் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே, யார மாட்டி விடறதுன்னு முடிவு பண்ணி, அவங்ககிட்ட அனுமதியும் வாங்கியாச்சு…இவரோட பதிவுகள் சிலதை தமிழ் அகராதி வச்சிட்டு தான் வாசிக்கனும்! குளிர் காலத்தினாலோ என்னவோ, அமைதியாய் இருந்த தமிழ் மழை, இப்ப
வெயிலில் (கண)மழையா தூர ஆரம்பிச்சுடுச்சு! இந்த பதிவையும் போட்டுடுங்க ஜி…

Friday, February 6, 2009

சூர்யகாந்தி - 3

பாகம் 1

பாகம் 2

முகத்த பாதி மறச்ச அந்த மீசையா, இல்ல எப்ப பாரும் கடுகடுன்னு இருக்கற அந்த முகமா, இல்ல ஊரே அதிர்ற மாதிரி கணீர்ன்னு ஒலிக்கற குரலா, இல்ல எல்லாமும் சேந்தா? ஆக மொத்ததுல பூபதிய பாத்தாலே கொஞ்சம் பயமாத் தான் இருக்கும். இவனுக்கா பூ போல ஒரு புள்ளன்னு யாரும் நம்ப கூட மாட்டாங்க!!!

“என்ன மச்சான்? விருந்தெல்லாம் தடபுடலா நடக்கறாப்புல இருக்கு? சாமிக்கு படப்பு எல்லாம் போட்டாச்சா? இல்ல அதுக்குள்ள பந்தி தொடங்கிட்டீங்களா?” ன்னு சொல்லிட்டு ஹா ஹா ஹா ன்னு சிரிச்சாரு. ஐயோ சாமி! இதுக்கு சிரிக்காமையே இருந்திருக்கலாம்னு தான் நினைக்கத் தோனும் அவரு சிரிக்கறத கேட்டா!

“வாங்க வாங்க மாப்ள…வெல்லனையே சாமிக்கெல்லாம் படைச்சாச்சு…நீங்க தான்…நேரங்கழிச்சு….”

“எங்க? போட்டது போட்ட படியா வர முடியும்? உங்கள மாதிரியா பாதி ஊர வச்சா பண்ணயம் பண்ணிட்டு இருக்கேன். அரக்காணியா இருந்தாலும், நம்மளுத நாம தான பாக்க வேண்டியிருக்கு!!! என்ன நான் சொல்றது?”

“ஆமாமா…” ன்னு ராமசாமி ஐயா இழுக்கறதுக்குள்ள பாதி சாப்பாட்ல இருந்த சூர்யா அவங்க அப்பாவ பாத்து, எந்திரிச்சு வந்துட்டா.

“வாங்கப்பா…இத்தன நேரமா வர்ரதுக்கு? உங்களுக்காக பாத்துட்டு இருந்துட்டு இப்ப தான் சாப்ட உக்காந்தோம், வந்து சாப்ட உக்காருங்க…”

உடனே பூபதி, “ஏதேது? நீ தான் இந்த வீட்டாளு மாதிரி உபசாரம் பண்ற? இந்த வீட்டு எசமானியம்மா ஒன்னும் பேசக் கானோம்…”

அப்ப தான் மொள்ளமா எந்திருச்சுட்டு இருந்த செல்லாத்தா, பூபதி பேசினத கேட்டு பதறி அடிச்சிட்டு, அவசர அவசரமா எழுந்து நின்னாங்க, “கோச்சுக்காதீங்க…வயசாச்சில்ல? அதான், சட்டுன்னு எந்திருக்க முடியல…வந்து உக்காருங்க…சூர்யா நீ போய் சாப்டும்மா…நான் பரிமாறிக்கறேன்….”

சூர்யா, “இல்ல இல்ல…எங்கப்பா நான் பரிமாறினாத் தான் நல்லா சாப்டுவாரு…நீங்க போங்க…நானே போடறேன்…”

ஒரு மரத்து மேல சாஞ்சிகிட்டு அங்க நடக்கறதை எல்லாம் பாத்துட்டு, ஏதோ யோசனைல இருந்த கதிர் பக்கத்துல வந்து நின்னா ஐஷ்வர்யா.

“கதிர்! அது பூபதி அங்கிள் தான?”

“ஹ்ம்ம்…ஆமா….”

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினச்சுக்க மாட்டியே…அவரு ஏன் ஒரு மாதிரியாவே பேசறாரு? உங்க வீட்லையும் அவருக்கும் ரொம்ப பயப்படற மாதிரி தான் நடந்துக்கறாங்க….”

“ஆமா…அவரு எப்பயுமே அப்டி தான்… அதனால தான் நான் அவரு கிட்ட அதிகமா வச்சுகிறது இல்ல…ஆனா எங்க வீட்ல எத்தன சொன்னாலும் திருந்த மாட்டாங்க, அவர தலைல தூக்கி வச்சிட்டு ஆடாத குறை தான்…”

“ஹ்ம்ம்…அத்தை கூட சொல்லியிருக்காங்க, நீயும், மாமாவும் சூர்யா வீட்டுக்கு போறதே இல்லையாமே?”

“ஆமா…செவ்வந்தி அத்தை போனதுக்கப்புறம் அங்க போறதில்லை…சூர்யா அப்பா மட்டும் என்னவாம்? பாரு, வீட்டுக்கு வராம நேரா கோவிலுக்கு தான் வந்துருக்காரு…பட்டும் படாம ஒரு ஒட்டு உறவுன்னா அது இது தான்…” சோகம் ததும்பற குரல்ல கதிர் சொல்லவும், அதுக்கு மேல ஐஷ்யர்வாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. “
கொஞ்ச நேரம் அமைதிக்கப்புறம் ஐஷ்யர்யா, “இந்த சூர்யாவ பாரேன்…பாதி சாப்பாட்ல எழுந்து அவருக்கு பரிமாறிட்டு இருக்கா…”

“ஹ்ம்ம்…ஆமா…”

“அவளால எப்டி இப்டி இருக்க முடியுது? இவ்ளோ நடந்தப்புறமும், அவ அப்பாகிட்டையும், உங்க அப்பாகிட்டையும் எந்த கோவமும் இல்லாம…எப்டி பாஸிபில்? நானா இருந்தா எப்டி ரியாட் பண்ணி இருப்பேன்னே தெரியாது…”

கதிர் ஒன்னுமே சொல்லாம அமைதியா இருக்கவும், ஐஷ்வர்யா, “என்ன கதிர்? அமைதியா இருக்க?”

“அவ அப்படி தான் ஐஷ்வர்யா! சூர்யா நேத்திக்காகவும் வாழல, நாளைக்காகவும் வாழல, அவ இன்னிக்காக தான் வாழற…that’s how its possible…”

“இருந்தாலும் கதிர், என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல…”

“அவளுக்கு தெரிஞ்சவங்க எல்லாத்துகிட்டையும் கண் மூடித் தனமா பாசம் காட்டுவா…அதான் சூர்யா!”

“ஹ்ம்ம்…அது என்னவோ உண்மை தான்…ஆனா அவ உம்மேல மட்டும் கொஞ்சம் அதிகமாவே பாசம் காட்ற மாதிரி இருக்கு…ஹ்ம்ம், என்ன விஷயம்? ” ன்னு ஐஷ்வர்யா நக்கல் சிரிப்போட கேக்கவும்,
கதிர், “யே…ச்சே அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல…”

“அதெல்லாம் இல்ல, எவ்வளவோ இருக்கு…என்னவோ நடக்க போகுது…”

“அதெல்லாம் எதுவும் நடக்காது…வா போகலாம், இப்ப போய் எல்லாரையும் கிளப்பினாத் தான் சரியா இருக்கும்…”

தலைமுடிய கோதி விட்டவாறே, சிரிச்சபடி ஐஷ்யர்யா, “ஹ்ம்ம், சரி சரி, நல்லா மழுப்பற…என்ன நடக்கப் போகுதுன்னு நானும் பாக்கத் தான போறேன்…”

அவங்க அவள பத்தி தான் பேசிக்கறாங்கன்னு கூட தெரியாம, சூர்யா, ’தனியா ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசிக்கறாங்களோ? மாமா எல்லாத்தோடையும் நல்லாத் தான் பேசறாரு, பழகறாரு…என்னை தவிர...முன்ன மாதிரி இப்ப என்னிக்காவது ஒரு நாள் இதே மாதிரி என்கிட்டையும் தனியா உக்காந்து பேசுவாறா? பேசக் கூட வேண்டாம், பாத்தாலே போதும்…ஹ்ம்ம்’ வெரும் பெருமூச்சு தான் விட முடிஞசுது அவளால…


கற்பனைச் சுமைகள் – 3
***
ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…
***


“கொஞ்ச தண்ணி மொண்டுட்டுவா தேனு! ஹப்பாடா சித்த நேரம் அப்படியே கண்ணசர வேண்டியது தான்…” வீடு வந்து சேந்தும் செல்லாத்தா ரொம்பவும் சலிப்போட இருந்தாங்க பாவம்.

சூர்யா, “ஏங்கத்த ரொம்ப டயர்டா இருக்கா?”

“இருக்காதா பின்ன? நேத்திக்கு நாள் முச்சூடு வேல பாத்தாச்சு, தூக்கமும் இல்ல…இனி என்ன வேலை இருக்கு? எங்கண்ணன் ஒரு நாளாவது இங்க தங்குவாருன்னு பாத்தா, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு வந்த மாதிரி உடனே போகனும்னு ஒத்த கால்ல நின்னுட்டாரு…”

“இந்தாம்மா தண்ணி…ஏய் சூர்யா! இன்னிக்கு ஐஷ்வர்யா கட்டி இருந்தாளே, அந்த புடவைய பாத்தியா? அதே மாதிரி எனக்கு தீபாவளிக்கு எடுத்திருக்காக்கும்…”

“நிஜமாவா தேனு? புடவையா கட்ட போற இந்த தீபாவளிக்கு?” சூர்யா ரொம்ப ஆச்சர்யத்தோட கேக்கவும், செல்லாத்தா, “ஆமா தீபாளிக்கு என்ன வாங்கி குடுத்திருக்காரு உங்கப்பா?”

“எனக்கென்னங்த்த…எப்பயும் போல பாவட தாவணி தான்…”

“ஏன்டி! ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் என்ன பாவட தாவணி? உன்ன விட சின்ன பொன்னுக தேனும், ஐஷ்வர்யாவும், அவங்களே பொடவை கட்ட ஆரம்பிச்சுட்டாங்க…நீ எப்ப தான் பொடவ கட்டி பழகப் போற?”

“போங்கத்த…எங்கப்பா என்ன வாங்கித் தராரோ அதத் தான கட்டிக்க முடியும்? எனக்கென்ன அம்மாவா இருக்காங்க புடவை கட்டி அழகு பாக்க?”
சுருக்குன்னு முள்ளு குத்தின மாதிரி ஆயிடுச்சு செல்லாத்தாவுக்கு. நாம என்ன தான் தாங்கினாலும், இந்த புள்ள மனசுல இல்லன்னா இப்படி ஒரு வார்த்தை வருமா? இல்ல, இன்னேரம் செவ்வந்தி இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?

செல்லாத்தா கல்யாணம் கட்டி இந்த வீட்டுக்கு வந்தப்ப செவ்வந்திக்கு பதினஞ்சு வயசு தான். செவ்வந்தின்னு பேரு வச்சதோட நிக்காம, அவள பூ மாதிரி தான் பாத்துகிட்டாரு அவ அண்ணன் ராமசாமி. செல்லாத்தாவும் மனசறிஞ்சு எந்த குறையும் வச்சதில்லை. அப்படி வச்ச அதிக பாசமே அவளுக்கு வினையா வந்து சேந்திடுச்சோ? பின்ன? செல்லாத்தாவோட அண்ணன், அப்பயே டவுன் மில்ல நல்ல வேலைல நல்ல சம்பளத்தோட இருந்தாரு. செவ்வந்திய கல்யாணத்துக்கு கேட்டப்ப, ராமசாமி ஒரே பிடியா பொண்ண அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்னு நின்னுட்டாரு. இருந்து, இருந்து ஊரெல்லாம் தேடி ஒரே ஊருன்னு அந்த பூபதிய புடிச்சிட்டு வந்தாரு.

அவனும் கொஞ்ச நாளு ஒழுங்கா தான் இருந்தான். மனுசன் மனசும், செருப்பும் ஒன்னுங்கற மாதிரி, புதுசுல நல்லா பவுசா இருந்தவன், போக போக பிஞ்ச செருப்பு மாதிரி பல்லிளிக்க ஆரம்பிச்சுட்டான்.

ராமசாமி ஐயாவோட அங்க இங்க தகராறு வச்சுகிட்டாலும், செவ்வந்தியையும், சூர்யாவையும் நல்லாத் தான தாங்குறான்னு ராமசாமி பொறுத்துத் தான் போனாரு. இப்படியே சின்ன சின்ன சண்டை சச்சரவும், சண்ட கழிச்சு சேர்ரதுமா பதினஞ்சு பதினாறு வருஷம் ஓடிப் போச்சு. இதெல்லாம் போதாதுன்னு புதுசா குடிப்பழக்கமும் வேற. கடைசியில அது அவன் குடியவே கெடுத்தப்புறம் தான் அந்த சனியன விட்டுத் தொலைச்சான். ஆனா கண்ணு கெட்டப்புறம் சூரியன கும்மிட்டு என்ன பிரயோஜம்? கடைசில இந்த புள்ள சூர்யா தாயில்லாப் புள்ளையா கண்ண கசக்கிட்டு நின்னது தான் மிச்சம்.

காடு நிலமெல்லாம் அடகு வச்சு அவன் குடிச்சு குடிச்சு சீரழிஞ்சத ராமசாமி கவனிக்காம இல்ல. தங்கச்சிக்கு பிரச்சனை வராம எப்படி இவன கண்டிக்கறதுன்னு அவரு யோசன பண்றதுக்குள்ள, அடகு வச்ச சொத்தெல்லாம் கடங்காரங்க கைக்கு போகுற அளவுக்கு நிலைமை கை மீறி போய்டுச்சு. அதுல முக்காவாசி ராமசாமி பரம்பரையா வந்து செவ்வந்திக்கு சீரா குடுத்த சொத்து தான்.


இதுக்கு மேல பாத்துட்டு இருக்க முடியாதுன்னு ராமசாமி, அவரே பைசல் பண்ணி சொத்தையெல்லாம் மீட்டுட்டாரு. அதுக்கு போய், என்னவோ அவரு தன்ன ஏமாத்திட்டதா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொல்லிட்டு திரிய ஆரம்பிச்சுட்டான் பூபதி. கடைசியில அவங்க குடும்ப மானமே சந்தி சிரிக்கற அளவுக்கு கொண்டு விட்டுடுச்சு!

[தொடரும்]