Friday, December 28, 2007

மார்கழி திங்கள்-6

கதிரவனின் செங்கதிர்கள் பரவி,
வையமெங்கும் இருள் நீங்கி,
பொன்ஒளிரும் வேளையிலே!

மகரந்தம் தேடும் தேனீக்கள் உலவும்,
மனம் கமலும் மலர்கள்
பூத்துக் குலுங்கும் சோலையிலே!

ஈரகூந்தல் தான் முடிந்து,
பூக்கள் கொணரும் கோபியரெல்லாம்,
பார்த்தன் அவன் பார்வையிலே!

உளம் கனிந்து நின்றனரே!
எமக்கும் அத்தகைய வரம் தாராயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

Friday, December 21, 2007

மார்கழி திங்கள்-5

சலசலக்கும் மரங்கள்,
பாய்ந்தோடும் நதி,
சிறகடிக்கும் சில்வண்டு,
படபடக்கும் பட்டாம்பூச்சி,
துள்ளி திரியும் மான்கள்,
அடிஒடும் சிறுவர்கள்,
சிரித்து மகிழும் கோபியர்,
சிலுசிலுவென்று அடிக்கும் காற்று கூட
சிலிர்த்து நின்றது கண்ணா!
உன் குழலோசை கேட்டு!
எமக்கும் உன் குழோசை கேட்கும் வரம் தாராயோ!
எம் கோரி தீர்க்க ஓடோடி வாராயோ!

Thursday, December 20, 2007

கனா கண்டேனடி!

மாவிலை தோரணம் கட்டி,
மணப்பந்தல் தான் அமைத்து,
மணம்மிக்க மலர்கள் சூடி,
மணமாலை மகிழ்ந்தனிந்து,
மங்கையர் பலர் புடை சூழ,
மண்ணை பார்த்து நடை பயின்று,
மணல் பரப்பி கோலமிட்ட,
மன்றம் அதை தான் அடைந்து,
மஞ்சள் பூசிய கரத்தால்,
மட்டில்லா காதலனுடன் நின்றிருந்த,
மன்னவன் கரம் பற்றி,
மங்கள நாண் பூண்ட,
கனா கண்டேன் தோழி நானே!

மார்கழி திங்கள்-4

உளம் உருகி, உடல் சிலிர்த்து,
உலகம் மறந்து, உனை உயிராய் நினைத்து
இமை மூடி, இதழ் குவித்து,
நின் புகழ் பாடுகின்றோம்,
கண்ணா! நின் திருவடியை நாடி,
நின் திருநாமம் பாடுகின்றோம்,
எம் பாடல் கேளாயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

Wednesday, December 19, 2007

மார்கழி திங்கள்-3

மூவுலகை ஆளும் முகுந்தா!
ஜகத்தை காக்கும் ஜகநாதா!

கேட்டன கொடுக்கும் கேசவா!
பக்தர்களின் குறை தீர்க்கும் பார்த்தா!

அண்டசராசத்தையும் அடியால் அளந்த வாமனா!
அசுரர்களை அழித்த அதிகேசவா!

கோகுல வாசியே நந்தகோபாலா!
மோகன திருமுகதோன் மாதவா!

நின் அடி சேரும் வரம் எமக்கு தாராயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

Tuesday, December 18, 2007

மார்கழி திங்கள்-2

கதிரவன் எழும் முன்னே,
நின் நாமம் பாட,
கேசவனே , நின் திரு நாமம் பாட,
விடியா இரவும் விடிவெள்ளியாய் விடிந்தனவே!
மலர்கள் மலர்தனவே!
குயில்கள் இன்கீதம் இசைதனவே!
பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருளே!
இந்த பாருக்குள்ளே எழுந்தருளி,
அருள் காட்சி தனை தாராயோ,
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!!!

Monday, December 17, 2007

மார்கழி திங்கள்-1

ஆழி மழை கண்ணா, மணிவண்ணா!
வையத்து வாழ் மாந்தரெல்லாம்,
மலரினும் இனிய,
நின் திருமுகம் கண்டு,
பினி, பகை, பசி, தூக்கம் மறந்தனரே!
அமுதினும் இனிய,
நின் புகழ் பாடி,
மெய் மறந்து நின்றனரே!
குழனினும் இனிய,
நின் குரல் கேட்க,
எம் குறை தீர்க்க,
ஓடோடி வாராயோ!!!

Friday, December 14, 2007

உன்னை பார்க்காமல்,
உன்னோடு பேசாமல்,
வென்று விட்டதாய் தான் நினைத்துக் கொள்கிறேன்,
உன்னை பற்றி நினைக்கும் வரை...

பல முறை முயன்றும் தோற்று தான் போகிறேன்...
உன் குற்றங்களையும்,
என் கோபங்களையும்,
நெஞ்சில் நிறுத்திக் கொள்ள...
நித்தம் உந்தன் நினைவில்
சித்தம் சிதறி போகுதடி!

சுத்தமாய் என்னை வெறுப்பதற்கு
மொத்தமாய் என்னை கொன்றுவிடு!

கண்ணாமூச்சி ஏனடா?

குறுகுறுவென்று நீ பார்க்கும் போது,
கைகளால் என் கண்களுக்கு சிறை வைக்கிறேன்...
மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாய்,
என் மனதிற்குள் ஒளிந்து கொண்டு!

அந்த ஒரு வார்த்தை...

உயிரோடு கலந்து,
கருவாக வளர்ந்து,
கண்ணுக்கு கண்ணாய் பிறந்து,
குட்டி தேர் போல தவழ்ந்து,
தத்தி தத்தி நடந்த போதெல்லாம் அடைந்த
சந்தோஷத்தையும் மிஞ்சி விட்டதடா...
"அம்மா!"
என்று நீ சொன்ன
அந்த ஒரு வார்த்தை!!!